“போலீஸ் மாதிரி பேசுங்க மாமா. டீன் ஏஜ் பையன் மாதிரி பெட் எல்லாம் கட்டுறீங்க?” ராகவன் போலியான கோபத்துடன் சலித்துக் கொள்ள, சத்தமாகச் சிரித்தான் உதய்.
“ஓகே டா. சீரியஸா பேசுவோம். உனக்கு மதுமிதா வேணாம்..”
“நான் அப்படிச் சொல்லலையே மாமா..” பட்டென்று ராகவ் சொல்ல,
“டேய்..” முறைத்தான் உதய்.
“இப்போ, கல்யாணம் வேணாம்னுதான் சொன்னேன்”
“ஏன்டா, இப்படி நீயும் குழம்பி எங்களையும் போட்டு குழப்பற?” அதட்டினான் உதய்.
“ராகவ், உனக்கு மதுமிதா வேண்டாம். ஓகே? நாங்க பார்க்கற வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லு. நான் இந்தக் கல்யாணத்தை இந்த நிமிஷமே நிறுத்திடுறேன்.” ராகவனின் தோள் பற்றி உதய் சொல்ல,
“ஒரு ரெண்டு மூணு வருஷம் போகட்டும் மாமா. அப்புறமா…” என்று இழுத்தவனை, அப்படியே இழுத்து அறைந்து விடும் ஆத்திரத்துடன் பார்த்தான் உதய்.
“அப்புறமா? மதுமிதா தான் அப்பவும் என் மனைவியா வேணும்னு வாயைத் திறந்து சொன்னா, குறைஞ்சா போய்டுவ நீ?” காய்ந்தான் உதய்.
“இல்ல மாமா…”
“ராகவி வயசு தானே டா உனக்கும்? அவளுக்குக் கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகள் வந்தாச்சு. இப்போ மூனாவதா ஒரு குழந்தை வரப் போகுது.
நான் இப்படிச் சந்தோசமா குடும்பம், குழந்தைங்கன்னு இருக்கும் போது, ராகவ் மட்டும் தனியா இருக்கான். ஹாஸ்பிட்டல், ஆபரேஷன், மயக்க மருந்துன்னு அவன் லைஃப் இப்படியே போய்டுமோன்னு எனக்குப் பயமா இருக்கு உதய்னு.. ராகவி டெய்லி புலம்புறாடா. அவ ஆசையில, உனக்கான அக்கறைதான் இருக்குடா. புரிஞ்சுக்கோ ராகவ்” கோபமும், ஆற்றாமையும் கலந்து உதய் பேச, தலைக் குனிந்தான் ராகவன்.
“என் வேலை பத்திதான் உங்களுக்குத் தெரியுமே மாமா. வேலையையும், கல்யாண வாழ்க்கையையும் பாலன்ஸ் பண்ணி மது எதிர்பார்க்கற அளவுக்கு அதிகமான அன்பை, என்னால அவளுக்குக் கொடுக்க முடியாம போய்டுமோன்னு பயமா இருக்கு மாமா.” மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்த ஒன்றை பட்டென்று போட்டு உடைத்தான் ராகவன்.
“ஓ..” என்ற உதய், “கஷ்டம்தான் ராகவ். நான் இல்லைனு, மறுக்கவே மாட்டேன். ஆனா, உன்னால ரெண்டையும் பாலன்ஸ் பண்ண முடியும். நாங்க கூடத்தான் தொடக்கத்தில் எவ்வளவு தடுமாறினோம்னு உனக்கு நல்லாவே தெரியும். ஆனா, இப்போ சின்னச் சின்ன அலைக்குத் தடுமாருற படகு போல அப்பப்போ சில பிரச்சினைகள் வரத்தான் செய்யுது. ஆனா, எங்களுக்குள்ள இருக்க அன்பும், புரிதலும் அதைக் கடக்க உதவுது டா.
ஃபர்ஸ்ட் பாஸிட்டிவ்வா யோசிக்கப் பழகு ராகவ். அன்பு, பாசம், காதல் இதையெல்லாம் கொடுக்கத் தனியா நேரம் பார்க்கத் தேவையில்ல. இதே பிசியான வேலையில இருந்துட்டு தானே எங்க மேல அன்பு காட்டுற? இனி, மதுமிதா மட்டும்தான் உனக்கு எல்லாம்னு மனசுல பதிய வை. மத்தது எல்லாம் தானா நடக்கும்” உதய் சொல்ல,
“ம்ம், மாமா” சுரத்தின்றிச் சொன்னான் ராகவன்.
ராகவனை இழுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளிடம் விட்டுவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றான் உதய்.
அவனுடன் விளையாடி களைத்து அப்படியே உறங்கி போனார்கள் ராகவியின் குழந்தைகள்.
உதயதாராவை வந்து உதய் தூக்கிக் கொண்டு போக, குட்டி நந்தாவை அணைத்துக் கொண்டு உறங்க முயன்றான் ராகவன்.
மனம் மதுமிதாவிடமே போய் நின்றது.
அன்றைக்கு அவளை அவ்வளவு கோபமாக மாடிக்கு இழுத்துக் கொண்டு போனான் ராகவன். அவளுமே கடுங்கோபத்தில் தான் இருந்தாள்.
“கையை விடுங்க ராகவ். நான் ஒன்னும் ஃபோட்டோ எடுக்கக் கையைத் தூக்கல. எதையும் சரியா பார்க்க மாட்டீங்களா? நான் கேட்கறதையும், சொல்றதையும் உங்களால சரியான அர்த்தத்துல புரிஞ்சுக்கவே முடியாதா?” அவள் வெடிக்க, அவளைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான் ராகவன்.
“அனஸ்தீசியா என்னன்னு எனக்குத் தெரியாதா ராகவ்? சின்னப் புள்ள மாதிரி கிளாஸ் எடுக்கறீங்க? கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் வேலை முடிஞ்சதும் வீட்லயே இருப்பீங்கன்னு. ஓகே. தப்புதான் முறைக்காதீங்க. சாரி” கோபமாகத் தொடங்கியவள், சட்டென்று இறங்கியும் வந்தாள்.
“சாரி” என்றான் அவனும்.
“நானும் அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்கக் கூடாது” ராகவன் சொல்ல,
“நான் ராகவியைப் போல அழகான குடும்பம்தான் கேட்டேன். அவ குடும்பத்தைக் கேட்கல ராகவ். அவ குடும்பத்தில் இருந்து உங்களைத் தவிர வேற யாரும், எதுவும் எனக்கு வேணாம்.” என்றவள்,
“அன்பான அப்பா, பாசமான ஆயா, ஐயா. தன் உணர்வுகளைச் சொல்லாமலே புரிஞ்சுக்கற, அவளுக்காக எதையும் செய்ய ரெடியா இருக்கக் கூடப் பிறந்தவன். அவளை உயிராக நேசிக்கிற கணவன், அழகான இரட்டை குழந்தைங்க, ஆசைப்பட்டு மூனாவது ஒரு குழந்தை. நிஜமா தேவதை கதை, இளவரசி கதை போல இருக்கு அவ வாழ்க்கை.
அதுக்குத்தான் ஆசைப்பட்டேன் ராகவ். ஆனா, நீங்க அதை…” அவள் குரல் உடைந்து விடும் போலிருந்தது.
அவளைத் தனக்கு நெருக்கமாக இழுத்து, “சாரி மது, சாரி..” கெஞ்சினான் ராகவன்.
“நீ நினைக்கிற மாதிரி அவளுக்கும் எதுவும் ஈசியா கிடைக்கல மது. அவ வாழ்க்கை தேவதை கதையும் கிடையாது. அவளும், மாமாவும் பிரியற அளவுக்கு எல்லாம் போனாங்க தெரியுமா? எல்லா ஹாப்பிலி எவர் ஆப்ட்டருக்கு பின்னாடியும் வலியும், வேதனையும் நிறைந்த கதை ஒன்னு இருக்கத்தான் செய்யும் மது. ராகவிக்கும் அப்படி ஒரு கதை உண்டு. நீ மும்பையில் இருந்ததால உனக்குத் தெரியாது. அவ்ளோதான்.”
மதுமிதாவால் அவன் சொன்னதை நம்பத்தான் முடியவில்லை.
அவள் பார்த்த வரை ராகவி முகத்தில் மகிழ்வும், சிரிப்பும் நிலைத்திருந்தது. அவளைச் சுற்றி இருந்தவர்கள் அவள் மேல் பாசத்தையும், அன்பையும் மழையாகப் பொழிந்தனர்.
இதோ, அவளுக்கு இத்தனை நெருக்கமாக நிற்கும், நாளை அவளின் காதல் கணவனாகப் போகும் ராகவன் கூட, அவளா, ராகவியா என்று வந்தால் சந்தேகமே இல்லாமல் தங்கையின் பக்கம்தான் சாய்வான் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும் எனும் போது, அவளால் விரக்தியாகப் புன்னகைக்கத்தான் முடிந்தது.
“நமக்கும் டுவின்ஸ் பிறக்குமா ராகவ்?” ஆவலுடன் அவள் கேட்க, மருத்துவனாக உண்மை பேசினான் அவன்.
“வாய்ப்பிருக்கு. ஆனா, உறுதியா சொல்ல முடியாது மது” அவன் பதில் அவளுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. காதல் மனம் இனிக்கும் பொய்யை எதிர்பார்த்து ஏமாந்து நின்றது.
“ச்சே, உங்க கூடப் பேசுறதுக்கு…” அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு கீழிறங்கி போனாள் மதுமிதா.
அப்படியே கையை வீசிக் கொண்டு, பொடி நடையாக அவள் தன் வீட்டை நோக்கி செல்ல, ராகவன் கண்டுகொள்ளவே இல்லை. அது அவளின் ஏமாற்றத்தை அதிகரிக்கவே செய்தது.
ஒட்டு மொத்த உலகத்தையும் அவன் ஒருவனிடம் எதிர்பார்த்தாள் மதுமிதா. அவளின் எதிர்பார்ப்பு ராகவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அது தந்த பயம்தான், அவளை விட்டு விலகிட வேண்டும் என்று அவனை முடிவெடுக்க வைத்தது. ஆனால், ஒவ்வொரு அடி விலகளும், அவளை நோக்கி ஆயிரம் அடி அவனை நெருங்கச் செய்தது.
மதுமிதாவிற்கு ராகவன் செய்யத் தவறியதை, அவன் ஏற்படுத்திய வெற்றிடத்தை, ராகவி இட்டு நிரப்பினாள்.