“என்ன ராகவன், எப்போ உங்க வைஃபை என்கிட்ட கூட்டிட்டு வரப் போறீங்க?” வயதில் அரைச் சதம் போட்டிருந்த அந்த மகப்பேறு மருத்துவர் புன்னகையுடன் கேட்க, அவரைச் சிறு புன்னகையுடன் ஏறிட்டு,
“சீக்கிரமே டாக்டர்” என்றான் அவன்.
அந்த மூத்த மருத்துவர் சிரித்துக் கொண்டே, இடுப்புக்கு கீழே உடல் மரத்திருந்த பெண்ணின் அடிவயிற்றில் இரத்தம் தோய்ந்த கரங்களுடன் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“டாக்டர்… டாக்டர்” அந்த மெல்லிய சத்தம் காதை எட்டும் முன், அறுவை மேஜையில் படுத்திருந்த பெண் வாந்தி எடுக்கத் தொடங்கியிருந்தாள்.
இது அவ்வப்போது நிகழ்வதுதான் என்றாலும் கூட, சட்டென அவன் உடல் பதட்டமாகியது.
அங்கு, அவர்களின் உதவிக்கு நின்றிருந்த செவிலியரிடம் அவன் கண் காட்ட, அதற்குரிய பவுலை அப்பெண்ணின் வாயின் அருகில் வைத்தார் அவர். “இது நார்மல் தான். நீங்க பயப்படத் தேவையில்ல” வேக வேகமாகச் சொன்னான் ராகவன்.
பொதுவாக அறுவை சிகிச்சை நடக்கையில் வாந்தி வந்தால், நோயாளிக்கு பயமும், பதட்டமும் அதிகரிக்கும் என்பதை இத்தனை ஆண்டுகள் அனுபவத்தில் உணர்ந்தவனாக அமைதியான குரலில் எடுத்துச் சொன்னான் அவன்.
ஆனால், பயத்தினால் அப்பெண்ணின் இரத்த அழுத்தம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய போது, அவனது இரத்த அழுத்தமும் உயரத் தொடங்கியது.
மேற்கொண்டு வாந்தி வராமல் இருக்க, அறுவை மேஜையின் நிலையைச் சற்றே மாற்றினர். இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தான் ராகவன். குறிப்பிட்ட அளவிற்கு மேல் போகக் கூடாது என்பது தான் அவனது வேண்டுதலாக இருந்தது.
தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் எப்போதும் அங்கிருக்கும்தான். ஆனாலும், அவனால் பதட்டப்படாமல் இருக்க முடியவில்லை.
“ரிலாக்ஸ் பூமிகா. இன்னும் ஃபைவ் மினிட்ஸ் தான். உங்க பாப்பாவை நீங்க பார்க்கலாம்.” அவன் சொல்ல,
“ம்ம், இதோ எடுக்கப் போறோம். சரியா நீங்க கேட்ட நேரத்துக்கு…” மகப்பேறு மருத்துவர் அவனைத் தொடர்ந்து சொன்னார்.
அடுத்து வந்த நிமிடங்களில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்திருந்தது.
தாயின் இரத்த அழுத்தம் குறையாத காரணத்தினால் சிறப்புக் கவனிப்பில் வைத்தனர்.
பிரசவத்திற்கு நல்ல நேரம் எல்லாம் குறித்து வைத்து, அந்த நேரம்தான் வயிற்றில் கத்தி வைக்க வேண்டும் எனக் கேட்ட பெண், மருத்துவமனைக்கு வரும் முன் ஹார்லிக்ஸ் குடித்ததைச் சொல்லாமல் விட்டதை நினைக்கையில் அவனுக்கு அத்தனை கோபமாக வந்தது.
வாந்தி எடுக்கையில் வயிறு மேலே ஏறும், அறுவை மேஜையில் படுத்துக் கொண்டு வாந்தி எடுப்பதால், அது மூச்சு குழாய்க்குள் போகும் ஆபத்தும் இருக்கிறது என்ற பதட்டம்தான் அவனுக்கு. ஆனால், சிசேரியன் பிரசவங்களில் இது அடிக்கடி நடக்கும் ஒன்று என்பதால் அமைதியாக வெளியில் வந்தான் அவன்.
இனி மகப்பேறு மருத்துவரும், செவிலியர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று உடை மாற்ற சென்றவனை ஓடி வந்து மூச்சு வாங்க அழைத்தார் செவிலியர் ஒருவர்.
“அப்பாடா, நல்லவேளை நீங்க இன்னும் கிளம்பலை டாக்டர்.” என்று அவர் படபடக்க,
“என்னாச்சு?” என்றான் ராகவன்.
“ஒரு ஆக்ஸிடென்ட் கேஸ். நம்ம ஹாஸ்பிடல் பக்கத்திலதான் நடந்திருக்கு. அனஸ்தியாலஜிஸ்ட் கால் பண்ணிட்டு இருக்கும் போது ரிசப்ஷன்ல நீங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கறதா சொன்னாங்க. பிளீஸ், வாங்க டாக்டர்” அவர்களின் பரபரப்பு அவனையும் தொற்றிக் கொண்டது.
அடுத்தப் பத்தாம் நிமிடம் மற்றொரு அறுவை அரங்கில் இருந்தான் அவன்.
அந்த மருத்துவமனை இருந்த அதே பகுதியில் நடந்த விபத்து. புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்தில், தலை சுமையோடு ஏறியவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்திருக்க, அவரது வயிற்றை நன்றாகக் கிழித்திருந்தது கட்டிடத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கம்பி.
கம்பி நன்றாகக் கிழித்துக் குடல் வெளியே வந்திருக்க, அதைப் பார்க்கும் போதே அவனுக்குக் கைகள் நடுங்க, தலை சுற்றும் உணர்வு.
சவாலான கேஸ்தான். ஆனாலும், தன்னைச் சமாளித்து நின்றான் அவன்.
பொது மயக்க மருந்து (ஜெனரல் அனஸ்தீசியா) கொடுத்தான். அறுவை சிகிச்சை தொடங்கியது.
அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. கவனம் முழுவதும் நோயாளியின் மேல்தான் இருந்தது. பக்கத்து அறுவை அரங்கில் அதே கட்டிடத்தில் இவர் விழுந்ததை எட்டிப் பார்த்து, தலை சுற்றி, கீழே விழுந்து தலையில் அடிபட்டு இன்னொருவருக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.
சில மணி நேரத்தில், அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, குடலை வயிற்றில் வைத்துத் தைக்கத் தொடங்கியிருந்தனர்.
“வைஃப் கால் பண்ணிட்டே இருக்காங்க. லஞ்ச் சாப்பிடாம, எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” சர்ஜன் சொல்லவும்தான் ராகவனுக்கு மனைவியின் நினைவே வந்தது.
ஒற்றை வினாடியில் அவனது இரத்த அழுத்தம் அபாயகரமான அளவை தொட்டிருந்தது. உடல் முழுவதும் பதட்டம், பதட்டம் மட்டுமே.
“நீங்க ஆபரேஷன் முடிச்சுட்டு வாங்க. நாம சேர்ந்து போகலாம். நான் வெயிட் பண்றேன்” காலையில் அவன் மருத்துவமனைக்குக் கிளம்பும் போதே சொன்னாள் மதுமிதா.
“இல்ல மது. நீ ப்ரேக் பாஸ்ட் சாப்பிடு, அப்புறம் பொறுமையா டிக்கெட் எடுத்துட்டு வெயிட் பண்ணு. பதினொரு மணிக்கு நான் வந்துடுவேன். படத்துக்குப் போகலாம். சரியா? நான் நேரா தியேட்டருக்கு வந்திடுறேன். அது ஈஸி எனக்கு. வீட்டுக்கு வந்து, உன்னைக் கூட்டிட்டு போக, வீணா டைம் வேஸ்ட் ஆகும்”
அவன் சொல்வது சரியென்று பட, மனதே இல்லாமல் தலையசைத்து விட்டு, வாடகை கார் வரச் சொல்லி போய்க் கொள்கிறேன் என்றாள் மதுமிதா. இப்போது அவனுக்காக அவள் அங்கே காத்துக் கொண்டிருப்பாள்.
அறுவை அரங்கில் இருந்த சுவர் கடிகாரத்தில் மணி பார்த்தான் 2.45 என்றது கடிகாரம்.
காலை பதினொன்று எங்கே? மதியம் இரண்டு நாபத்தைந்து எங்கே?
“போச்சு” என்றான் தன்னை அறியாது சத்தமாக.
“என்ன ராகவன்?” என்று சர்ஜன் கேட்க,
“இல்ல. ஒன்னுமில்ல டாக்டர்” புன்னகைத்துச் சமாளித்தான்.
அன்று அவன் மருத்துவமனையை விட்டு வெளியில் வரும் போது மணி மாலை ஐந்தை கடந்திருந்து.
காரை வெகு கவனமாக, முடிந்த அளவு வேகமாக ஓட்டிக் கொண்டு வீட்டிற்குப் போனான். மதுமிதா அங்கில்லை.
இருபது நிமிட பயணத்தில் ராயப்பேட்டையில் இருந்த அந்தத் திரை அரங்கின் முன் சென்று நின்றது அவனது கார்.
காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, இறங்கி உள்ளே ஓடினான். மதுமிதா அங்கில்லை.
எதிரில் இருந்த காஃபி ஷாப்பில் நுழைந்து, கண்களைச் சுழற்றினான். ஒரு மூலையில் இருந்த மேஜையில் தனியாக அமர்ந்திருந்தாள் மதுமிதா.
அவளது விழிகள் சரியாக அவன் மேல் நிலைத்திருந்தது.
ஐந்தே எட்டில் அவளை நெருங்கியிருந்தான்.
“மது.. மது.. ஐ ஆம்…”
அவனைப் பேசவே விடவில்லை அவள்.
“வாங்க, போகலாம்” இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு எழுந்தாள்.
வெகு நிதானமாக அவனைக் கடந்து வெளியில் செல்லத் தொடங்கினாள். அவள் பின்னேயே ஓடினான் ராகவன்.
அவன் காரைத் திறக்க, அமைதியாக ஏறி அமர்ந்தாள்.
“மது பிளீஸ். நான், நான்..”
“காரை எடுங்க” கண் மூடி அழுத்தமாய்ச் சொன்னாள் அவள்.
உள்ளங்கை முழுவதும் வியர்வையில் பிசுபிசுக்க, ஸ்டியரிங்கை பிடிக்கக் கூட முடியவில்லை அவனால்.
கைகளைக் காற்சட்டையில் துடைத்து விட்டு, வண்டியை இயக்கினான்.