சாதகப் பட்சிகள் – 11 (4)

“நீங்க இந்த நேரம் எங்க கிளம்பிட்டீங்க?” அவன் மார்பில் கன்னம் பதித்துக் கேட்டாள்.

அப்போதுதான், அவன் வேட்டியில் இருப்பதையே கவனித்தாள்.

“ஒரு லாங் ட்ரைவ் போகலாமா மது?” அவள் முகம் நிமிர்த்திக் கேட்டான்.

“நாளைக்கு உங்களுக்கு வேலை ..”

“வேலை, அது தினமும்தான் இருக்கு. அதுக்காகப் பார்த்தா முடியுமா? வா, போகலாம்” அவளை மேலே மறுத்து பேச விடாமல், இழுத்துக் கொண்டு போனான்.

“யாராவது ட்ரைவ் போக வேட்டியில் வருவாங்களா?” உதடு சுளித்து அவள் கேட்க,

“போதைக்கு மயக்கம் கொடுக்க, சேலைக்குப் பொருத்தமா வேட்டி” முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னவன், முடிவில் கண் சிமிட்ட,

“மயக்க டாக்டர்” முணுமுணுத்தாள்.

சத்தமாகச் சிரித்துக் காரை நகர்த்தினான் ராகவன்.

மெலிதான தூறல் ஊரை நனைத்துக் கொண்டிருந்தது. பாதி இறக்கப்பட்ட கார் கண்ணாடி வழியே மழைக்குக் கைக் கொடுத்து கொண்டிருந்தாள் மதுமிதா.

சென்னையின் புறநகர் பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அவர்களது கார். நிமிடங்களில் திருப்பதி நெடுஞ்சாலையில் பயணிக்கத் தொடங்கி இருந்தனர்.

கனரக வாகனங்களால் நிறைந்திருந்த சாலையில், அமைதியான நீண்டதொரு பயணம். அவள் எதிர்பார்த்திராதது.

வெளியில் கண்ணுக்கு எட்டிய வரை இருளும், மழையும் மட்டுமே இருக்க, உள்ளே ஏ. ஆர். ரஹ்மான் இசைக்க, ஹரிஹரன் உருகிக் கொண்டிருந்தார்.

“ஸ்வீட் நத்திங்ஸ்” பேசி, சிரித்து, பார்வையால் அணைத்து, விழிகளால் தொட்டு, காதலை பகிர்ந்துக் கொண்டிருந்தனர்.

அந்த ஏகாந்த இரவில், அதுவரை அவர்களுக்கு நடுவில் இருந்த சிறிய மனஸ்தாபம், இடைவெளி காணாமல் போய் இருந்தது.

வீடு திரும்பும் போது மதுமிதா காரை ஓட்ட, ராகவன் முகத்தை வருடிய காற்றுக்கு உறக்கத்தைத் தந்திருந்தான்.

இருக்கையை நன்றாகப் பின்னுக்குச் சாய்த்து, காலை நீட்டிப் படுத்து, ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான்.

வீட்டை அடைந்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்ப மனமில்லாமல் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுமிதா.

இப்படியே படுத்திருந்தால் அவனுக்கு உடல் வலியும், சோர்வும் சேர்ந்து கொள்ளும் என்று உணர்ந்து, கீழிறங்கி சென்று, அவன் பக்க கதவைத் திறந்தாள் மதுமிதா.

“ராகவ், ராகவ்..” குனிந்து, தோளை தொட்டு மென்மையாக எழுப்பியவளை, அனிச்சை செயலாக இழுத்து தன் மேல் போட்டான் ராகவன்.

“டையர்ட்டா இருக்கு. தூங்க விடு சோம்பேறி. எப்பவும் சொகுசா படுத்து இருக்கறது. ஒரு நாள் வேலை பாரு. தெரியும்.” தூக்கத்தில் புலம்பினான் அவன்.

“ஆ.. பேச்சைப் பாரு. கார்ல இருக்கோம் ராகவ். வீடு வந்தாச்சு, எழுந்திருங்க”

“ஏன் வீடு வந்துச்சு? அப்படியே போய்ட்டே இருக்கலாம் இல்ல?” தூக்க மயக்கத்துடன் கரகரத்து ஒலித்தது அவன் குரல்.

அவளுக்கும் அப்படியே படுத்து தூங்கி விட வேண்டும் போலிருந்தது.

“ப்ச், எழுந்திருங்க” பொய்யாகச் சலித்துக் கொண்டாள். கால்கள் வேறு காரில் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டிருக்க அசௌகரியமாக இருந்தது அவளுக்கு.

“அதை என் மேல இருந்து எழுந்திருச்சுட்டு அப்புறமா சொல்லு போதை. சட்டமா மேல படுத்துட்டு எழுந்திருன்னு ‍மிரட்டினா எப்படி?”

அவன் குரலும், பேச்சும் மீனாய் நழுவி அவள் பாதத்தைக் குறுகுறுக்க வைத்தது.

“மயக்க டாக்டர்” அவள் மெல்ல முணுமுணுக்க,

“பொண்டாட்டியை மட்டும் முழுசா மயக்க முடியாத டாக்டர்”

இருவரும் பேசிக் கொண்டே காரில் இருந்து இறங்கி, வீட்டிற்குள் சென்றனர்.

இரவு இருவருக்கும் இன்னும் இனிமை சேர்த்தது.

மறுநாளில் இருந்து மீண்டும் தன் ஓட்டத்தைத் தொடங்கியிருந்தான் ராகவன். அதிகாலை இரண்டு மணிக்கு வந்த அலைபேசி அழைப்புக்கு, பதறி அடித்துக் கொண்டு ஓடினான் அவன்.

“டெலிவரி மது. டிவின்ஸ். நான் உடனே போகனும்” அதே தந்தி குரல், உறக்கம் சுமந்த விழிகளுடன் விடை கொடுத்தாள் அவள்.

அன்றிரவு அவன் வீடு வரும் போது பத்து அடித்து ஓய்ந்தது கடிகாரம்.

இரவு உணவை முடித்துக் கொண்டு, ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர்.

அங்கிருந்த மல்லிகைப் பந்தலில் இருந்த பூக்களைப் பறித்து அவளது கூந்தலில் பொதித்து வைத்து, வாசம் பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.

“ராகவ், இந்த ஹாலை ராகவி குட்டீஸ் ரூம் போல ஆக்கிட்டாங்க இல்ல?”

திரைச்சீலைகள் போடப்பட்டு, சோஃபா ஓர் ஓரமாக நகர்த்தப்பட்டு இருக்க, நடுவே குழந்தைகள் விழுந்தாலும் அடிபட்டு விட முடியாதபடி அடர்த்தியான கார்பெட் தரையைப் பாதுகாத்திருந்தது.

சுவர் முழுவதையும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் அலங்கரித்திருந்தனர்.

“இந்தச் செட் அப், நம்ம குழந்தைகளுக்கும் கண்டிப்பா பிடிக்கும்” கண்ணில் மின்னலுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள். அலைபேசியில் மூழ்கி இருந்தவன் அதைக் கவனிக்கவில்லை, காதில் வாங்கவும் இல்லை.

“ராகவ்…” ராகம் இழுத்தாள்.

“ம்ம் மது”

“ராகவி, அவங்களோட புது வீடு பால் காய்ச்சிட்டாங்க தானே? அவங்க இங்கேயே இருக்கப் போறாங்களா? இல்ல, அந்த வீட்டுக்கு போகிற ஐடியா எதுவும் அவங்களுக்கு இருக்கா?”

மிக முக்கியமாக அவள் கருதியது அவன் காதில் விழவில்லை. ஆனால், எதார்த்தமாக அவள் கேட்ட கேள்வி, வில்லங்கமாக, விளக்கமாக அவன் காதில் விழுந்திருந்தது.

“என்ன கேட்ட? இப்போ என்ன கேட்டா நீ? திரும்பச் சொல்லு?” அதிர்ந்து கத்தினான்.

மதுமிதாவின் பார்வை அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ராகவி, உதயின் மேல் பதிந்தது. இருவருமே முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை.

பதட்டத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள் மதுமிதா. அவர்களும் தவறாகப் புரிந்துக் கொண்டார்களோ, என்ற எண்ணமே அவளுக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தது.

“ஹாய் மா” என்று மதுமிதாவைப் பார்த்து சொன்ன உதய்,

“என்னடா சவுண்ட் பலமா இருக்கு” என இயல்பாகப் பேசத் தொடங்கியிருந்தான்.

ஆனால், அடுத்து வந்த நாட்களில் அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும் முடிவை அறிவிக்க, அவளது பேச்சை தவறாகப் புரிந்துக் கொண்டார்கள் என்பது அவளுக்குத் தெளிவாக விளங்கியது.

ராகவன் தனது கோபத்தைப் பேசாமல் இருந்து காண்பித்தான்.

என்ன செய்வது என்று தெரியாமல், தன்னைத் தானே நொந்து கொண்டு நடப்பதை மௌனமாய்ப் பார்த்திருந்தாள் மதுமிதா.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top