மதுமிதா கண்களால் மண்டபத்தைச் சுழல விட்டாள். பூக்களும், பெண்களும், பட்டுமாக நிறைந்திருந்தது அந்தத் திருமண மண்டபம். திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்த முகங்கள், அவளது மனநிலையை ஒத்திருந்தது.
அவளின் பாட்டி, தங்கை வெண்பா அவளுடனேயே நின்றிருந்தனர். ஆனால், அவளின் கண்கள் சில நொடிகளில் தன் கணவன் ஆகப் போகும் ராகவனையும், அவனது குடும்பத்தையுமே சுற்றி வந்தது.
உதயும், ராகவியும் பம்பரமாகச் சுழன்று, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
மதுமிதாவின் கண்கள் ராகவனை விட, ராகவி, உதய் மற்றும் அவர்களின் குழந்தைகளைத் தான் அதிகம் வட்டமிட்டது. ராகவியின் புடவை நிறத்திலேயே பட்டுப் பாவாடை, சட்டை அணிந்திருந்தாள் உதய்தாரா. அதே நிறத்தில் சட்டையும் பட்டு வேட்டியும் அணிந்திருந்தனர் உதய் மற்றும் உதய்நந்தா. மணமக்களைத் தேடித் தழுவிய கண்கள் தவறாமல் அவர்களையும் தொட்டே மீண்டது.
“மறக்காம எல்லோருக்கும் திருஷ்டி கழிக்கணும். முக்கியமா செல்லத்துக்குச் சுத்திப் போடணும்” கண்ணதாசனிடம் புலம்பலாகச் சொல்லிக் கொண்டிருந்தார் விசாலாட்சி.
ராகவியையே பின் தொடர்ந்து கொண்டிருந்த மதுவின் பார்வையை ராகவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
“மது..” ரகசிய குரலில் அழைத்த ராகவன்,
“ரொம்ப அழகா இருக்க. இத்தனை நாள் இந்த அழகை எல்லாம் எங்க ஒளிச்சு வச்சிருந்த?” அவள் புறம் தலை சரித்துக் கிசுகிசுத்தான்.
கன்னச்சதை கடித்துச் சிரிப்பை விழுங்கிய மதுமிதா, “உங்களுக்கு இன்னைக்குத்தான் கண்ணு தெரியுது போல ராகவ்” எனச் சொல்ல,
“ஆமா, ஆமா. இனி மேல் கண்ணு மட்டுமில்ல…”
“அச்சோ, மணமேடையில் இருக்கோம் ராகவ். ஒழுங்கா மந்திரம் சொல்லுங்க” அவள் கண்டிப்புடன் முணுமுணுக்க,
“நான் என்ன சொல்ல வந்தேன்னா. சரி, அப்புறம் சொல்றேன், ஓகே?” ஒற்றைக் கண் சிமிட்டி சொன்னான் அவன். முகச் சிவப்பை, வெட்கத்தை அவனைக் கண்ணை உருட்டி, மிரட்டி மறைத்தாள் அவள்.
இளஞ்சிவப்பு நிற காஞ்சிப் பட்டில், அதற்குப் பொருத்தமான நகைகளுடன், திருத்தமான முக ஒப்பனையுடன், வெகு எளிதான தலை அலங்காரத்துடன் இருந்தவள் அவனின் கண்களை மட்டுமல்ல, மனதையும் மொத்தமாகக் கொள்ளை கொண்டாள்.
மீண்டும் அவள் புறமாகச் சாய்ந்து, “என்னை மயக்க இத்தனை எஃபோர்ட் எல்லாம் நீ போட தேவையில்ல மது” கண்ணை அவள் தலையில் இருந்து கால் வரை ஜாடையாக அவன் அசைத்துக் காண்பிக்க, உதடு கடித்து வெட்கத்தை விழுங்கி, தலை குனிந்தாள் மதுமிதா.
அவர்களின் நெருக்கம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை முகங்களிலும் புன்னகையை வரவழைத்தது.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அவர்களது காதல் திருமணம் என்று உரக்க சொல்லாமல், சொல்லிக் கொண்டிருந்தான் ராகவன்.
“டேய், பேசாம உட்காரு” உதய் குனிந்து, ராகவனின் மாலையைச் சரி செய்யும் சாக்கில் சொல்ல,
“ஹா, அதை யார் சொல்றா பாரு. உங்க கல்யாணத்துல நடந்ததை ஞாபகப்படுத்தவா மாமா?” என்று இப்போது உதயை வம்புக்கு இழுத்தான் ராகவன்.
அவனை முறைத்துக் கொண்டு பின்னே நகர்ந்து நின்றான் உதய்.
நேற்று இரவு நடந்த கலாட்டாவிற்கும், தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதைப் போல மணமேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் ராகவன்.
அன்று அதிகாலை வேளையில் ராகவி மணமகனின் அறைக்குத்தான் முதலில் சென்றாள்.
அங்கு ராகவன், உதய் இருவருமே இல்லாதிருக்க, தடதடக்கும் இதயத்துடன் கார் பார்க்கிங்கை அடைந்தாள் அவள். அங்கே கணவனோடு சேர்த்து காரையும் காணாது, உடனே அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள்.
அந்த அதிகாலை வேளையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.
“வந்துட்டே இருக்கோம் ராகவி. அஞ்சே நிமிஷத்தில் அங்க இருப்போம்.”
உதய், அவளின் அழைப்பை ஏற்றதும் மின்னல் வேகத்தில் சொல்ல, “ஓகே” என்று விட்டு, அலைபேசியை அணைத்தாள் அவள்.
இன்னும் சற்று நேரத்தில் மண்டபமே விழித்துக் கொள்ளும், அதற்குள் அவர்கள் வந்து விட வேண்டும் என்பது மட்டுமே அவளது அப்போதைய கவலையாக, வேண்டுதலாக இருந்தது.
மெல்ல விழிக்கத் தொடங்கியிருந்தது நகரம். சாலை அப்போதுதான், துணைக்கு ஆள் சேர்க்கத் தொடங்கியிருந்தது. பரபரப்பில்லாத சாலையில் பத்தே நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்து விட்டான் உதய்.
அவன் காரில் இருந்து இறங்கி உள்ளே செல்ல, அந்நேரம் லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தான் ராகவன்.
அங்கே காத்திருப்போருக்காகப் போடப்பட்டிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் பேச்சி முத்து.
ராகவனின் காரை பேச்சி முத்து ஓட்டிக் கொண்டு வர, உதயின் காரில் ஏறினான் ராகவன்.
காரில் ஏறி அமர்ந்து, இருக்கையில் சாய்ந்த மறுகணம் கண்களை மூடி உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் அவன்.
“இப்படி அசந்து தூங்கறான். இவனை எப்படி எழுப்பறது?” பேச்சி முத்துவிடம் கேட்டான் உதய்.
அவர்கள் மண்டபத்தை அடைந்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. ஆனால், ராகவன் கார் நின்றதை கூடக் கவனிக்காமல் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவனை அலேக்காகத் தூக்கப் போனான் உதய்.
“யோவ் மாமா, என்ன பண்றீங்க?” என்று சிரித்துக் கொண்டே கண்ணைக் கோடாகத் திறந்துக் கேட்டான் ராகவன்.
உதய் முறைக்க, “டைம் ஆகுது, வாங்க உள்ளப் போகலாம்” என்று புயலாகக் காரில் இருந்து இறங்கி, இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி, மண்டபத்தினுள் சென்றான் ராகவன்.
காலை 9 – 10 முகூர்த்தம் என்பதால், மூன்று மணி நேரம் நன்றாகத் தூங்கி எழுந்து, தெளிந்த முகத்துடன் மணமகனாகத் தயாராகி மணமேடையில் அமர்ந்திருந்தான் அவன்.
அதுவரை இருந்த அத்தனை குழப்பங்களும் துடைத்து தூக்கி எறிந்திருந்தான்.
எவ்வித தயக்கமும் இன்றி முழு மனதுடன் மதுமிதாவை இருவரின் குடும்பத்தினர் மற்றும் சொந்த பந்தங்களின் ஆசியுடன் தன் மனைவியாக்கி கொண்டான் ராகவன்.
வெகு இயல்பாக அவனை நெருங்கி நின்று புகைப்படத்திற்குப் புன்னகைத்தாள் மதுமிதா.
காதலை அடைந்து விட்ட மகிழ்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“தலை முதல் கால் வரை எவ்வளவு அலங்காரம், அணிகலன். பட்டு, பூக்கள்ன்னு உங்களை மயக்க நாங்க எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கு. ஆனா, நீங்க? ஒரு பட்டு, வேட்டி சட்டை போதும். கம்பீரம், கவர்ச்சி எல்லாம் வந்துடுது. மயக்கறீங்க. மயக்க டாக்டர்” அவள் கிசுகிசுத்த விதத்தில் அவனுக்கு வெட்கமும், சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
மதுமிதாவின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டான் ராகவன். புதியதொரு உறவில் அடி எடுத்து வைத்திருந்த அவர்களின் முகங்கள் மகிழ்ச்சியில் பூரித்திருக்க, கண்களில் மிதந்த கனவையும், காதலையும் கச்சிதமாகக் கைப் பற்றி, அழகானதொரு புகைப்படமாக்கி இருந்தன கேமிராக்கள்.
சடங்குகள், சம்பிரதாயங்கள் என நேரம் ரெக்கை கட்டி பறக்க, அனைத்திலும் நாயகியாக இருந்தவளும் சிறகுகள் இல்லாமல் பறந்து தான் கொண்டிருந்தாள்.
நேரம் மாலை ஆறை கடந்திருக்க அவனது அறையில் நல்ல உறக்கத்தில் இருந்தான் ராகவன்.