சாதகப் பட்சிகள் – 8 (3)

அவன் நேரம், காலம் பார்க்காமல் வேலையைக் கட்டிக் கொண்டு அழுகிறான் என்று மட்டுமே இத்தனை நாட்களும் நினைத்திருந்த ராகவி, இன்றைக்கு அவனது வேலையின் அழுத்தமான சூழலை உணர்ந்து கண் கலங்கினாள்.

பல நாள்கள் நள்ளிரவில், அதிகாலையில் அவன் வீடு திரும்புகையில் திட்டி இருக்கிறாள்.

ஆனால், இன்றைக்கு அதுவும் மதுமிதா முன்பு இந்தப் பேச்சை எடுத்ததற்காக மனதில் அவ்வளவு வருந்தினாள் அவள்.

அங்கே மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் கையில் கொடுத்தாள் மதுமிதா.

அதை ஒரே மடக்கில் குடித்து விட்டு நிமிர்ந்தவனை அனைவரும் ஒருவித அச்சத்துடன் பார்க்க,

“இந்தியால அனஸ்தீயாலஜிஸ்ட் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு பார் மது” என்றவனின் கைப் பற்றி,

“ராகவ், பிளீஸ்” என்றாள் மதுமிதா.

அவனை இறுக அணைக்கத் துடித்த கரங்களை ஒன்றோடொன்று கோர்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

அந்த அறையில் இருந்த அனைவரையும், கண்களால் ஒரு முறை தொட்ட ராகவன்,

“ஒரு நாளைக்கு ரெண்டு, மூனு, ஏன் அஞ்சு ஆபரேஷன் கூட அட்டென்ட் பண்ணி இருக்கேன். சில மேஜர் ஆபரேஷனுக்கு எல்லாம் தொடர்ச்சியா எட்டு, ஒன்பது மணி நேரம் கூட நின்னு இருக்கேன். ஆனா, எண்ட் ஆஃப் த டே என் பேரு கூட என்னோட பேஷண்ட்க்கு தெரியாது. நூறுல பத்து பேருக்கு என் பேர் தெரிஞ்சாலே அதிசயம் தான். பெருசா எதையும் எதிர்பார்த்து நாங்க மருத்துவம் பார்க்கலை தான். ஆனாலும், எங்க பேர் கூட…” என்றவனின் குரலில், அதிகமான வலி இருந்தது.

“என் குடும்பத்துக்கே என் வேலையோட இம்பார்ட்டன்ஸ் புரியல. இதுல ஊர்ல இருக்கவங்களுக்கு எப்படிப் புரியும் சொல்லு மது?”

அவளுக்குத் தொண்டையில் ஏதோ அடைக்கும் உணர்வு.

“டாக்டர்ஸ் எவ்ளோனு பார்த்து சொல்லு மது” என்றான் கட்டளையாக, அலைபேசிக்கு பார்வையைத் திருப்பினாள் மதுமிதா.

“ஒரு லட்சம் பேருக்கு ஒரு.. ஒரு மயக்கவியல் மருத்துவர் தான் இருக்கார்… அதுவும் வளர்ந்த நகரங்களில்…”

பேச முடியாமல் அடைத்த தொண்டையைச் செருமி சரி செய்தாள் அவள்.

“பார்த்துக்கோ. இதான் நிலைமை. இங்க திரும்பின பக்கம் எல்லாம் ஹாஸ்பிட்டல். அதுல ஒரு நாளைக்கு எத்தனை ஆபரேஷன் நடக்குது தெரியுமா? உயிர் காக்கும் அறுவை சிகிச்சை ஒரு பக்கம்னா, ஒரு உயிரை உலகத்துக்குக் கொண்டு வர்ற பிரசவம் இன்னொரு பக்கம். ஒரு நாளைக்கு எத்தனை குழந்தைங்க பொறக்குது நம்ம நாட்ல? அதுல பாதிக்கும் மேல சிசேரியன் தான். எல்லாத்துக்கும் மயக்க மருந்து மருத்துவர் இருந்தாகனும். இல்லைன்னா, என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

நாங்க அனிஸ்தீசியா அப்படின்றதை முடிவு பண்ண கணமே, எங்களுக்குத் தெரியும். எங்க வேலை எப்போ முடியும்னு எங்களுக்கே தெரியாதுன்னு. எப்போ வீட்டுக்கு போவோம்னு… நேரம், காலம் கிடையாதுன்னு…” அவன் நீளமாகப் பேசிக் கொண்டே போக,

“சாரி ராகவ்” அழுதபடி கேட்டாள் ராகவி.

இப்படி அவளிடம் பேச வேண்டிய சூழல் வரும் என்று ராகவன் ஒரு நாளும் நினைத்ததே கிடையாது. அவளை வருத்தப்படுத்தி விட்டோம் என்பதை அவனால் நன்றாக உணர முடிந்தது.

“இட்ஸ் ஓகே பாப்பா” என்றான் அவன்.

உதய் மனைவியின் கையை இறுக பற்றி வெளியில் இழுத்துப் போக முயற்சிக்க, “ராகவி” என்று அழைத்து, அவளைப் போக விடாமல் நிறுத்தினான் ராகவன்.

“நேத்து, எட்டு வயது பையனுக்கு அப்பண்டிக்ஸ் வெடிச்சுடுச்சு. மூனு, நாலு அனஸ்தீஸியாலஜிஸ்ட்கு கால் பண்ணி பார்த்துட்டு, யாரும் அந்நேரம், அவரசத்துக்கு வர முடியலைனு தான் என்னைக் கூப்பிட்டாங்க. நான் போனது தப்பா சொல்லு?” அவன் அழுத்தமாகக் கேட்க, எச்சில் கூட்டி விழுங்கினாள் ராகவி.

“மனசாட்சி இருக்க எந்த டாக்டராலயும் போகாம இருக்க முடியாது.” முணுமுணுத்தான் அவன்.

“நேத்து, இதே நம்ம குடும்பத்தில் ஒருத்தருக்கு ஏதாவது எமர்ஜென்சி…”

“டேய், உன் நிலைமை எங்களுக்குப் புரியுது.” என்று கத்திய உதய்,

“எல்லோருக்கும், எல்லோருடைய வேலையும், அதுல இருக்கற கஷ்ட, நஷ்டங்களும் புரியாதுதான் ராகவ். அதுக்காக நீ இப்படி எமோஷனல் ஆகாதடா. ஏற்கனவே உனக்குச் சரியான தூக்கம் இல்ல. சும்மா டென்ஷன் ஆகாம, மாடில போய் ரிலாக்ஸ்டா உட்காரு. நீயும் கூடப் போ மா” இருவரையும் பார்த்துச் சொன்னான் அவன்.

உதய் சொல்வதில் உள்ள நியாயம் ராகவனுக்குப் புரிந்தாலும் கூட, ஏனோ அவனது கோபம் குறையவில்லை. கோபம் என்பதை விட ராகவி இப்படி நடந்து கொள்வாள் என்று எதிர்பார்த்திராதவனுக்கு, மிகுந்த வேதனையாக இருந்தது.

“தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தாதான் வலி. அடுத்தவனுக்கு வந்தா எக்கேடோ கேட்டுப் போகட்டும் தான்” சொல்லிக் கொண்டே மதுமிதாவை இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் போனான் ராகவன்.

இந்த ராகவன் அவர்களுக்குப் புதிது.

அவர்களைக் கடந்து சென்ற ராகவனை, உதய், ராகவி இருவருமே அதிசயமாகப் பார்த்தனர். அவர்களிடம் அவன் கோபமாகப் பேசுவான் என்பதே பெரும் அதிர்ச்சியாக இருக்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மாடி ஹாலை ஒட்டியிருந்த பால்கனியில் சென்று அங்கிருந்த ஊஞ்சலில் பொத்தென்று அமர்ந்தான் ராகவன். அவனையே கண்களில் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தான் அவன்.

“ராகவ், ஐ ஆம் சாரி” பக்கவாட்டில் கைக் கோர்த்து அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள் மதுமிதா.

ஒரு மயக்கவியல் மருத்துவர் தன் பணியினால், தினசரி வாழ்க்கையில் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதைச் சற்று முன்னர்ப் படித்து அறிந்து கொண்டிருந்தவளின் மனம் கணவனுக்காக அதிகம் வருந்தியது. அவன் மேல் காதலும், அவன் செய்யும் தொழிலின் மேல், உயிர் காக்கும் மருத்துவத்தின் மேல் மதிப்பும், மரியாதையும் அதிகரித்திருந்தது.

“நீ ஏன் சாரி சொல்ற மது?”

“எனக்கும் சேர்த்து தானே அவ்ளோ பெரிய லெக்சர் கொடுத்தீங்க. எனக்கும் உங்க வேலையைப் பத்தி முழுசா தெரியாது ராகவ். உங்ககிட்ட கேட்காதது என் தப்பு தான்..” குற்ற உணர்வுடன் அவள் சொல்ல,

“விடு மது.” என்று அவள் முகம் பார்த்து அவன் சொல்ல, அணைத்திருந்த கரங்களில் இறுக்கத்தைக் கூட்டி, அவன் முகமெங்கும் முத்தமிடத் தொடங்கி இருந்தாள் அவள்.

பால்கனியின் ஒரு பகுதியை அடர்ந்து வளர்ந்திருந்த மல்லிகை கொடி ஆக்கிரமித்திருக்க, ஊஞ்சலை மொத்தமாக மறைத்திருந்தது அது.

“மது..” அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி அவளிதழ்களில் அழுத்தமாக முத்தமிடத் தொடங்கியிருந்தான் ராகவன்.

காதலும், கவிதையுமாக அவர்கள் வாழ்வு தொடங்கவில்லை தான். ஆனால், இருவருக்கும் நடுவில் அழகான புரிதலுடன் தொடங்கியது.

ஒரு வாரம் அரசு மருத்துவமனைக்குச் செல்லவில்லை ராகவன். விடுமுறை எடுத்திருந்தான். முடிந்த வரை மனைவியுடன் நேரத்தை செலவிட்டான்.

பெரிதாக வெளியில் எங்கயேயும் அழைத்துச் செல்லவில்லை. அதைப் பற்றி அவளும் கவலைக் கொள்ளவில்லை. இருவருமே அவர்களுக்கே அவர்களுக்கான நேரத்தை ரசித்து அனுபவித்தனர்.

அவர்களின் திருமணத்திற்காகச் சிங்கப்பூரில் இருந்து விடுமுறையில் வந்திருந்த மதுவின், தங்கை வெண்பா திரும்பி போகும் போது மட்டும் அவர்களை வழியனுப்ப விமான நிலையம் சென்றனர்.

மறுநாளே அவர்களும் தேனிலவு கொண்டாட கேரளா கிளம்பி விட்டனர்.

முதல் நாளே ஆலப்புழாவில் படகு இல்லத்தில் ஒரு நாளை கழிக்கப் பதிவு செய்திருந்தான் ராகவன்.

பேக் வாட்டரில் படகில் மிதந்தபடி செல்வதே புதுவித அனுபவமாக இருக்க, கணவனின் நெருக்கம் இனிமையைக் கூட்ட, மதுமிதாவின் கண்களில் நிரந்தரமாக வந்து அமர்ந்து கொண்டது புது மயக்கம்.

மது என்ற பெயர் மட்டுமில்ல, அவளின் காதலும், அவளுடன் காதலில் திளைத்த நிமிடங்களும் கடந்த சில நாட்களாக அந்த மயக்க மருந்து நிபுணனை மீள முடியா மயக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.

அவர்களைக் கடந்து சென்ற ஊரும், உலகமும் தவழ்ந்து, மிதந்து கடந்து செல்ல, மதுமிதாவும் மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருந்தாள்.

அந்தப் படகு இல்லத்தில் அவர்கள் மட்டுமே இருக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு அறைக்குப் போனான் ராகவன்.

“யாரது யாரது யாரது.. இடைவிடாது இசைப்பது…” பாடல் அறையை நிறைத்துக் கொண்டிருக்க,

“இடைவிடாது… இசைப்பது….இதோ இந்த மயக்கற டாக்டர் தான். அவருக்கு இதுதான் வேலையே..” கிளுக்கி சிரித்தபடி சொன்னாள் மதுமிதா. சத்தமாகச் சிரித்தான் ராகவன்.

“அதென்ன எப்ப பாரு பாட்டு?” அவள் கேட்க,

“இசையில் தொடங்குதம்மா.. விரக நாடகமே…” தாபத்துடன் ஒலித்தது அவன் குரல்.

கையில் ஏந்தி இருந்தவளை, சிரித்தபடி படுக்கையில் விட்டான், கண் இமைக்கும் நேரத்தில் உருண்டு அவன் கைக்குச் சிக்காமல் நகர்ந்தாள் அவள்.

மென்மையாகக் கை நீட்டி அவளைத் தன் பக்கமாக இழுத்தவன், அவளின் மணிக்கட்டில் தன் பெருவிரல் கொண்டு வருடி,

“இது அல்நார் நர்வ் (ulnar Nerve). இங்க இருந்து, இதோ இங்க வரைக்கும் போகும்…” மணிக்கட்டில் இருந்து மெலிதாக முன் கை தொட்டு, தோள் வரை கோடிழுத்தான் ராகவன்.

அதில் உடல் கூசி சிலிர்க்க, “ராகவ், என்ன பண்றீங்க?” கோபமாகக் கேட்கத்தான் நினைத்தாள். ஆனால், கிறக்கமாகக் காற்றாக வந்தது அவள் குரல்.

“உன்னைக் கொடு, என்னைத் தருவேன்.. இது தான் காதலடி…” பாடலும் பொருத்தமாக ஒலிக்க,

கண் சிமிட்டி, குறும்பாகச் சிரித்து, அவளின் கழுத்தில் இதழ் பதித்து, “இது அன்சா சர்விகலிஸ் (ansa cervicalis). இந்த நர்வ்…” ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் இதழ்கள், அவளின் சங்கு கழுத்தில் முத்தமிட, மீசையின் உரசலில் அவள் மேனி மொத்தமாகச் சிலிர்த்தது. கழுத்து நரம்பில் பதித்த முத்தம், கால் நகம் வரை பயணித்திருந்தது.

அவன் கழுத்தில் கரம் கோர்த்து,

“ராகவ்.. நீங்க படிச்சதை சரி பார்க்க.. நான்தான் கிடைச்சனா…” மேலே அவனது இதழ்களோடுதான் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

தேனாய் தித்தித்த தேனிலவில் அடுத்து வந்த மூன்று நாட்களைக் கழித்து விட்டுச் சென்னை திரும்பினர் தம்பதிகள்.

வாழ்க்கை அவர்களை வரவேற்க காத்திருந்தது.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top