“என்னடா கல்யாண மாப்பிள்ளை? எப்படி இருக்க?” ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தான் உதய்.
“நேத்து தானே மாமா பார்த்தோம். அதுக்குள்ள என்ன மாறிட போகுது. நல்லாதான் இருக்கேன்”
“ஆமா, ஆமா. ஒரு நைட்ல என்ன மாறப் போகுது” என்ற உதய்,
“அப்புறம், நாளைக்கு ஃப்ரீயா? டின்னருக்கு வீட்டுக்கு வரியா?” என்று கேட்க,
“ம்ம், இல்ல மாமா. நாளைக்கு முடியாது. ஆராதனா கூட டின்னர் போறேன்” வரவழைத்துக் கொண்ட துள்ளலுடன் சொன்னான் ராகவன்.
மெலிதாகச் சிரித்து, “சூப்பர் டா. ஏன் இன்னைக்கே போக வேண்டியது தானே?” என உதய் கேட்க,
“இன்னைக்கு முடியாது சொல்லிட்டா மாமா, அவளுக்கு வேலை இருக்காம்” அந்தப் பதிலை கேட்டு, சத்தமாக வெடித்துச் சிரித்தான் உதய்.
“ஹா.. இது நல்லா இருக்கே டா. எப்பவும் நீ முடியாது சொல்வ. இன்னைக்கு உனக்கே ஒருத்தி…”
“யோவ், மாமா.” பொய்யாக அதட்டினான் ராகவன்.
உதய் சிரிப்பை நிறுத்தவில்லை.
“அப்புறம் வேற என்ன சொன்னா?”
“கல்யாண தேதி, பத்திரிக்கை லீவ்னு பேசிட்டு இருந்தா.” என்று ராகவன் அசட்டையாகச் சொல்ல,
“ஓ, நல்லது” என்று ராகம் இழுத்த உதய்,
“ஆமா, சொல்ல மறந்துட்டேன் பாரு. மதுமிதா கூட நம்ம வீட்டுக்குப் பத்திரிக்கை வைக்க வருவா இல்ல?. அவ கல்யாணம் உனக்கு முன்னாடியே இருக்கும்னு நினைக்கறேன். அடுத்த மாசம்னு ராகவி சொன்னதா ஞாபகம். சரி, அவ வர்ற நேரம் வீட்ல யாராவது இருக்க மாதிரி பார்த்துக்கோங்க. என்ன?” உதய் பேச, பேச ராகவனின் ரத்த அழுத்தம் ஏறிக் கொண்டேயிருந்தது.
அலைபேசியை இறுக பிடித்தான் அவன்.
“யோவ், மாமா” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
“அட, நீ ஆராதனா கூடப் பிஸியா இருப்ப இல்லையா? சரி கண்டுக்காம விடு. அவ கல்யாணத்துக்கு நம்ம என்ன போகவா போறோம். பத்திரிக்கை வச்சா என்ன? வைக்கலைனா என்ன?”
“போனை வைங்க மாமா” இருக்கும் இடம் மறந்து கத்தினான் ராகவன்.
“அட, உனக்கு ஏன்டா இப்படிக் கோபம் வருது? நீ தான் ஆராதனாவை கல்யாணம் பண்ணிக்கப் போற இல்ல?” துளி கூட அலட்டிக் கொள்ளாமல் உதய் கேட்க, இங்கே பல்லைக் கடித்துக் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தான் ராகவன்.
“சாரி டா. என்ன இருந்தாலும் முன்னாள் மனைவி இல்ல? கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். ம்ம்…” போலி வருத்தத்துடன் சொன்ன உதய்,
“நாளைக்கு முடியாது இல்ல? அப்ப, இன்னைக்கு நைட் டின்னருக்கு வரியா ராகவ்?”
“நான், உங்க மூஞ்சிலையே முழிக்கறதா இல்ல. போனை வைங்க”
“ஓகே டா. கூல் டவுன்” சன்ன சிரிப்புடன் சொன்னான் உதய்.
“சுகமாய்ச் சுகமாய்க் கொள்ளையிடு..
என் உயிரை மட்டும் விட்டு விடு..” விசிலடித்த படியே பாடினான் அவன்.
அந்த உயிரை மட்டும் விட்டு விடு-வில் அழுத்தம் கொடுத்துப் பாடினான்.
“பாட்டு ஒன்னுதான் இப்போ குறை. யோவ், மாமா. நேர்ல வச்சுக்கறேன் உங்களை” கத்தினான் ராகவன்.
“அட போடா. நீ இன்னுமா போனை வைக்கல? நிம்மதியா பாட்டுக் கூடப் பாட விட மாட்டேங்றான்” என்று நக்கலாகச் சொல்லிய உதய்,
“சின்னப் பையன் நீ. என்னை மிரட்டுற? ம்ம்.. ” செல்லமாக அலுத்துக் கொண்டு, பாடலை தொடர்ந்தான்.
“இன்பம் இன்பம் ஒரு துன்பம்..
துன்பம் எத்தனை பேரின்பம்….” நிறுத்தாமல் பாடிக் கொண்டே,
“நிறைய நேரங்கள்ல துன்பம் கூடப் பேரின்பம் தான். இல்லடா ராகவ்?”
“லூசு மாமா, அறிவே இல்ல உங்களுக்கு. நீங்க எல்லாம்.. அப்பவே உங்களைப் பிரிச்சு விட்டு இருக்கணும். என்னை வெறுப்பேத்தவே…” படபடவென ராகவன் பொரியத் தொடங்க,
“பை டா, ராகவ்” என்று அழைப்பை துண்டித்திருந்தான் உதய்.
இத்தனை நாட்கள் பேரின்பமாக இருந்த துன்பம் இனி நிரந்தரமாகி விடுமோ என்ற பயம் அவனை அப்பிக் கொள்ளத் தொடங்கியிருந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் அறுவை அரங்கத்தில் இருக்க வேண்டும் அவன். ஆனால், காதில் உதய் சொன்ன வார்த்தைகளே எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“மதுமிதா பத்திரிக்கை வைக்க வருவா. உனக்கு முன்னாடியே அவளுக்குக் கல்யாணம்…”
கோபம், வருத்தம், ஆத்திரம் என அனைத்தும் மெல்ல மேலெழும்பி அவனது மென்னியை நெரித்தது.
வயநாட்டில் அவனுக்கு ஆராதனாவுடன் நிச்சயம் நடந்த அன்று, பேஸ்புக்கில் பார்த்த மதுமிதாவின் நிச்சயதார்த்த புகைப்படம் இப்போது நேரம் காலம் தெரியாமல் கண் முன் தோன்றி அவனை இம்சித்தது.
“உன் விருப்பத்துக்கு, என் வாழ்க்கையை மாத்த பார்க்காத மதுமிதா” மிதமிஞ்சிய கோபத்தில் ஆத்திரமாக அவன் கத்தியதொரு நாளில் கூட, கண்களை நிமிர்த்தி அவனை நேராகப் பார்த்து,
“என் வாழ்க்கையே நீ தானே ராகவ்.” என்று சொன்ன மதுமிதா எங்கே போனாள்?
அவனைக் கேள்விக் கேட்ட மனதிற்கு, “அவளை நீ தான் டா தொலைச்ச” பட்டெனப் பதில் கொடுத்தது மூளை.
ஆழ்ந்த முச்சுக்களை எடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, அறுவை அரங்கை நோக்கி நடந்தான் அவன்.
சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்த அந்தப் பின் காலைப் பொழுதில், அப்போதுதான் வாங்கி வந்திருந்த பூச்செடிகளை வீட்டிற்கு முன்னிருந்த காலி இடத்தில் வைத்து விட்டு, அவசர அவசரமாக வீட்டினுள் நுழைந்து சோஃபாவில் விழுந்தாள் மதுமிதா.
உலகில் என்ன மாறினாலும் சரி, இந்தச் சென்னையின் வெயிலும், போக்குவரத்து நெரிசலும், மாறாவே மாறாது என்று எண்ணி புன்னகைத்துக் கொண்டாள் அவள்.
“பட் ஐ லவ் சென்னை. இட்ஸ் ஹோம்” மெல்ல முணுமுணுத்து கொண்டாள்.
அப்படியே ஒரு குட்டி தூக்கத்தைப் போட்டு விட்டு எழுந்தாள். மதியம் மறைந்து, மாலை உதயமாகி இருந்தது.
குளித்து, தளர்வான உடைக்கு மாறினாள். இரண்டு முட்டையை அடித்து ஊற்றி, அடையாக வார்த்து, பிரெட்டுடன் அன்றைய தினத்திற்கான உணவை முடித்துக் கொண்டு, வேலையில் இறங்கினாள்.
ஏற்கனவே கொத்தி சீர்ப்படுத்தி வைத்திருந்த தோட்டத்தில், ஒவ்வொரு செடியாக எடுத்து நடத் தொடங்கினாள்.
மலர்கள், மலரும் நினைவுகளைக் கிளறி விட்டதைப் பொருட்படுத்தாமல் நினைவுகளோடு சேர்த்து அவற்றை மண்ணில் புதைத்து வைத்தாள்.
பூச்செடிகளைப் புதைத்து வைக்க முடிந்தவளால், அத்தனை எளிதாகப் பழைய நினைவுகளைப் புதைக்க முடியவில்லை.
நீரில் அமிழ்த்த அமிழ்த்த மேலெழும் பந்தைப் போல, வேகமாக மிதந்து மேலே வந்தது.
மெல்ல அதில் மூழ்கத் தொடங்கினாள் அவள்.
“துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை..”
பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து அதைக் காலால் லேசாகத் தட்டி ஆடியபடி, அவனுக்கு மிகப் பிடித்த பாடலை ராகவன் மெலிதாகப் பாட, கண் மூடி அவன் தோள் சாய்ந்திருந்தாள் மதுமிதா.
திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கழிந்திருந்தது. மதுமிதாவிற்கு எல்லாமே இனிய கனவு போலத் தானிருந்தது.
குடும்பம், அவள் குழந்தையில் இருந்தே மிகவும் ஏங்கிய ஒன்று.
அப்பா, பாட்டி, தங்கை வெண்பா என்று அவளுக்கும் ஒரு குடும்பம் இருந்ததுதான். ஆனால், அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவளின் அப்பா வீட்டில் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அவருக்கு வேலை, வேலை முடிந்தால் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கிளப்பில் கிரிக்கெட் கோச்சிங் என்று எப்போதும் தன்னைப் பிஸியாகத் தான் வைத்துக் கொண்டார் அவர்.
பிள்ளைகளின் மேல் மிகுந்த பாசம் உண்டு. ஆனால், அதைப் பெரிதாக அவர் வெளிக்காட்டிக் கொண்டது கிடையாது.
பாட்டி எப்போதும் கண்டிப்பு, கறார் தான். தங்கை மட்டுமே அவளை ஓட்டிக் கொண்டே திரிவாள்.
திருமணமான இந்த நான்கு மாதங்களில் ராகவன் வீட்டினரின் நெருக்கமும், பாசமும் அவளை மிகவும் நெகிழ்த்தி இருந்தது.
விசாலாட்சி, கண்ணதாசன், மாமனார் சிதம்பரம் என்று பெரியவர்கள் அவளை ராகவனின் மனைவியாக அவ்வளவு மரியாதையுடன், அன்புடன் நேசக்கரம் கொண்டு அணைத்துக் கொள்ள, அவளால் நம்பத்தான் முடியவில்லை. அவளுக்கு ஏதோ சென்டிமென்ட்டான படம் பார்ப்பது போலவே இருந்தது.
ராகவி, ராகவனின் பாசப் பிணைப்பு. உதய், ராகவன் இருவருக்கும் இடையில் இருந்த உறவோடு இணைந்த நட்பு.
அவளுக்குச் சில நேரங்களில் பொறாமை, எரிச்சல் எட்டிப் பார்த்தாலும் கூட, பெரும்பான்மையான நேரங்களில் அதை ரசிக்கவே செய்தாள் அவள்.
வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.
அந்நிலையில் தான் அவளின் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
“உன் கல்யாணத்தை, நீ விரும்பின மாதிரி, நான் நடத்தி காட்டுறேன் பார்”
அவள் ஆசையை நிறைவேற்ற சவால் விட்டுச் செய்து காட்டிய பாட்டியின் மரணம்தான் அவளின் திருமண வாழ்வில் முதல் விரிசலை விழச் செய்தது.
இரண்டு நாட்கள் வெறும் தலைவலி, காய்ச்சல் என்று படுத்தவர், மூன்றாம் நாள் கண் விழிக்கவேயில்லை.
அதுவரை அவள் பக்க உறவு என்று பக்கத்தில் இருந்தது பாட்டி மட்டுமே. அவரின் இறுதி சடங்கிற்காகச் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த வெண்பா ஒரே வாரத்தில் திரும்பி சென்று விட, சட்டென ஒரு வெறுமை மதுமிதாவை தாக்கியிருந்தது.
பிறந்து பத்து நாட்களே ஆகியிருந்த கைக் குழந்தையுடன் இருந்த ராகவி, வீட்டையும், தன் இரட்டை குழந்தைகளையும் சமாளித்து, மதுமிதாவிற்கும் ஆறுதலாக உடனிருந்தாள்.
ராகவன் தன்னால் முடிந்த மட்டும் அவளுடன் நேரம் செலவழித்தான்.
ஆனால், அவளுக்குத்தான் அது போதவில்லை.
உதய்மித்ரனை எந்நேரமும் தூக்கி வைத்துக் கொண்டாள். மீதமிருந்த நேரத்தில் விதவிதமான உடைகளை வரைந்து தள்ளினாள்.
ஆனால், எதுவுமே மனதிற்கு நிறைவை தர மறுத்தது.
அன்றைக்குக் காலையில் அவதி அவதியாக மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த கணவனிடம், “ஈவ்னிங் சீக்கிரம் வர்றீங்களா ராகவ்? வெளில எங்கயாவது போகலாம். வீட்லயே இருக்கறது ரொம்பப் போர் அடிக்குது” தயக்கத்துடன் கேட்டாள் அவள்.
கையில் கார் சாவியை எடுத்துக் கொண்டு, அறையின் கதவை திறந்து வெளியேறி, “இதுக்குத்தான் வெளில போய் வேலை பாருன்னு சொன்னேன். எங்க கேட்கற” அலுத்துக் கொண்டான் அவன்.
“இன்னைக்கு ஈவ்னிங் முடியாது மது. ரெண்டு சர்ஜரி இருக்கு. நாளைக்கு, இல்லனா, இன்னொரு நாள் போகலாம். ஓகே?” சொல்லிக் கொண்டே படிகளை நோக்கி நடந்தான் அவன்.
அவளின் பதிலை நின்று கேட்பதற்குக் கூட அவனுக்கு நேரம் இருக்கவில்லை. ஆனால், அன்று மாலை அவன் விரைவாக வீடு வந்ததும், மதுமிதாவின் முகம் அப்படியே மலர்ந்து போனது.
மின்னல் வேகத்தில் தயாராகி வந்தவளை விரிந்த புன்னகையுடன் பார்த்தவன், “வா, போகலாம்” என்று அழைத்துக் கொண்டு போனது விமான நிலையத்திற்கு.
அவன் தோழி சுஹாசினியை வரவேற்று, அவளின் வீட்டில் விட்டு விட்டு, உடல்நிலை சரியில்லாத அவனின் நெருங்கிய நண்பனின் குழந்தையைக் காண கூட்டிச் சென்றான் அவன்.
ஏனோ, அவள் மனம் மகிழ மறுத்தது.
சுஹாசினி பக்கத்தில் இருக்கும் போதே, தன் அதிருப்தியை முகத்தில் அப்பட்டமாகக் காட்டி, லேசாக முகம் திருப்பவே செய்தாள் மதுமிதா.
கணவனின் நண்பன் குடும்பத்துடன், அவர்களது குழந்தையுடன் நன்றாகவே பேசினாள், பழகினாள், நலம் விசாரித்தாள்.
எல்லாம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், இருக்கையில் சாய்ந்து கணவனைப் பார்த்தாள்.
“இன்னைக்கு முக்கியமான ஆபரேஷன் இருக்குன்னு சொன்னீங்க இல்ல ராகவ்?” அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“இருந்ததுதான் மது. என் கிளாஸ் மேட் டாக்டர் முரளி இருக்கார் இல்ல? அவர் அட்டென்ட் பண்றார். சுஹா வர்றா சொல்லவும், அவருக்கு மாத்தி விட்டேன். அப்படியே குட்டி பையனையும் பார்க்க போகலாம்னு தோனுச்சு. இப்போ போய்ட்டு வந்தாச்சு” பார்வையைச் சாலையில் பதித்தபடி சொன்னான் ராகவன்.
‘அப்போ, இவனுக்கு நான் முக்கியம் இல்லையா?’ அவள் மனதில் மெல்ல முளை விடத் தொடங்கிய கேள்வி, சஞ்சலத்தைத் தந்தது.
பட்சிகள் பேசும்…