“என்ன பண்ற மது?” மாடியில் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தவளின் உயரத்திற்குக் குனிந்து கேட்டான் ராகவன்.
வெகு இயல்பாக அவளது தோளை சுற்றியது அவன் கரங்கள்.
“பார்த்தா தெரியல?” காந்தாரி மிளகாயின் காரம் அவள் குரலில்.
“என்ன மது?”
“ப்ச், தண்ணீ ஊத்திட்டு இருக்கேன்னு தெரியுது தானே?” அவனது கையைத் தன் மேலிருந்து விலக்கி விட்டு, அவள் கேட்க,
“ம்ம்” என்றான் அவன்.
“அப்புறம் என்ன தெரியாத மாதிரி கேள்வி?”
முகம் மாறி விடாமல், புன்னகையை இழுத்துப் பிடித்தான் ராகவன்.
கடந்த சில நாட்களாகவே, இல்லை மாதங்களாகவே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
தனிமையும், வெறுமையும் அவளைக் கடினமுற செய்திருந்தது.
வீட்டில் இருந்து வேலை செய்வது கூட ஒரு வித அழுத்தத்தைத் தரத் தொடங்கியிருந்தது.
அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே புரியாத நிலை.
ராகவன், அவன் ஒருவனைச் சுற்றி மட்டுமே சுழல ஆரம்பித்திருந்தது அவளது உலகம்.
கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கும் மேலான காதல், காத்திருப்பு, அதன் பின்னான திருமணம். ஆனால், அனைத்தும் சாத்தியப்பட்ட பின்னும், எதுவுமே இல்லா நிலைதான் அவளுக்கு.
ராகவனின் மனைவி மதுமிதா.
அவனை அடைந்து விட்ட பூரிப்பு, அவனோடு எவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும் தீராது அவளுக்கு.
அவனும் அளவு கடந்த அன்பை அவளுக்குக் கொடுக்கத்தான் செய்தான். ஆனால், அவளது அளவுகோல் மிக நீளமாக இருந்ததோ?
ராகவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல் இரவில் அவனுக்கு வரும் அவசர அழைப்புகளுக்கு அவனோடு செல்வதை அவள் நிறுத்தவேயில்லை. நள்ளிரவில், அதிகாலைகளில் அவள் அலங்க மலங்க எழுந்து அவனோடு வருவதை அவன் வெறுக்கத் தொடங்கியிருந்தான். தன் பணியினால் அவளது உடல் நலம் கெடுவதை அவன் விரும்பவேயில்லை.
ஒரு நாள் நள்ளிரவில் எப்போதும் போல, அவனுக்காகக் காரில் காத்திருக்கையில், காரின் இருக்கையிலேயே சுருண்டு படுத்து, உறங்கி கொண்டிருந்த மனைவியைக் காண்கையில் அவனது பொறுமை மொத்தமாகத் தீர்ந்திருந்தது.
“என் காரை இனி, நீ தொடவே கூடாது மது. அப்புறம், இப்படி என் பின்னாடி அலையறதை முதல்ல நிறுத்து. எனக்கு ட்ரைவ் பண்ண தெரியும். என்னால சரியா வீட்டுக்கு வர முடியும் மது. நம்பு, பிளீஸ். எனக்கு இதெல்லாம் பழக்கம்தான். என் கூட நீ வர்றது, எனக்கு நீ உதவி எதுவும் பண்ணல மது. பிளீஸ், புரிஞ்சுக்கோ”
படுக்கையில் சரிய போனவளின் தோளை அழுத்தமாக பற்றி நிறுத்தி, அதை விட அழுத்தமான குரலில் சொன்னான் அவன்.
அந்த அழுத்தம் தாங்கா வலியில் கசங்கியது அவள் முகம்.
“ஏன், நான் வந்து ட்ராப் பன்றதுல என்னயிருக்கு? அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?” கோபத்துடன் அவனது கையைத் தட்டி விட்டு கேட்டாள் அவள்.
“நான் குழந்தை இல்ல மது. ஸ்கூலுக்கா போறேன் நான்? நீ தினம் கொண்டு போய் விட்டு, வெயிட் பண்ணி கூட்டிட்டு வரதுக்கு?” எரிச்சலுடன் அவன் கேட்க,
“ஐ லவ் டூயூங் இட் ஃபார் யூ…”
சட்டென அவளது பேச்சில் இடைப் புகுந்தான் அவன்.
“காதல்ன்ற பேர்ல, இதையெல்லாம் பண்ணி எங்கழுத்தை நெரிக்காம இரு மது. அது போதும்.”
இடது கையால் தலைமுடியை பதட்டத்துடன் கோதியபடி, அவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பிய நொடி, அவளுள் எதுவோ உடையத் தொடங்கியிருந்தது.
“மூச்சு முட்டுது எனக்கு. கிவ் மீ ஸ்பேஸ் மது. நான் சின்னப் பையன் கிடையாது. உன் பின்னாடியே திரிய. எனக்கும், உனக்கும் நிறையப் பொறுப்புகள் இருக்கு. பெர்சனல், புரோஃபஷனல் ரெண்டும் சேர்ந்ததுதான் நம்ம வாழ்க்கை. பிளீஸ், டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ.
நான் எது பண்ணாலும், உனக்குப் போதல. எது வாங்கிக் கொடுத்தாலும், உனக்குப் பிடிக்கல. ஊர், ஊரா அலைய எனக்கு நேரமும் இல்ல. எனக்குச் சத்தியமா என்ன செய்யனு தெரியல மது. உன் எதிர்ப்பார்ப்பை என்னால புரிஞ்சுக்க முடியல. உனக்கு என்ன வேணும் மது?”
கோபம், எரிச்சல், வருத்தம், இயலாமை என்ன இருந்தது அவன் குரலில்? எல்லாமே இருந்தது போலிருந்தது அவளுக்கு.
கண்ணைச் சிமிட்டி, சிமிட்டி அவனைப் பார்த்தாள் மதுமிதா.
“லவ் இஸ் எப் பர்டன்” (Love is a burden.)
மெதுவாக முணுமுணுத்தான்.
மூச்சை அழுத்தமாக உள்ளிழுத்தாள் மதுமிதா.
கடைசியில் என்ன சொல்லி விட்டான்? அவளது அன்பு அவனுக்குச் சுமையாக இருக்கிறதாமா? இருக்கட்டும். அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். இனி, அதை உனக்குத் தருவதாக இல்லை.
அன்றைக்கு அமைதியாக அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல், போய்ப் படுக்கையில் விழுந்தாள் அவள்.
“மது…” அதிகமாகப் பேசி விட்டோமோ எனும் பரிதவிப்புடன் வந்தது அவன் குரல்.
“சாரி” என்றாள், ஒற்றை வார்த்தையில்.
அவளைக் கை நீட்டி தனக்கு நெருக்கமாக இழுத்தான் அவன்.
சட்டென்று விலகிப் போனாள் அவள். அதன் பின் விலகல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
அதுவரை அன்பை மட்டுமே பொழிந்து கொண்டிருந்தவள் சட்டென வெறுத்து ஒதுங்கி போகவும் தவித்துப் போனான் அவன்.
“ஏன் இப்படி இருக்க மது? எதையுமே எக்ஸ்ட்ரீம்ல தான் காட்டுவியா? ஒன்னு அருவியா சில்லுனு கொட்டுற, இல்லனா பாலைவனமா சுடுற. ரெண்டுக்கும் நடுவில பாலன்ஸ்டா இருக்கலாம் இல்ல மது?” ஆதங்கத்துடன் அவன் கேட்க, உதடு பிதுக்கி காண்பித்து விட்டுப் போனாள் அவள்.
எந்தப் பக்கம் போனாலும் சுவரில் முட்டுவது போன்ற நிலைதான் அவனுக்கு.
அவளுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ள முனைந்தான் அவன்.
மருத்துவமனை, மதுமிதா இது இரண்டை மட்டுமே தனது உலகமாக்கி கொண்டான் ராகவன். மனைவி தன்னை விட்டு மனதளவில்
விலகுவதை அவனால் கண்டு கொள்ள முடிந்தது.
ஆனால், அதற்குள் வெகு தூரம் சென்று விட்டிருந்தாள் அவள்.
வீட்டின் பெரியவர்களிடம் பேசுவதை நிறுத்தியிருந்தாள். ராகவி, உதயை ஒரே வீட்டில் இருந்தும் முற்றிலுமாகத் தவிர்த்தாள்.
“எனக்கு வேலை இருக்கு” என்று அறையில் அடைந்து கொள்பவளை அவர்களும் தொந்தரவு செய்யாமல் விலகிப் போனார்கள்.
பொக்கை வாய் காட்டி சிரித்து, அவளைத் தன் பக்கம் இழுத்த குழந்தை உதய்மித்ரனுடன் மட்டும் கிடைக்கும் நேரத்தை எல்லாம் செலவிட்டாள்.
ராகவி, அவளிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு, தன் வேலையைக் கவனித்தாள். அவளும் மதுவிடம் முன்பு போலப் பேசுவதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாள் தான்.
தன்னைச் சுற்றி ஒரு கண்ணாடி கோட்டையைக் கட்டிக் கொண்ட மதுமிதா, அதனுள் யாரையும் அனுமதிக்கவில்லை.
ராகவன் அவளை வெளியில் அழைத்துக் கொண்டு போனான். ஏதேதோ பரிசுகள் கொடுத்தான். பேசினான், பேச வைக்க முயற்சித்தான். ஆனால், பலன்தான் இல்லை.