உள்ளமுதம் 1.2
மெர்சி நதியின் கரையோரக் குடியிருப்புப் பகுதி அவனுடையது. அந்த நதியின் சீற்றம் போல அலையடிக்கும் அவன் உள்ளக் குமுறல்களுக்கு இன்று அந்த இடமே மருந்தாகிப் போனது.
குளிர் கால காற்று நாசி வழி நுழைந்து உடலைத் துளைக்க, மகிழுந்தின் உள்ளே வெப்பத்தை இன்று சற்று அதிகமாகவே வைத்திருந்தான் சுசீந்திரன்.
வெப்பமும் குளிரும் அவனை மாற்றி மாற்றித் தாக்க நிதானம் மட்டும் இழக்காமல் மான்செஸ்டர் நகரை அடைந்தான்.
மான்செஸ்டர் பல்கலைக் கழக எல்லைக்குள் நுழைந்தவன் அன்றும் அந்த சாலையில் அவனின் வழக்கமான தேடலைத் தொடங்கினான். தேடல் வேட்கையை என்ன முயன்றும் தடுக்க முடியாமல் அவன் கண்கள் அந்த நீண்ட சாலையில் அங்கும் இங்கும் பார்வையைச் செலுத்தியது.
காலையில் கண்ட கனவின் பயனாய் அவன் கண்களில் காண்பதெல்லாம் அவனின் கண்ணம்மாவாய் தோன்ற தூரத்தில் புள்ளியாய் அவள்.
அவளா? இல்லை இது ஆணா? சற்று கண்களைச் சுருக்கி கூர்ந்து நோக்க கண்டு கொண்டான் சுசி.
அது அவனில்லை அவள், அவள் தான் சுசியின் கண்ணம்மா. உடை மாறலாம், பாவனைகள் மாறலாம். ஆனால் நடை என்றும் மாறாதல்லாவா?
அவளின் நிமிர்ந்த நன்நடையில் கண்டு கொண்டான் அவளை.
கண்ட அந்த கணமே அவளின் காதல் பாரதி ருத்ர மூர்த்தியானான்.
அவனது இந்த மூன்று மாதத் தேடலின் பயன் அவன் கண்ணெதிரே வந்து கொண்டிருந்தது.
அதுவும் அவனின் விருப்பங்கள் எல்லாம் முற்றிலும் துறந்து.
நீண்டு விரிந்திருந்த அந்த சாலையின் கடைக் கோடியில் வரும் பொழுதே அந்த உருவத்தை அடையாளம் கண்டவன் கால்கள் முடுக்கியில் (accelerator) அழுத்தம் கொடுத்து மகிழுந்தின் வேகத்தை வேகமாய் அதிகரித்தது.
அந்த உருவம் அருகில் நெருங்க நெருங்க மகிழுந்தின் உள்ளே எரியும் அந்த எரிபொருளை ஒத்த கொதிநிலையை அடைந்தான் சுசீந்திரன்.
அவனின் ஜாகுவாரின் ரத்தச் சிவப்பு நிறம் அவன் உடல் முழுவதும் பரவி அவன் கண்களிலும் சூழ்ந்து கொண்டது. மகிழுந்தின் வேகம் அதிகமிருக்க போக்குவரத்து சற்றே குறைந்திருந்த அந்த அதிகாலை நேரத்தில் எதிரே வந்த அந்த உருவமும் இவனின் மகிழுந்தை அடையாளம் கண்டு கொண்டது.
நொடி நேரமென்றாலும் கால்கள் சட்டென மகிழுந்தை விரைந்து நிறுத்த,
க்ரீச்சிட்டபடி அவனின் ஜாகுவார் அந்த இடத்திலேயே நின்றது. வண்டியின் அதிர்வுக்கு இணையான அதிர்வு அந்த உருவத்தின் உடலிலும் கண்களிலும் இருக்க, அவ்வுருவத்தின் மேல் ஆழ்ந்த ஒரு பார்வையைப் பதித்தவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் வண்டியை அழுத்திக் கொண்டு கிளம்பினான்.
அவன் கண்ட காட்சியை மனத்தினுள்ளே மறுஒளிபரப்பு செய்தவன் தான் அடுத்து செய்ய வேண்டியவைகளையம் மனதில் வரிசைப் படுத்திக் கொண்டான்.
சுசீந்திரன் அந்த இடத்தைக் கடக்கவுமே சிலைக்கு உயிர் வந்தது போல அவளும் நீண்ட மூச்சொன்றை வெளிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
நினைவுகளில் அவளின் அதிகாலைக் கனவும் அதன் தாக்கத்தில் வந்த தவிப்பும் அதற்குப் பின்னான நிகழ்வுகளும் நினைவில் வந்தது.
அவளிருப்பது இங்கிலாந்தின் மான்செஸ்டெர் நகரம். இங்கு இது தொழில்நுட்ப அறிவியல் நகரம் என்றாலும் வெளிநாட்டினருக்கு இந்நகரம் ஒரு கல்வி நகரம்.
ஆம், பல நாட்டினரும் அந்த நகரத்தைத் தேடி வர முக்கியக் காரணம், இருநூறு ஆண்டுகளாக இயங்கும் அந்த தொன்மையான பல்கலைக் கழகம் தான். இவளும் அங்கு அப்படி வந்தவள்தானே.
ஆக்ஸ்போர்டு வீதியில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக் கழக வளாகத்தின் குடியிருப்பு வளாகம். குளிர் காலம் ஆதலால் இன்னும் இருள் அடர்த்தி குறையாமல் நீண்டித்திருந்தது.
காலை எட்டு மணிக்கும் அப்பகுதி எங்கும் சூரியனை மறந்து மின்விளக்குகளால் ஒளியூட்டப் பட்டிருந்தது. குடியிருப்புப் பகுதியின் அந்த அமைதியான ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டின் உள்ளே இந்த ஏகாந்த வேளையில் தமிழ்ப் பாடலின் ஒலி மட்டுமே நிறைந்திருந்தது.
“இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா “ கண்ணம்மாவின் காதல் வரிசையில் இப்பொழுது உன்னி கிருஷ்ணன் உருகிக் கொண்டிருந்தார்.
குளித்து முடித்து வெளியே வந்தவளின் காதில் இந்த வரிகள் விழ, கைகள் மெல்ல உயர்ந்து வழக்கம் போல் மீண்டும் பாடலை ஆரம்பத்திலிருந்து ஒலிக்க விட்டது.
மனம் மௌனமாய் தன் கடந்த காலத்தை யோசிக்க, பாரதியின் புதுமைப் பெண்ணாய் அவள் வலம் வந்ததும், கவி பாடும் அந்த பாரதியின் கண்ணம்மாவாய் வாழ்ந்ததும் காட்சிகள் கண் முன் விரியத் தொடங்கியது.
காலையில் கண்ட கனவின் தாக்கம் வேறு, இன்னும் இன்னும் மனதை பழைய நினைவுகளின் புறம் திருப்ப, வாய் தன் போல் பாடல் வரிகளை அவளின் மனநிலையைவிட சோகமாய் உச்சரிக்கத் தொடங்கியது.
அவள் மனத்தின் இந்த வருத்தமெல்லாம் மேலும் மேலும் பாரமாய் அழுத்த கண்கள் மூடி ஒரு நிமிடம் நின்றவளின் இதயத்தில் இதே பாடல் உற்சாகமாய் காதோரம் காதலாய் அவனின் தேன் குரலில் ஒலித்தது.
மீண்டும் மீண்டும் ஞாபக அடுக்குகளில் வந்து மோதிய பழைய நிகழ்வுகள் எல்லாம் அவளின் அன்றைய நாளை நிச்சயம் துவம்சம் செய்து விடும் என அறிந்தவள் சட்டென அவற்றை ஒதுக்கி விட்டு பல்கலைக் கழகத்திற்கு செல்லத் தயாரானாள். தன் அலமாரியில் இருந்து தனக்கான உடைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினாள்.
இருள் அடர்ந்த நீல நிற ஜீன்சும் பல்கலைக் கழக முத்திரையிட்ட வெளிர் நீல நிற போலோ ஷர்ட்டும் தான் அவளின் இன்றைய தேர்வு. அதை அணிய கையில் எடுத்துக் கொண்டு தனது அலமாரியை மூட எத்தனித்தவள் மறுபடியும் தன் ஆடைகளைப் பார்க்க எல்லாமே இப்போது யூனிசெக்ஸ் ஆடைகளாக மாறி இருந்தது.
உடைகளைக் கண்டவள் மனதின் அழுத்தம் ஏகத்திற்கும் அதிகரிக்க அலமாரியைக் காலால் அறைந்து சாற்றினாள். கையிலிருந்த உடைகளை வேகமாக அணிந்து கண்ணாடியில் தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.
ஆறடியில் நீண்ட நெடு நெடு உயரம். மெல்லிய ஆனால் சற்று இறுகிய உடல். பெண்மைக்கான எந்த வளைவு சுழிவுகளும், ஏற்ற இறக்கங்களும் இல்லாத நேர் உடல்.
அச்சம் நாணம் எனும் பெண்ணிய உணர்வுகள் எதற்கும் அர்த்தம் அறியாத தெளிந்த தீர்க்கமான ஞான செருக்குடன் கூடிய ‘பாரதி’ய முகம். அதுவே அவளின் அடையாளம்.
அன்பும் அறிவும் மட்டுமே அவளின் அணிகலன். கண்ணம்மாவின் உணர்வுகளைக் கண்களில் மாத்திரமே தேக்கி இருக்கும் இவள் மஹிமா, மஹிமா வேணுகோபாலன். அனைவருக்கும் மஹி. குடும்பத்தின் செல்ல குட்டி ராட்சஷி.
அனைத்திற்கும் மேலாக அவள் பாரதியின் கண்ணம்மா. கவிபாரதியின் கண்ணம்மா இவள்.
“ஏன்டி இங்க என்ன பண்ற? எப்பவும் இப்படி ஆம்பள தடிச்சி மாதிரியே பேண்ட்டு சட்டையில சுத்திகிட்டு திரியாம போயி வீட்டுக்குள்ள இரு. மணி ஏழாகப் போகுது இன்னும் வாசல்ல நின்னுகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க.”
