ஆவல் மீற பார்க்குதே – 3 (2)

“என்ன அபி அப்படிப் பார்க்கற? எது ஓகேன்னு பார்த்துச் சொல்லு” என்று இழுத்து அவளைப் பக்கத்தில் அமர்த்தி, அவன் மடியில் மடிக்கணினியை வைத்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளின் ரெஸ்யூமை தயார் செய்திருந்தார்கள்.

“கஃல்ப் நியூஸ் பார்த்து நாலைஞ்சு வேலைக்கு இப்பவே அப்ளை பண்ணுவோம் அபி” என்று அவன் சொன்னதோடு நில்லாமல் செயலிலும் இறங்க, அபி பதட்டத்துடன் நகம் கடித்தாள்.

அவளின் விரலை பற்றி, “நகம் கடிக்காத அபி” என்று தடுத்துப் பிடித்தான்.

“இது ஓகேவா பாரு? இது அல்நாதால இருக்கக் கம்பெனி. சோ உனக்கு வீட்ல இருந்து போய்ட்டு வர ஈசியா இருக்கும். இவன் பிரஷ்ஷர்ஸ் எடுப்பேன்னு போட்டிருக்கான். இதுக்கும் அப்ளை பண்ணுவோம். இவன் சொல்லியிருக்கப் பேக்கேஜ் டெம்ப்ட் பண்ணுதே. ஆனா தேரால இருக்கு கம்பெனி. நீ அவ்வளவு தூரம் எப்படி டெய்லி போய்ட்டு வருவ?” என்று யோசித்தவன், அவள் முகம் பார்த்து, “சரி, அப்ளை பண்ணி வைப்போம்” என்றான். அவளுக்காக அலசி ஆராய்ந்து, தகுதியானவைகளை அவளையே விண்ணப்பிக்க வைத்தான்.

அபியின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைக்க, எக்கி கணவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

அவள் கழுத்தில் கரம் கோர்த்து, “ஏய் அபி, கன்னத்துல கொடுக்கிறதுக்குப் பேர்லாம் கிஸ் கிடையாது தங்கம்.” என்று கண்ணடித்தான்.

அவள் வெட்கத்துடன் முறைக்க, மென்மையாக முகம் பற்றி இதழணைத்தான்.

அடுத்து வந்த ஒரு வாரமும் அவளுக்குத் தேடி தேடி வேலைக்கு விண்ணப்பித்தார்கள். அபி ஆவலாகக் காத்திருந்தாள்‌. நாள் முழுக்க மெயில் வந்திருக்கிறதா என்று அலைபேசியைத் திறந்து திறந்து பார்த்தாள். ஆனால் எந்தவொரு நிறுவனமும் அவளுக்குப் பதில் அனுப்பவில்லை.

“எனக்கு இங்க ஒர்க் எக்ஸ்பீரியன் இல்லைன்னு வேலைக்கு எடுக்க மாட்டேங்கறாங்களா மாமா?” ஏமாற்றத்துடன் அவனிடம் வினவினாள்.

“ச்சே, அப்படியில்ல அபி. சரியான விஷயம் சரியான நேரத்துல நடக்கும். பொறுமையா இரு”

“ம்ம்”

“உனக்கு நல்ல வேலை கிடைக்கணும்னா வெயிட் பண்றதுல தப்பில்ல அபி” என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.

இரண்டாம் வாரம் அவளே வேலைக்கு விண்ணப்பிப்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்திருந்தாள்.

அந்த வார இறுதியில், அவனது நண்பன் ராஜேஷின் வீட்டுக்கு அபியை அழைத்துப் போனான் சக்திவேல். அவர்கள் திருமணமாகி வந்த போது ஒரு வாரம் தங்கியிருந்த அதே நண்பன் வீடு.

“வாடா நல்லவனே, வாங்கம்மா” என்று அவர்களை வரவேற்றான் ராஜேஷ்.

நண்பர்கள் இருவரும் ஒரே துறையில் பணிபுரிகிறார்கள். ராஜேஷ் என்ஜினியர், உயர் பதவியில் இருக்கிறான். அவன் மனைவி அனுசுயாக்கு அந்நாட்டு தனியார் வங்கியில் வேலை. அவர்களுக்கு இரண்டு வயதில் மகன் சமரன் இருக்கிறான்.

அனுசுயாவிடம் இருந்து சமரனை வாங்கிய அபி, அவனோடு ஐக்கியமாகி விட்டாள். சக்திவேல் குழந்தையைக் கொஞ்சும் மனைவியைக் கண் களவு செய்தான்.

“என்னடா திடீர்னு கால் பண்ணி டின்னருக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்ன. என்ன விஷயம்டா? புதுசா கல்யாணம் ஆனவன் என்னைய தேடி வந்திருக்க?” என்று ராஜேஷ் சீண்டும் சிரிப்புடன் கேட்க, “டேய்” என்று அவன் தோளில் அடித்தான் சக்தி.

“அபி வேலைக்குப் போகணும்னு ஆசைப்படுறாடா. ரெண்டு வாரமா நாங்களே ஆன்லைன்ல பார்த்து அப்ளை பண்ணோம். ஆனா இன்டர்வியூ கால் எதுவும் வரலன்னதும் அபி ரொம்ப அப்செட்டாகிட்டா”

“பொண்டாட்டி அப்செட்டானதும், உனக்குப் பொறுக்கலையாக்கும்?” என்று நண்பனை சீண்டிய ராஜேஷ், “அனு” என்று மனைவியை அழைத்தான்.

அனுசுயா சமையல் அறை வாசலில் நின்று, “என்னங்க?” என்று கேட்க, “உங்க பேங்க்ல ஜாப் ஓபனிங் எதுவும் இருக்கா? நம்ம அபிக்குதான். உங்க பேங்க்ல இல்லன்னா உன் சர்க்கிள்ல என்கொயர் பண்ணி சொல்றியா?” என்று கேட்டான்.

“எங்க பேங்க் வேணாம்ங்க. நான் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டு சொல்றேன்” என்றாள் அனு. அவள் சொன்னது போலவே அவர்கள் இரவு உணவை முடித்ததும், அவளின் நண்பர்கள் குழுவுக்கு வாட்ஸ்அப், முகநூல் என இரண்டிலும் செய்தி அனுப்பினாள். சற்று நேரத்தில் இரண்டு வங்கிகள், ஒரு நிதி நிறுவனம், ஒரு ஷிப்பிங் ஏஜென்சி என ஏழெட்டு வேலை வாய்ப்புகள் அவர்கள் முன்னிருந்தன.

அனுசுயா சொன்ன அனைத்துக்கும் விண்ணப்பித்து, அவர்களுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து விடை பெற்றார்கள்.

அனுசுயா பரிந்துரை செய்த காரணத்தினால் அவளுக்கு இரண்டே நாள்களில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்து விட்டது.

“எமிரேட்ஸ் பேங்க்ல இருந்து இன்டர்வியூ மெயில் வந்திருக்கு மாமா” என்று அபி ஆர்ப்பரிக்க, “கலக்குற அபிநந்தனா” என்று கண் சிமிட்டினான் சக்தி.

“இன்டர்வியூக்கு ரெண்டு நாள்தான் இருக்கு. நா அதுக்குள்ள எப்படி ரெடியாவேன் மாமா?” என்று அவள் மிரள, “அபி, யாம் இருக்கப் பயமேன்” என்று அவள் தோளில் கைப் போட்டு அணைத்தான்.

“நா வேலைக்குப் போறேன்னு நம்ம வீட்டுக்கு சொல்லணும் இல்ல மாமா?”

“அது வேலை கிடைச்சதும் சொல்லிக்கலாம்” என்று அவன் சொன்னதும் அவள் முகம் வாடி விட்டது.

“ஏய் அபி, நா நெகடிவ்வா சொல்லல. வேலைக்குப் போறது உன் விருப்பம், உன் முடிவு. இதுல நம்ம வீட்டு ஆளுங்க கருத்து சொல்ல என்ன இருக்கு? அவங்க போகாதன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ? அதுக்காகத்தான் வேலை கிடைச்சதும் சொல்லிக்கலாம்னு சொன்னேன். வேற எந்த அர்த்தத்துலயும் இல்ல. புரிஞ்சுதா?” என்று சிறு பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லி அவள் முகம் பார்த்தான்.

“ம்ம், அம்மாகிட்ட சொல்லாம செஞ்சா வைய்யும்” என்றாள்.

“ஓகே. அப்போ அத்தைக்கு இப்பவே சொல்லிடு. அவங்களும் சந்தோஷப்படுவாங்க இல்ல?” அவளின் பதிலை எதிர்பாராமல் அலைபேசியை எடுத்துப் போட்டிம் (botim) செயலியை திறந்தான்.

“மொத அத்தைக்குக் கால் பண்ணுங்க” என்றாள். அவன் புருவம் சுருக்க, “பிளீஸ்” என்றாள் கண்களைச் சுருக்கி.

“எங்கம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க அபி” என்று சொல்லி அம்மா பொன்னியை அழைத்து, இரண்டு நிமிடங்கள் பேசி விட்டு, “அபிகிட்ட பேசும்மா” என்று மனைவியிடம் கொடுத்தான்.

அவளை நலம் விசாரித்து, ஊர் கதைகள் பேசினார் பொன்னி.

“அத்த, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றாள்.

அவளின் தணிந்த குரல், சிவந்த பதட்டமான முகத்தைக் காணொளி அழைப்பில் கூர்ந்து பார்த்த பொன்னி, மறுகணம் முகம் நிறைத்த புன்னகையுடன், “சொல்லுத்தா அபி, இது எத்தனாவது மாசம்? டாக்டர் பார்த்துட்டீங்களா? சக்தி உன்னைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனானா?” என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கியவரை விழிகள் விரிய அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் அபிநந்தனா.

சக்தி அவள் பக்கத்தில் வந்து அமர, படக்கென்று அலைபேசியை அவன் கையில் திணித்திருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top