இருவரும் அவரவர் வழியில் பிரிந்து சென்றனர்.
பல நாட்களாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த சென்னை, கடந்த ஒரு வாரத்தில் வெள்ள நீர் வடியவும், சற்றே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தது. ஆனால், மழைதான் விட்டபாடில்லை.
வேலை முடித்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான் ராகவன்.
வீடே இருளில் மூழ்கியிருந்தது. ஹாலில் இருந்த சுவர் கடிகாரம் ஏழு முறை கூவிட, மெதுவாகச் சோம்பல் முறித்து எழுந்து கொண்டான் அவன்.
இரண்டு வருடங்களாகப் புயலில் சிக்கிய படகாகத் தத்தளித்துக் கொண்டிருந்த அவன் மனம் இப்போதுதான் கரை சேர்ந்திருந்தது.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின் மெலிதாக விசிலடித்தபடி, குளிக்கச் சென்றான் அவன்.
அன்று சுஹாசினியின் ஐந்தாவது திருமண நாள். எளிமையாக வீட்டிலேயே கொண்டாட ஏற்பாடாகி இருந்தது. மிகவும் நெருங்கிய உறவினர், மற்றும் நட்புகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தாள் அவள்.
ராகவனும் அதில் ஒருவன். அவனது குடும்பம் சார்பாகக் கண்டிப்பாக அவன் செல்ல வேண்டும். குளித்து, பட்டு வேட்டி, சட்டைக்கு மாறினான். கண்ணாடியில் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு, சுஹாசினி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அவன் வீட்டில் இருந்து மூன்றாவது வீடுதான் அவளது. அதனால், நடந்தே சென்றான் அவன்.
அவளின் வீட்டை அடைந்து, காரோடும் பாதையில் கால் வைக்கையிலேயே கவனித்து விட்டான்.
அன்றைய விழா, வீட்டின் முன் இருந்த தோட்டப் பகுதியில் ஏற்பாடாகி இருந்தது.
அப்பகுதியை நோக்கி நடக்கத் திரும்பியவனை யாரோ அழைக்க, சட்டெனத் திரும்பிப் பார்த்தான் அவன். ஆனால், அங்கு யாரும் இல்லாதிருக்க, பார்வையை முன்னால் திருப்பி நடக்க யத்தனித்தான்.
ஆனால், அவன் முன் குனிந்திருந்த உருவம் மெதுவாக நிமிர, மூச்சு விட மறந்து சிலையாக உறைந்து போனான் அவன்.
“மித்ரன்….” கத்திக் கொண்டே ஓடி வந்த மதுமிதா, கீழே விழ போன குழந்தையைக் கைகளில் அள்ளிக் கொண்டு புன்னகையுடன் நிமிர்ந்தாள்.
மறுநொடியே அவளது புன்னகை அப்படியே உறைந்து போனது.
சட்டெனக் குனிந்து நிமிர்ந்ததில் அவளது சேலை பறந்து எதிரில் நின்றிருந்தவனின் மீது படர, எவ்வித அவசரமும் இன்றி அதைப் பொறுமையாக நீக்கி, அவள் முகம் பார்த்தான் அவன்.
இரு விழிகளும் ஒன்றை ஒன்று தழுவி நிற்க,
“முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்? நீ மறுபடி ஏன் வந்தாய்?” பாடல் பின்னணியில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.
எலுமிச்சை மஞ்சள் நிற ஷிஃபான் சேலையில், பெரிய சூரிய காந்தி பூ போல இருந்தவளை, பார்த்தது பார்த்தப்படி நின்றிருந்தான் ராகவன்.
இருவரின் இதயத் துடிப்பும் எக்கச்சக்கமாக எகிறி இருந்ததை இருவருமே உணர்ந்தனர்.
“அத்த… அத்த…” என்ற உதய் மித்ரனின் அழைப்பு அவளை எட்டவே இல்லை.
ராகவன் மேல் பதித்த விழிகளை அகற்ற முடியாமல், இமைக்கவும் மறந்து அவனைப் பார்த்திருந்தாள் மதுமிதா.
“மது, போதை…”அவனது பிரத்யேக அழைப்பு, அவளது காதில் மென்மையாய் ஒலித்தது.
“ராகவ்வ்வ்வ்வ்…” ராகமிட்டு அழைத்த குரல் தனது பிரம்மையா? இல்லை எதிரில் நிற்பவள்தான் அழைத்தாளா? என்று அவளது இதழ்களை விழியெடுக்காது பார்த்திருந்தான் ராகவன்.
“மாமா, மாமா…” அத்தை கவனிக்கவில்லை என்றதும், மாமாவிடம் சென்றான் உதய்மித்ரன்.
உலகம் மறந்து தங்களுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தவர்களைக் கைப் பிடித்து உலுக்கி, கலைத்தான் சிறுவன்.
“மாமா, அத்த…”
அந்தச் சத்தத்தில் இரண்டு சிலைகளும் உயிர் பெற்று இமைகளைச் சிமிட்டி, கண் மூடித் திறந்தன.
அப்போதும் எதிரில் தெரிந்த உருவங்கள் மறையவில்லை என்றதும்தான், இது கனவில்லை. நிஜம் என்பதே மெல்ல மெல்ல மூளையில் பதியத் தொடங்கியது அவர்களுக்கு.
விழிகளைத் தாழ்த்தி அவனது கால் விரல்களைப் பார்த்தாள். அவர்களின் திருமணத்தின் போது போட்ட மெட்டி இன்னும் அவன் கால் விரல்களில் இருக்க, இனம் புரியா இதமான உணர்வு அவளின் மனதெங்கும் பரவ ஆரம்பித்திருந்தது.
நிதானமாக விழி உயர்த்தி அவன் விரல்களைப் பார்த்தாள். அங்கே அவள் பரிசளித்த, அவர்கள் இருவரின் முதல் எழுத்து இணைத்து பொறித்த மோதிரம் மின்னிக் கொண்டு அமர்ந்திருந்தது.
கன்னச்சதை கடித்துப் புன்னகையை விழுங்கினாள் அவள்.
பட்டு, வேட்டி சட்டையில் இருந்தான். அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காக வீட்டுக்குள் கூட வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு திரியும் ராகவன் அவள் கண் முன் வந்தான்.
அவன் அணிந்திருந்த சட்டை அவள் வடிவமைத்து, அவளே தைத்துக் கொடுத்தது. இன்றும் அதை அவன் பத்திரமாக வைத்திருக்கிறான் என்பதே வார்த்தையில் வடித்திட முடியா உணர்வை தந்தது அவளுக்கு.
மெல்ல நிமிர்ந்து அவன் விழிகளைச் சந்தித்தாள்,
“தொலைந்த என் கண்களைப் பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களைக் கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய்” ஹரிஷ் ராகவேந்திரா உருக,
“இதயத்தைப் பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்?” பாம்பே ஜெயஶ்ரீ கேள்வியைப் பதிலாகக் கொடுக்க, இருவரின் பார்வையும் சட்டென ஒன்றாகி இருந்தது.
ஒரு பார்வை என்ன செய்யும்? ஓராயிரம் வார்த்தைகளை ஒற்றைப் பார்வை கடத்துமா? அவன் செய்தானே? உள்ளுக்குள் மெல்ல தடுமாறத் தொடங்கியிருந்தாள் மதுமிதா.
அவள் மேல் நிலைத்த பார்வையுடன் ராகவன் நிற்க,
“மதுமிதா…” உதயின் குரல் எங்கிருந்தோ அவளை அழைக்க, ராகவனின் காலை பிடித்திருந்த உதய் மித்ரனை கைகளில் ஏந்தியபடி,
“உதய் ண்ணா, உங்க லவ்வர் வந்திருக்காங்க” என்று சத்தமாகச் சொன்னாள் அவள்.
ராகவன் கண்களில் சிரிப்பின் சாயல். கண்ணின் கரு விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
சட்டெனப் பார்வையைத் தழைத்து அவளது கால்களைத் தேடினான். சேலை தழைய தழைய தரையைத் தொட்டிருக்க, ஏமாற்றத்துடன் அவள் கழுத்தை பார்த்தான். அங்கே மெல்லிய சங்கிலி தொங்கிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அவனுக்குப் பின்னே நின்றிருந்த பெண்ணைக் கவனித்தாள் மதுமிதா.
தனது மௌன விரதத்தைக் கலைத்து, “இது ஆரா…” என்று ராகவன் தொடங்க,
“யாரா, இருந்தா எனக்கென்ன?” உதடு சுளித்து அசட்டையாகச் சொன்னவள், தலை சரித்து ஆராதனாவைப் பார்த்து,
“ஹாய், நான் மதுமிதா. என்ஜாய் த பார்ட்டி” புன்னகையுடன் சொல்லி விட்டு, ராகவனைத் திரும்பியும் பாராமல் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
“ராகவ், எப்போ வந்த?”
“ஹாய், வாங்க, வாங்க. நான் சுஹாசினி.”
சுஹாசினி பேசுவதைக் கேட்டுக் கொண்டே நடந்தாள் மதுமிதா.
அவனை விட்டு போதுமான தூரம் வந்த பின்புதான் அவளின் இதயத் துடிப்பு இயல்புக்கு வந்திருந்தது.
தனது வலது கையால், இடப்பக்க மார்பை ராகவன் அழுத்தி விடுவது அவளது ஓரப் பார்வையில் பட, அங்கிருந்து ஓடி விட வேண்டும் போலிருந்தது அவளுக்கு.