சாதகப் பட்சிகள் – 13 (1)

வானில் ஒன்று கூடியிருந்த மேகங்களைப் பார்த்தபடி மொட்டை மாடியின் சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் மதுமிதா.

மழை வருவதற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிந்தது. மழைக்கால மலர்கள் அனைத்தையும் வாங்கித் தொட்டிகளில் நிறைந்திருந்தாள் அவள்.

வானில் கருமேகங்களைக் கண்டதும், இனி அவை நன்றாகத் துளிர்த்து வரும், விரைவில் பூக்கள் பூத்து விடும் என்ற எண்ணமே அவள் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. காலநிலை மாற்றம் வரும் போதே, காதல் நிலையிலும் மாற்றத்தை கொண்டு வர விரும்பினாள் அவள்.

சிறிது சிறிதாகத் தன் மனதிற்குத் தானே சொல்லிப் புரிய வைத்தாள்.

கணவன் பார்ப்பது உயிர் காக்கும் மருத்துவத் தொழில். அதிலும் ஒரு மயக்கவியல் மருத்துவனாக அவன் ஒவ்வொரு வினாடியும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை மனதில் அழுத்தமாகப் பதிய வைத்தாள்.

அவனது கவனம் ஒரு நொடி தப்பினால் கூடப் போகப் போவது விலை மதிப்பில்லாத ஓர் உயிர், என்று மீண்டும் மீண்டும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் மதுமிதா.

அவனது பணிச் சூழலின் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மன அலைப்புறுதல் (மூட் ஸ்விங்ஸ் – Mood swings) பற்றி எல்லாம் அறிந்த பின்னர், தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டாள் அவள். அவனுக்கு எந்த வகையிலும் அவள் அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

எதிர்பார்ப்புகள் இருந்தால் தானே ஏமாற்றங்கள் வரும். எதிர்பார்ப்புகளை முற்றிலுமாகக் குறைத்துக் கொண்டாள். அவனுக்கும் சேர்த்து அவளே நேசிப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

பட்டு, பரிசு, பொன் என எதுவும் வேண்டாம். கணவன் அவளுடன் நேரம் செலவழித்தால் போதும் என்ற மனநிலைதான் அவளது. அதை இப்போது இன்னுமே தீவிரமாகத் தனக்குள் பதிய வைத்தாள்.

பாட்டு, பூ, பக்கத்தில் அவன், சாதாரணங்களை விரும்பியே ஏற்றாள்.

சாதாரணங்கள் கூடச் சமயங்களில் சதா ரணங்களாக மாறிடும் இயல்புடையது தானே.

தனக்கு அந்நிலை வந்து விடக் கூடாது என்றும் வேண்டிக் கொண்டாள் மதுமிதா.

“மது, போதை, என்ன பயங்கர யோசனை? நான் வந்து எவ்ளோ நேரமாச்சு தெரியுமா?” ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி, இதமான காற்றின் வருடலுக்குக் கண் மூடி முகம் கொடுத்திருந்தவள், கணவன் வரும் நேரம் அது என்பதைச் சுத்தமாக மறந்திருந்தாள். இப்போது

காதில் ஒலித்த அவன் குரலில் கலைந்து, அவன் முகம் பார்த்தாள்.

மென்மையாய் அவள் தோளில் கைப் போட்டு அணைத்து நின்றான் ராகவன்.

மழை மேகங்கள் இப்போது அவளுள் கூடத் தொடங்கியது. அவன் தோளில் வாகாகத் தலை சாய்த்துக் கொண்டாள்.

“நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா?”

“ம்ம், இருபது நிமிஷம் இருக்கும். ரெப்ரஷ் பண்ணேன். டீ குடிக்கலாமா மது?” அவன் கேட்க,

“உங்களுக்குப் பசிக்குதா ராகவ்? சாப்பிட ஏதாவது செய்து தரேன். வாங்க”

“டீ போதும் மது. பதறாத, மொதல்ல” அவளின் கரம் கோர்த்துக் கொண்டு, தலைக் கோதி விட்டுச் சொன்னான்.

மாடியில் இருந்து இறங்கி முதல் தளத்தை அவர்கள் அடையும் போது, மதுமிதாவின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது.

“போய் எடு மது. நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” அவளை மறுத்து பேச விடாமல் அழுத்தமாகச் சொல்லி விட்டுப் போனான் ராகவன்.

அவளின் அடுத்து வந்த பத்து நிமிடங்களை விழுங்கிய பிறகே மறுபக்கம் இணைப்பை துண்டித்தது.

வேலைத் தொடர்பான அழைப்பு என்பதால், உடனே மறந்து விடாமல் இருக்க அதைத் தனது மடிக் கணினியை திறந்து வேக வேகமாகக் குறித்து வைத்தாள் அவள்.

டீயை நிதானமாக அருந்தியபடி, மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான் ராகவன்.

அவனை இடித்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்த மதுமிதா, ஒரு வாய் டீயை குடித்து விட்டு, “சூடு பத்தல..” என்று சலிப்புடன் சிணுங்கினாள்.

“அவ்ளோ தானே? சூடு ஏத்திடுவோம் மது” கண் சிமிட்டும் நேரத்தில் அவன் மடியில் இருந்தாள் அவள்.

“ராகவ்வ்வ்…”

“ராகம் இழுக்காத மது..” மேலே பேசுவதற்கு இருவருக்குமே விருப்பம் இருக்கவில்லை.

பேச்சு மறந்திருந்தது, மூச்சில் வேகம் கூடியிருந்தது. உடைகள் கனமாகத் தொடங்கிய கணம், அவனது அலைபேசி அழைத்தது.

மனைவி மட்டுமே மனதில் இருக்க மற்றவை மறந்து விடவே விரும்பினான் அவன்.

“உங்களுக்குப் போன் கால்…” அவனது அணைப்பில் இருந்து விலக முயன்றபடி சொன்னாள்.

“ப்ச், உன் கால்ல இருந்து தொடங்கலாம்னு இருந்தேன்” சோகமாகச் சொன்னவனை, விரிந்த சிரிப்புடன் பார்த்த மதுமிதா, எட்டி மேஜையில் இருந்த அவனது அலைபேசியை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“ம்ம், ஓகே, ஓகே. வரேன். இருபது நிமிஷம் கொடுங்க.” நொடிக்கும் குறைவான நேரத்தில் மருத்துவனாக மாறி இருந்தான். சற்று முன்பு அவளிடம் உருகிய ராகவன் காணாமல் போய் இருந்தான்.

நொடி பொழுதில் நிகழ்ந்த அந்த மாற்றத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள் மதுமிதா. அந்நேரத்தில் ராகவன் உடை மாற்றத் தொடங்கியிருந்தான்.

கார் சாவியை அவன் கையில் எடுக்க, “நான் ட்ராப் பண்றேன் ராகவ்” என்றாள் அவள்.

“சாரி மது.”

அந்த மன்னிப்பு எதற்காகக் கேட்கிறான் என்பது அவளுக்கு நன்றாகப் புரியவே செய்தது. இதுவே முன்னர் நடந்திருந்தால் அவளுக்கு எரிச்சலும், கோபமும் வந்திருக்கும் தான். ஆனால், இப்போது அப்படி ஒன்றும் தோன்றவில்லை. தோன்ற விடாமல் பார்த்துக் கொண்டாள் அவள்.

“இட்ஸ் ஓகே. எங்க ஓடிப் போகப் போறீங்க. வீட்டுக்கு தானே வரப் போறீங்க?” என்று அவள் சிரிப்புடன் சொல்ல, அவசரமாக முத்தமிட்டு விலகினான் ராகவன்.

அன்று அவன் வீடு திரும்ப இரவு ஒரு மணியாகி இருந்தது.

“ராகவ், சாப்பிட்டீங்களா? இல்லையா?” அவளது உறக்கத்தைக் கலைத்து விடக் கூடாது என்று பூனை போலச் சத்தம் போடாமல் தான் நடமாடுவான் அவன். ஆனாலும், அவனை உணர்ந்து கொள்ளும் அவளை என்ன செய்வது என்று புரியவில்லை அவனுக்கு.

உறக்கத்திற்குக் கெஞ்சிய விழிகளில் புன்னகை மின்ன, “சாப்பிட்டேன், நீ தூங்கு மது” சொன்னவன். அவளையும், உறக்கத்தையும் சேர்த்தே தழுவியிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top