சாதகப் பட்சிகள் – 14 (2)

அதுவரை அவர்கள் விஷயத்தில் தலையிட கூடாது என உறுதியுடன் இருந்த உதயை‌‍ கூட அவளது விட்டேத்தியான போக்கு கவலையுற செய்தது.

“மதுமிதா…”

மூன்றாவது முறையாக அழைத்தான் உதய்.

அடுப்பில் இருந்த பாத்திரத்தில் ரசம் கொதித்துக் கொண்டிருக்க, அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“ரசம் நுரைச்சு, பொங்கி, இப்போ கொதிக்குது போல, ஆஃப் பண்ணிடுங்க மா” மெல்ல சொன்னான் அவன். எப்போதும் போல அவன் பேச்சு அவளுக்குப் புதிராகத் தானிருந்தது.

மௌனமாய் அடுப்பை அணைத்து விட்டு திரும்பினாள்.

“என்னாச்சு?” அவன் கேட்க, அவள் காதில் விழுந்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை.

“நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல மதுமிதா. என்ன பிரச்னையா இருந்தாலும், நீயும், ராகவனும் உட்கார்ந்து பேசி சரி பண்ணுங்க. அதை விட்டுட்டு இப்படி இருக்கறது, சரி வராது”

‘எங்களுக்குள் விழுந்து விட்ட இடைவெளி, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரிய தொடங்கி விட்டதா என்ன?’ என்ற கேள்வியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதுமிதா.

“இது உன் வாழ்க்கை மதுமிதா. இதை உனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கறது உன் கையிலதான் இருக்கு.” உதய் சொல்ல, வேண்டுமென்றே அவனைப் பார்ப்பதை இப்போது தவிர்த்தாள் மதுமிதா.

“வாழ்க்கை விளையாட்டு இல்ல மா, இதுல விளையாடிப் பார்க்காத. ஒருவேளை தோத்து போனா, ஏமாறப் போறது நீதான். மற்றவங்களை விட, உனக்குத்தான் அடி பலமா இருக்கும். நீ திறமையான பொண்ணு. புத்திசாலி கூட. பொறுமையா, நிதானமா‌ எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணு” அக்கறையுடன் உதய் சொல்ல, மதுமிதாவிற்குத் தொண்டை அடைத்தது.

“நான் முன்னாடியே சொன்னதுதான் மதுமிதா. வேலையில் நான் ரொம்ப ரொம்பப் பிஸி. ஆனா, வீடு எப்பவும் என் நினைவில் இருக்கும். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் பிளீஸ் கால் மீ. அது எந்த நேரமா இருந்தாலும் சரி. என்ன பிரச்னையா இருந்தாலும் சரி. இதை நான் ஒரு போலீஸா சொல்லலை…”

“தெரியும் ண்ணா.‌” இடை மறித்துச் சொன்னாள் அவள்.

“தாங்க்ஸ் ண்ணா” என்றாள் மீண்டும்.

ஒரு நொடி அங்கேயே நின்று மதுமிதாவை ஏதோ யோசனையுடன் பார்த்து விட்டே போனான் உதய்.

அடுத்து வந்த மாதங்கள் வேலை அவனை முழுவதுமாக இழுத்துக் கொள்ள, மதுமிதா அவனைப் பார்ப்பது கூட அரிதாகி இருந்தது.

வீட்டின் பெரியவராக முதலில் அவளிடம் தென்பட்ட மாறுதலை கவனித்தது விசாலாட்சி தான்.

“என்ன பண்ணுது மது? உடம்புக்கு எதுவும் முடியலையா?”

“இன்னைக்கு நான் கடைக்குப் போகாம, உன் கூட வீட்ல இருக்கவா?”

“உனக்கு என்ன சமைக்கட்டும்?” அவரின் கேள்விகள் தொடர்ந்தன. அவளும் ஏதோ ஒரு பதிலை சொல்லி சமாளிக்கத்தான் செய்தாள்.

“நீயும், நம்ம கடைக்கு வாயேன் மது. ஃபேஷன் டிசைனிங் படிச்ச பொண்ணு தானே நீ. கடைக்கு வா. எவ்வளவு நாள் இப்படி வீட்லயே அடைஞ்சு கிடப்ப” அவள் மறுக்க முடியாத வண்ணம் அழைத்தார் அவர்.

அவளும் ஒரு வாரம், அவர்களின் “விசாலாட்சி சில்க்ஸ்” கடைக்குச் சென்றாள் தான். கடை முழுவதுமாக ராகவியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

எது, எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவே அவளுக்கு முழுதாக மூன்று நாளுக்கு மேல் பிடித்தது. அவள் இருந்த மனநிலையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பேச கூட முடியவில்லை அவளால். ராகவன் அதை இயல்பாகச் செய்வதை விழி விரித்துப் பார்க்கத்தான் முடிந்தது அவளால்.

ஆயிற்று, அங்கிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். அவளுக்கு எல்லாமே வெறுத்த நிலைதான்.

“மதுமிதா.. மது.. மது…” அவளது முகம் பற்றிச் சத்தமாக அழைத்தான் ராகவன்.

மெல்ல அவனது கரத்தை விலக்கி, “சாரி, சொல்லுங்க” என்றாள் அவள். அவன் முகத்தில் அடிபட்ட வலி.

“நாளைக்கு எனக்கு ஆஃப். வெளில எங்கயாவது போகலாமா? ஒன் டே ட்ரிப்? லாங் ட்ரைவ்? பீச்? மூவி? நீயே முடிவு பண்ணு”

அவள் ஏற்படுத்திய இடைவெளியை நிறைக்க முயன்றபடி, அவளுக்கு நெருக்கமாக வந்து நின்று கேட்டான் அவன்.

“எனக்கு வேலை இருக்கு” இயந்திர குரலில் சொல்லி விட்டு நகர்ந்தாள் அவள். கைப் பிடித்து அவளை நிறுத்தினான்.

“பிளீஸ் மது” கெஞ்சினான்.

“அதான் சொன்னேனே. எனக்கு வேலை இருக்கு.” மொட்டையாகப் பேசினாள். அவன் பேரை உச்சரிப்பதை மிகக் கவனமாகத் தவிர்த்தாள்.

“அப்படி என்ன வேலை? நைட் எல்லாம் கண்ணு முழிச்சு பார்க்கற.. அப்பவுமா முடியல?” அவனது கேள்வியில், அவளுக்குள் தணிந்திருந்த நெருப்பு மீண்டும் புகைய ஆரம்பித்தது.

“வேலை, அது எல்லோருக்கும்தான் இருக்கு. அவங்கவங்க வேலையைப் பத்தி, அவங்களுக்குத் தானே தெரியும்” அவள் உள் அர்த்தம் வைத்து பேச,

“யா ரைட். நம்ம வேலையைப் பத்தி அடுத்தவங்களுக்கு என்னைக்குமே புரியாது. சிலர், வீம்புக்கு புரிஞ்சுக்க மாட்டாங்க” கோபத்துடன் சொன்னவன், காற்றில் பறந்து அவன் மேல் படர்ந்த அவளது சேலையை உதறி விட்டுப் போனான்.

“எப்பப் பாரு, இந்தச் சேலையைக் கட்டிடுவா, போதை. மூஞ்சியைப் பார்த்து ஒழுங்கா பேசுறாளா பாரு. ம்ம், எனக்கு இது வேணும்.” புலம்பிக் கொண்டே போனான் அவன்.

“வரேன்” என்றாள் சத்தமாக,

“யார்க்கிட்ட பேசுற?” சுள்ளென்று கேட்டான் அவன்.

“உங்ககிட்ட தான். படத்துக்குப் போகலாம். மதியம் வெளில சாப்பிடலாம். ஈவ்னிங் கடற்கரைக்குப் போய்ட்டு… ” அவள் சொல்ல சொல்ல, அவன் முகத்தில் கலவையான உணர்வுகள்.

அவள் சொன்னது அனைத்துமே மக்கள் கூடும் இடங்கள். அவனோடு அவள் தனித்திருக்க விரும்பவில்லை என்பதை மட்டுமே குறித்துக் கொண்டது அவன் மனது. மனதினுள் கசப்புடன் புன்னகைத்துக் கொண்டான் அவன்.

“ஓகே, போகலாம். எனக்குக் காலைல ஒரு சிசேரியன் டெலிவரி இருக்கு. நல்ல நேரம் பார்த்து குழந்தை பெத்துக்கறாங்க.” மேலும் அதைப் பற்றி ஏதோ கருத்து சொல்ல வந்தவன், பட்டென்று வார்த்தைகளை விழுங்கி,

“அது முடிய ரெண்டுல இருந்து மூனு மணி நேரம் ஆகும். அப்புறம் நான் ஃப்ரீ தான்.” என்று சொன்னவனைப் புருவம் உயர்த்திச் சந்தேகமாகப் பார்த்தாள் அவள்.

“போனை வேணும்னா ஆஃப் பண்ணிடுறேன் மது. கால்ஸ் வராது” என்று அவன் சொல்ல,

“பார்ப்போம்” என்பதுதான் அவளது பதிலாக இருந்தது.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அந்தத் தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தான் ராகவன். பத்து முப்பதுக்குள் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும். அது வரை நல்ல நேரம் இருந்தது.

ஆனால், சரியாக ஒன்பது இருபத்தைந்துக்குத் தான் குழந்தை பிறக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட குடும்பம் தெரிவித்திருக்க, அரங்கில் இருந்த மகப்பேறு மருத்துவர் ஒருவித நிதானமான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top