சாதகப் பட்சிகள் – 7 (2)

குழந்தைகளை விசாலாட்சியிடம் ஒப்படைத்து விட்டு, மதுமிதாவின் பின்னோடு திரிந்தாள். துணிக்கடை, நகை கடை, அழகு நிலையம் என அனைத்திற்கும் தோழியாக ஜோடி போட்டுக் கொண்டு அவளுடன் அலைந்தாள்.

ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து, சிறந்ததை அவளுக்கு வாங்கிக் கொடுத்தாள் ராகவி.

ராகவியின் அன்பில் மதுவின் மனம் குளிர, ராகவன் அளித்த ஏமாற்றம் அவள் மனதில் சற்றே பின்னுக்குப் போயிருந்தது.

விசாலாட்சி தன் பங்கிற்குப் பேரனின் மனைவியாகப் போகிறவளுக்கு என்று குடும்பத்தின் பாரம்பரிய நகைகளைக் கொடுக்க, முதலில் மறுத்தாலும் பின்னர் அதை மனதார மகிழ்ந்து வாங்கிக் கொண்டாள் மதுமிதா.

திருமணத்திற்கு இரண்டே நாட்கள் இருக்கும் போது, ராகவனும் எதிர்பாராத விதமாக, அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அவளுக்காக நேரம் ஒதுக்கி அவளோடு ஒரு மாலையைக் கழிக்க, மதுமிதா சிறகில்லாமல் வானில் பறக்கத் தொடங்கி இருந்தாள்.

“சர்ப்ரைஸ் மது” கத்தியபடி, அவள் கண்களின் மேலிருந்த தன் கையை விலக்கினான் ராகவன்.

இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்ச் சிலையாக நின்றாள் மதுமிதா.

அன்று அவள் வியந்து பார்த்த பூப்பந்தலின் கீழே, மேசை போடப்பட்டு அதில் உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பூப்பந்தலை சுற்றி மின்மினியாய் கண்ணைச் சிமிட்டி கொண்டிருந்தன குட்டி குட்டி சீரியல் பல்புகள். மேஜையின் நடுவில் பெரிய மெழுகுவர்த்திக் காற்றோடு அளைந்தபடி ஒளியாய் கரைந்து கொண்டிருந்தது.

சுற்றிலும் இருள் நிறைந்திருக்க, அவர்களைச் சுற்றி கண் சிமிட்டிய மெல்லிய வெளிச்சத்தில் ராகவன் அவள் கண்களுக்கு இளவரசனை போலவே தெரிந்தான்.

அவள் முன்னிருந்த உணவு அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

“மது” தென்றலாய் வருடிய அவன் குரலுக்கு, சட்டென்று திரும்பி அவனை இறுக அணைத்துக் கொண்டாள் மதுமிதா.

“உங்களை ரொம்பப்படுத்துறேன் இல்ல?” கேள்வி அவன் மார்பில் கரைய, அவளின் தோள் பற்றித் தன்னிடம் இருந்து பிரித்த ராகவன்,

அவளின் முதுகிலும், காலிலும் கைக் கோர்த்து அப்படியே தூக்கியபடி சென்று, அவளை மடியில் வைத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தான்.

அவனது அதிரடியில் அதிர்ந்தபடி, “ராகவ்வ்வ்..” என்றவளை,

“இந்தச் சேலையை எவன் கண்டுபிடிச்சான் தெரியல. இவ பேரை சொல்லும் போதே போதையா இருக்கு. இதுல சேலையை வேற கட்டி போதை ஏத்துறா…” அவன் புலம்பலை கேட்ட மதுவினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சங்கீதமாய் ஒலித்த அவளின் சிரிப்பொலியில் அவன் கண்கள் அவளின் முகத்தில் நிலைக்க, சரியாக அந்நேரம் கீழிருந்து அவர்களுக்குப் பொருத்தமாக இசையும் கசிந்து வந்தது. காலநிலை சாதகமாக இருக்க, காதல் நிலை இறுகியது.

பாடகர் மனோவும், சித்ராவும் உருகிக் கொண்டிருந்தனர்.

“கண்கள் ஒன்றாகக் கலந்ததா?

காதல் திருக்கோலம் கொண்டதோ? கைகள் ஒன்றாக இணைந்ததா?”

கண்கள் ஒன்றாகாமல், கைகள் இணையாமல், இதழ்கள் இடைவெளியை குறைத்திருந்தது.

மதுவின் கன்னம் உரசி, இதழில் மென்மையாய் தடம் பதித்தான் ராகவன்.

பத்து வருடங்களுக்கும் மேலாக ஒளித்து வைத்திருந்த அன்பை, அன்று மொத்தமாய் அவளிடம் ஒப்படைத்தான் அவன். மேஜையில் இருந்த மெழுகுவர்த்தியை விட வேகமாக அவன் கரங்களில் கரைந்து கொண்டிருந்தாள் அவள்.

பேச்சும், பார்வையும், பாடலுமாக இருவரும் இரவு உணவை முடித்தனர்.

மீண்டும் அவளை நெருக்கமாக இருத்திக் கொண்டு கதைப் பேசிக் கொண்டிருந்தான் ராகவன். அவளுக்குக் காதல் மட்டுமே பேசியது.

அப்பொழுதின் இதத்தைக் கலைக்க விரும்பாமல், அவன் தோள் சாய்ந்து அப்படியே உறங்கிப் போனாள் மதுமிதா.

சென்னையின் பிரபலமான திருமண மண்டபம் அது. நேரம் இரவு பதினொன்றை கடந்திருக்க மண்டபமே அசதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

கார் பார்க்கிங்கில் இருந்தான் உதய். காரின் மேலே ஏறி அமர்ந்து, துணைக்கு மனோவை அமர்த்தி இருந்தான்.

அவர், “இதமாகச் சுகம் காண துணை வேண்டாமோ” என்று அவனுக்குத் துணையாக, இசை மழையைப் பொழிந்து கொண்டிருந்தார்.

கண் மூடி இசையில் கரைந்து கொண்டிருந்தான் அவன்.

“உதய், உதய்… ” மனைவியின் உலுக்கலில் பதறி கண் திறந்தவன், அவளின் முகத்தில் தெரிந்த பதட்டத்தில் கையில் இருந்த அலைபேசியைத் தவற விட்டுப் பிடித்தான்.

“என்னாச்சு பட்டே? என்னம்மா பண்ணுது? தூங்கலையா நீ? உடம்புக்கு எதுவும் பண்ணுதா? டாக்டர்கிட்ட போகலாமா?” படபடவென்று கேள்விகளை அடுக்கினான் அவன்.

“ராகவ், அவனைக் காணோம் உதய்” கண் கலங்க, திக்கியபடி சொன்னாள் ராகவி.

“அவன் ரூம்ல இல்ல. மண்டபம் ஃபுல்லா தேடிட்டேன். அவனை எங்கேயும் காணோம். அதான் உங்களைத் தேடி வந்தேன். நீங்க அவனைப் பார்த்தீங்களா? சாப்பிட்டு உங்க கூடத் தானே பேசிட்டு இருந்தான்?” பதட்டத்தில் வியர்த்துக் கொட்டியது அவளுக்கு.

“ரிலாக்ஸ் பட்டே. இப்ப ஏன் இப்படிப் பதட்டமாகி பிபி ஏத்திக்கற” அவளின் கன்னத்தில் கைப் பதித்து அவன் கேட்க, அவளோ கொதித்துப் போனாள்.

“எங்க அவன்? இந்நேரம் எங்க போனான்? கல்யாணமே வேணாம்னு ஓடிட்டானா?” கத்தினாள் ராகவி.

“ஷ்ஷ்ஷ், என்ன பேச்சு இது பட்டே? அபசகுணமா பேசிட்டு இருக்க. முதல்ல சவுண்டை குறை” அவளின் தோளின் மேல் படர்ந்த அவன் கரத்தை பட்டென்று தட்டி விட்டாள் ராகவி.

“ராகவ் எங்க உதய்? அவனுக்கு என்னாச்சு? எனக்குப் பதில் சொல்லுங்க” மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, மேடிட்டிருந்த வயிற்றில் கை வைத்தபடி கத்தினாள்.

“டென்ஷன் ஆகாம இரு பட்டே. வா, அவன் எங்கன்னு பார்க்கலாம். அவன் ரூம்ல இல்லனா, மதுமிதா கூடப் பேசிட்டு மாடியில எங்கயாவது இருப்பான். பார்ப்போம், வா.” என்றவனைப் பார்வையால் எரித்தாள் ராகவி.

“மது பொண்ணு ரூம்ல தூங்கறா, கூடவே நம்ம பசங்க இருக்காங்க”

“அப்படியா பட்டே.. அப்போ ராகவ்…” மேலே பேச முடியாமல் பார்வையைத் திருப்பினான் உதய்.

“என்கிட்ட தான் உங்களுக்குப் பொய் சொல்ல வரலை இல்ல. அப்புறம் ஏன் உளறிட்டு இருக்கீங்க? உண்மையைச் சொல்லுங்க உதய். ராகவ் எங்க?” அவன் மார்பில் அடித்தபடி அவள் கேட்க,

“ஹாஸ்பிடல் போய் இருக்கான். ஒரு எமர்ஜென்சி கேஸ். அதான்…”

ராகவிக்கு அவன் சொன்னதைக் கேட்க கேட்க கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. ஆழ்ந்த மூச்சுக்களை அவள் எடுப்பதைப் பார்த்து, காரின் மேலிருந்த தண்ணீரை எடுத்து அவளைக் குடிக்கச் செய்தான் உதய். அவளை மென்மையாய் அணைத்து,

“பிளீஸ் ராகவி. ரிலாக்ஸ் மா.” கெஞ்சினான் உதய்.

error: Content is protected !!
Scroll to Top