சாதகப் பட்சிகள் – 9 (2)

இம்முறையும் அவளை மயக்க முயன்று அதில் தானும் மயங்கி, இல்லறத்தில் விழிப்புடன் வெற்றியை தொட்டுக் கொண்டிருந்தான் ராகவன்.

“வேலைக்கு எங்கயாவது போகலாம் இல்ல மது?” அவளின் அடர்ந்த கூந்தலில் கை நுழைத்து, விளையாடியபடி கேட்டான் அவன்.

மெல்ல புரண்டு படுத்து, “எத்தனை டைம் சொல்றது ராகவ்? நான் ஃபேஷன் டிசைனர். எட்டு மணி நேரம் ஆபீஸ் போய் வேலை பார்க்கணும்னு அவசியம் இல்ல. வீட்ல உட்கார்ந்து வேலைப் பார்த்தா போதும். கம்யூட்டரில் ஸ்கெட்ச் பண்றேன், ட்ரெஸ் டிசைன் பண்றேன். சில நேரம் பேப்பர்ல பண்றேன். எல்லாத்தையும் மும்பையில் இருக்கற என்னோட பாஸுக்கு அனுப்பி வைக்கறேன். தேவைப்பட்டா, நேர்ல போய்ட்டு வரேன்” அவள் நீளமாகச் சொல்ல,

“ம்ம்” என்றான் அவன்.

“நல்ல சம்பளம் கொடுக்கறார். மும்பையில் சின்ன வீடு, பெரிய வாடகை, நினைச்சாலே பயமுறுத்தற டிராபிக் ஜாம், மூனு நேரமும் வெளி சாப்பாடு.. உங்க கூட இருக்க முடியாது. ஆனா, அங்கேயும் இதே வேலைதான் பார்க்கப் போறேன். ஒரே ஒரு வித்தியாசம் ஆபீஸில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பேன். ஆனா, இங்க பொறுமையா, நிதானமா, ரசிச்சு வீட்ல உட்கார்ந்து வேலை செய்ய முடியுது. இன்ஃபேக்ட், இந்த மூனு மாசத்துல என்னோட ஒரு டிசைன் கூடப் பாஸ் ரிஜெக்ட் பண்ணவே இல்ல. சின்னச் சின்னக் கரெக்சன்ஸ் பண்ணி எல்லாத்தையுமே யூஸ் பண்ணிக்கிட்டார்”

கணவனின் மார்பில் தலை வைத்து சொல்லிக் கொண்டிருந்தாள் மதுமிதா. சீராக அவன் மார்பு ஏறி இறங்கியதில் மெல்ல விழிகளை உயர்த்திப் பார்க்க, எப்போதோ உறங்கி இருந்தான் அவன்.

அவனது உறக்கத்தைக் கலைத்து விடாமல், மெல்ல படுக்கையில் இருந்து இறங்கினாள் அவள்.

அடுத்தப் பத்தாம் நிமிடம், “என்ன சமைப்பது?” என்ற யோசனையுடன் அவள் குளிர்சாதனப் பெட்டியை ஆராய்ந்து கொண்டிருக்க,

“அத்த…” ஓடி வந்து அவளின் காலைக் கட்டிக் கொண்டான் உதய்நந்தா.

ராகவி, உதய், குழந்தைகள் அவளுடன் இணைந்து கொள்ள அந்த இரவு கண்ணைச் சிமிட்டி கொண்டு இனிமையாக மறைந்தது.

“லவ் யூ, பார்த்து போங்க. மறக்காம சாப்பிடுங்க, பிளீஸ்.” குனிந்து பாதி இறங்கியிருந்த காரின் கண்ணாடியில் முகம் பதித்துச் சொன்ன மனைவியைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்த ராகவன்,

“ஓகே மது. பை” என்று காரை மெதுவாக அங்கிருந்து நகர்த்தினான்.

எப்போதும், “லவ் யூ” என்று சொல்லிக் கொண்டே இருந்தவளுக்கு நிரந்தரமாக, “பை” சொல்லி விட்டேன் நான்.

தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன்.

இருளில், தனிமையில், அவளில்லாத வெறுமையில், அவளை மறக்க முடியாத மனதை திட்டிக் கொண்டு, சதா அவளையே நினைவூட்டும் நினைவுகளை விழுங்க முயன்று கண்களை இறுக மூடினான். அவ்வளவு நேரமும் அவள் வலம் வந்த கண்ணில் உறக்கம் வர மறுத்தது.

வேகமாக எழுந்து, மேஜையை நகர்த்தி, பரணில் இருந்த திருமணப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு இறங்கினான். அதைப் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்து விட்டுப் படுக்கையில் சரிந்தான்.

மனம் மீண்டும் நினைவுகளை நிர்தாட்சண்யம் பார்க்காமல் எடுத்து நீட்டியது. தலையணையில் முகம் புதைத்து, அதைத் தவிர்க்க முயன்றான்.

தலையணையை அவன் முகத்தில் வீசியெறிந்து, “இப்பவும் யாரும் உங்களைத் தடுக்கலை இங்க. போங்களேன். போய், நல்ல டாக்டர் பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்களேன். கல்யாணம் சரி வராதுன்னா.. கூட்டிட்டு வந்து குடும்…”

“ஏய்…” அவளை மேலே பேச விடாமல், கையை மனைவியின் முகத்துக்கு நேராக வீசியது, அவனுக்குக் கண்ணில் படமாக ஓடியது.

பயத்தில் விழிகளை இறுக மூடி, அடி வாங்க ஏதுவாகவோ அல்லது அடியில் இருந்து தப்பிக்கவோ, தயாராக முகத்தைச் சட்டென்று மறுபுறமாகத் திருப்பி, கைகளை இறுக்கி, உதடு துடிக்க நின்றிருந்த மதுமிதா கண் முன் வந்தாள்.

இப்போது அதை நினைக்கையிலும் சில்லிட்டது அவன் உடல்.

“ச்சே. நிம்மதியே போச்சு” அன்றைக்கு உதிர்த்த அதே வார்த்தைகளை இன்றைக்கும் உதிர்த்து விட்டு, பெரும் போராட்டத்திற்குப் பின் உறங்கினான் அவன்.

சென்னையின் நெரிசல் மிகுந்த சாலையில் காரை லாவகமாகச் செலுத்திக் கொண்டே, காதில் ப்ளூ டூத்தை இணைத்து ஆராதனாவை அழைத்தான் ராகவன்.

அவள் இப்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணி புரிந்து கொண்டிருக்கிறாள்.

“ஹாய் டாக்டர்” என்றாள் உற்சாகமாக,

“எப்படி இருக்கீங்க?”

“ஓ, நல்லா இருக்கேன். நீங்க?” என்றவள், “என்ன இன்னைக்கு அதிசயமாகக் கால் பண்ணி இருக்கீங்க?” சிரிப்புடன் கேட்க,

“ஈவ்னிங் ஃப்ரீயா? காஃபி ஆர் டின்னர், மீட் பண்ணலாமா?”

“ஆ.. ” மெலிதாக அதிர்ச்சியை வெளிப்படுத்திய ஆராதனா,

“அச்சோ, இன்னைக்கு முடியாதே ராகவன். நாளைக்குப் பார்ப்போமா? பிளீஸ்” கெஞ்சலாக அவள் கேட்க,

“இட்ஸ் ஓகே. நீங்க ஃப்ரீயாகிட்டு கால் பண்ணுங்க. நான் பிக் அப் பண்ணிக்கறேன்”

“ஓகே டன்” என்றவள்,

“ராகவன், வீட்ல கல்யாண தேதி பத்தி.. ” என்று ஆராதனா தொடங்க,

“பெரியவங்ககிட்ட பேச சொல்லு, ஆ.. ஆராதனா..”

“ஓகே ராகவன்” என்றவள், மேலும் சில நிமிடங்கள் பொதுவாகப் பேசி விட்டு வைத்தாள்.

அவனுக்கு மூச்சை அடைப்பது போலிருக்க, ஏசியை அணைத்து, காரின் கண்ணாடியை இறக்கி விட்டான்.

அரசு மருத்துவமனையை அடைந்து, காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு அலைபேசியுடன் கீழிறங்கி, காரை பூட்டினான்.

பணியிடத்தை நோக்கி அவன் நடக்க, அலைபேசி அடித்தது. ராகவி அழைத்துக் கொண்டிருந்தாள்.

அழைப்பை ஏற்றுக் காதில் வைத்த கணமே, “யூ ஓகே ராகவ்?” என்று அக்கறையாக அவள் கேட்க, தூக்கமில்லாததால் எரிந்த கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டே,

“நல்லா இருக்கேன் பாப்பா” என்றான் அவன்.

“அப்படியா?” என்றவள்,

“அப்புறம் ஏன் உன் குரலே சரியில்ல? என்னாச்சு?” என்று அவள் விசாரணையில் இறங்க,

“ஹாஸ்பிடல்ல இருக்கேன் பாப்பா, எதுக்குக் கால் பண்ண? சொல்லு” என்றான், அலுப்புடன்.

குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்து விடாமல் இருக்க, அவன் மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

“மாமா உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க. அவருக்குக் கால் பண்ணு. இப்பவே” என்று விட்டு, மேலே அவன் பேச இடம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்திருந்தாள் ராகவி.

“காலையிலேயே தொடங்கிட்டாங்களா? டிராமா கம்பனி…” முணுமுணுத்துக் கொண்டே உதயை அழைத்தான் ராகவன்.

error: Content is protected !!
Scroll to Top