சாதகப் பட்சிகள் – 8 (2)

அது பொறுக்காத அலைபேசி அடித்து அவனை எழுப்பி விட, கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தான் அவன்.

அலைபேசி அழைப்பை ஏற்றுப் பேசினான்.

அந்தப் பக்கம் அவனுக்குத் திருமண வாழ்த்துகள் தெரிவிக்க,

“தாங்க்ஸ் மா” என்றவன், “வெயிட் பண்ணுங்க. பேசிட்டு சொல்றேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டு நண்பனை அழைத்தான் அவன்.

“வாழ்த்துகள் புது மாப்பிள்ளை. சாரி டா, கல்யாணத்துக்கு வர முடியல. இன்னைக்கு ரெண்டு மேஜர் ஆபரேஷன் அவோய்ட் பண்ண முடியல….” எடுத்ததும் படபடவெனப் பேசிக் கொண்டே போன நண்பனை,

“முரளி, இட்ஸ் ஓகே டா. வாழ்த்திற்கு நன்றி” என்ற ராகவன், ஒரு மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டு, அங்கே அடுத்த ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டிய மிக அவசரமான அறுவை சிகிச்சைக்கு அவனால் போக முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

“அவங்க எப்பவும் கூப்பிடுற, எல்லோரும் இன்னைக்குப் பிஸி போலடா. அவங்க ஒரு பக்கம் டிரை பண்றாங்க. நானும்…” பேசிக் கொண்டிருந்தவனைக் கலைத்தது, அறைக் கதவு தட்டப்படும் ஓசை. பேசிக் கொண்டே எழுந்து போய்க் கதவை திறக்க அங்கே ராகவி நின்றிருந்தாள்.

அவனது பேச்சை கேட்டவளின் முகம் கோபத்தில் கடினமாகியது.

சட்டெனப் பேச்சை துண்டித்துக் கொண்டான் ராகவன்.

அவனைத் தாண்டி அறைக்குள் நுழைந்து நின்றாள் ராகவி. நேற்றைய தினத்தில் இருந்தே அவன் மீது அவள் கோபமாக இருப்பதை ராகவன் உணர்ந்தே இருந்தான். ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவளை நிமிர்ந்து என்னவென்று பார்த்தான் அவன்.

“என்னடா பண்ணிட்டு இருக்க? உன் வேலை முக்கியமானது தான். நான் இல்லைனு சொல்லல. அதுக்காக உன் கல்யாணத்தன்னைக்குக் கூட நீ இப்படிப் பண்றது கொஞ்சம் கூட நல்லால்ல ராகவ்” பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினாள் ராகவி.

“சாரி கா…” என்று சொன்னவனைக் கையை நீட்டி தடுத்த ராகவி,

“இப்பவும் ஏதோ ஆபரேஷன் பத்தி தானே பேசிட்டு இருந்த? கிளம்பிட்டியா என்ன? நேத்து நைட்டு நீ காணாம போனதை உங்க மாமா சாமர்த்தியமா மறைச்சிருக்கலாம். ஆனா, இன்னைக்கு அப்படி ஏதாவது செய்தீன்னா, அவ்வளவுதான் ராகவ்.”

“ராகவி…” குரலை உயர்த்தி அவளைப் பேச விடாமல் செய்தான் ராகவன்.

அவன் பார்வை ராகவிக்குப் பின்னே குளியல் அறை கதவை பிடித்தபடி ஸ்தம்பித்து நின்றிருந்த மனைவியின் முகத்தில் நிலைத்தது.

“இப்பவே தூங்கி நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்குத் தூங்க நேரம் இருக்காது” இறுக அணைத்து, காதில் காதல் பேசியதாக அவள் நினைத்திருக்க, அவளைத் தூங்க சொல்லி விட்டு அவன் வேலையைப் பார்க்க சென்றிருக்கிறான் என்ற செய்தி தந்த அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் மதுமிதா.

திருமணமாகி முழுதாக ஒரு நாள் கூட ஆகி இருக்கவில்லை. அதற்குள் நிதர்சனம் அவள் முகத்தில் பளிச்சென்று அறைந்திருந்தது.

இனி, அவளின் வாழ்வு இப்படித்தான் தொடரப் போகிறதா என்று ஓடிய எண்ணத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.

“உனக்கு என்ன வேணும் ராகவி. இப்போ எதுக்கு இங்க வந்த?” முகத்தில் அடித்தது போலக் கேட்டான் ராகவன்.

அவன் குரல் அறைக்கு வெளியேயும் கேட்டிருக்க, “ராகவ்” என்று அழைத்தபடி உள்ளே வந்தாள் பனிமலர். அவளோடு அவள் கணவன் வீராவும் உள்ளே வர, அனைவரையும் எரிச்சலுடன் பார்த்தான் ராகவன்.

மதுமிதா அறையில் இருந்ததைக் கவனிக்கவில்லை ராகவி. அவளுக்கு மதுமிதா அங்கிருப்பது தெரிந்திருந்தால் நிச்சயமாக இந்தப் பேச்சை இப்போது ஆரம்பித்திருக்க மாட்டாள்.

இதயம் தாறுமாறாகத் துடிக்க, கையைப் பிசைந்து கொண்டு தவிப்புடன் ராகவனைப் பார்த்தாள் ராகவி.

“ராகவ், என்ன சத்தம்?” என்று கேட்டபடியே உதயும் வந்து சேர, அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு, படுக்கையில் அமர்ந்தான் ராகவன்.

“மதுமிதா…” சத்தமாக அழைத்தான். அவ்வளவு நேரமும் சிலையாக நின்றிருந்தவள் மெல்ல கலைந்து, கணவனின் முன் வந்து நின்றாள்.

“நீங்க எல்லாம், இவன் ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வெளில வாங்க” மனைவி மற்றும் அவளின் தோழி பனிமலர், அவளது கணவன் வீரா, மூவரையும் பார்த்துக் கேட்டான் உதய். ராகவி கண்ணீரை கணவனிடம் காட்டி விடாமல் இருக்கப் பெரும்பாடு பட்டாள்.

மதுவின் கையைப் பிடித்தபடி எழுந்து நின்றான் ராகவன்.

“ராகவி…” மெல்ல அழைத்து, “உன் டெலிவரி சிசேரியன் தானே?” என்று அவன் கேட்க, “ஆம்” என்று தலையை அசைத்தாள் ராகவி.

இப்போது, எதற்கு இந்தக் கேள்வி கேட்கிறான் என்ற கேள்வி அவள் விழிகளில் தொக்கி நின்றது.

“அப்போ உனக்கு மயக்க மருந்து கொடுத்த டாக்டர் பேர் என்ன?” ராகவன் கேட்க, ராகவி மௌனத்தையே பதிலாகத் தந்தாள்.

“குழந்தைங்களோட பீடியாட்ரிசன் பேர் என்ன?” அவன் அடுத்தக் கேள்வியைக் கேட்க,

“டாக்டர் தேவா, தேவராஜன்” சொன்னாள் ராகவி.

“உன்னோட கைனக் பேரு?”

“மகாலட்சுமி” பதில் பட்டென்று வந்தது.

மெதுவாகத் திரும்பி உதயை பார்த்த ராகவன், “நீங்க சொல்லுங்க மாமா, இதுவரை ரெண்டு, மூனு முறை எமர்ஜென்சியில் இருந்துருக்கீங்க தானே? உங்க அனஸ்தீஸியாலஜிஸ்ட் பேர் என்ன?”

உதய் கண்களில் கோபமும், அதிர்ச்சியும் போட்டிப் போட, பதிலின்றி அவனை வெரித்தான்.

“உங்க மனைவிக்கு டெலிவரி ஆனதும் ஹாஸ்பிடல் ஃபுல்லா ஸ்வீட் கொடுத்து கொண்டாடுனீங்க இல்ல? பிரசவம் பார்த்த கைனகாலஜிஸ்ட்க்கு நன்றி சொன்னீங்க தானே?”

உதய் தலை தானாக ஆடியது.

“அந்த ஆபரேஷன் நடக்க முக்கியக் காரணமா இருந்த, மயக்கவியல் மருத்துவரின் பேர் என்ன மாமா?”

“ராகவ்…” என்ற உதயை கை நீட்டி பேச விடாமல் தடுத்தான் ராகவன்.

“தெரியாது. இல்ல மாமா?” நக்கலாகச் சொன்னான் அவன்.

மெதுவாக மனைவியின் பக்கம் திரும்பி, “உன் தங்கச்சி வெண்பாவோட அனஸ்தீஸியாலஜிஸ்ட் பேர் என்ன?”

தலையை இட வலமாக அசைத்தாள் மதுமிதா.

“உன்னோட பல் மருத்துவர் பேர்?”

“டாக்டர் விவேக்” என்றாள் உள்ளே போய் விட்ட குரலில்.

“உங்க பாட்டியோட கார்டியாலஜிஸ்ட் பேர்?”

“கார்த்திக்” அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.

“போன்ல கூகிள் ஓபன் பண்ணு” என்று அவன் சொல்ல, அதை அப்படியே செய்தாள் மதுமிதா. காரணமின்றி ஒரு பதட்டம் அவளின் விரல்களை நடுங்கச் செய்தது.

“மொத்தம் எத்தனை விதமான சர்ஜன்ஸ் இருக்காங்கன்னு பார்த்துச் சொல்லு”

“பத்து, பதினாலு..” திக்கியபடி சொன்னாள் மதுமிதா.

“என்னடா ராகவ் இதெல்லாம்..” என்று எரிச்சலுடன் ஆரம்பித்த உதயை ஒற்றைப் பார்வையிலேயே அடக்கினான் ராகவன்.

“ஜெனரல் சர்ஜன், கார்டியாலஜிஸ்ட், நியூரோ சர்ஜன், மகப்பேறு மற்றும் மகளிர், கண் அறுவை சிகிச்சை, பீடியாட்டிரிக், பெருங்குடல் மற்றும் மலக்குடல், ஆர்தோ, யூரோலஜிஸ்ட்…” ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே போனாள் மதுமிதா.

“இத்தனை விதமான சர்ஜன் இருக்காங்க இல்ல? ஆனா, இவங்க அத்தனை பேருக்கும் ஒரே ஒரு மயக்கவியல் மருத்துவர் தான். இதயம், மூளை, வயிறுன்னு தனித் தனி மயக்க மருந்து நிபுணர்கள் இங்க கிடையாது. தலையில் இருந்து கால் வரைக்கும்.. ஒரே ஒரு மருத்துவர் தான் கவனிக்கனும். நாங்க ஒருத்தரா நின்னுதான் ஒரு உயிரை கையில் பிடிச்சு வைச்சு, திரும்ப அவங்க உடம்புக்குள்ள பத்திரமா அதை வைக்கணும்.

மயக்க ஊசி போட்டுட்டு வேலை முடிஞ்சதுன்னு, கை வீசிட்டு வெளில போய்ட முடியாது. ஒரு ஆபரேஷன் முடிஞ்சு, பேஷண்ட் ரூமுக்கோ, ஐசியுக்கோ மாறுற வரை நாங்க அங்க இருந்தாகணும்.

திடீர்னு ஹார்ட் பீட் கூடும், பிபி எகிறும், சிலருக்கு பாதியில மயக்க மருந்து சரியா வேலை செய்யாம கண் முழிச்ச நிகழ்வுகள் எல்லாம் இருக்கு தெரியுமா? அந்நேரம் நாங்க பதற கூடாது. நாங்க பதறினா மொத்த தியேட்டரும் பதறும். சர்ஜன் கையில கத்தியை நிதானமா பிடிச்சா தான் ஆபரேஷன் வெற்றிகரமா, நல்லபடியா நடக்கும், முடியும்.

எல்லா மேஜர் ஆபரேஷன் முடிஞ்ச பின்னாடியும் ஒரு மயக்க மருந்து நிபுணரோட பிபி செக் பண்ணி பார்த்தா, நிச்சயமா அது ஹையா தான் இருக்கும்.”

அங்கிருந்தவர்கள் மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

அவன் சொன்னதில் சில விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்துதான் இருந்தது.

ஆனாலும், அவனுக்கிருந்த கோபத்தில் அப்படி ஒரு கடினமான குரலில் அவன் சொல்வதைக் கேட்கையில் அவன் வேலையின் அழுத்தத்தை, பளுவை, அவனது பொறுப்பை, முக்கியத்துவத்தை அன்று முழுமையாக உணர்ந்து கொண்டனர்.

“ஐசியு பெரும்பாலும் எங்க கண்காணிப்புல தான் இருக்கும். அது தெரியுமா உங்களுக்கு?” அவன் கேட்க,

“தெரியும் ராகவ். பிளீஸ் ரிலாக்ஸ்” என்றான் உதய்.

அவனைப் பாசமான தம்பியாக, நல்ல நண்பனாக மட்டுமே அறிந்திருந்த ராகவியும், பனிமலரும் அவனைத் திகைப்புடன் பார்த்தனர்.

ராகவனின் வேலை ஓரளவு உதய்க்கு தெரியும் என்றாலும், அவனுக்குமே அதை ராகவனின் வாயிலாக அறியும் போது மனதை என்னவோ செய்தது.

error: Content is protected !!
Scroll to Top