மழைத் தூறல்கள் வலுக்கத் தொடங்கியிருந்தது. ராகவனின் வீட்டை நெருங்கி இருந்தனர் இருவரும்.
“மது” மென்மையாய் அவள் கரம் பற்றி நிறுத்தினான் ராகவன்.
“கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றீங்க. அப்பா, பார்மசி வச்சுருக்கார். உங்க ஆயா, ஐயா ஜவுளி கடை வச்சுருக்காங்க. நீங்க ட்டுவின்ஸ், உங்க தங்கை பேர் ராகவி. அவங்க ஹஸ்பண்ட் உதயபிரகாஷ் ஐபிஎஸ். எஸ்பி, சைபர் க்ரைம் டிவிஷன். அவங்களுக்கு மூனு குழந்தைங்க.” அவனது அறிமுகப்படலத்தை முடித்து வைத்தாள் அவள்.
புன்னகையை அடக்கியதில் அவன் கண்கள் மின்ன, உதடுகள் துடித்தது.
என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் அமைதியாய் நின்றனர்.
ஏனோ அந்நேரம் அவர்களுக்கு நடுவில் இருந்த மௌனத்தின் கனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பரிதவித்து நின்றன வார்த்தைகள்.
மெல்ல அவன் வசமிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள் மதுமிதா. விறுவிறுவென்று அவளின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
“மது, பிளீஸ்.” சடுதியில் அவள் முன் வந்து நின்று தடுத்தான் ராகவன்.
அவன் பார்வையில் இருந்த கெஞ்சல் அவளை மேலே நடக்க விடாமல் செய்தது.
“ஒரு லாங் ட்ரைவ். பிளீஸ், மது..” கெஞ்சினான்.
தன்னைப் பற்றி இருந்த அவன் கரம் நடுங்குவதை அவளால் துல்லியமாக உணர முடிந்தது.
“நான், உன்னைத் தொட்டுதான் மயக்கணுமா என்ன? உன் பக்கத்துல வந்தாலே போதுமே” என்று கர்வமாய், பெருமை பேசிய ராகவன் அவளின் நினைவிற்கு வந்தான்.
காலம் போடும் கணக்குகளைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.
கண்களைச் சுழற்றி தன் முன் பரந்து விரிந்திருந்த அந்தப் பிரமாண்டமான இரண்டு அடுக்கு வீட்டினை பார்த்தாள் மதுமிதா.
ஒரு காலத்தில் அவர்களின் வீடது. மொட்டை மாடியை தொட்டது அவள் பார்வை. அதின் சுவரில் ஏறி நின்று ராகவனைக் கதி கலங்க வைத்த நாள் கண் முன் வர, சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டாள் அவள்.
“எல்லாத்தையும் பறவையின் பார்வையில் பாரு மது. உயரத்தில் இருந்து பார்க்கும் போதுதான், எல்லாமே நம்ம கவனத்தில் வரும். சரியான கண்ணோட்டம்…” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, பக்கவாட்டு சுவரைப் பிடித்து மாடியின் கட்டைச் சுவரில் ஏறியிருந்தாள் அவள்.
“இவ்வளவு உயரம் போதுமா ராகவ்வ்வ்..” பக்கவாட்டு சுவரைப் பிடித்துக் கொண்டு, லேசாக அவன் புறமாகச் சாய்ந்து, கண் சிமிட்டி, ராகம் இழுத்து அவள் கேட்க, மயக்க மருத்துவருக்கு, மயக்கம் வராத குறைதான்.
“ஏய், ஏய் மது. போதை, போதையில இருக்கியா என்ன? என்ன பண்ற நீ? இறங்கு, கீழ விழுந்து தொலைக்கப் போற…” பதட்டத்துடன் கத்திக் கொண்டே, அத்துணை வேகமாக அவளின் கைப் பிடித்துப் பத்திரமாக அவளைக் கீழிறக்கினான் ராகவன்.
“ஐயோ, என் ஹார்ட் பீட் எகிறிடுச்சு.” மூச்சு வாங்க கத்தினான்.
தலையைப் பின்னுக்குச் சாய்த்து, சத்தமாகச் சிரித்தாள் அவள்.
“சிரிக்கவா செய்ற நீ?” அவளை இழுத்து தன் மேல் மோத செய்தான்.
“இந்த டாக்டர்ஸ் மேல வர்ற க்ரஷ்க்கு பேர் எதுவும் இருக்கா டாக்டர்?” கண்ணடித்து அப்பாவியாகக் கேட்டாள் அவள்.
“என்ன திடீர் ஆராய்ச்சி?”
“இந்த மயக்க டாக்டர் மேல வர்ற அதீத மயக்கதுக்கு என்ன பேர் வைக்கன்னு தெரியாமதான் கேட்கறேன். உங்களுக்கும் தெரியாதா?” நாக்கை துருத்தி அவள் கிண்டலாகக் கேட்க,
“தெரியுமே” என்றான் அவன்.
“ஓ, என்ன?”
“மயக்கத் தெரியும்” பற்கள் தெரிய சிரித்து, கண்ணடித்தான்.
“ப்ராடு..” திட்டிக் கொண்டே அவள் அடிக்கக் கை ஓங்க, அதை அப்படியே மடக்கி அணைத்திருந்தான் அவன்.
“மொட்டை மாடி, காட்டாந்தரையில் காதல் பண்ண இதென்ன சினிமாவா?” மேலே அவள் பேசியது எல்லாம் சென்சாரில் கத்தரித்து இருப்பார்கள்.
அந்த நாள் ஞாபகத்துடன் திரும்பி அவனைப் பார்த்தாள். அவனும் அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தான் போலும், வெட்கத்துடன் தலை முடியை கோதி கொண்டான்.
“ஆணிலுள்ள பெண்ணைக் கொஞ்சம், பெண்ணிலுள்ள ஆணைக் கொஞ்சம்.. கொஞ்ச சொல்லி, கொஞ்ச சொல்லி யாசித்தோம்” அவன் வெட்கப்படும் தருணங்களில் அவள் பாடும் பாடல் இருவரின் மனதினுள்ளும் இசைக்கச் சட்டெனச் சிரித்து விட்டனர்.
அவளின் சிரிப்பு தந்த தைரியத்துடன் வீட்டின் கேட்டை திறந்தான் ராகவன்.
“பிளீஸ் மது. எனக்காக. நோ, சொல்லாத. பிளீஸ்” கெஞ்சினான். அவள் மறுக்க இடம் கொடுக்காமல், காரை உயிர்ப்பித்து, சாவியை அவளை நோக்கி தூக்கிப் போட்டான். அதை லாவகமாய்ப் பிடித்து, காரின் கதவை திறந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
“ஜஸ்ட் அ ட்ரைவ். அவ்ளோதான்.” பார்வையை முன்னே பதித்துச் சொன்னாள்.
“வேற எதுவும் நான் எதிர்ப்பார்க்கல மது” அவளின் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னான்.
“எதிர்பார்க்கவும் கூடாது. யூ ஆர் என்கேஜ்டு. உங்க, ஆராதனா. அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. ஐ ஃபீல் கில்டி…” குற்ற உணர்வுடன் சொன்னாள் மதுமிதா.
அதைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தடுத்துப் பேச முயன்றான் ராகவன். ஆனால், ஒற்றைக் கை நீட்டி உடனடியாக அவனைத் தடுத்தாள் அவள்.
“இல்ல, மது….”
“பிளீஸ். எதுவும் சொல்லாதீங்க. வேணாம். சரியா ஒரு மணி நேரம்தான். அப்புறம் உங்க ஆராதனாகிட்டப் போய்டுங்க.” மனதின் வலியை, குரல் வெளிப்படுத்தி விடாமல் இருக்க அவள் வெகுவாகப் போராட வேண்டியிருந்தது.
“நீயும்…” என்று தொடங்கியவனை, அப்படியே வாய் மூடச் செய்தது அவள் பார்வை.
அவளிடம் உண்மையைச் சொல்லி விடத் துடித்தான் அவன். ஆனால், அவளுடன் இருக்கும் நேரம் முக்கியம் என்று பட வாயை மூடிக் கொண்டான் ராகவன்.
காரை சீரான வேகத்தில் செலுத்த ஆரம்பித்தாள் மதுமிதா.