சாதகப் பட்சிகள் – 13 (3)

அடுத்து வந்த சில நிமிடங்கள் அவனுக்கு மிக மிக முக்கியமானது.

நரம்பில் தேவையான மருந்துகளை ஏற்றி, போதிய பிராண வாயு கொடுத்தான். கைகள் மூளையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க, சிறுவனின் மூக்கினுள் சிறு குழாயை செலுத்தி, நுரையீரலில் உறைந்து போயிருந்த ரத்த கட்டிகளைக் கவனமாக வெளியில் எடுத்தான்.

அடுத்து வாய் வழியாக நுரையீரலுக்கு ஒரு குழாயை செலுத்தி செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பித்தான். நிமிடங்களில் சிறுவனின் உடலில் ஆக்சிஜன் அளவு நூறை எட்டி இருந்தது.

சற்றே தலையைப் பின்னுக்கு இழுத்து, நீண்டதொரு பெருமூச்சை விட்டுக் கொண்டான் ராகவன்.

“ராகவன்..” வருண் அழைக்க, மீண்டும் இயங்கத் தொடங்கினான்.

மேலும் சில மருந்துகள் கொடுத்து அவன் நன்றாக நிமிர்ந்து நிற்கும் போது, சிறுவனின் உடல்நிலை முழுவதுமாக அவர்களது கட்டுப்பாட்டில் வந்திருந்தது. இப்போது காயத்தைச் சோதித்தான், தெளிவாகப் பார்க்க முடிந்தது.

“தையல் போட்டுடுங்க வருண்” ராகவன் சொல்ல, வருணின் கரங்கள் அடிபட்ட நாக்கை, அடிப்பட்டதற்கான தடயமே தெரியாமல், இடைவெளி இல்லாமல் சீராகத் தையலிட்டிருந்தது.

தையல் போட்டு முடித்ததும் இரத்த போக்கு நின்று விட, ராகவன் மீண்டும் சில மருந்துகள் ஏற்றி விட்டு, வாயில் இருந்த குழாயை மெதுவாக வெளியில் எடுத்தான்.

ஏதோ அதிசயம் நிகழ்ந்தது போல, அடுத்த நிமிடம், சிறுவன் தானாகவே, சீராக மூச்சு விடத் தொடங்க, கண்ணும் விழித்திருந்தான்.

“ஓகே, பார்த்துக்கோங்க வருண்” என்று விட்டு பிரசவ அறுவை அரங்கை நோக்கி ஓடினான் ராகவன்.

முழுதாக இரண்டு மணி நேரம் கழித்துத் தன் முன் வந்து நின்ற கணவனிடம், “அந்தக் குட்டி பையனுக்கு என்னாச்சு ராகவ்?” என்றுதான் கேட்டாள் மதுமிதா.

அவனுக்கு நடந்த சிகிச்சையை விளக்கினான் ராகவன்.

“நிறைய இரத்தம் போய் நுரையீரலை அடைச்சுடுச்சு மது. அதான் ஆக்சிஜன் இல்லாம, தண்ணீல மூழ்கினா என்னாகும்? அது போல ஆகிடுச்சு. அவனுக்கு நினைவு தப்ப ஆரம்பிச்சது. பட், இப்போ அவன் ஓகே. உள்ளே போன ரத்தத்தை எடுத்ததும், நார்மலா மூச்சு விட ஆரம்பிச்சுட்டான். நாக்குல காயத்துக்குத் தையல் போட்டாச்சு. சீக்கிரம் சரியாகிடுவான்” என்று சொல்லிக் கொண்டே அவன் காரில் ஏறி அமர, காரை மெதுவாகச் சாலையில் செலுத்தி கொண்டே,

“மொத்த வேலையும் நீங்கதான் பார்த்திருக்கீங்க? ஜஸ்ட் தையல்தான் சர்ஜன் போட்டு இருக்கார்?” அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக அவள் வினவ, கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து உறங்க முயன்று கொண்டிருந்தவனிடம் இருந்துமெலிதான சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது.

அவன் மீது மட்டுமல்ல, அவன் பார்க்கும் வேலையின் மீதும் அவளின் மதிப்பும், மரியாதையும் அதிகரித்திருந்தது.

ராகவன் நொடியில் உறங்கியிருக்க, சீரான வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு போனாள் மதுமிதா.

“ஹேப்பி டாக்டர்ஸ் டே டாக்டர் ராகவன்” கண்களும், இதழ்களும் புன்னகையில் விரிய வாழ்த்திய மனைவியைக் காதலுடன் பார்த்தான் ராகவன்.

காலையில் இருந்து கிடைத்த அத்தனை வாழ்த்து செய்திகளும் மனதில் எங்கோ பின்னுக்குப் போய் இருந்தது.

மழை பெய்து ஓய்ந்திருந்த இரவில், அதன் குளுமையை ரசித்தபடி மொட்டை மாடியில் பூ பந்தலின் கீழே போடப்பட்டிருந்த உணவு மேஜையின் முன் அமர்ந்திருந்தார்கள் இருவரும். ஏதேதோ மலர்களின் வாசம் மனதை மயக்கிக் கொண்டிருந்தது.

அவனுக்குப் பிடித்ததாகப் பார்த்து பார்த்து சமைத்திருந்ததாள் மதுமிதா.

காற்று அவளின் சேலையையும், தலைமுடியையும் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

“இந்தச் சேலையில் அழகா இருக்க மது” மேஜையில் இருந்த அவள் கரத்தை இறுக்கமாகப் பற்றியபடி சொன்னான் ராகவன்.

“ஓ, பிளீஸ் ராகவ். எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கலர் இது. நீங்க கொடுத்ததால மட்டும்தான் கட்டியிருக்கேன். நெக்ஸ்ட் ‌டைம் எனக்குக் கிஃப்ட் பண்ணனும்னா, என்னைக் கூட்டிட்டு போய் வாங்கிக் கொடுங்க. ராகவி டேஸ்ட் எனக்குச் சரி வராது” மதுமிதா மென்நகையுடன் சொல்ல, ராகவனின் முகத்தில் மெலிதான அதிர்ச்சி வந்து விட்டுப் போனது.

“ராகவி தான் செலக்ட் பண்ணான்னு எப்படிக் கண்டுபிடிச்ச மது?”

“அவங்களுக்குத் தான் இது போலச் சாப்ட் கலர்ஸ் பிடிக்கும். ஸ்கை ப்ளூ, பேபி பிங்க், இதெல்லாம் எனக்கு இது செட்டாகாது ராகவ். எனக்குப் போல்ட் கலர்ஸ் தான் பிடிக்கும். போல்ட் அண்ட் பியூட்டிஃபுல்” கண் சிமிட்டினாள்.

“சாரி, எனக்கு ஷாப்பிங் போக நேரம் கிடைக்கல மது. அதான் ராகவி வாங்கிக் கொடுத்தா. தப்பா…”

“நான் தப்பா எல்லாம் எடுத்துக்கல‌ ராகவ். அட்லீஸ்ட் உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கே. அதுவே எனக்குப் போதும்” அவள் சொல்லி முடிக்கும் முன், அவளை நெருங்கி இருக்கையில் இருந்து தூக்கி, தன் மடியில் வைத்துக் கொண்டு அவளது இருக்கையில் அமர்ந்திருந்தான் ராகவன்.

“இப்போ பேசு” என்றான். அவளுக்கு எங்கே பேச்சு வந்தது.

அவன் மார்பில் தலை சாய்த்துக் கண் மூடினாள்.

ஏதேதோ கதை பேசியபடி உணவை உண்டார்கள். இரவும், நிலவும் காதல் கதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

அன்றில் இருந்து ஒரு முடிவுக்கு வந்தவளாய், அவளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கணவனை மருத்துவமனையில் கொண்டு விடத் தொடங்கியிருந்தாள் மதுமிதா.

சமயங்களில் நேரத்தை பொருட்படுத்தாமல் அங்கேயே அவனுக்காகக் காத்திருந்து அழைத்து வரவும் தொடங்கியிருந்தாள் அவள்.

ராகவன் அதை விரும்பவேயில்லை. அவன் எவ்வளவோ மறுத்து பார்த்தும், அவளும் கேட்பதாக இல்லை எனும் போது அவனது பொறுமை குறைய ஆரம்பித்திருந்தது.

அன்றைக்கு வெறும் சில மணி நேரங்களில் முடிந்து விடும் என்று நினைத்து அவன் சென்றிருந்த, “இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை” பல மணி நேரங்களை விழுங்கி இருந்தது.

உடல் சோர்வு, உறக்கம், உயர் இரத்த அழுத்தம் என அவனுடலும், மனதும் அவன் கட்டுப்பாட்டிலேயே இல்லை.

அந்நேரம் காரின் ஓட்டுநர் இருக்கையில் சரிந்து அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்க்கையில் அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

அவனது வேலையைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அதைப் பற்றிப் பல முறை கிளி பிள்ளைக்குச் சொல்வது போல, அவளுக்கு எடுத்துச் சொல்லி விட்டான் அவன். ஆனால், அவள்தான் கேட்பதாக இல்லை. அவளுக்குச் சரியென்று பட்டதைப் பிடிவாதமாகச் செய்வதைப் பார்க்கையில் அவனுக்குக் கோபமாக வந்தது.

“மது..” மெல்ல அவள் தோள் தொட்டு எழுப்பினான். பதறி அடித்து எழுந்து கொண்டாள் அவள்.

“நான் ட்ரைவ் பண்றேன். நீ தூங்கு” என்று அவன் சொன்னதையும் அவள் கேட்பதாக இல்லை.

கண்களை மூடித் திறந்து மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான். கோபப்படும் நேரம் இதுவல்ல என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் ராகவன். ஆனால், வீட்டை அடைந்ததும் தெளிவாக, தீர்க்கமாக அவளிடம் சொல்லி விட்டான் அவன்.

மென்மையாய் அவன் மார்பில் கைப் போட்டு, படுத்திருந்தவளின் முகம் பார்த்து, “மது, இனிமே என்னை ட்ராப் பண்ண, பிக் அப் பண்ண நீ வர வேண்டாம், பிளீஸ். நானே பார்த்துப்பேன். என்னோட சேர்த்து உனக்கும் தேவையில்லாத அலைச்சல்” என்றான்.

“அப்படி எல்லாம் ஒன்னுமில்ல ராகவ்” பட்டென்று மறுத்தாள் மதுமிதா.

“சொன்னா புரிஞ்சுக்கனும் மது. எனக்கு இது பழகிடுச்சு. பகல்ல ஆபரேஷன் இல்லாத நேரத்துல நான் தூங்கி ரெஸ்ட் எடுத்துப்பேன் மது. ஆனா, நீ? உன்னோட ஹெல்த் தேவையில்லாம கெடுத்துக்கற.” அவன் சொல்ல, சொல்ல மறுப்பாகத் தலையசைத்தாள் மதுமிதா.

“நானும் பகல்ல தூங்கிப்பேன் ராகவ்”

தான் சொல்வதில் இருக்கும் நியாயத்தை அவள் புரிந்து கொள்ளாததினால், அவனுக்குச் சட்டெனக் கோபம்தான் வந்தது.

“நான் சொல்ற எதையும் கேட்கக் கூடாதுன்னு முடிவோட இருக்கியா?” குரலை உயர்த்தினான். விழி உயர்த்தி அவனை வெறித்துப் பார்த்தாள் அவள்.

“உன் வேலையை எல்லாம் விட்டுட்டு, உன் தூக்கத்தைக் கெடுத்து, என்னவாகிட போகுது மது? உனக்கு வீண் அலைச்சல்தான். பிளீஸ், சொன்னா புரிஞ்சுக்கோ மது.” கெஞ்சினான். கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்தாள் மதுமிதா.

அவள், அவனுக்காகத் தானே அதைச் செய்கிறாள். அது ஏன் அவனுக்குப் புரியவில்லை என்ற ஆதங்கம் அவளுக்கு வலியை தந்தது.

தனக்காக மனைவி மெனக்கெடுவது அவனுக்குப் பிடித்திருந்தாலும் கூட, அவள் மேல் கொண்ட அக்கறையின் காரணமாகவே அலைய வேண்டாம், கண் விழித்து உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவன் சொன்னான். ஆனால், அவளுக்கு அது விளங்கவில்லையே.

அவரவர்க்கு அவரவர் நியாயம்.

“வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்” என்ற ஜெயகாந்தனின் வரிகளை எப்போதோ உதய் சொல்லி இருக்க, ராகவனின் மனதில் அவ்வரிகள் இப்போது வந்து போனது.

வீம்புடன் அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு படுத்திருந்த மனைவியை இழுத்து தன் மேல் போட்டான் அவன்.

“பேசாதீங்க ராகவ். என்னை விடுங்க” கோபத்துடன் அவனிடம் இருந்து விடுபட முயற்சித்தபடி சொன்னாள் அவள்.

அவளை முழுதாய் தனக்குள் கொண்டு வந்தவன், அவளது பேச்சை நிறுத்தியிருந்தான்.

“ஐ… ஹேட்… யூ” என்றாள், திக்கி திணறியபடி,

“அதைச் சொல்ற நேரமா இது போதை?” கரகரத்த குரலில் அவள் காதில் கிசுகிசுத்தான்.

“நீ என்னை முழுசா வெறுத்தாலும், ஐ லவ் யூ தான். ஆல்வேஸ்” அழுத்தமாய் அவள் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான். ஏற்கனவே கண்கள் மயங்கி இருந்தவள், இப்போது விழி மூடி முழு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top