உள்ளமுதம் 2.1
இதழ் தீண்டிய ஈரத்தில் என் விழி தீண்ட கண்ணம்மாவின் கன்னங்களில் காதல் செம்மொழி.
மஹிமா இன்று முன் மாலையிலேயே வீடு வந்திருந்தாலும் காலையில் அவள் பார்த்த காட்சியின் அதிர்ச்சி இன்னும் விலகி இருக்க வில்லை.
மனத்தின் ஏதோ ஒரு மூலையில் அவளின் கடந்த காலமெல்லாம் வந்து வந்து போக தன்னை சமன்படுத்திக் கொள்ளும் வழிகளைத் தேடத் தொடங்கினாள்.
வலிகள் நிறைந்த வாழ்வில் அதை போக்கும் வழிகள் ஆயிரம் என்றாலும் இசை தரும் இதம் என்றுமே தனிதானே.
அவளின் அந்த இதமான இசை கூட அவனாக இருக்க தண்ணியே நொந்தபடியே இருள் சூழும் வேளையில் அவளின் கைபேசியை இசைக்க விட்டாள். பாடல் தொகுப்பை மெல்லிய சத்தத்தில் ஒலிக்க விட்டவள் தனக்கான தேநீரைத் தயாரிக்கத் தொடங்கினாள்.
நீரின்றி மீனும் சேறுண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
எனப் பாடலைத் தானும் சேர்ந்து பாடியபடி, தேநீருக்காகப் பாலும் நீரும் கலந்து கொதிக்க விட்டவள் கடந்த சில மாதங்களின் பழக்கமாக இஞ்சி ஏலக்காய் தட்டிப் போட மீண்டும் எண்ணங்களின் அலைக்கழிப்பு.
“ச்ச, என்ன செஞ்சாலும் இதென்ன பழைய ஞாபகமா வருது. நான் நானாவே இருந்ததில்லயா? இல்ல, அவன் என்ன நானாவே இருக்க விடலையா?” எனத் தன்னையே நொந்து கொண்டாள்.
“ஹ்ம்ம் காலைல போன வேகத்துக்கு அவன் இந்நேரம் வந்துருக்கணும். எப்படியும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள வருவான். வரட்டும். இனியும் நான் ஏன் பயந்து இருக்கணும்?” நினைவெல்லாம் அவனாக இருக்க தேநீரும் அவளைப் போலவே கொதிநிலையை எட்டியது.
தனக்காக கொதிக்கும் தேநீரை சிறு கரண்டி கொண்டு கலக்கியபடி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினாள். சூடு ஆறுவதற்கு முன்பு தயாரான தேநீரை அவளின் கோப்பையில் ஊற்றியவள், நேரே கூடத்தில் உள்ள ‘பிரெஞ்சு விண்டோ’ எனப்படும் முழு நீளச் சாளரத்தின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
சாளரத்தின் வழி வெளியில் தெரிந்ததெல்லாம் இருள் மட்டுமே. அவளின் கண் முன் விரியும் அவளின் நிகழ்கால நாட்களைப் போல.
நிலவொளியில் அவனோடு நீண்டு விரிந்த அவள் இரவுகளெல்லாம் இன்று நிஜத்தின் நிழலேடுகளாய் அவள் நினைவில் மட்டுமே.
கண்களை மூடி தேநீரை இளஞ்சூட்டோடு அனுபவித்து உள்ளிறக்கினாள்.
கூடவே மனதின் கசப்பும் உள்ளிறங்கி ஏதோ ஒரு மூலையில் அமிழ்ந்து போகும் என்ற கற்பனை எண்ணம் அவளுள்.
தேநீர் கோப்பையை மேசையின் மேல் வைத்தவள் மெல்லச் சுவாசத்தைச் சீராக்கி தன் மூடிய விழிகளின் வழி அரை மொத்தத்தையும் நோட்டம் விட்டாள்.
அவளின் தேநீரின் வாசனையை மிஞ்சுவைத்து போல அறையின் ஒரு மூலையில் இருந்த அந்த குளிர்கால ஜாதி மல்லியின் வாசனையை நாசியின் வழி உள்நுழைந்து அதன் சுகந்தம் உடலின் உள்ளே மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியது.
அந்த சுகந்தத்தின் இதத்திலும் ஏனோ ஒரு வித அச்சம் பரவி உடலைச் சிலிர்க்கத் தொடங்கியது. அந்த அச்சத்தைக் குறைக்க எண்ணியவள் மீண்டும் கண்ணம்மா பாடலை ரசித்தபடி மறுபடி ஒரு மிடறு தேநீரை அருந்தி மனத்தையும் பார்வையையம் ஒன்றாய் சாளரத்தின் பக்கம் திருப்பினாள்.
மறு மிடற்றுக்காகத் தேநீர் கோப்பையைக் கையில் ஏந்தக் கதவை யாரோ தட்டும் ஓசை அவளின் காதில் விழுந்து மனத்தை அடைந்தது.
கேட்ட அந்த சத்தத்தில் தேநீர் ஏந்திய கைகள் அப்படியே அந்தரத்தில் நிற்க உடல் முழுவதிலும் அச்சமும் கோபமும் ஒருங்கே விரவி நின்றது.
அந்த நொடி அப்படியே உறைய, அவனைக் காலையில் தான் பார்த்த காட்சியும், பார்த்த வேகத்தில் அவனின் கார் வந்த வேகமும் நினைவில் வந்து உடல் மொத்தமும் மென் அதிர்வாய் பரவி மறைந்தது.
காலையில் பல்கலைக் கழகத்திற்குத் தயாராகியவள் மனம் உந்த தன் ஜெயா அத்தைக்கு கைப்பேசி வழி அழைத்திருந்தாள். இந்தியாவின் கோவை மாநகரத்தில் இருக்கும் இவளின் ஜெயாத்தை அலைபேசியை எடுப்பதற்குள் தனக்கான காலை உணவைத் தயாரித்திருந்தாள்.
அலைபேசி உயிர் பெற, “ஜெயாத்த, என்ன இன்னைக்கு போன் எடுக்க லேட்? உங்களுக்குக் கால் பண்ணிட்டு அந்த நேரத்துக்குள்ள நான் பிரேக்பாஸ்ட் செஞ்சே முடிச்சுட்டேன்.”
“அப்படி என்ன செஞ்ச? ரெண்டு சுட்ட வறட்டு ரொட்டி தானே? என்னமோ இட்லி பொங்கல்ன்னு செஞ்சு சாப்பிடற மாதிரி பீத்தல் வேற?” அலுத்துச் சலித்துக் கொண்டார் அவளின் ஜெயாத்தை.
“ஹ்ம்ம், அதான் இல்ல. இன்னைக்குப் பாலும் சாக்லேட் வீட்டாபிக்ஸும்.” ஒரு பெருமூச்சுடன் பதில் சொல்லியவள் குரலிலும் அதே அலுப்பு.
“என்ன மஹி குரலே நல்லா இல்ல. என்ன டா? என்கிட்ட எதுவும் சொல்லணுமா?” அவளுக்கான வழக்கமான கேள்வி என்றாலும் அவர் எதிர் பார்க்கும் பதில் என்று வரும் என்ற எதிர்பார்ப்பு அவருக்குத் தினமும் இருக்கத்தான் செய்கிறது.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல த்த. எழுந்ததுமே என்னவோ உங்ககிட்ட பேசணும்ன்னு தோணுச்சு அதான். வேற ஒன்னும் இல்ல.” வழக்கமான அதே பிடிவாதமான குரலில் பதில்.
“இந்த ஒன்னுமில்லாததுக்குத் தான் நீ எப்படியோ பேசுறியா மஹி? இது தான் பிரச்சனைன்னு பெரியவங்களுக்கு சொன்னா ஏதோ எங்களால முடிஞ்ச பதிலயோ, இல்ல எங்களுக்குத் தெரிஞ்ச வழியவோ சொல்லப் போறோம்.” அதட்டல் குரலில் அவரின் பதில் வந்தது.
“அத்த சாந்தியோ சாந்தி. விஜயசாந்தியோ டிஸ்கோ சாந்தி … ஹையோ ஏன் உங்களுக்கு என் மேல இவ்வளவு சந்தேகம். நான் தான் சொல்றனே, பிரச்சனைன்னு ஒன்னும் இல்ல. வீடு ஒழுங்கா செட் ஆகல. இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கத்த. எல்லாம் சரி பண்ணிடலாம்.” என்றவள் மேலும் அவரை சமாதனப் படுத்தும் குரலில்,
“அப்பப்பா காலையிலே எவ்வளவு கேள்வி. நான் சொல்றத நம்புங்கத்த. என்னை நம்ப மாட்டிங்களா?”
“ஹுக்கும், நான் உன்ன நம்புறாப்ல நீ எதுவும் பண்ணல.”
“ஐயோ அத்த, ‘மஹி ஏ மருமக. எனக்கு அவளைப் பத்தி நல்லா தெரியும்’ன்னு எங்கம்மாவையே ஆஃப் பண்றீங்க. ஆனா தனியா இருக்கும் போது மட்டும் என்ன வச்சு செறிங்களே. பக்கத்துல யாரும் இல்லையா?” பம்மிய படியே பேச்சை மாற்றத் தொடங்கினாள் மஹிமா.
“ஹுக்கும், நானும் செஞ்சுடப் போறேன். நீயும் பயந்துக்கப் போற. சும்மா சொல்லாத மஹி. ஆமா சாப்பிட்டு முடிச்சியா? இல்ல இன்னும் அதத்தான் அளந்துட்டு இருக்கியா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு மஹி, நேரம் இருக்கப்ப வீடியோ கால் பண்ணு.”
“இதோ இன்னும் கொஞ்சந்தான் முடிச்சிடுவேன். கண்டிப்பா ஒரு வீக் எண்டுல கால் பண்றேன் அத்த.” என்று வாய் சொன்னாலும் பாதிக்கும் மேலே மிச்சமிருக்க இனி அதை உண்ண முடியாது என உணவை ஒதுக்கி இருந்தாள்.
உண்ணும் உணவை வீணாக்கக் கூடாது எனப் பார்ப்பவருக்கெல்லாம் சொல்பவள்தான். ஆனாலும் இன்றைய மனநிலையில் இதற்கு மேல் முடியாது என உணவைப் பாதியில் விட்டுவிட்டாள்.
மேலும் சில நிமிடம் அங்கேயே நின்று அவருடன் பேசிவிட்டு ஒரு பெருமூச்சுடன் கைப்பேசியை அணைத்து வைத்தாள். சில பல நாட்களாக அவரும் கேட்கிறார் தான். இவளின் மாற்றங்களைக் கண்டு கொண்டவர் போல, கேள்விகள் சிலநேரம் அழுத்தமாக வரும்.
அதனாலேயே அவர் பேசுகையில் ஒன்று அறிவுரையில் ஆரம்பித்து அழுகையில் முடிப்பார். இல்லை அழுகையில் ஆரம்பித்து ஆக்ரோஷமாக முடிப்பார்.
அழுகையோ ஆக்ரோஷமோ இல்லை அறிவுரையோ ஏதோ ஒன்று அவளின் இந்தக் காலை வேளையைக் கெடுக்க அவளுக்குச் சிறிதும் விருப்பமில்லை. அவளின் காலை வேளை என்பது கடந்த சில மாதங்களாக இந்த இசைக் கண்ணம்மாவிற்கு மட்டுமே.
மனமெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் சூழ, ஜெயாத்தையிடம் பேசிய பிறகும் இன்று ஏனோ உற்சாகக் குறைவாய் தோன்றியது மஹிமாவிற்கு.
உண்மையில் சொல்லப் போனால் சுயமாக தானாகவே வேலைகள் எல்லாம் செய்தவளுக்குள் இன்று இவை எல்லாம் போராட்டமாகத் தோன்றியது.
மனம் எதை எதிர்பார்க்கிறது என அவளால் சரியாக யூகிக்கக் கூட முடியவில்லை. தன் யோசனைகளிலேயே சற்று நேரம் உழன்றவள், நேரம் ஆவதை உணர்ந்து கல்லூரி செல்லத் தயாரானாள்.
வீட்டிற்கு வெளியே முகத்தில் அடிக்கும் குளிர், விரல் நகங்களை எல்லாம் ஊசியாய் குத்தும் அந்தக் குளிரிலும் வெறும் குளிருக்கான ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டவள் வழக்கமான பாரதியின் பாடல் தொகுப்பு காதினுள்ளே சென்று இதயத்தில் சேர, முயன்று சேர்த்த மென்னகை முகத்துடன் கல்லூரிக்குக் கிளம்பினாள் மஹிமா.
காலணிகளை அணிந்தவள் மேலே ஜாக்கெட்டுடன் தொங்கிக் கொண்டு இருந்த கையுறைகள், தொப்பி அடங்கிய பையைப் பார்த்தாலும் அதன் பக்கம் ஒரு ஏளன சிரிப்பைச் சிந்திவிட்டுப் பாராதவள் போல் மறுபுறம் திரும்பி விடுதலை ராகம் பாடினாள்.
விடுதலை விடுதலை விடுதலை
மூடி மூடி மறைந்து வாழும் முகத்திற்கு இன்று விடுதலை
தொப்பியோடு கையுரைக்கும் இன்று இங்கு விடுதலை
குளிர் அவளைத் தாக்காமலிருக்க அவன் தந்த ஆயுதங்களை எல்லாம் அவள் அரணாய் எண்ணாமல் தடையாய் இன்று தகர்த்து எறிந்திருந்தாள். ஆனால் அவளின் இந்த அற்ப சந்தோசத்தின் ஆயுள் கம்மி என அவளுக்கு யார் சொல்வது?