“உதய், கேடி போலீஸ். என்ன பண்ணிட்டு இருக்கீங்க? ராகவ் எதுக்கு மதுமிதா கூடப் போறான்? அதுவும் நான் கூப்பிட, கூப்பிட கண்டுக்காம போறான். தெரியுமா?” ராகவன் மேல் அவள் புகார் வாசிக்க,
“அப்பாடா, அவனுக்கு இப்பவாவது புத்தி வந்துச்சே” முணுமுணுத்தான் உதய்.
“ஆமா, ஆராதனா, எதுக்கு இங்க வந்திருக்கா? நடக்கிறது எதுவும் எனக்குச் சரின்னு படல. யார் வேலை இதெல்லாம்? உங்க வேலை தானே?” கணவனைப் பார்த்துப் படபடவெனப் பொரிந்தாள் ராகவி.
“இதுல நீயும் இவருக்குக் கூட்டா?” சுஹாசினியை பார்த்து பல்லைக் கடித்தாள் அவள்.
அசட்டையாகத் தோளை குலுக்கினாள் சுஹாசினி.
“மதுமிதாவை நான்தான் இன்வைட் பண்ணேன். அதுக்கென்ன ரா? இப்ப, அவ உன்னோட தம்பி பொண்டாட்டி இல்ல ரா. அவ மதுமிதா, அவ்ளோதான். உன்கிட்ட மட்டுமில்ல. என்கிட்டயும் ப்ரெண்ட்லியா தான் பழகுறா. இன்னைக்கு இல்ல, ராகவன் வைஃப் மதுமிதாவா இருக்கும் போதும், என்கிட்ட நல்லாதான் பழகினா. அவளும் ஊர்ல இருக்கவும், பங்ஷனுக்குக் கூப்பிட்டேன். இதுல என்ன தப்பு?” நிதானமாகச் சுஹாசினி கேட்க, கோபத்துடன் அவளை முறைத்தாள் ராகவி.
“அத்தோட நிறுத்தி இருக்கலாம் இல்ல? ஆராதனாவை ஏன் கூப்பிட்ட?”
“ஆராதனாவை, சுஹா இல்ல. நான்தான் கூப்பிட்டேன் பட்டே.” உதய் சொல்லவும், சட்டென அவனை எரித்து விடுவது போல முறைத்தாள் ராகவி.
“என்ன நடக்குது இங்க? எனக்குச் சத்தியமா புரியல?” அவளின் சத்தத்தை நல்லவேளையாக இசை விழுங்கி இருந்தது.
“ஏன் கத்துற, மெதுவா பேசு” மனைவியை அடக்கினான் உதய்.
“உதய், நான் இன்னொரு முறை கேட்க மாட்டேன். நீங்களே சொல்லிடுங்க. என்ன நடக்குது இங்க?” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டாள் ராகவி.
“உனக்கு, என்ன பிரச்சினை ராகவி? அதென்ன உனக்கு ஒரு நியாயம், ராகவனுக்கு ஒரு நியாயமா? நீயே சொல்லு? உதய் அண்ணா கூட உனக்குப் பிரச்சினை வந்த போது, உங்களுக்குத் தனிமை கொடுத்து, பேச விட்டோம் தானே? நீங்க போட்ட நாடகத்தை அமைதியா ஒதுங்கி நின்னு பார்த்தோம் தானே? அன்னைக்கு உங்க பிரச்சினையைப் பேசி சரி பண்ணீங்க தானே?
அதே போலதான் இன்னைக்கும். ராகவன், மது ரெண்டு பேரும் பேசட்டும்”
தீர்க்கமாகச் சொன்னாள் சுஹாசினி. அவள் பேச்சில் இருந்த உண்மை ராகவியை மேலே பேச விடாமல் செய்தது.
“இருந்தாலும், இத்தனை வருஷம் கழிச்சு, ராகவன் இப்பதான் நார்மலாகி இருக்கான். இப்போ போய்…”
“ராகவி…” சட்டென்று மனைவியை அதட்டினான் உதய்.
“ராகவ், மதுமிதா கல்யாணம் உன்னோட இல்ல, நம்மோட கட்டாயத்தில நடந்துச்சு. அன்னைக்கு, அவனை நாம கட்டாயப்படுத்தாம இருந்திருந்தா அவங்க கல்யாணம் சரியான நேரத்துல அவன் விருப்பப்படி நடந்திருக்கும். அவனே வந்து கல்யாணம் பத்தி பேசியிருப்பான்.
அவங்க பிரிவுக்கும் கூட, ஏதோ ஒரு விதத்தில் நாமதான் காரணம்.
ஆனா, சரி. அதை விடு. இன்னைக்கு, ஆராதனா கூட அவனோட நிச்சயமும் அவனா, விரும்பியா பண்ணான்? நீ அழுதன்னு சரின்னு சொன்னான். என்னோட வற்புறுத்தலுக்கு, அவன் ஓகே சொன்னான். மத்தபடி அவனுக்கு இன்னொரு கல்யாணம் எல்லாம் ஐடியாவே இல்ல.
அப்படி இருந்தவனைப் போட்டு, படுத்தி எடுத்து… கடைசில என்ன ஆச்சு?
அவனால ஆராதனா முகம் பார்த்துக் கூடப் பேச முடியல. ஆராதனா ஆத்திரத்துல கல்யாணத்தை நிறுத்திட்டா.” உதய் பேசிக் கொண்டே போக,
“இல்ல. ஆராதனா இல்ல. நீங்கதான் ஏதோ பண்ணியிருக்கீங்க?”
கடுப்புடன் அவனைக் குற்றம் சாட்டிய மனைவியை, கோபமாகப் பார்த்தான் உதய்.
“உனக்கு நல்லா தெரியும். நான் எதுவும் பண்ணலைன்னு… “
“அவனுக்கு வயநாட்டில் பொண்ணு பார்த்து, நிச்சயம் பண்ணப் போறோம்னு, மதுமிதா காது கேட்க நீங்க தானே பேசினீங்க? என்னையும் பேச வச்சீங்க” ஒற்றை விரல் நீட்டி ராகவி சொல்ல,
சிரித்துக் கொண்டே, “ஆமா. பேசினேன்தான். அதுக்கு என்ன இப்போ? மதுமிதாக்கு விஷயம் தெரியணும்னு நினைச்சேன். அவ கோபப்பட்டு ரியாக்ட் பண்ணனும்னு நினைச்சேன். அப்படியாவது ரெண்டு பேரும் சேருவாங்கன்னு எதிர்பார்த்தேன். அதுல என்ன தப்பு?”
அவன் சாதாரணமாகச் சொல்ல,
“அப்போ, ஆராதனா? அவளை வேற உள்ள இழுத்து…” கிட்டத்தட்ட கத்தத் தொடங்கியிருந்தாள் ராகவி.
பட்டென அவளின் வாயை மூடினான் உதய்.
“மெதுவா பேசு ராகவி. ஆராதனாக்கிட்ட முதல் மீட்லயே ராகவ் தெளிவா சொல்லிட்டான். எனக்குக் கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இல்லன்னு. ஆனாலும், அவ கேட்கல. உன்னைப் போலவே, அவளும் ராகவனை நெருக்கினா. கடைசில என்ன ஆச்சு? அவளே கல்யாணத்தை நிறுத்திட்டா. இங்க எல்லோர் மேலயும் தப்பு இருக்கு ராகவி. நீ, நான், ராகவன், ஆராதனா, நம்ம ரெண்டு குடும்பம். குத்தம் சொல்லனும்னா, எல்லோரையும் தான் சொல்லணும். எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஆராதனா, ராகவன் ரெண்டு பேரையும் ஹர்ட் பண்ணி இருக்கோம்.
அவன் வேண்டவே வேண்டாம்னு அவ்ளோ பிடிவாதமா இருந்தான். அவனைப் பிடிச்சு, இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லி..
ஆனா, அவன் ஆராதனாகிட்ட ரொம்ப நியாயமா தெளிவா சொல்லதான் செஞ்சான். அந்தப் பொண்ணும் உங்களைப் புரிஞ்சுக்க எனக்கு மூனு மாசம் டைம் வேணும்னு கேட்டு இருக்கா. அவங்களுக்குள்ள சரியா வரலைன்னா, பிரிஞ்சுடலாம்னு சொல்லவும் செஞ்சுருக்கா. அதுக்கு ராகவன் கோபப்பட்டிருக்கான்.
பட், இன்னைக்கு அவனுக்கு க்ளியரா தெரிஞ்சிருக்கு. மதுமிதா தவிர, வேற யார் கூடவும் அவனால வாழ்க்கையைப் பகிர்ந்துக்க முடியாது….”
சட்டென அவன் பேச்சில் இடை புகுந்தாள் ராகவி.
“உதய், எனக்குப் பயமா இருக்கு. மது அவனை விட்டுப் போனதும், அவளை மறக்க முடியாம ராகவன் எவ்வளவு உடஞ்சு போனான். சாப்பிடாம, தூங்காம, கோபப்பட்டு ஆளே மாறிப் போனான். இப்பதான் கொஞ்சம் நார்மலாகி இருக்கான். இப்போ, போய்…” கண்கள் கலங்க ராகவி பேச, அவளின் கைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான் உதய்.
“இந்த முறை அவங்களே முடிவு பண்ணட்டும் ராகவி. காதல், கல்யாணம் இல்லனா நிரந்தரப் பிரிவு. இல்லனா ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ். என்னவேனா இருக்கட்டும். ஆனா, இந்த முறை முடிவு அவங்களுதா இருக்கட்டும். லெட் தெம் டிசைட் ராகவி” கணவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்து மெதுவாகத் தலையை அசைத்தாள் ராகவி.
“நீ என்ன, அவங்க ரெண்டு பேருக்கும் டைமிங் பாட்டு எல்லாம் போட்டு விடுற?” அவர்கள் பேச்சை அமைதியாய் கேட்டபடி நின்றிருந்த சுஹாசினியை அடித்தாள் ராகவி.
“ஜாலியா இருந்தது ரா. முதல் கனவே, முதல் கனவே.. பாட்டு கேட்டதும், ரெண்டு பேரும் அப்படியே ஃப்ரீஸாகி நின்னதைப் பார்க்கணுமே. செம்மயா இருந்துச்சு.” கண்ணடித்துச் சிரித்தாள் சுஹாசினி. உதயும் சிரிக்கத் தொடங்கி இருந்தான்.
பனிமலர் சிரித்துக் கொண்டே, “மனமே மனமே தடுமாறும் மனமே… என்னோட செலக்சன்..” என்று சொல்ல,
“உங்களை எல்லாம் கூட வச்சுட்டு” ராகவி சலித்துக் கொள்ள,
“எங்களைக் கூட வச்சுகிட்டு, தைரியமாகக் காதலிக்கலாம். கல்யாணம் பண்ணலாம். சண்டைப் போடலாம். பிரியலாம். திரும்பவும் சேர்த்து வைக்க நாங்க கியாரண்டி” அவளைப் பார்த்து, ஆசிர்வதிப்பது போலக் கையை உயர்த்திச் சொன்னாள் சுஹாசினி.
சட்டென அனைவரும் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கியிருந்தனர்.
சிரிப்புடன் திரும்பிய ராகவியின் பார்வை வட்டத்தில் விழுந்தாள், உதயின் ஜூனியரிடம் பேசிக் கொண்டிருந்த ஆராதனா.
“உதய், அந்தப் பையன், அவர் எப்படி?” கணவனின் கையைச் சுரண்டி அவள் கேட்க,
“எப்படின்னா? அவன் ஏசிபி, ராகவி. ரொம்ப நல்லவன்.” அவள் கண்களைச் சுருக்கி அவனைப் பார்க்க, இரு கையையும் தூக்கி மனைவியிடம் “சரண்டர்” என்றான் உதய்.
“இங்க பாரு மா. ராகவன் கூடக் கல்யாணம் நின்னதும். ஆராதனா ஃபேமிலி என்கிட்ட பேசனும்னு சொன்னாங்க. அப்போ, என் கூட ஒரு வேலையா இவனும் இருந்தான். அந்த நேரம் ஆராதனா கூடச் சும்மாதான் பேசினான். அவ்ளோதான் நடந்தது. ஆனா, இன்னைக்குக் காலையிலதான் அவளோட ஃபேமிலி பத்தி, ராகவன் கூட அவளுக்கு நடந்த கல்யாண பேச்சு வார்த்தை பத்தி, ஏன் கல்யாணம் நின்னுச்சுன்னு எல்லாம் விசாரிச்சான்.
காரணம் இல்லாம, எலி ஏன் அம்மணமா…”
“உதய்…” ராகவி முறைக்க,
“சாரி…” சிரிப்புடன் தொடர்ந்தான்.
“என்னடா விஷயம்னு கேட்டேன். அப்போதான் ஆராதனா கூட ஃபோன்ல பேசிட்டு இருக்கறதை சொன்னான். ப்ரெண்ட்லியா தான்…” அவன் விளக்க,
“இது உங்களுக்குத் தேவையில்லாத வேலை உதய்” எரிச்சலுடன் எச்சரித்தாள் ராகவி.
“இங்க பாரு ராகவி. அவங்க ரெண்டு பேரும் மேச்சூர்ட்டு அடல்ட்ஸ். அவன் ஏசிபி. ஆராதனா டாக்டர். அவங்க என்ன பண்றாங்கன்னு அவங்களுக்குத் தெரியும். ஆராதனாவை தனியா மீட் பண்ணனும்னு என்கிட்ட கேட்டான். நம்ம கண்ணு முன்னாடி நடக்கட்டும்னு தான் ரெண்டு பேரையும் இங்க வர வச்சேன். அவன் மேல ஒரு கண்ணு இருக்கு ராகவி. ஆராதனாவோட நிலைமைக்கு நானும் ஒரு காரணம். அவ மேற்கொண்டு ஹர்ட் ஆகாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு” அழுத்தமாகச் சொன்னான் உதய்.
“உங்க மதுமிதா அழகு தான்னு, கடுப்புல சொல்லிகிட்டு இருந்தா ஆராதனா. அப்போ ராகவன் மூஞ்சி போன போக்கை பார்த்திருக்கனுமே” பனிமலர் சொல்ல, பக்கென்று சிரித்தனர் அனைவரும்.
“என்னை விட இவள் எந்த விதத்தில் உசத்தின்னு ஒரு எரிச்சலும், பொறாமையும், ஒப்பீடும் வரத் தானே செய்யும்.” ஆராதனாவின் மனதை துல்லியமாகப் படித்துச் சொன்னாள் பனிமலர்.
“அதை விட, ராகவன் பின்னாடி ஆராதனா நின்னதைப் பார்த்து மதுமிதா ரியாக்க்ஷன் இருக்கே. எங்க மதுமிதா, அவனை அடிச்சுடுவாளோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன் நான்” சுஹாசினி சொல்ல, மீண்டும் ஒரு சிரிப்பலை பரவியது.
“ஆமா, இவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரியுமா, தெரியாதா?” பனிமலர் சந்தேகம் கேட்க,
“எந்த விஷயத்தைச் சொல்ற?” பதிலுக்குக் கேள்வி கேட்டாள் ராகவி.
“ரெண்டு பேரோட கல்யாணமும் நின்னு போச்சுன்னு, ரெண்டு பேருக்கும் தெரியுமா?. மதுமிதா அவளோட கல்யாணத்தை நிறுத்திட்டுதான் சென்னை வந்தான்னு ராகவனுக்குத் தெரியுமா?”
“தெரியாது. நான் சொல்லல” உதய் சொல்ல, அவன் மார்பில் பட்டென்று அடித்தாள் ராகவி.
“வேணும்னு அவனை அழ விட்டு இருக்கீங்க. அப்படித்தானே? வயநாட்ல வச்சு என்ன அழுகை, அழுதான் ராகவ். அவனைக் கொடுமை பண்ணியிருக்கீங்க, நீங்க” கண்கள் கலங்க சொன்னாள் ராகவி.
“பிளீஸ் ராகவி. அவனுக்கே அவன் மனசு தெளிவா புரியணும்னு நினைச்சேன். அதான், அப்படி…”
“அப்படி அழ வச்சீங்க இல்ல?” அழுகையில் உதடு துடிக்க அவள் கேட்க, மனைவியைத் தோளோடு சேர்த்தணைத்தான் உதய்.
“ஏய் ரா, ஆராதனா கூட ராகவன் கல்யாணம் நின்னது மதுமிதாக்கு தெரியுமா இல்லையா? அதைச் சொல்லு முதல்ல” இப்போது சுஹாசினி சந்தேகம் கேட்க,
“நான் எதுவும் சொல்லலை.” என்றாள் ராகவி.
“நானும் சொல்லலை…” என்று உதய் சொல்ல,
“அவங்களுக்குத் தெரியாது” ஆராதனாவின் குரல் முடிவாகச் சொன்னது.
“என்னை அவங்க பார்த்த பார்வையே சொல்லுச்சு. அவங்களுக்கு எங்க கல்யாணம் நின்ன விஷயம் தெரியாதுன்னு” ஆராதனா சொல்ல, உதய், ராகவி, சுஹாசினி என அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இதுவும் உங்க வேலை தானே?” மீண்டும் கணவனைக் குற்றவாளி கூண்டில் ஏற்றினாள் ராகவி.
“அட, இவ வேற, எல்லாக் கேசையும் என் பேர்லதான் எழுதுவா” அலுத்துக் கொண்டான் உதய். அவன் சொன்ன விதத்தில் மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது அங்கே.
“ஆராதனா, ஐ ஆம் ரியலி வெரி சாரி. இப்படி ஆகும்னு…” ஆராதனாவின் கைப் பிடித்து ராகவி முப்பதாவது முறையாக மன்னிப்பு கேட்க,
“ராகவி, பிளீஸ். அது என்னோட முடிவு. ராகவன், அவருக்கு என் மேல விருப்பமே இல்லைனு தெரிஞ்சும் நான் அந்த நிச்சயத்துக்கு ஓகே சொல்லி இருக்கக் கூடாது. அவரைக் கம்பெல் பண்ணி இருக்கக் கூடாது.
ஆனா, நடந்தது எல்லாம் நல்லதுக்கே. ஐ ஆம் ஹேப்பி நவ்” ஆராதனா, இதே பதிலைதான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனாலும், ராகவியின் குற்ற உணர்ச்சி குறையவில்லை.
“ஷீ இஸ் பைன் அண்ணி. யூ டோண்ட் வொர்ரி, பிளீஸ்” ஆராதனாவுக்கு நெருக்கமாக நின்றிருந்த ஏசிபி அஜய்கிருஷ்ணா சொல்ல, மெலிதாகப் புன்னகைத்து தலையசைத்தாள் ராகவி.
“அண்ணா, நான் ஆராதனாவை அவங்க வீட்ல ட்ராப் பண்ணிடுறேன். அப்போ, நாங்க கிளம்பறோம்” அஜய் சொல்ல,
“வர்றோம் ண்ணா. தேங்க்ஸ்” ஆராதனாவும் புன்னகையுடன் சொன்னாள்.
அவர்கள் இருவரும் விடைப் பெற்று, வெளியேறினர்.
மதுமிதா காரை கொண்டு வந்து ராகவனின் வீட்டின் முன் நிறுத்தினாள்.
ஆராதனா அந்நேரம் வேறொரு ஆணுடன் வண்டியில் ஏறுவதைச் சிறிய ஆச்சரியத்துடன் பார்த்தாள் அவள்.
அப்போதுதான் அவளுக்கு மூளையில் சிறியதாகப் பொறித் தட்டியது.
“உனக்கும்…” என்று ராகவன் எதைச் சொன்னான் என்பது புரிய, சத்தமாக வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கியிருந்தாள் அவள்.
அலைபேசியை உயிர்ப்பித்து, அவளின் முகநூல் பக்கத்தைத் திறந்தாள்.
மழை லில்லி புகைப்படத்தை நீக்கி விட்டு, அவளின் புகைப்படத்தை “புரோபைல் பிக்சர்” ஆக மாற்றினாள்.
அந்தப் புகைப்படம் கேரளாவில் எடுத்தது.
நீலப் பின்னணியில், வானமும், கடலும் அவளுக்குப் பின்னே அழகாகப் போஸ் கொடுக்க, நீல நிற கையில்லா கவுன் அணிந்து ஒயிலாக நின்றிருந்தாள் மதுமிதா.
அது அவர்களின் தேனிலவின் போது எடுத்த புகைப்படம். அதைப் பார்த்து உதடு மடித்துச் சிரித்துக் கொண்டாள்.
சட்டென ஆராதனா முகம் அவள் கண் முன் தோன்றி அவளை மிகுந்த குற்றவுணர்ச்சிக்குள் ஆழ்த்தியது.
“மது, உன் வாழ்க்கையை மட்டும் நீ பாரு. ராகவன் வாழ்க்கையில் குறுக்கிடாத. ஓதுங்கிப் போ மது. அவனை இனி பார்க்காத. பேசாத.. வீணா உன்னை நீயே காயப்படுத்திக்காத.” தனக்குத் தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டாள் அவள்.
மூன்று மணி நேரம் கழித்து, அறுவை அரங்கை விட்டு வெளியே வந்த ராகவன் முதல் வேலையாக, “ஹவ் டூ ப்ரோப்போஸ்” என்று கூகிளிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
பட்சிகள் பேசும்…