சாதகப் பட்சிகள் – 13 (2)

காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்து எழுப்பி விட, அந்நாளிற்கான ஓட்டத்திற்குத் தயாரானான் ராகவன்.

அவன் அறைக் கதவை திறந்து வெளியேறும் போது, “ராகவ்..” மெல்ல அழைத்தாள் மதுமிதா.

அவன் கண்களில் இன்னும் உறக்கம் மிச்சம் இருப்பதைப் பார்க்கையில் அவளுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.

“என்ன மது” நான்கே எட்டில் அவளுக்குப் பக்கத்தில் வந்து, படுக்கையில் அமர்ந்து, அவள் முகம் பற்றினான்.

“டையர்டா இல்லையா?” கவலையுடன் கேட்டாள்.

“ம்ம். ஐ ஆம் ஓகே. பழகிடுச்சு மா. நீ பொறுமையா எழுந்து வேலையைப் பாரு. நான் ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்றேன். இப்போ கிளம்பவா?” அலைப்புறும் அவளது மனதை அறிந்ததைப் போலக் கேட்டான் ராகவன்.

“ம்ம்.” என்றவளின் கரங்கள், இறுக்கமாக அவனது கழுத்தை சுற்றியிருந்தது. சத்தமாகச் சிரித்தான் அவன்.

மென்மையாக அவளின் நெற்றியில் முத்தமிட்டு, “வரேன் மது” நொடியில் விலகி காணாமல் போய் இருந்தான்.

ஒரு பெருமூச்சுடன் எழுந்து தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் மதுமிதா. காலை உணவையும், காஃபியையும் வெறித்தபடி அமர்ந்திருந்தாள். கணவன் ஏதேனும் வயிற்றுக்குக் கொடுத்திருப்பானா என்ற கேள்வியுடன் காஃபியை அருந்த தொடங்கினாள்.

சூடான பானம் உள்ளே செல்ல செல்ல, மனம் விழிக்கத் தொடங்கியிருந்தது.

மயக்கவியல் மருத்துவர்களுக்குப் பணிச் சூழலால் நேரும் எத்தனையோ பாதிப்புகளில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது அவளது மனதில் வந்து அவளது அமைதியை மொத்தமாகக் குலைத்து போட்டது.

பொதுவாக மயக்கவியல் மருத்துவர்கள் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வரும் நேரம் எல்லாம் ஓடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு அவசர அறுவை சிகிச்சையோ, விபத்தோ எதுவென்றாலும், முதல் அழைப்பு அவர்களுக்குத்தான் போகும் எனும் போது, அவர்கள் நேரம், காலம் பார்க்கவே முடியாது.

ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல் படுபவர்கள், நோயாளிகளைத் தூங்காமல் தூங்க வைக்கும் மயக்கவியல் மருத்துவர்கள்.

அப்படி விழிப்புடன் நேரம் பார்க்காமல் உழைப்பதால், முதலில் கெடுவது அவர்களது உறக்கம்தான். நாளடைவில் போதிய உறக்கமின்மையால் (Sleep deprivation) அவர்கள் அவதியுற நேரிடுவது இயல்புதான் என்ற ஆய்வு கட்டுரையை வாசித்தது வரி வரியாக அவள் கண்ணில் ஓடியது.

திருமணமாகி இத்தனை மாதங்களில் அவளும் கணவனைப் பார்க்கத் தானே செய்கிறாள். எட்டு, பத்து மணி நேர உறக்கம் தொடர்ச்சியாக அவனுக்கு வாய்ப்பது எல்லாம் அபூர்வம். அப்படியே நேரம் கிடைத்தாலும் அதைக் குடும்பத்துக்குத்தான் செலவழிக்கிறான்.

இத்தனை நாட்கள் அவளோடு அவன் கழித்த நாட்கள், ஒன்றாக உணவுண்டு, பேசி, சிரித்து, காதலித்த நிமிடங்கள் பொக்கிஷமாகத் தோன்றியது அவளுக்கு.

அவனைக் குறித்தும், அவனது வேலையைக் குறித்தும் தெளிவான புரிதலுக்கு வந்திருந்தாள் மதுமிதா. அது நிலைக்க வேண்டும் என்பது தான் அவளது வெண்டுதலாக இருந்தது.

அவர்களுக்குத் திருமணமாகி பதினொரு மாதங்கள் முடிவடைந்திருந்தது.

மாலை ஏழு மணிதான் இருக்கும். ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் டெலிவரிக்கு மயக்கம் கொடுக்க வந்திருந்தான் ராகவன்.

திடீரென்று அதே மருத்துவமனையின் மற்றொரு அறையில் அவனுக்கு அவசர அழைப்பு வர, மனதில் எழுந்த பதட்டத்தை உடலில் காட்டாமல் விரைந்தான் அவன்.

அறுவை அரங்கின் கதவை திறந்து கொண்டு, வேகமாக நகர்ந்து போனவனின் பார்வை அங்குக் காத்திருந்த நோயாளிகளின் மேல் படிய, தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த மனைவியின் மேல் படிந்தது அவன் பார்வை. வேகத்தைக் குறைக்காமல் அவளிடம் சென்றான்.

“என்ன மது? என்னாச்சு?” என்ன ஹாஸ்பிடல் வந்திருக்க? எனக்கு ஏன் கால் பண்ணல?” பதட்டத்தில் படபடத்தது அவன் குரல்.

“ராகவ், எனக்கு ஒன்னுமில்ல. உங்களைப் பார்க்கலாம்னு.. சாரி..” கண்களைச் சுருக்கி அவள் சொல்ல, புன்னகையில் விரிந்தது அவன் இதழ்கள்.

“வேலை இருக்கு மது. என் கூட வா.” அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

“நானா? எங்க கூட்டிட்டு போறீங்க ராகவ்?” மிரண்டாள் மதுமிதா.

“ப்ச், பேசாம கூட வா, மது”

அவளுக்குப் பேசவே வாய்ப்பு கொடுக்கவில்லை அவன்.

அந்த அவசரத்திலும் அவளது உடைக்கு வெளியில் இருந்த தாலி சங்கிலியை எடுத்து வெகு இயல்பாக அவளது உடைக்குள் போட்டு விட்டான். அவளது விழிகள் மெல்லிய அதிர்ச்சியில் விரிய, அவனோ பதிலுக்குப் புன்னகையைப் பரிசாகத் தந்தான்.

அரை நிமிட நடைக்குப் பின், வந்த அறையின் கதவை தட்டி விட்டு, அவளுடன் உள்ளே நுழைந்தான் ராகவன்.

குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் தான் அவனை அழைத்திருந்தார்.

அவர் முன் வாய் முழுவதும் ரத்தம் உறைந்து போன நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்தான் சிறுவன் ஒருவன்.

கண்கள் பயத்தில் விரிய கணவனையும், சிறுவனையும் மாறி மாறிப் பார்த்தாள் மதுமிதா.

“வருண் சார், இது என் வைஃப் மதுமிதா. மது, இது டாக்டர் வருண்” இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தினான். அவனது வாய் தான் பேசியதே தவிர, கண்களும், கைகளும் சிறுவனைப் பரிசோதிக்கத் தொடங்கியிருந்தன.

மருத்துவர் வருணை பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள் மதுமிதா.

“மதியம் போல நடந்திருக்கு ராகவன். கீழ விழுந்திட்டானாம், நாக்குல நல்ல அடி. தையல் தேவைப்படும் போலத் தெரியுது” வருண் விளக்கத் தொடங்கியிருந்தார். ராகவனும் பார்த்தான். பெரிய வெட்டுக் காயம் போலிருந்தது.

அதில் இரத்தம் முழுவதுமாக உறைந்து போய் இருந்ததைப் பார்க்கவே மதுமிதாவிற்கு என்னமோ செய்தது. கண்கள் சொருகப் படுத்திருந்த சிறுவனைப் பார்க்கையில் அவளுக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

“ரெண்டு ஹாஸ்பிட்டலுக்குப் போய் இருக்காங்க. அங்க பார்க்க முடியாது சொல்லவும் நம்மகிட்ட வந்திருக்காங்க.” என்றார் வருண்.

“ஓ..” என்ற ராகவன், “ஹீ இஸ் லூசிங் கான்சியஸ் வருண்” என்று சொல்லிக் கொண்டே வேக வேகமாக ஆக்ஸிமீட்டரை எட்டி எடுத்தான்.

அவனுக்கு வழி விட்டு, ஒதுங்கி நின்றாள் மதுமிதா.

சிறுவனின் விரல் நுனியில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பொருத்தி பார்த்தான் ராகவன். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டவில்லை அவன்.

ஆக்சிஜன் அளவு எழுபத்தைந்து என்றது கருவி.

“வருண், உடனே ஆபரேஷன் தியேட்டர் கொண்டு போகனும்” ராகவன் சொன்ன, அடுத்து சில நொடிகளில் உதவியாளர் ஒருவர் ஓடி வந்து சிறுவனைக் கைகளில் அள்ளிக் கொண்டு அறுவை அரங்கை நோக்கி ஓடினார்.

அவரை ஓட்டமும், நடையுமாகத் தொடர்ந்தார்கள், ராகவன் மற்றும் வருண்.

“இப்போ வந்துடுறேன் மது. பிளீஸ் வெயிட் பண்ணு”

அவன் சொன்னது அவளை எட்டும் போது அவன் அங்கிருக்கவில்லை.

error: Content is protected !!
Scroll to Top