ஆவல் மீற பார்க்குதே – 4 (1)

சக்திவேல் மனைவியின் கரத்தை அழுந்தப் பற்றினான்.

“ம்மா, அபி வேலைக்குப் போகப் போறாம்மா. அவளுக்கு இங்கருக்கப் பேங்க்லருந்து இன்டர்வியூ கால் வந்திருக்குன்னு உன்கிட்ட சொல்ல கூப்பிட்டா, நீ என்னத்தையோ கேட்டுட்டு இருக்க” என்று அம்மாவை கோபித்தான் அவன்.

“என்னத்தையோ கேட்கறேனா? நல்லா சொன்னடா சக்தி. உனக்கு உம் பொண்டாட்டி வேலைக்குப் போறது முக்கியமான செய்தின்னா, எனக்கு என் புள்ளைக்குப் புள்ளை வர்றதுதானே முக்கியமான செய்தியா இருக்கும். சொல்லு?”

“என்னம்மா நீ, இப்படிப் பேசி அவளை.. ம்ம், எங்கள சங்கடப்படுத்தாதம்மா. அபி வேலைக்குப் போக ஆசைப்படும் போது..”

“நா பேரன் பேத்தி வரணும்னு ஆசைப்படக் கூடாதாய்யா? இம்புட்டு வருஷம் கழிச்சு இப்பத்தேன் கல்யாணம் முடிச்ச நீயி. உனக்குக் காலாகாலத்துல புள்ளைங்க வந்துட்டா, நா அதுகள வளர்த்து விட்டுருவேன் இல்ல?” என்று அவன் பேச்சில் இடையிட்டு தன் மனத்தாங்கலை வெளிப்படுத்தினார்.

“நீயும் நல்லா ஆசைப்படும்மா, சீக்கிரம் அத நிறைவேத்தி வைக்கறோம்” என்று அவன் புன்னகையுடன் சொல்ல, அபி விரைத்து நிமிர்ந்து அமர்ந்தாள். அதைக் கண்டு அவள் கையை அழுத்தினான் அவன்.

“சரிய்யா சக்தி. சீக்கிரமா நல்ல செய்தி சொல்லுங்க. இப்போ மருமககிட்ட குடு, பேசுவோம்” என்றார் பொன்னி. அபியிடம், “நல்ல மாரியா வேலைக்குப் போய்ட்டு வாத்தா. நா சாமிக்கு வேண்டிக்கறேன்” என்று நல்லவிதமாகவே பேசினார். ஆனாலும் அவர் முதலில் கேட்ட கேள்வியே அவள் மனத்தில் இன்னும் அழுத்தமாக அமர்ந்திருக்க, அவளால் இயல்பாகப் பேச முடியவில்லை.

“வேலைக்குப் போனாலும் வீட்டையும் பார்த்துக்கணும்த்தா. நா என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் இதத்தேன் இன்னைக்கும் சொல்லிட்டு இருக்கேன். அதையே உனக்கும் சொல்றேன். என்னா? நீயி மனசுல வேற மாரி எடுத்துக்காதத்தா”

“இல்லத்த. நீங்க சொல்லுங்க” என்றாள் அபி.

“சக்திக்கு அந்த ஊரு பழகிருச்சு. உனக்கும் பழகற வரைக்கும் சூதானமா இருந்துக்கோ. என்னத்தா?”

“சரிங்கத்தே”

“சக்தி, எம் புள்ள சின்னதுல இருந்து வீட்டுக்காக ஓடிக்கிட்டே இருந்துட்டியான். இதுவரைக்கும் அவனுக்குன்னு எதுவும் செஞ்சுக்கிட்டதுல்ல அவேன்..”

சக்தி இடையில் புகுந்து, “ம்மா..” என்று ஆட்சேபிக்க, பொன்னியின் கவனமெல்லாம் மருமகளின் மீதுதான் இருந்தது.

“பாசக்காரன்ம்மா. உன் புருஷன பத்தி உனக்கே சொல்லணுமா என்னா? எங்களாலத்தேன் அவன பார்க்க முடியாம போச்சு. கொள்ளத் தூரத்துல இருக்கியான்‌. பத்தொம்பேது வயசுல அங்கன வந்தியான். இப்போ அவனுக்கு 31 ஆகிருச்சு. அவன பார்த்துக்கோத்தா. அவனா வாய விட்டு எதையும் கேட்க மாட்டியான்.”

உணர்ச்சி வசப்பட்டுக் குரல் உடைய, கண்கள் கலங்க அவரின் வார்த்தைகள் திக்கி தெளிவில்லாமல் வந்தன.

அபிக்கு அவரை அப்படிப் பார்க்க என்னவோ போலாகி விட்டது.

“அத்த..” என்று அவள் அழைக்க, மேலே அவள் பேசும் முன் அலைபேசியை அவளிடமிருந்து வாங்கி, “ம்மா, அதெல்லாம் என்னைய ரொம்ப நல்லா பார்த்துக்கறா உன் மருமக. நீ கண்ண தொட மொதல்ல” என்று அவரை அதட்டினான் சக்தி.

“நா அழலத்தா. ஆமா, எப்போலருந்து வேலைக்குப் போகப் போறவ?” என்று புடைவை தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு கேட்டார். இரண்டு நாள்களில் நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறாள். அதன் பிறகுதான் வேலை பற்றித் தெரிய வரும் என்று அவருக்கு விளக்கினான் சக்தி.

“சரிய்யா. வேல கெடச்சதும் போன் போடுங்க” என்றார். அவரிடம் பேசி முடித்ததும் கணவனையே குறுகுறுவென்று பார்த்தாள் அபி.

“ஏய் அபி. அம்மா அவங்க ஆசைய சொன்னா நீயி என்னைய ஏன் முறைக்கற? ரிலாக்ஸ் தங்கம். என்னைய நாலைஞ்சு வருஷமா கல்யாணம் பண்ணிக்கோன்னு வீட்ல கம்பெல் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு அவங்க புள்ளைங்க கல்யாணமாகி புள்ள குட்டின்னு செட்டிலானாதான் நிம்மதி. அவங்க லைஃப் வேற, நம்ம லைஃப் வேற அபி. புரிஞ்சுதா?”

“ம்ம்”

“அதுக்காக எனக்குக் குழந்தை ஆசைலாம் இல்லைன்னு நினைச்சுடாதம்மா தங்கமே” என்று அவன் சொல்லவும், முகச் சிவப்புடன் அவனை முறைத்தாள். அவள் தோளில் கைப் போட்டு அணைத்து, “குழந்தைங்கலாம் ரொம்பப் பெரிய பொறுப்பு அபி. நமக்குக் கல்யாணமாகிடுச்சுன்னுலாம் குழந்தை பெத்துக்கக் கூடாது. நம்மளால அவங்கள நல்லபடியா சேர்ந்து வளர்க்க முடியும்னு நம்பிக்கை வரும் போதுதான் அதைப் பத்தியே யோசிக்கணும். ஓகே?” என்றவனை ஆச்சரியத்துடன் ஏறிட்டாள்.

அவளின் பார்வையில் அவனது புன்னகை விரிந்தது.

“சரி, உங்கம்மாகிட்ட பேசுறியா? கால் பண்ணு அவங்களுக்கு” என்றான். அத்தை பேசியதிலேயே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தவள், அம்மா என்ன சொல்வாரோ என்ற பயத்தில், “இல்ல, நா இன்டர்வியூ போயிட்டு வந்த பின்னால, எனக்கு வேலை கிடைச்சதுக்குப் பெறகு அம்மாக்கு சொல்லிக்கறேன்” என்று விட்டாள்.

“அப்புறம் உங்கம்மா வஞ்சா என்ன பண்ணுவ அபி?” என்று வம்பிழுத்தான்.

“அம்மாகிட்ட சொல்லாம செஞ்சா வைய்யும்தான். ஆனா இப்போ சொன்னா வேலைக்குப் போகாதன்னு சொல்லிடுச்சுன்னா..”

“ஏய் அபி, நான்தான் ஆல்ரெடி சொன்னேனே. வேலைக்குப் போறத பத்தி நீதான் முடிவெடுக்கணும். நமக்குச் செட்டாகுதான்னு பார்க்கணுமே தவிர, மத்தவங்க பேச்சுக்குலாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஓகே?” என்று கேட்டான்.

அவனது பேச்சும் புரிதலும் அவளுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. புன்னகையோடு அவனைப் பார்த்திருந்தாள்.

சக்திவேல் மூன்று பெண்களோடு வளர்ந்தவன். அக்கா ராமலஷ்மி தனியார் பள்ளி ஆசிரியை. தங்கையை அவன்தான் படிக்க வைத்தான். அவளின் அரசு வேலை கனவுக்கு ஆதரவாக நின்றான். தங்கை சந்தியா கிராம நிர்வாக அதிகாரி.

அதில் அவனுக்கு நிரம்பப் பெருமை.

அப்படியிருக்கும் போது மனைவியின் ஆசையை மறுதலிப்பானா அவன். வெளிநாடு, வேலை, வாழ்க்கை அவன் எண்ணங்களை விசாலமாக்கி இருந்தது. மனைவியை வீட்டில் முடக்குவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.

“உங்கம்மாக்கு போன் போடுவோமா?” என்று மீண்டும் கேட்டான்.

“வேணாம் மாமா, வேலை கிடைச்ச பின்னால சொல்லிக்கறேனே” என்று அவள் சொல்ல, சரியென்றான் சக்திவேல்.

error: Content is protected !!
Scroll to Top