சாதகப் பட்சிகள் – 7 (3)

“அவனுக்கு ஏன் ஹெல்ப் பண்றீங்க உதய். வீட்ல தெரிஞ்சா உங்களைத்தான் திட்டுவாங்க. மதுக்குத் தெரிஞ்சா, என்ன நினைப்பா? அவனுக்கு விடிஞ்சா கல்யாணம் உதய். அவன் அதுக்குள்ள வந்திடுவானா?” கண்களில் மின்னிய கண்ணீருடன் ராகவி கேட்க, உதய்கு தன் மேலேயே கோபம் வந்தது.

“அன்னைக்கு அவனுக்காக டின்னர் பிளான் பண்ணி, சமைச்சு எல்லாம் கொடுத்தீங்க. அது ஓகே. ஆனா, இன்னைக்கு? இது சரியில்ல உதய். அவன் எப்போ வந்து, எப்போ ரெஸ்ட் எடுத்து, எப்போ ரெடியாகி மேடைக்கு வந்து? தாலியை சரியான நேரத்துக்குக் கட்டுறதுக்கு இருப்பான் தானே உதய்?”

அக்கணம் ராகவனைத் திருமணத்திற்கு வற்புறுத்தியதற்காக வருத்தப்படத் தொடங்கி இருந்தாள் ராகவி.

“பேச்சி முத்துவை கூடவே அனுப்பி இருக்கேன். ரெண்டு மணி நேரத்துல வந்துடுவான். அவர் கூட்டிட்டு வந்திடுவார்”

பேச்சி முத்து அவனின் வலது கை. அவரின் பெயரை கேட்டப் பின்னும் அவளின் மனம் சமாதானம் அடையவில்லை.

மதுமிதாவை நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்தது அவள் மனது. இனி ஒவ்வொன்றுக்கும் தானும், கணவனும் ராகவனிற்குத் துணை நிற்க முடியாது என்ற நிதர்சனம் கண் முன் தோன்றி அவளை அச்சமூட்டியது.

அவள் பார்க்கும் போதெல்லாம் ராகவனிடம் திருமணம் குறித்து, மதுமிதாவின் எதிர்பார்ப்புகள் குறித்து அவ்வளவு பேசி இருந்தாள். அனைத்திற்கும் தலையைத் தலையை ஆட்டி விட்டு, இப்போது அவளிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல், விடிந்தால் திருமணத்தை வைத்துக் கொண்டு, அவன் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்ததை எப்படி எடுத்துக் கொள்வது என்றே அவளுக்குத் தெரியவில்லை.

“முகூர்த்த நேரத்திற்கு ராகவன் மணமேடையில், மாப்பிள்ளை அலங்காரத்தில் இருப்பான் பட்டே. நீ இப்போ போய்ப் படுமா. பிளீஸ். நாளைக்கு ராகவன் கல்யாணம் நல்லபடியா நடக்கும். அதுக்கு நான் பொறுப்பு” உதய் உறுதியாகச் சொல்ல,

“பிராமிஸ்…” கை நீட்டினாள் ராகவி.

அவளின் கரத்தில் தன் கரம் வைத்து அழுத்தினான் உதய்.

“சொன்ன வார்த்தையைக் காப்பாத்தலைன்னா என்ன நடக்கும்னு உங்களுக்கு நல்லா தெரியும் உதய். பார்த்துக்கோங்க.” என்று விட்டு, படியேறி சென்றாள் ராகவி.

ஒரு பெருமூச்சை வெளியேற்றி மீண்டும் மனோவை துணைக்கு அழைத்துக் கொண்டு, காரின் மேல் ஏறி அமர்ந்தான் உதய்.

“மானே.. மரகதமே.. நல்ல திருநாள் இது..” குழைய ஆரம்பித்தார் மனோ. கண் மூடி இருந்தவன் அப்படியே அசந்து உறங்கியிருந்தான்.

ராகவன் சொன்ன நேரத்திற்கு அலைபேசியில் அலாரம் வைத்திருக்க, அது அடித்து அவனை எழுப்பி விட்டது.

அடித்துப் பிடித்து எழுந்த உதய், கண்களைத் தேய்த்துக் கொண்டே கையை உயர்த்தி மணி பார்த்தான். அதிகாலை மூன்று என்றது கைக் கடிகாரம்.

உறக்கம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போக, அதன் இடத்தைப் படக்கென்று பிடித்துக் கொண்டன பயமும், பதட்டமும்.

அலைபேசியில் ராகவனின் எண்ணை அழுத்தி காதில் வைத்தான். அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

ராகவன் கேட்டதும் சம்மதித்த தன் அறிவீலித்தனத்தை ஆயிரம் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சித்தபடி ராகவன் சொன்ன மருத்துவமனைக்குச் செல்ல காரில் ஏறி அமர்ந்தான் உதய்.

மருத்துவமனையின் எண்ணையும் தேடி எடுத்தவன், ஏனோ அங்கு அழைத்து விசாரிப்பதை தவிர்த்தான்.

கைகள் இப்போது பேச்சி முத்துவின் எண்ணை அழுத்தி இருந்தது. ஆனால், அவரும் அழைப்பு ஏற்கவில்லை எனவும், அவனின் பதட்டம் இன்னும் அதிகரித்திருந்தது.

அவனுக்கு ராகவன் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டு. ராகவனை, உதயின் காதலி என்று ராகவியே கிண்டல் செய்து விளிக்கும் அளவு இருக்கும் அவர்கள் இருவரின் பிணைப்பு.

ராகவியைப் போல இருப்பதினால் மட்டுமல்ல, ராகவியின் மேல் ராகவ் காட்டும் அதீத பாசமும் உதய்க்கு மிகவும் பிடிக்கும்.

ராகவியைப் போலவே உதயும் ராகவன் நன்றாகக் குடும்பம், குழந்தை என்று மகிழ்வாக இருக்க வேண்டும் என்றே விரும்பினான். ஆனால், சம்மந்தப்பட்ட ராகவனும் அதற்கு மனம் வைக்க வேண்டுமே.

சில மணி நேரம் முன்பு உதயின் முன் வந்த ராகவன்,

“மாமா…” என்று அழைக்கும் போதே அலர்ட் மோடுக்கு சென்று விட்டான் உதய்.

“என்ன ராகவ்?” என்று சந்தேகத்துடன்தான் கேட்டான்.

“ஒரு எமர்ஜென்சி…” அவனை முடிக்க விடாமல் கை நீட்டித் தடுத்தான் உதய்.

“அய்யய்யோ டேய். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒழுங்கா போய்த் தூங்கு. வா” ராகவனின் கையைப் பிடித்து இழுத்தபடி மணமகன் அறையை நோக்கி நடந்தான் உதய்.

“மாமா, சின்னப் பையன் மாமா. எட்டு வயதுதான் ஆகுது. பாவம் மாமா. வேற டாக்டர்ஸ் அவைலபிள் இல்லையாம். வேற வழியில்லாம தான் எனக்குக் கால் பண்ணி இருக்காங்க. பிளீஸ் மாமா.” உதயை மேலே நடக்க விடாமல் நிற்க வைத்துக் கெஞ்சினான் ராகவன்.

“மூனே மூனு மணி நேரம்தான் மாமா. அதுக்குள்ள வந்துடுவேன். பிளீஸ் மாமா. சின்னப் பையன். நாம டிலே பண்ற ஒவ்வொரு நிமிஷமும் கிரிடிக்கல் தான். அப்பெண்டிக்ஸ் வெடிச்சுடுச்சு மாமா. பாவம். அவசரத்துக்கு இந்நேரம் எந்த டாக்டரும் கிடைக்கலையாம். போனதே தெரியாத மாதிரி ஃபாஸ்ட்டா வந்துடுவேன் மாமா” ராகவனுக்குள் இருந்த மருத்துவன் முழித்து விடப் பொறுப்பாகக் கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன்.

“டேய் ராகவ். அவளுக்குத் தெரிஞ்சா அடி பிச்சுடுவா டா” உதய் கோபத்துடன் சொல்ல,

“அச்சோ, மது அப்படியெல்லாம் அடிக்க மாட்டா மாமா.” என்று ராகவன் தீவிரமாகச் சொல்ல,

“டேய், நான் என் பொண்டாட்டியை சொன்னேன் டா. அவளுக்குத் தெரிஞ்சா என்னை அடி பிச்சிடுவா. உன்னைப் போக விட்டுட்டு என்னை அடி வாங்க சொல்றியா?” உதய் சொன்ன தினுசில் சத்தமாகச் சிரித்து விட்டான் ராகவன்.

“இன்னுமா மாமா அடி வாங்கிட்டு இருக்கீங்க?” அவன் கேலியாகக் கேட்க,

“நல்லா சிரிடா ராசா. நாளைக்கு நான் உன்னைப் பார்த்து சிரிப்பேன்.” நக்கலாகச் சொன்ன உதய், இறுக்கமாக ராகவனின் கரத்தை பற்றினான்.

அவனைப் போக விடாது தடுத்திடும் வேகம் அதில் இருந்தது.

“ஒரு உயிர் மாமா. அதுவும் சின்னப் பையன் வேற. மற்ற எல்லாரையும் விட உங்களுக்கு இது புரியனும். நீங்களும் மக்கள் சேவையில்…”

“டேய் சேவை, ரவைன்னு… பேசாம இருடா. விடிஞ்சா உனக்குக் கல்யாணம். என்னால ரிஸ்க் எடுக்க முடியாது. இரு, நீ போக வேணாம். பேச்சி முத்துவை விட்டு நம்ம ஏரியால இருக்க அனஸ்தட்டிஸ்ட் யாரையாவது கண்டுபிடிக்கச் சொல்லுவோம்.” உதய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராகவனின் அலைபேசி அலறியது.

அவனிடம் இருந்து பிடுங்கி உதயே அழைப்பை ஏற்றான்.

அந்தப் பக்கம் இருந்து வந்த வேண்டுதலில் அவன் முகம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.

“பேசு” என்று வாயசைத்து அலைபேசியை ராகவனிடம் கொடுத்தவன், அடுத்த ரெண்டாம் நிமிடம் அவனைப் பேச்சி முத்துவுடன் மருத்துவமனைக்கு அனுப்பியும் வைத்திருந்தான்.

நேரம் அதிகாலை நான்கு மணியை நெருங்கியிருந்தது.

மூன்று வயது உதய்நந்தா உறக்கம் கலைந்து சினுங்க, அவனைத் தட்டிக் கொடுத்து தூங்க வைத்த ராகவி சத்தம் எழுப்பாமல் வெளியில் வந்து கணவனைத் தேடினாள்.

இப்போது காரோடு அவனும் அங்கு இல்லாதிருக்க, அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் ராகவி.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top