சாதகப் பட்சிகள் – 10 (1)

“செல்லக் குட்டிக்குத் தூக்கம் வரலையா? ங்கா சொல்ல ஆள் வேணுமா உங்களுக்கு?” ராகவியின் கைக் குழந்தை மித்ரனை கைகளில் ஏந்தி கொஞ்சிக் கொண்டிருந்தான் ராகவன்.

குழந்தை லேசாக உதடு பிரிக்க, அவ்வளவுதான், மாமனை கையில் பிடிக்க முடியவில்லை. முகம் நிறைத்த புன்னகையுடன்,

“மாமாவை பார்த்ததும் சிரிப்பு வருதா எங்க செல்ல குட்டிக்கு? பொக்கை வாய் காட்டுறீங்க?” மென்மையாகக் குழந்தையின் ஒற்றை விரல் பிடித்து முத்தமிட்டு கொண்டிருந்தவனை, அவனுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்து பார்த்தது பார்த்தபடி இருந்தாள் மதுமிதா.

அவனுக்கு ராகவியின் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அவன் குழந்தையிடம் லயித்திருக்க, மது கணவனை ரசித்துக் கொண்டிருந்தாள். அதில் அவன் மேலிருந்த கோபம் கூட வெயில் பட்டதும் கரையும் வெண்பனி போலக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கி இருந்தது.

அவர்கள் வீடு வந்து பத்து நிமிடங்களே ஆகியிருந்தது.

சுஹாசினி, அவர்களது பக்கத்து வீடுதான் என்பதால், அவளும் அப்போது அங்குதான் இருந்தாள். ராகவி, உதய் மற்றும் குழந்தைகளுடன் அவள் பேசிக் கொண்டிருக்க, மாலையில் அவளிடம் முகம் திருப்பியதற்கு இப்போது புன்னகைத்துப் பேசினாள் மதுமிதா.

ராகவன் நேராகச் சென்று அவர்களுக்கு இடையில் அமர்ந்து கலகலத்து கொண்டிருந்ததை முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் பார்த்திருந்தாள் அவள்.

ஒரிரு முறை ராகவி, உதயின் பக்கத்தில் அவன் அமர்ந்ததைப் பார்த்து அவள் முறைத்ததற்கு, கணவனை அழைத்துத் தன் பக்கத்தில் அமர சொன்னதற்கு, குரலை உயர்த்தியதற்கு, அவளை ஓவர் பொஷசிவ் என்று அவர்கள் முத்திரை குத்தி விட, அதில் இருந்து அவள் கணவன் எங்கு அமர்ந்தாலும் கண்டு கொள்வதில்லை, பெரிதுபடுத்துவதில்லை.

அவன் அனைவரிடமும் பொருந்தி போகிறவன் என்பதைப் பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

அவனை அறிந்தவர்கள் அனைவருக்கும், அவனைப் பிடிக்கும். அதுதான் ராகவன். ஆனால், அவனை அவளுக்கு மட்டும் சொந்தமாக்கி, கைகளில் சுருட்டி வைத்துக் கொள்ள நினைத்தது அவள் மனது.

“நீ, அவன்கிட்ட அன்பை மட்டும்தான் எதிர்பார்ப்ப. அவனுக்குத் தேவையான அன்பை உன்னால கொடுக்கவே முடியாது” முன்னர் அவளின் பாட்டி சொன்னது இப்போது நினைவில் வந்தது. அவரின் வார்த்தைகளில் உண்மை இருப்பது போலதான் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டாள் அவள்.

அவனின் அன்பு முழுமையாக அவளுக்கு மட்டுமே வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. ஆனாலும், வேறு யாரிடமும் அவன் அன்பாகப் பழகினால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை.

இதயத்தில் இருந்து கிளம்பி கண்களை எட்டி, எரிச்சலூட்டிய உணர்வு பொறாமையாகத்தான் இருக்க வேண்டும்.

“மது..” ராகவி அவளின் தோள் தொட்டு அழைக்க, தனது சிந்தனைகளில் இருந்து கலைந்து அவளைப் பார்த்தாள் மதுமிதா.

“டீ, குடி” அவள் நீட்டியதை, “டின்னர் சாப்பிட போற நேரத்துல டீ வேணாம்” என்று மறுத்தாள் அவள்.

சிறு தலையசைப்புடன் ராகவி விலகி செல்ல, மதுமிதாவின் கண்கள் மீண்டும் கணவனைத் தேடி தொட்டு, அவனில் நிலைத்தது.

‘ஒரே அறையில், எட்டிப் பிடித்துத் தொட்டு விடும் தூரத்தில் இருக்கும் போதும் கூட ஒருவரை மிஸ் செய்யக் கூடுமா? முடியுமா? என்னால் முடிகிறதே. ஏன்?’ தனக்குள் பேசியபடி அமர்ந்திருந்தாள்.

அவளின் பார்வையைக் கவனித்து விட்டு, புருவம் உயர்த்தி, கண்களால், “என்ன?” என்று கேட்டான் ராகவன்.

சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள். கன்னச்சதை கடித்துச் சிரிப்பை விழுங்கி, கோபத்தை இழுத்துப் பிடித்தாள்.

மறுகணமே அவள் முன் வந்து நின்றவனைப் பார்க்காதது போல, வீம்பாக அமர்ந்திருந்தாள். குழந்தையை அவள் கைகளை நன்றாக வருடி, திணித்து விட்டு அடுப்படியை நோக்கி நடந்தான் அவன்.

அவனையே தொடர்ந்தது அவளின் பார்வை. ராகவி, உதய், சுஹாசினி என அனைவரும் அங்கிருக்க, பேசி சிரித்தபடி இரவு உணவை சமைத்து முடித்து, அதை மேஜையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ராகவியின் இரட்டை குழந்தைகளை உதயும், ராகவும் ஆளுக்கொன்றாகத் தூக்கி வைத்திருக்க, சுஹாசினியின் குழந்தை, ராகவியின் தோளில் உறங்கிக் கொண்டிருந்தது.

மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அந்த முகங்களையே இமைக்காது பார்த்திருந்தாள் அவள்.

அவர்களோடு அமர்ந்து இரவு சாப்பிடும் போதும், உணவை விட, அதிகமாகக் கணவனைத்தான் விழுங்கிக் கொண்டிருந்தாள்.

இனம் புரியா விநோத உணர்வு மனதை முழுமையாக ஆக்கிரமிக்க, அதற்கு மேல் முடியாமல் தங்களின் அறையை நோக்கி நடந்து விட்டாள் அவள்.

யாரைத் தவிர்க்க அறைக்கு ஓடி வந்தாளோ, அவனே எதிரில் அவளின் தோளை அணைத்தபடி நின்றிருந்தான்.

புகைப்படத்தைப் பார்க்க, பார்க்க அவளுக்குச் சத்தமாக வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது.

அவள் வாழ்வில் காரணமற்று பல விஷயங்கள் நடந்து இருக்கிறது. அதில் ஒன்றாக இந்த அழுகையையும் சேர்த்து விட முடிவு செய்தாள். மெல்ல புகைப்படத்தை நெருங்கி, கணவனின் முகம் பார்த்து, “நான் உங்களுக்கு முக்கியமே இல்லையா?” மனதை அழுத்திய கேள்வியைக் கேட்டாள் அவள்.

“வாட் நான்சென்ஸ் மது. என்ன கேள்வி இது?” பின்னால் இருந்து வந்த பதிலில் விதிர்த்து திரும்பினாள் மதுமிதா.

“என்ன பண்ணிட்டு இருக்க? ஃபோட்டோகிட்ட போய்ப் பேசிட்டு இருக்க? நான் இங்க தானே இருக்கேன்? என்கிட்ட பேசாம.. என்ன மது?”

அதிர்ச்சி, கோபம், குழப்பம் எனக் கலவையான உணர்வுகளைச் சுமந்து, கவலையுடன் வந்தது அவனது கேள்வி.

மௌனமாய் நின்றாள் அவள்.

“மது, என்ன? என்ன பிரச்சினை?” தோளை பிடித்து உலுக்கினான்.

“என்கிட்ட பேச உங்களுக்கு எங்க நேரம் இருக்கு ராகவ்?”

“என்ன பேசுற நீ? நாள் முழுக்க உன் கூடத் தானே இருக்கேன்.”

“நாள் முழுக்கவா? ஹா, கேட்கும் போதே ஆசையேதான் இருக்கு. ஆனா, நைட் தூங்க மட்டும்தான் வீட்டுக்கு வர்றீங்க”

“சரி. அப்பவும் உன்கிட்ட பேசாமயா இருக்கேன். உன் கூடத் தானே இருக்கேன். ஒரு நாளைக்கு நாப்பது முறை போன் பண்ற. பேசத் தானே செய்யறோம்.”

ஹ்ம்ம், நாலு முறை போன் செய்ததை நாற்பது என்கிறான். இவனை எல்லாம்.. ஆபரேஷன் தியேட்டரில் இருக்கீங்களா? முதல் கேள்வியே இது தான். ஆம் என்று அவன் சொன்னால், அதன் பின் என்ன பேச, போனை வைத்து விடுவாள் அவள்.

“சாப்பிட்டீங்களா?” என்பது அடுத்து அடிக்கடி, அவளால் கேட்கப்படும் கேள்வி.

அவளின் கேள்விகளில் இருந்து தப்பிக்கவோ, இல்லை அவளின் அழைப்பை தவிர்க்கவோ இப்போதெல்லாம் ஒவ்வொரு முறை ஆபரேஷன் செல்லும் முன்பும் குறுஞ்செய்தி அனுப்பி விடுகிறான்.

அதுவும் கூட அவளை எரிச்சலூட்டவே செய்கிறது. என்னவோ மறைமுகமாக, “என்னை அழைக்காதே, வீணாகத் தொந்தரவு செய்யாதே” என்று சொல்வதைப் போலத் தானிருக்கும் அவளுக்கு.

இதில் காதல் வசனம் பேசியது போல, ரொம்பத்தான் அலுத்துக் கொள்கிறான்.

அத்தனையையும் மனதில் பேசியபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதுமிதா.

error: Content is protected !!
Scroll to Top