மொட்டை மாடியின் நீள அகலத்தைத் தன் கால்களால் அளந்து கொண்டிருந்தான் ராகவன். அவன் மனம் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்தது.
என்றைக்கு அவனுக்கு ஆராதனாவுடன் திருமணம் நிச்சயமாகியதோ அன்றைக்கே கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த அவனது மன அமைதியும் காணாமல் போய் விட்டிருந்தது. அதற்குக் காரணம் ஆராதனா அல்ல. அன்றைக்குத்தான் முகநூலில், மதுமிதாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை அவன் காண நேர்ந்தது.
மதுமிதா, அவனின் மனைவி மதுமிதா. ஆனால், அவனால் இனி என்றுமே அவளைச் சொந்தம் கொண்டாட முடியாது. அதற்கு அவன்தான் காரணம். அவன் மட்டுமே காரணம்.
அன்பு காட்ட யாரேனும் பயப்படுவார்களா? அவன் பயந்தானே!
மதுமிதாவின் அதீத அன்பு அவனை மிரட்டிதான் பார்த்தது.
அவள் கொடுத்த அன்பிற்கு முன், அவனது காதல் ஒன்றுமே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லிடலாம்.
அவளோடு வாழ்ந்த ஒன்றரை வருடங்களைத் தன் மனதில் ஆயிரமாவது முறையாக ஒட்டிப் பார்த்தான் அவன். அவனது தவறுகள் அனைத்தும் துல்லியமாக அவனுக்குப் புலப்பட்டது.
ஒரு முடிவிற்கு வந்தவனாக அலைபேசியை எடுத்து உதயை அழைத்தான் அவன்.
“என்னாச்சு ராகவ்? என்ன இந்நேரம் கால் பண்ணி இருக்க?” பதறினான் உதய்.
“சும்மா பேசலாம்னுதான் கால் பண்ணேன் மாமா”
“சும்மா பேசிட்டு இருக்க, நான் என்ன உன்னோட லவ்வரா டா? மணி என்னாச்சு தெரியுமா?. போனை வச்சுட்டுப் போய்ப் படுடா” தூக்க கலக்கத்தில் அதட்டி விட்டு, அழைப்பை துண்டிக்கப் போனான் உதய்.
“மாமா, மாமா” கத்தி அழைத்தான் ராகவன்.
“என்னடா வேணும், உனக்கு?”
“எனக்கு ஒரு பொண்ணைக் கரெக்ட் பண்ணனும். ஐடியா கொடுங்க மாமா” என்றான் தயக்கத்துடன்,
“அடப்பாவி…” என்று அதிர்ந்து கத்திய உதய், “ஆராதனாவையா சொல்ற?” என்றும் கேட்க,
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு மாமா. நீங்க ஐடியா மட்டும் கொடுங்க. பொண்ணு யார்னு எல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது” உதயை தெளிவாகக் குழப்பினான் ராகவன்.
மறுபக்கத்தில் இருந்து உதய் மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டது.
“மாமா, மாமா லைன்ல இருக்கீங்களா?”
“எப்பா டேய், முதல்ல நீ என்னை மாமான்னு கூப்பிடுறதை நிறுத்து. உன் தங்கச்சியே என்னைப் பேர் சொல்லி தான் கூப்பிடுறா. சோ, நீயும் அப்படியே கூப்பிடு. மாமா, மாமான்னு வெண்ணை வெட்டி, ஐடியா கேட்கறான் பாரு, ஐடியா” கடுப்புடன் கத்தத் தொடங்கி, பின் புலம்பலாக முடித்தான் உதய்.
“ப்ச், போங்க மாமா. ரொம்பத்தான் பண்றீங்க” ராகவன் சடைத்துக் கொள்ள,
“யாரு, நானு? ஏன்டா சொல்ல மாட்ட. ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு, ரெண்டு பேர் கூடக் குடும்பம் நடத்திட்டு இருக்கேன் நானு. ச்சை..” உதய் புலம்ப, “இப்ப ஐடியா கொடுக்க முடியுமா? முடியாதா மாமா?” என்று அந்த மாமாவில் அழுத்தம் கொடுத்து கேட்டான் ராகவன்.
“வந்து வாயை ஓடச்சுடுவேன் டா ராகவ். நடுராத்திரி ஒரு மணிக்கு கால் பண்ணி காமெடி பண்ணிக்கிட்டு..” லேசாகக் கோபம் துளிர்க்க தொடங்கியிருந்தது உதயின் குரலில்.
“சாரி மாமா”
“இப்ப என்னத்துக்குடா சாரி சொல்ற. முழுப் பைத்தியம் ஆகிட்டியா என்ன?” எரிச்சலுடன் கேட்ட உதய்,
“இன்னைக்குச் சொல்றேன் கேட்டுக்கோ. நீ அந்த ஆராதனாவை மட்டுமில்ல, வேற எந்தப் பொண்ணையும் கல்யாணம் பண்ண மாட்ட. உன்னால எந்தப் பொண்ணையும் கரெக்ட் பண்ணவும் முடியாது. வேணும்னா டிரை பண்ணிதான் பாரேன். இன்னைக்குக் கூட ஆராதனா கூட டின்னர் போனியே? என்ன நடந்தது? அவ சுண்டு விரலையாவது உன்னால பிடிக்க முடிஞ்சதா?” உதயின் கேள்விக்கு அமைதியே பதிலாகக் கிடைக்க, சத்தமாகச் சிரித்தான் அவன்.
“பொண்ணைக் கரெக்ட் பண்ண ஐடியா தரவாம். வெண்ண வெட்டி, அப்படியே ஐடியா கொடுத்தா வெட்டி தள்ளிடுவார். ஆராதனாவை நீ கல்யாணம்…” உதய் சொல்லி முடிக்கும் முன்பே,
“கல்யாணம் பண்ணிப்பேன் மாமா” உறுதியாகச் சொன்னான் ராகவன்.
“இந்தச் சாதகப் பறவைகள் தெரியுமா ராகவ்?” அழுத்தமாகக் கேட்டான் உதய்.
“என்ன பறவை மாமா? புரியல?”
“சாதகப் பட்சிகள் டா ராகவ். சாதகப் பறவைகள். கேள்விப்பட்டதில்ல?”
“கேள்விப்பட்டிருக்கேன் மாமா. ஆனா, அப்படி ஒரு பறவை…”
மேலே அவனைப் பேச விடவில்லை உதய்.
“இந்தச் சாதகப் பறவைகள் இருக்கே. அதுங்க, மழைத் துளிகளை மட்டும் தான் குடிச்சு, உயிர் வாழுமாம் டா. அப்படினு நான் சொல்லலை, காவியங்கள் சொல்லுது. மழை நீர் தவிர வேற எதையும் குடிக்காதாம். குளம், குட்டை, ஆறு, ஏரி. ம்ஹூம். எதையும் தொடாதாம். ஒன்லி ரெயின் வாட்டர், யூ சீ. அப்புறம் இந்தப் பறவையோட சவுண்ட் இருக்கே. அது சோக கீதம் போல மெலிதான ஏக்கத்துடன் கூவுறது போலதான் ஒலிக்குமாம்.
இந்தக் கவிஞர்கள் சும்மா இல்லாம, பிரிந்து போன காதலர்கள் ஏங்கி, தவிக்கறதுக்கு, இதை உவமானமா சொல்றாங்களாம்.”
உதய் விளக்கி கொண்டே போக,
“என்ன சொல்ல வர்றீங்க மாமா?” இறுக்கமாகக் கேட்டான் ராகவன்.
“என்ன சொல்ல வர்றேன்? ஒன்னும் இல்லையே? புரிஞ்சா நீயேன் இப்படி இருக்கப் போற? மழைத் துளியை மட்டுமே குடிச்சு உயிர் வாழ்வேன்னு இருக்கற இந்தச் சாதகப் பட்சிகள், பெரிய முட்டாள்கள்னு சொல்ல வந்தேன். வேற ஒன்னுமில்ல. இன்னைக்கு இந்த ஆராய்ச்சி போதும். எனக்குத் தூக்கம் வருது. நீ, போனை வை. குட் நைட்” ராகவன் பேசுவதற்கு இடமே கொடுக்காமல் இணைப்பை துண்டித்திருந்தான் உதய்.
உதய் சொன்ன தகவல் அவனுக்குப் புதிது. அதை மனதில் அசைப் போட, இதமான தென்றல் வருடிய உணர்வு எழுந்தது.
அந்த விளக்கம் ராகவனை நிறையவே யோசிக்க வைத்தது. தூக்கம் தொலைத்து, வானை வெறித்தபடி ஈரத் தரையில் படுத்திருந்தான். ஏனோ, மனதும், தரையைப் போலவே சில்லிட்டிருந்தது.
மறுநாள் காலையிலேயே ராகவனைப் பார்க்க வந்து விட்டான் உதய்.
அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவனை நிறுத்தி,
“நைட், யோசிக்காம, ஏதேதோ பேசிட்டேன் டா ராகவ். சாரி. நாங்களே உன்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சுட்டு, அப்புறம் நானே உன்னைக் குழப்பி விடுற மாதிரி பேசுறது, சாரி டா.” என்று உதய் மன்னிப்பு கேட்க,
“என்ன மாமா நீங்க, இதுக்குப் போய்ச் சாரி எல்லாம் சொல்லிகிட்டு இருக்கீங்க? நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்குத் தெரியும். அதே போல, நான் என்ன பண்றேன்னு எனக்குத் தெரியும்.
நீங்க சொன்னதை நான் செய்யப் போறதில்ல. நான் விரும்பினதை, நீங்க கண்டிப்பா நடத்தி காட்டுவீங்கன்னு, எனக்கு மட்டுமில்ல. ஊருக்கே தெரியும். அதுவரைக்கும் லெட்ஸ் என்ஜாய் த டிராமா” புதிராகப் பேசினான் ராகவன்.
அதைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக உதயின் புன்னகை சிரிப்பாக மாறி இருந்தது.
“தேறிட்ட டா ராகவ்” அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் உதய்.