சாதகப் பட்சிகள் – 18 (2)

மழையும், ஈரக் காற்றும், ராகவனின் பார்வையும் போட்டிப் போட்டுக் கொண்டு அவளை வருடியது.

எதுவும் அவளைப் பாதிக்கவில்லை. பாதித்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை அவள்.

கார் சென்னையின் புறநகர் பகுதியை நோக்கி செல்லத் தொடங்கியது. அவர்களுக்குப் பிடித்தமான சாலைகள் நிறைந்த பகுதி. தனிமைக்குப் பஞ்சமிருக்காது அங்கே. எத்தனை இரவுகள் நீண்ட பயணங்கள் போய் இருப்பார்கள்.

நெஞ்சின் ஆழத்தில் இருந்து வந்த பெருமூச்சை மறைக்க முற்படவில்லை ராகவன்.

“மது…” மெல்ல அழைத்தான்.

“பேசாம இருங்களேன்.” கண்டிப்புடன் சொன்னாள் அவள்.

“நிலவெங்கே சென்றாலும், நிழல் பின்னால் வராதா…”

அவனை விட அதிகமாக இம்சித்தார் யேசுதாஸ்.

“என்ன திடீர்னு யேசுதாஸிக்கு மாறிட்டீங்க?” ஓரப்பார்வையில் விசாரித்தாள்.

“இசை தான் துணைன்னு ஆகிடுச்சு.”

அவன் சொல்ல,

“நீ இன்று நடக்கும் தடம் வேறு.. நானின்றி உனக்குத் துணை யாரு?” பொருத்தமான வரிகளில் பாடினார் யேசுதாஸ்.

அவனது வார்த்தைகள் போதாதென்று, பாடல் வரிகளும் சேர்ந்து அவள் மனதை என்னவோ செய்ய, ஆக்சிலேட்டரை அழுத்தமாக மிதித்தாள் அவள். கார் வேகமெடுத்தது.

“இசைதான் முக்கியம். யார் பாட்டுனு எல்லாம் கவனிக்கிறது இல்ல மது” கியரில் இருந்த அவள் கை மேல், தன் கையை வைத்துச் சொன்னான் ராகவன். அவளுள் எதுவோ தடம் புரண்டது.

“பேசாம வரீங்களா இல்லையா? முடியாதுன்னா சொல்லுங்க. நான் இங்கேயே இறங்கிக்கறேன்.” வெடித்தாள் அவள்.

“வானம் வரும், மேகம் வரும் கூட உன்னோடு.. நானும் வந்தால் என்னடியம்மா…” அந்த வரிகளில் அவளுக்குக் கோபம் போய், சிரிப்பு வந்து விட்டிருந்தது.

“உங்களுக்கு நிச்சயம் ஆகிடுச்சு ராகவ்”

அந்த “ராகவ்” என்ற அழைப்பு அவனை எட்டியதும் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான் அவன்.

அவனை அறியாமல் கண்கள் கலங்கியது.

அவள் சொன்ன மற்றது, அவன் காதில் விழுந்தாலும், கருத்தில் பதியவே இல்லை.

அவளுக்குப் பதில் சொல்லும் கஷ்டத்தை அவனுக்குக் கொடுக்காமல், அவனது அலைபேசி அவனைப் காப்பாற்றியது.

அவன் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனையில் இருந்துதான் அழைத்தார்கள். அதை ஏற்றுப் பேசினான் அவன்.

“ஓகே. நான் வெளில இருக்கேன். வர டைமாகும். நீங்க எதுக்கும் வேற யாரையாவது கண்டாக்ட் பண்ணுங்க.”

மறுமுனை என்ன சொல்லியதோ,

“ஓகே, ஓகே. நான் டிரை பண்றேன்” சொல்லி விட்டு வைத்தான்.

காரை வேக வேகமாக அவனது வீடு செல்லும் வழிக்கு திருப்பினாள் மதுமிதா.

“எந்த ஹாஸ்பிடல்?” அவள் கேட்க, சொன்னான் அவன்.

பல இரவுகளில் அவனுக்காக, அவள் கார் ஓட்டிக் கொண்டு வந்தது, அவனுக்கு நினைவிற்கு வந்தது.

வாழ்க்கை தலைகீழாக மாறிப் போக ஒரு நொடி போதுமானதாக இருக்கிறது.

அவன் விவாகரத்துத் தாளில் கையெழுத்திட்ட ஒரு நொடி. அத்தனையையும் புரட்டி போட்டிருந்தது. ஆனால், வாழ்க்கையை நமக்குப் பிடித்தது போல மாற்றிக் கொள்ள

ஒரு யுகம் கூடப் போதுமானதாக இருப்பதில்லை.

அவனுக்கு முழுதாக இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அவன் இன்று மாறி இருக்கிறான்தான். ஆனால், அதை அவளிடம் தெரியப்படுத்த முடியா சூழ்நிலையிலும் நிற்கிறானே.

அவள் விரைவில் வேறொருவனின் மனைவியாகப் போகிறவள். நினைக்கையிலேயே நெஞ்சில் பாரம் ஏறிய உணர்வு அவனுக்கு.

“ராகவ், ராகவ். ஹாஸ்பிட்டல் வந்தாச்சு” அவன் தோளை உலுக்கினாள்.

அவளையே இமைக்காது பார்த்திருந்தான் அவன்.

“உங்க பேஷண்ட் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. போங்க.” மெல்ல சொன்னாள்.

“காரை உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன். ஆபரேஷன் முடிஞ்சதும் உங்க வீட்ல வந்து பிக் அப் பண்ணிக்கச் சொல்லுங்க” அவன் இறங்கிக் கொள்ள, காரை நகர்த்தப் போனாள் அவள்.

காரின் கண்ணாடியில் முகம் பதித்து, “நீயே வந்து கூட்டிட்டு போறியா மது?” இயல்பாகதான் கேட்டான். ஆனால், அவன் கண்களில் இருந்த கெஞ்சுதலை சரியாகப் படித்தாள் அவள்.

“இல்ல. வேணாம். அது முடியாது. நீங்க.. உங்களுக்கு நிச்சயம் ஆகிடுச்சு. நாம இனி பார்த்துக்கக் கூடாது. சாரி…” தடுமாறினாள் அவள்.

“உனக்கும்…” தொடங்கியதை முடிக்காமல் திரும்பி நடந்தான் அவன்.

அவளிடம் சொல்லாதது அவன் மனதை கடினமாக அழுத்தத் தொடங்கியிருந்தது.

அவன் வார்த்தைகளில் துனுக்குற்றாள் அவள்.

“உனக்கும், அப்படினு என்ன சொல்ல வந்தான்?” சத்தமாகக் கேட்டுக் கொண்டே, காரை அங்கிருந்து நகர்த்தினாள் மதுமிதா.

“அப்பா, தாராக்கு ஐஸ் கிரீம் வேணுமாம். அம்மா திட்டுவாங்கன்னு பயப்படுறா. நான் எடுத்துக் கொடுக்கவா?” சத்தமாக, உதயிடம் ரகசியம் பேசினான் ஏழு வயது உதய்நந்தா.

“அம்மா சொன்னா சரியாதான் இருக்கும். நீ சாப்பிடு. பாப்பாக்கு வேண்டாம். சரியா?” உதய் புன்னகையுடன் சொல்ல,

“பட் ஷீ லவ்ஸ் ஐஸ் கிரீம் ப்பா. அவ ஒன்னே ஒன்னு சாப்பிடட்டும். பிளீஸ்” தனது இரட்டை சகோதரிக்கு பரிந்து பேசினான் உதய்நந்தா.

“அப்பா, இப்ப என்ன சொன்னேன் நந்தா? நீ சாப்பிடு. தாராக்கு அம்மா வேற ஏதாவது சாப்பிட கொடுப்பாங்க. ஓகே?” என்று கண்டிப்புடன் சொன்ன உதய்,

“நீ உனக்குப் பிடிச்சதை சாப்பிடு. அவளுக்கு வேணும்னா, அவளே அம்மாகிட்ட கேட்டு வாங்கிப்பா, சரியா?” அதையே மீண்டும் அழுத்தமாகச் சொல்ல,

“சரிங்க ப்பா.” என்று மனமின்றிச் சொன்ன நந்தா, அப்பாவை திரும்பி திரும்பி பார்த்தபடியே ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றான்.

“கடவுளே. இதுங்க பாசம் இப்பவே ஓவரா போகுதே. ஏற்கனவே இருக்கற ரெண்டை வச்சுக்கிட்டு சமாளிக்க முடியாம திண்டாடிட்டு இருக்கேன். இதுல நான் பெத்த ரெண்டும் வந்து சேருதுங்க. இதுங்களை இப்பல இருந்தே சொல்லி சொல்லி வளர்க்கணும் போலயே. இல்லனா, ஓவர் பாசப்பயிர் வளர்த்திடுங்க” சத்தமாகப் புலம்பினான் உதய்.

“என்ன நடக்குது இங்க உதய்?” அவன் தோளில் அடித்துக் கேட்டாள் ராகவி.

“சுஹாசினியோட கல்யாண நாள்….” என்று அவன் ஆரம்பிக்க, அவனை முறைத்து அடக்கினாள் ராகவி.

“போலீஸிக்கு வந்த சோதனையைப் பாரு மலரே. இன்னமும் அடி வாங்கிட்டு தான் இருக்கார்” சுஹாசினி முணுமுணுக்க, அவளை முறைத்தான் உதய்.

error: Content is protected !!
Scroll to Top