2.2 அசோகா ஹேமாவின் உள்ளமுதே கண்ணம்மா !

உள்ளமுதம் 2.2

வெளியில் இறங்கவுமே, குளிரில் கைகள் உறையத் தொடங்கியது. ஆனாலும் அவள் கைகள் ‘உறை’ எனும் விலங்கை ஏனோ நாடுவதில்லை.
காலையிலேயே இன்று எழுந்த ஓராயிரம் யோசனைகளோடு வாசலில் இறங்கியவள் அனைத்தையும் ஓர் ஓரம் ஒதுக்கிவிட்டு லிம்முக்கு அழைத்தாள்.

லிம் யங் சீன தயாரிப்பானாலும் இன்று இவளின் உடன் பயிலும் ஒரே தோழன். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் உலோகவியல் மற்றும் அரிமான தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெறப் பயிலும் ஆய்வாளர்கள்.

அங்கு இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு இவர்கள் இருவரும் பயிற்றுவிப்பாளர்களும் கூட. அது இவர்களுக்கான மாத செலவுகளுக்கு போதுமானதாக இருக்க, வேறு பணிக்குச் செல்லும் தேவை என்பது அவர்களுக்கு இல்லை.

அலைபேசியில் அழைப்பு போனதா என அறியும் முன்னே அவனது குரல் அவளை எட்டியது.

“இன்னைக்கு நிச்சயமா நான் லேட் இல்ல மஹிமா. இன்னும் பைவ் மினிட்ஸ், நீ வந்துட்டே இரு. நான் வந்து உன்னை ஜாயின் பண்ணிக்கிறேன்”

“ஹ்ம்ம் சரி. ஆனா இன்னைக்காவது குளிச்சுட்டு வாடா. ச்சை, கருமம் குளிக்காட்டியும் பரவாயில்லை பல்லையாவது விளக்கிட்டு வாடா. சரஸ்வதி வேற எதுவும் புதுசா குடுக்காட்டியும், என்கிட்ட இருக்கத்தையாவது புடுங்காம இருக்கணுமே.” என்று அவனிடம் காய்ந்தவளுக்கு,

“மஹி, ப்ளீஸ் டைம் இஸ் இம்போர்ட்டண்ட். நான் வந்துடுவேன்” என குளியல் பேச்சை சோப்புப் போட்டுக் கழுவி விட்டான் லிம்.

“ஹ்ம்ம், நீ தேற மாட்ட, வா நான் நடந்துட்டே இருக்கேன்.” என்றாள்.
இன்று பல்கலைக் கழகத்துக்குச் செல்லும் இந்த இருபத்தைந்து நிமிட நேர நடைக்கு இவன் துணையாக வருவான், தன் மனத்தை மற்றவைகளின் பக்கம் சாயாமல் தடுக்கலாம் என நினைத்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே.

அந்த ஏமாற்றம், ஏமாற்றமாக மட்டும் அல்லாமல் அடுத்த சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியில் முடிந்தது. இத்தனை மாதங்களில் யாரை அவள் காணாமல் தவிர்த்து இருந்தாளோ அவனின் ரத்தச் சிவப்பு நிற மகிழுந்து சாலையில் அவள் எதிரிலேயே வர அவளின் சர்வாங்கமும் சற்று நேரம் ஆடி அடங்கியது.

எங்கும் மறைய வழி இன்றி அவள் தவிக்க, அவனின் கோபம் அவன் வண்டியின் வேகத்தில் தெளிவாய் தெரிந்தது. அவளின் இன்றைய மாற்றம் குளிருக்கு மறைக்கப்படாத சிகை என நினைவு வர இமாலய இறுக்கம் இதயக் கூட்டில்.

அச்சத்தில் இவளின் கண்கள் கலங்கிச் சிவக்க மகிழுந்தின் உள்ளிருந்தவன் கண்கள் எரிக்கும் அக்கினி ஜுவாலையை வீச, நொடிகளில் அவள் நெஞ்சுரம் மொத்தமும் கரைந்து பயம் பற்றிக் கொண்டது.

அந்த ஜாகுவார் சட்டென நொடியில் நிறுத்தப்பட்டு பின் தன் வழியே சென்றிருந்தது. தன்னைச் சுற்றி மொத்தமும் உறைந்தது போல் ஒரு உணர்வு. ‘அவன் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்’ என்பதாய் அவன் மகிழுந்து கடந்த பின்னே நிஜம் என நெஞ்சில் உரைத்தது.

சில மதங்களுக்குப் பின் அவனின் தரிசனம். கண்டு கொண்டு விட்டான்.
இனி??? மனம் முழுவதும் ஓராயிரம் கேள்விகளும் அதற்கு ஒன்பதாயிரம் விடைகளும்.

ஒரு நொடி சுற்றும் ஆராய, அவன் தன் மகிழுந்தைத் தடையிட்ட அதிர்வில் பின் வந்த வண்டிகளும் சற்றே தடுமாறி மீண்டும் தன் பாதையில் இணைந்தன.

அனைத்தும் ஒரு நொடி நேரம் மட்டுமே. மீண்டும் மஹியின் கால்கள் தன் நடையைத் தொடர, அலைபேசியில் தன் அந்தரங்க பெஸ்ட்டி நவீனுக்கு அழைத்தாள்.

அவன் வேலை நேரம் போலும் அழைப்பு ஏற்கப் படவில்லை. உடனே ஒரு குறுந்தகவல் அனுப்பினாள்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காரிலோர் சீட்டிடை வைத்தேன்
வெந்து தணிந்தது காரு – தழல்
கோபத்தில் மஹியென்றும் சுசியென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

பணி நேரம் என்பதால் மீண்டும் நவீனுக்கு அழைத்து தொந்தரவு செய்யவும் ஏனோ மனம் ஒப்பவில்லை.

கடந்த நிமிடங்களின் கணம் குறைய அவளின் செய்தியும் அவனை எட்டியதாய் இரு நீலக் குறிகள் காட்டியது. சில நொடிகளில் பதிலும் வந்தது.

“பார்த்துட்டானா? பீ ரெடி மஹி. ஆல் இஸ் வெல்.”

“ஹ்ம்ம், ஆனா இன்னைக்கு அவன் கவி பாரதி இல்ல… உன் தும்பி ஒரு கனல் பாரதி …. கண்ணுலேயே ரத்தத்தைப் பார்த்தேன் … காரோட கலர் reflection இல்ல… அம்புட்டுக் கோவம்”

“ஓகே, கால் யு லெட்டர்.” என முடித்துவிட்டான் அவன். மறுபடியும் மஹியின் எண்ணம் எல்லாம் இனி அவனுடனான சந்திப்பு எப்படி இருக்கும் என்பதிலேயே சுழலத் தொடங்கியது.

அதன் பிறகு லிம் இவளுடன் வந்ததோ, அல்லது பல்கலைக் கழகப் பணிகளோ எதுவும் அவள் நினைவில் நில்லாமல் இன்றைய நாள் முழுவதும் கடந்து செல்லும் காற்றாய் கடந்திருந்தது.

கண்டு விட்ட காட்சியின் தொடர் ஓட்டமாய் அவளின் அந்த நாள் இருக்க, அவளைக் கண்டவனின் கருத்திலோ காட்சித் தொடருக்கான அடுத்த நிகழ்வு நிகழ் காலமாய்.

அவளைக் கண்டதும் அவனின் கோபம் கரை புரள முதல் காரணம் அவளின் உருவ வேறுபாடு. அதைப் பற்றி அவனுக்கு யாரும் இன்று வரை ஏனோ சொல்லி இருக்க வில்லை. குறிப்பாக அவளின் அண்ணன் நவீன்.

அவனுக்குத் தெரியாமல் மஹிமா அதுவும் செய்திருக்கமாட்டாள். அவன் அவளின் தோழன் அண்ணன் அப்பா என எல்லா பக்கங்களிலும் சுழலும் சக்கரம். மஹிமாவை இவனுக்கு அறிமுகம் செய்தவன்.

‘ஆம்பளை மாதிரி சுத்திக்கிட்டு திரியிறா? அவ்வளவு அழுத்தமா அவளுக்கு? எல்லாமே திமிரு. ஆரம்பத்திலே இவளை அடக்கி இருக்கணுமோ?’

‘அடக்கியா? ச்சீ, அவ என்ன ஆடு மாடா அடக்கி வைக்க? நான் இவளை வேற மாதிரிதான் ஹேண்டில் பண்ணணும். அதுக்கு முதல்ல அவங்க வீட்ல இருக்கவங்களுக்கு எந்த அளவுக்கு இவ முடி வெட்டின விஷயம் எல்லாம் தெரியும்ன்னு பார்க்கணும்.’ எண்ணியவன் அவள் தம்பிக்கு முதலில் பேச நினைத்து கைப்பேசியில் அழைத்தான்.

‘மார்டன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா’ என்று அது இசைக்கத் தொடங்க அவன் இருந்த மனநிலையில் அது இன்னும் அவனை கடுகடுக்கும் நிலைக்குத் தள்ளியது.

அழைப்பை அணைத்தவன் மீண்டும் அவள் அன்னைக்கு அழைக்க உடனே அழைப்பை ஏற்றிருந்தார்.

“ஹல்லோ, சுசி சொல்லுப்பா. நல்லா இருக்கியா?”

“நல்லா இருக்கேன் மா. நீங்க? அப்பா எல்லாம் ஓகேவா?”

“நல்லா இருக்கோம் பா. மஹி நேத்து பேசினா. இப்பெல்லாம் காலேஜ் ஒர்க் அதிகம் போல. ஒரு ரெண்டு நிமிஷம் கூட ஒழுங்கா நின்னு பேசுறதில்ல. நீயும் எதுவும் பேசல. அவளை கண்ணால பாத்தே ரெண்டு மாசத்துக்கு மேல இருக்கும். உடம்ப ஒழுங்கா பார்த்துக்கோங்க.” அன்னையாய் அவர் கவலைகளை எல்லாம் அவனிடம் கொட்ட, அவனுக்கு நிலைமை இன்னதென்று விளங்கியது.

அவரிடம் பேசி முடிக்கும் முன்னே பல முறை மஹியின் தம்பி மகேஷ் அழைத்திருக்க, “ம்மா, அதெல்லாம் ஒன்னும் இல்லம்ம்மா. நான் பார்த்துக்கிறேன்” என அவரை சமாதானப் படுத்தியவன் அவனுக்கும் அழைத்து பொதுவாகப் பேசிவிட்டு அவளின் சிந்தனைகளோடு பணியிடத்தை அடைந்திருந்தான்.

பணியிலும் நினைவெல்லாம் இன்று அவனின் கண்ணம்மா தான். எனவே வேலைநேரம் முடிய முதல் ஆளாய் வெளியேறியவன் நேரே அவளின் இல்லம் வந்து சேர்ந்திருந்தான்.

அழைப்பு மணியை ஒலிக்க விட்டவன் காத்திருக்க பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். கண்ணம்மாவில் கரைந்திருந்தவளுக்கு அழைப்பின் ஒலி செவியைச் சென்று சேர்ந்திருக்கவில்லை.

மீண்டும் கதவைத் தட்டி ஓசை எழுப்ப அவளோ மொத்தமும் மறந்து சிலைபோல நின்றவள், ஓசை கூடவும் கையிலிருந்த தேநீரை மேசையில் வைத்தவள் கதவின் அருகே வர மனத்தின் நடுக்கத்தைக் கால்களும் கைகளும் பிரதிபலிக்க நின்றிருந்தாள்.

இம்முறை தட்டும் சத்தம் சற்றே நீண்டு ஒலிக்க மஹிமா சட்டெனக் கதவைத் திறக்க அவளின் கவி பாரதி கனல் கக்கும் கோபத்தோடு அவளையே பார்த்திருந்தான்.

உச்சி முதல் பாதம் வரை அவன் கண்கள் சென்று வர இனி நடப்பவை எல்லாம் நாயகன் செயல்.

கண்ணம்மாவும் கவி பாரதியும் காட்சிக்கு ஒன்றாய், காதலில் தனித்தனியாய்.

காலம் மட்டுமே அறியும் முத்தத்தின் ஈரத்தில் இனி இவர்கள் இருவரும் மூழ்கிவிடும் நாளை.

error: Content is protected !!
Scroll to Top