சாதகப் பட்சிகள் – 14 (4)

காரை சீரான வேகத்தில் செலுத்திக் கொண்டே, பல முறை மனைவியிடம் பேச்சுக் கொடுத்து பார்த்து விட்டான் அவன்.

ம்ஹூம். கண்ணோடு, வாயையும் இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தாள் மதுமிதா.

தனக்குத் தானே மயக்கம் கொடுத்து படுத்து விட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

கார் வீட்டை அடைந்ததும், படாரென்று கதவை திறந்து இறங்கி, வீட்டிற்குள் சென்றாள் மதுமிதா.

அவளது நடையிலேயே அடக்கப்பட்ட அவளின் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவளின் பின்னாலேயே ஓடினான் ராகவன்.

அறைக்குள் நுழைந்ததும் கைப் பிடித்து நிறுத்தி, “பிளீஸ், சாரி மது, ஒரு எமர்…”

“எமர்ஜென்சி வந்திருக்கும். யாராவது உயிருக்கு போராடிட்டு இருந்திருப்பாங்க. நீங்க என்னைச் சுத்தமா மறந்துருப்பீங்க. எனக்குத் தெரியும். இது என்ன எனக்குப் புதுசா? என்னமோ இன்னைக்குத்தான் முதல் தடவை நடக்கற மாதிரி…” கோபத்தில் பொரிந்தாள் அவள்.

“இதுக்கு முன்னாடி நான் உன்னை இப்படி விட்டதே இல்ல மது. அபாண்டமாகப் பழி போடாத…”

“ஆமா, இன்னைக்கு போல நடுரோட்டுல விட்டது இல்லதான். ஆனா, சொன்ன மாதிரி என்னைக்காவது ஒரு நாள், ஒரே ஒரு நாள் நடந்திருக்கீங்களா? சொல்லுங்க? சொன்ன நேரத்துக்கு வந்திருக்கீங்களா? சொல்லுங்க.” அவன் கண்களைப் பார்த்து அழுத்தமாக அவள் கேட்க, என்ன பதில் சொல்வான் அவன். அப்படியே அதிர்ந்து நின்றான் ராகவன்.

“இந்த ஒன்றரை வருஷத்துல எத்தனை நாள் எனக்காக ஒதுக்கி இருப்பீங்க? நான் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல. உங்களுக்குக் கல்யாணம் பண்ணனும். அதுக்கு என் கழுத்துதான் கிடைச்சது. நான் மாட்டினேன்.”

“ஏன் இப்படிப் பேசுற மது. நாம ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சோம்…”

“எஸ். சரியா சொன்னீங்க. நேசிச்சோம். நாட் எனிமோர். இப்ப நேசிக்கறோமா?” வார்த்தையைச் சாட்டையாய் சுழற்றினாள்.

சுவரில் சாய்ந்து கண்களை மூடித் திறந்தான்.

“பிளீஸ் மது. இன்னொரு நாள் பேசலாம். என்னால முடியல.” கெஞ்சினான் ராகவன்.

“இந்தப் பதில்தான் வரும்னு எனக்குத் தெரியும். எப்பவும் தப்பிக்கும் ஒரே வழி. இன்னைக்கு என்ன சாக்கு சொல்லப் போறீங்க?” அறை அதிர கத்தினாள் மதுமிதா.

“முப்பது வயசு தான். கட்டிடத் தொழிலாளி. ஆக்சிடென்ட் கேஸ். ஆபரேஷன் டேபிள்ல கடைசி நிமிஷத்துல இறந்துட்டார். எங்களால அவரைக் காப்பாத்த முடியல. அவருக்கு ரெண்டு சின்னப் பசங்க இருக்காங்க மது. அவர் மனைவிக்கு இருபத்தஞ்சு வயசுதான் இருக்கும்.

அதான், என்னால வர முடியல மது. இந்த ஒரு முறை மன்னிக்க….”

ஒரு நொடி அவள் மனம் இளகியது உண்மைதான். ஆனால், சட்டென மனதை கடினமாக்கினாள் அவள்.

“முடியாது. என்னால முடியாது. உங்களுக்கு உங்க வேலைதான் முக்கியம். நான் உங்களுக்கு முக்கியமே இல்ல.” சொன்னதையே மீண்டும், மீண்டும் சொன்னாள் அவள்.

“அப்படியில்லை மது. பிளீஸ். உனக்கே தெரியும். ஐ லவ் யூ”

“சொல்லாதீங்க. பொய், பொய். நான் நம்ப மாட்டேன். நீங்க, எனக்குக் கொடுத்த கிஃப்ட்ஸ் எதுவுமே நீங்க எனக்காக வாங்கினது கிடையாது. உங்க தங்கை ராகவி வாங்கினது. அதைக் கொண்டு வந்து கொடுத்தது மட்டும்தான் நீங்க. அப்புறம் ஒவ்வொரு முறை நாம வெளியூர் போனது, உள்ளூர் ட்ரிப், ரிசார்ட் எல்லாம் உங்க உதய் மாமா பிளான் பண்ணிக் கொடுத்தது. இதுல எனக்காக என்ன செய்து இருக்கீங்க நீங்க, சொல்லுங்க, கேட்போம்…”

“மது, எல்லாமே நான் சொல்லிதான் அவங்க செஞ்சாங்க. எனக்கு டைம் இல்லாததால…”

“டைம் இல்ல, டைம் இல்ல. இதையே எத்தனை முறை சொல்வீங்க? என்னைக் கல்யாணம் பண்ண மட்டும் டைம் இருந்ததோ? ஓ, மறந்து போய்ட்டேன் பாருங்க. அப்பவும் ஆபரேஷன், அவரசம்னு ஓடின ஆள் தானே நீங்க? அன்னைக்குக் கல்யாணத்துக்கு எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிடல் போனவர், அப்படியே கல்யாணமே வேணாம்னு போய் இருக்க வேண்டியது தானே? என் நிம்மதியாவது மிஞ்சி இருக்கும்.”

கண்கள் சிவக்க, உடல் இறுக, கைகளை மார்பில் கட்டிக் கொண்டு, அவளை வெறித்துப் பார்த்தான் ராகவன்.

மனதில் இனம் புரியா வலி பரவ ஆரம்பித்திருந்தது. காலையில் இருந்து சரியான உணவில்லை, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளால் ஏற்கனவே அவனது இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறி இருக்க, இப்போது நிஜமாகவே அவனுக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

‘என்னவெல்லாம் சொல்கிறாள் இவள்’ வலித்தது அவனுக்கு.

“இதுக்குப் பயந்துதான், இந்த வார்த்தை வந்திட கூடாதுனு பயந்துதான் உன்னைக் கல்யாணம் பண்ண அவ்வளவு யோசிச்சேன் மது.” அவன் சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் வெடித்து விட்டாள் மதுமிதா.

“ஓ, அப்போ இத்தனை வருஷமும் கல்யாணத்தை நீங்க தள்ளி போட்டுட்டே போனது? நான் ஒரு முட்டாள். எனக்கு இது புரியவேயில்லை. உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணவே… ஐயோ…”

“என்னைக் கல்யாணம் பண்ணதால, நிம்மதி போச்சுன்னு இப்போ, நீ தானே மது சொன்ன?” தீர்க்கமாக அவன் கேட்க, விழித்தாள் அவள்.

“ஒருவேளை நான் ஒரு டாக்டரை கல்யாணம் பண்ணியிருந்தா அவளுக்கு என் வேலை புரிஞ்சுருக்கும். என்னோட அட்ஜஸ்ட்…”

என்ன சொல்கிறான் இவன்? அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. கைக்குப் பக்கத்தில், படுக்கையில் இருந்த தலையணையைத் தூக்கி அவன் முகத்தில் எறிந்தாள்.

“ஓ, இப்பவும் இங்க யாரும் உங்களைத் தடுக்கலை. போங்களேன். போய், நல்ல டாக்டர் பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்களேன். வேணாம், போகாதீங்கன்னு யாரும் உங்க கையைப் பிடிக்கல. போங்க… போய் நல்ல டாக்டர் பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க. நல்லா அட்ஜஸ்ட் பண்ணுவா. இல்ல, கல்யாணம் சரி வராதுன்னா.. கூட்டிட்டு வந்து குடும்…” வார்த்தைகளையும் சேர்த்தே எறிந்தாள்.

“ஏய்…” அவளை மேலே பேச விடாமல், கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் பாய்ந்தான் ராகவன். தன் செயலில் தானே அதிர்ந்தவனாக, மனைவியின் முகத்துக்கு நேராக உயர்த்திய கையுடன் அப்படியே நின்றான்.

பயத்தில் விழிகளை இறுக மூடி, அடி வாங்க ஏதுவாகவோ அல்லது அடியில் இருந்து தப்பிக்கவோ, தயாராக முகத்தைச் சட்டென்று மறுபுறமாகத் திருப்பி, கைகளை இறுக்கி, உதடு துடிக்க நின்றிருந்தாள் மதுமிதா.

அவளிடம் அதிர்ந்து கூடப் பேசியிராத கணவன், இன்று அவளை அடிக்கக் கை ஓங்கியது அவளுக்குப் பெரும் அதிர்ச்சி. ஒரு புறம் அவமானமாக உணர்ந்தாள் அவள்.

“மது, ஐ ஆம் சாரி…” இழுத்து அணைக்கப் போனவனின் கரங்களில் இருந்து மூர்க்கமாக விலகினாள் மதுமிதா.

அவனிடம் இருந்து விலகி, பின்னோக்கி நடக்கத் தொடங்கினாள்.

“மது, பிளீஸ். தெரியாம கை ஓங்கிட்டேன். இனி மேல்…” இரைஞ்சியது அவன் குரல். கண்கள் கலங்க எட்டி அவளின் கைப் பற்றினான்.

“எத்தனை இனி மேல் சொல்வீங்க? எல்லாத்துக்கும் இனி மேல் நடக்காது? இனி மேல் செய்ய மாட்டேன். இனி மேல்.. இனி மேல்… ச்சே…‌ இனி மேல், நாம சேர்ந்து இருக்கறதில் அர்த்தமே இல்ல.” அவன் பிடித்திருந்த கையை மட்டுமல்ல, அவனையும் சேர்த்தே உதறினாள் அவள்.

அறைக் கதவை வேகமாகத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

“முட்டாள், என் கண் முன்னாடி வராதன்னு சொன்னா உனக்குப் புரியாதா?. பக்கத்தில வராத ராகவி. ஐ டோண்ட் வான்ட் டு சீ யுவர் ஃபேஸ்” பல்லைக் கடித்துக் கொண்டு அடித் தொண்டையில் இருந்து கத்திய உதய், மனைவியின் தோளை பிடித்துத் தூர தள்ளி விட்டு, அறைக் கதவை பட்டென்று சாத்தியிருந்தான்.

அவன் பிடித்துத் தள்ளியதில் சுவரில் முட்டிக் கொண்டு நின்றாள் ராகவி.

அதைப் பார்த்த மதுமிதா அப்படியே சிலையாகி நின்றிருந்தாள்.

“ஃபேரி டேல் வாழ்க்கை” என்று அவள் நினைத்த ராகவியின் வாழ்வில் இப்படி ஒரு காட்சியை அவள் கனவில் கூடக் கற்பனை செய்திருக்கவில்லை. அதிலும், உதயிடம் இருந்து, நிச்சயமாக இல்லை.

ராகவி இவர்களைக் கவனித்திருக்கவில்லை.

மதுமிதா அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டு, மடமடவெனப் படியிறங்கி போனாள்.

“மது, பிளீஸ். போகாத. பேசலாம். பிளீஸ்…” அவள் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி, பின்னாலேயே ஓடினான் ராகவன்.

“பார்த்துக்கிட்டே இருங்க. ஒரு நாள், நானும் உயிருக்கு போராடி உங்க ஆபரேஷன் டேபிள்ல இருக்கும் போதுதான் உங்க முழுக் கவனமும் என் மேல விழும்…” மேலே என்ன சொல்லி இருப்பாளோ தெரியவில்லை. முற்றிலும் உடைந்து போனவனாக அவளை இழுத்தணைத்தான் ராகவன்.

“என்ன பேசுற மது?” கலங்கி தவித்தான்.

அவனிடம் இருந்து விடுபட்டு,

“பிளீஸ். என்னை.. தனியா விடுங்க. என் வீட்டுக்கு போறேன், நான்…” என்றாள் முடிவாக.

“அப்போ, இது… “

“என் வீடில்ல…” வெறுப்புடன் சொல்லி விட்டு தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பறந்திருந்தாள் மதுமிதா.

அவளோடு, சில மாதங்களுக்கு முன் அவள் எடுத்திருந்த முடிவுகளும் சேர்ந்தே காற்றில் பறந்தது.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top