உள்ளமுதே கண்ணம்மா !!!
உள்ளமுதம் 1.1
“தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!”
தூரத்தில் எங்கோ கைப்பேசியில் பாரதியின் பாடல் ஒலிக்க அவனும் உடன் பாடிக் கொண்டிருந்தான். அந்த அறையில் அவனோடு இருந்தவள் மனதிலும் அவனைப் போலவே எல்லையில்லா இன்பம் கொட்டிக் கிடந்தது.
ஒளியும் இருளும் அற்ற மிதமான தென்றல் வீசும் அந்திவேளை. சாளரத்தின் தடுப்புகளைத் தாண்டி குளிர்ந்த காற்று இருவரின் மேனியையும் தீண்டி குளிர்விக்க முனைந்தது.
ஊனும் உயிரும் அவர்களின் உணர்வுகளும் ஒன்றென இணைந்து ஒன்றோடொன்று ஒன்றி இருக்க, குளிர் தென்றலிலும் வெப்பம் கூட்டவே செய்தது. இருவருக்கும் உள்ளிருக்கும் அன்பு மட்டுமே சுவாசமாகி உள்ளும் புறமும் உவகையாய் சூழ்ந்திருந்தது.
“என் உள்ளமுதம்டி கண்ணம்மா நீ” மெல்ல மௌனம் கலைக்கிறான் அவன்.
“ஹ்ம்ம்” வார்த்தைகளற்ற ஒலி மட்டுமே வர, அவள் புறம் திரும்பியவன் கையணைப்பில் இருந்தவளின் அழகிய முகம் கண்டான்.
