நாட்கள் ஒளியின் வேகத்தில் மாதங்களை நகர்த்தியிருந்தது. அவர்களுக்குத் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது என்பதையே இன்னும் மதுமிதாவால் நம்ப முடியவில்லை.
தினம் அவள் கண் விழிக்கும் போதும், கண் மூடும் போதும் எதிரில் தெரியும் கணவனின் முகமே இது கனவல்ல நிஜம் என்று அவளுக்கு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிமிடமும் அவனது முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளையே கூர்ந்து பார்க்கும் கண்களுடன், இதழ்களில் மறைக்கப்பட்ட புன்னகையுடன் அவர்களின் திருமணப் புகைப்படத்தில் இருந்த கணவனை இமைக்காமல் பார்த்தாள் மதுமிதா.
நாளின் பெரும் பகுதியை அவனுடன்தான் கழிக்கிறாள். அதனுடன் என்று சொல்ல வேண்டுமோ?
அவனில்லாத பொழுதுகளிலும் அவளையே பின் தொடர்ந்து கொண்டிருந்த அந்த விழிகளின் மேலிருந்த மயக்கம் அவளுக்கு இன்னமும் குறையவில்லை தான். என்றுமே குறையாது என்றே அவளுக்குத் தோன்றியது.
“என்ன பார்வை? எப்ப பாரு டூப்ளிகேட்டையே ரசிச்சிட்டு இருக்க? ஒரிஜினல் இங்கதான் இருக்கேன்” அவளின் தோளில் தன் நாடியை பதித்து, காதில் கிசுகிசுத்தான் ராகவன்.
‘டூப்ளிகேட் இருபத்தி நாலு மணி நேரமும் என் கூடவே இருக்கே. நான் பேசுறது எல்லாத்தையும் கேட்குதே. என்னையே பார்க்குதே. ஒரிஜினல் அப்படியா?’ உதடு தொட்ட வார்த்தைகளை உச்சரிக்கவில்லை அவள்.
அவன் வீட்டிற்கு வந்து பத்து நிமிடங்களே ஆகியிருந்தது. அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்தான்.
எலுமிச்சையும், ரோஜாவும் கலந்ததொரு நறுமணமும், அவன் வாசமும் கலந்து அவளது நுரையீரலை நிறைக்க, ஆழ மூச்சிழுத்து, மௌனமாய் அவனோடு இழைந்து, கண் மூடி நின்றாள் அவள்.
“டீ எடுத்துட்டு வரவா? உங்களுக்கு ஆபரேஷன் எதுவும் இருக்கா இன்னைக்கு?” மெல்ல அவள் விசாரிக்க,
“ஆபரேஷன் எதுவும் இல்ல. ஆனா, எமர்ஜென்சி கால் வந்தா போகணும்.” என்றவன்,
“நான் டீ போடுறேன். வா” என்று அவளின் கைப் பிடித்துக் கீழே அடுப்படிக்கு அழைத்துக் கொண்டு போனான்.
அவன் டீ போடும் நேரத்தில் அவளின் கைகள் பரபரவென வாழைக்காயை வெட்ட, அடுத்தச் சில நிமிடங்களில் பஜ்ஜி தயாராகி இருந்தது.
அவர்களைத் தவிர வீட்டில் யாருமே இல்லை. வீடே அமைதியில் மூழ்கியிருந்தது.
சூடான டீ, பஜ்ஜியை ஒரு ட்ரேயில் அடுக்கி எடுத்துக் கொண்டு, மாடியை நோக்கி நடந்தனர் இருவரும்.
மாடியின் ஒரு பக்கம் முழுவதையும் பல வண்ண மழை லில்லிக்கள் ஆக்கிரமித்திருந்தை, ஆச்சரியமாய்ப் பார்த்தான் ராகவன்.
“வாவ் மது. யார் பார்த்த வேலை இது? அவ்ளோ அழகா இருக்கு. எப்படி இத்தனை கலர்ஸ் கிடைச்சது?” அதிசயித்து அவன் வினவ, அமைதியாய் பதில் தந்தாள் அவள்.
“நான் தான் கலெக்ட் பண்ணி வச்சேன்.”
“ஓ…” குனிந்து மஞ்சள் நிற லில்லியை வருடியவனின் விழிகள் மட்டும் உயர்ந்து அவளை வருட,
“சும்மா, ஏதாவது.. நேரம் போக..” என்று திணறியவள்,
“பூ, செடி, கொடி எல்லாம் பிடிக்கும். அதான், வாங்கி வச்சேன். அதுவும் ஒரே பூ வேற வேற கலர்ல பார்க்க அவ்வளவு அழகா இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்தில வாங்கிட்டு வரும் போது, வளருமான்னு ரொம்பச் சந்தேகமாதான் இருந்தது. ஆனா, ஒரே வாரத்துல செடி நல்லா வளர்ந்துடுச்சு. பூவும் பூத்திடுச்சு இப்போ” குரலில் மகிழ்ச்சி பொங்க சொன்னாள் அவள்.
பூக்களைப் பூரிப்புடன் பார்த்தவளை சற்றே பொறாமையாகப் பார்த்தான் அவன்.
“வா, டீ ஆறுது. குடிப்போம்” பூக்களின் மேலிருந்து, பூவையின் பார்வையைத் தன் மேல் திருப்பினான் அவன்.
சுவரில் சாய்ந்து நின்று டீயை அருந்திக் கொண்டே, “அப்புறம், பூ தவிர வேற என்ன பிடிக்கும்” விசாரித்தான்.
“உன்னைப் பிடிக்கும்” பளிச்சென்று பதில் சொல்லியது அவளது விழிகள். ஆனால், அவள் மௌனமாகதான் நின்றாள்.
இடக்கரத்தால் தலைக் கோதி கொண்டான்.
“என்ன பதிலை காணோம்?” புருவம் உயர்த்திக் கேட்டான். மெல்ல அவனுக்கு நெருக்கமாக வந்து நின்றாள் அவள்.
இமைகளைப் பிரித்து, உயர்த்தி அவன் விழிகளைத் தொட்டாள்.
சோம்பலாக அவனைப் பார்வையால் வருடி, “நீங்க தலைக் கோதுறது பிடிக்கும்” காற்றுக்கும் வலிக்காமல் காதலாகச் சொன்னாள்.
அவன் கண்கள் விரிய, புருவங்கள் தானாக உயர்ந்தது.
“கேள்வியா, கேலியா, காதலா, புருவம் உயர்த்தறது பிடிக்கும்” வெண்டை விரல்கள் அவனது புருவத்தை நீவியது.
மெல்ல இதழ் பிரித்து, புன்னகைத்தான்.
“இந்த மீசை, அதுக்குக் கீழ நீங்க அடிக்கடி மறைக்கற இந்தக் கள்ளச் சிரிப்பு ரொம்பப் பிடிக்கும்” அவள் சொல்ல சொல்ல, அவனது இதழ்கள் பிரிந்து விரிந்தது.
“உலகமே கண் முன்னாடி இருந்தாலும் என்னை மட்டுமே பார்க்கற இந்தக் கண்ணைப் பிடிக்கும்” சிரிப்பில் மின்னிய அவன் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து அவள் சொல்ல, அவன் கரம் அவளது இடையை அனிச்சையாய் வளைத்தது.
“தினம் நாலு பேரை மயக்கினாலும், என்னை மயக்க போராடுற, என்கிட்ட மயங்கி நிக்கற இந்த மயக்க மருந்து டாக்டரை…”
“பேசியே மயக்கற மது..” அவனின் ஒரு கரத்தில் இருந்த டீ கோப்பை மேஜைக்கு மாறி இருந்தது.
அவளை இறுக்கமாகத் தன்னோடு சேர்த்து அணைத்து, தலை சாய்த்து அவளின் இதழ் தொட யத்தனித்தான்.
“முத்தத்தாலே சேலை நெய்யற இந்த உதடுகள்..”
சட்டென்று இதழ்களை அணைத்திருந்தான்.
தேநீரும், சிற்றுண்டியும், பூக்களும், அந்தி மாலையும் கேட்பாரற்றுத் தனித்திருக்க, அவர்கள் கூடடையும் பறவைகளின் வேகத்துடன் தங்களின் அறையை அடைந்திருந்தனர்.
அத்தனை நேரம் அவளுக்குப் பிடித்தமானதை சொல்லிக் கொண்டிருந்தவளிடம் இப்போது தனக்குப் பிடித்தமானது எது என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், கேட்கும் நிலையில்தான் அவளில்லை.