“என்ன மது?” கரிசனத்துடன் கேட்டபடி அவள் முன் நின்ற பனிமலருக்கு புன்னகையைப் பதிலாகத் தந்தாள் அவள்.
தன் குழந்தைகள் உதயதாரா, உதய்நந்தா இருவரையும் கைகளில் பிடித்தபடி அவளிடம் வந்தாள் ராகவி.
“சாப்பிடலாமா மது?” ராகவி கேட்க,
“முதல்ல குட்டீஸ் சாப்பிடட்டும். நாம அப்புறமா சாப்பிடலாம்.” ராகவியிடம் சொன்ன மதுமிதா, மலரிடம் திரும்பி,
“உங்க பையன் சாப்பிட்டாச்சா மலர்? ஊட்டி விடணுமா? நான் கொடுக்கவா?” என்று கேட்க, மலர் விழிகளைச் சுழற்றி கணவனைக் கண்களால் காண்பித்தாள்.
பையனை மேஜை மேல் அமர்த்தி வைத்து, அவனிடம் கதைப் பேசிக் கொண்டே, உணவை கொடுத்துக் கொண்டிருந்தான் வீரா.
அந்தத் தோட்டத்தின் மற்றொரு மூலையில் நின்றிருந்த ராகவனின் பார்வை இங்குதான் இருந்தது.
தன் முதுகை துளைக்கும் அவன் பார்வையை உணர்ந்தே இருந்தாள் மதுமிதா.
“உங்க மதுமிதா, ஷீ இஸ் வெரி பியூட்டிஃபுல்.” ஆராதனா சொல்ல, அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் ராகவன்.
“அவங்க சேலை ரொம்ப அழகாருக்கு. அதுவும் அந்த ப்ளவுஸ்ல இருக்க வொர்க். வாவ் தான்”
“அவ ஃபேஷன் டிசைனர்” மதுமிதாவை பார்த்துக் கொண்டே பெருமையாகச் சொன்னான் ராகவன்.
மதுமிதா கலகலத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
ராகவி, சுஹாசினி, பனிமலர் மூவரும் அவளைச் சுற்றி நின்றிருக்க, தன் கண்கள் காணும் காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை.
அவனுக்குள் எதுவோ இடம் பெயரும் உணர்வு. அவர்கள் சேர்ந்திருக்கும் போது, இதற்காக எத்தனை மெனக்கெட்டிருப்பான் அவன்.
அப்போதெல்லாம் அசட்டையாக ஒதுங்கி போனவள், இன்று அவளாகவே அவனுக்கு முக்கியமானவர்களுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்க, ஓடிப் போய் அவளோடு இணைந்து கொள்ளத் துடித்த மனதை அடக்கி வைத்தான் அவன்.
ஆராதனா, யாருடனோ பேசிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
“வாடா புது மாப்பிள்ளை…” உதய் அவன் தோளை தட்டி அழைக்க,
“என்ன மாமா? ஓவர் நக்கலா இருக்கு?” புருவம் உயர்த்தி வினவினான் அவன்.
“நான் நக்கல் பண்றேனா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேற யாரோ உன்னைக் கேலி பண்ணதா, கேள்விப்பட்டேன்” உதய் சிரித்துக் கொண்டே சொல்ல, ராகவனின் விழிகள் மீண்டும் மதுமிதாவை தேடி, தொட்டு, அவளில் நிலைத்தது.
“அவளை யார் இன்வைட் பண்ணா மாமா?”
“சுஹா தான். அவ வீட்டு பார்ட்டி தானே டா?”
“சுஹா கூப்பிட்டா சரி. ஆனா, மதுமிதா எப்படி வந்தா?”
ராகவன் சந்தேகத்துடன் கேட்க,
“அதை நீ அவக்கிட்டதான் கேட்கணும். என்னைக் கேட்டா, எனக்கு எப்படித் தெரியும்?” சலித்துக் கொண்டு தோள் குலுக்கினான் உதய்.
“போலீஸ் தானே நீங்க, கண்டுபிடிச்சு சொல்லுங்க” உடல் குலுங்க சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவன்.
“உனக்குக் கொழுப்பு கூடிப் போச்சுடா” அவன் வயிற்றில் ஓங்கி குத்தி விட்டுச் சென்றான் உதய்.
ராகவனின் கண்கள் தன்னிச்சையாகச் சுழன்று மதுமிதாவை தேடியது. அவள் அலைபேசியைப் பார்த்தபடி தனியாக நின்றிருக்க, அவளை நோக்கி நகர்ந்திருந்தது அவனது கால்கள்.
“மது” மென்மையாக அவன் அழைக்க, சட்டெனத் திரும்பினாள் மதுமிதா.
“மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே. பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகு விரிக்காதே.. “
எஸ்பிபி குரலில் சோகம் வழிந்தோட, காதலில் தடுமாறிக் கொண்டிருந்தார்.
அவளுக்குப் புரிந்தது, யாரோ வேண்டுமென்றே அவர்களுக்காகப் பாடலை ஒலிக்க விடுகிறார்கள் என்று, எல்லாப் பக்கமும் பார்வையை ஓட்டினாள், யாரென்று பிடிபடவில்லை.
“காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால்
போதையைக் கொடுக்கும்
போகப் போகத் தூக்கத்தைக் கெடுக்கும்..”
அந்தப் போதையில் அவன் விழிகள் பளிச்சிட, உதடு கடித்தாள் அவள்.
பாடலின் வரிகள் மட்டுமல்ல, அவன் பார்வையும் அவளை உருக வைத்துக் கொண்டிருந்தது. தப்பிக்கும் வழி தெரியாமல் தவித்தாள் அவள்.
“மது” அவளை நோக்கி நீண்ட அவனின் கரத்தை மென்மையாக பற்றித் தடுத்தாள்.
அவனுள் ஓடிய சிலிர்ப்பை உணர்ந்து, அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதுமிதா.
“மனமே நீ தூங்கி விடு
என்னை நினைவின்றித் தூங்க விடு” பின்னணியில் வரிகள் ஓட, எச்சில் கூட்டி விழுங்கினாள் அவள்.
“ராகவன்…” யாரோ அவனை அழைக்க, சட்டெனப் பின்னோக்கி இரண்டெட்டு வைத்தாள் மதுமிதா.
அவனுக்கு நெருக்கமாக நிற்பது அவளை என்னவோ செய்தது.
மனம் வேறு காரணமின்றி முரண்டியது. நியாயம் பேசியது. எரிச்சலுடன் அதை அடக்கி வைத்தாள் அவள்.
“உங்களை யாரோ கூப்பிடுறாங்க…” சத்தத்திற்குப் பதில் காற்றுதான் வந்தது.
“என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை..”
எஸ்பிபி மீண்டும் இசையால் இருவரையும் இணைக்க முயல, அக்கணம் அவளுக்கு இசை இம்சையாய் மாறி இருந்தது.
ஒரு பெருமூச்சுடன் கண்களை உருட்டினாள். மெல்ல ராகவனிடம் இருந்து விலகி, கூட்டத்தில் கலந்திருந்தாள்.
அவள் பின்னாலேயே திரிந்து கொண்டிருந்தது அவன் பார்வை.
அடுத்த இருபதாம் நிமிடம், சுஹாசினியிடம் விடைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள் மதுமிதா.
“இரு மா. நான் வீடு வரைக்கும் வரேன். தனியா போக வேண்டாம்” என்று அவளுடன் உதய் நடக்க,
“மாமா, நான் பார்த்துக்கறேன். நீங்க போய்ப் பசங்களைக் கவனிங்க” அவன் குரலுக்கு அசையாமல் நின்றாள் மதுமிதா.
“இல்ல ராகவ். நானே.. ” உதய் மறுக்க, அவர்கள் பேச்சை கண்டு கொள்ளாமல், வீட்டின் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கி இருந்தாள் அவள்.
“லூசு மாமா” உதயை ஒற்றைக் கையால் தள்ளி விட்டு, மதுமிதாவின் பின்னே ஓடினான் ராகவன்.
“ராகவ், ராகவ்” அவனைக் கத்தி அழைத்தாள் ராகவி.
“மதுவை வீட்ல விடப் போறேன். அப்புறமா, உனக்குக் கால் பண்றேன்” பதிலுக்குக் கத்தி விட்டு, தன் வேக நடையால் மதுமிதாவை தொட்டான் ராகவன்.
அவள் உதட்டில் நெளிந்து கொண்டிருந்த புன்னகையைப் பார்த்ததும், தானாகவே அவனது இதழ்கள் புன்னகைத்தன.
இரவும், நிலவும், மெலிதான மழைத் தூறலும் அவர்களோடு நடக்கத் தொடங்கி இருந்தது.
“ராகவன், அனஸ்தீசியாலஜிஸ்ட். அதாவது, மயக்க டாக்டர்” என்று கை நீட்டினான்.
“மதுமிதா, ஃபேஷன் டிசைனர்” அவளை நோக்கி நீண்டிருந்த அவன் கரங்களைப் பார்வையால் தொட்டு அறிமுகப்படுத்திக் கொண்டாள் அவள்.
பட்சிகள் பேசும்…