ஆவல் மீற பார்க்குதே – 2 (2)

அத்தனை வேகமாக அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

அவளுக்குப் பாஸ்போர்ட் எடுக்க அவன்தான் உடன் வந்தான். ஐந்தாம் நாள் அவள் கையில் பாஸ்போர்ட் இருந்தது. அவர்களின் திருமணம் முடிந்த கையோடு திருமணச் சான்றிதழ் பெற்று, அவளுக்குச் சுற்றுலா விசா ஏற்பாடு செய்தான்.

திருமணம் முடித்து அவளை ஊரில் தனியாக விட்டுச் செல்லும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லைவே இல்லை.

“நீ என்னோட இப்பவே அங்க வந்துட்டா உனக்கும் ஈஸி அபி. அப்புறம் நீ தனியா வந்தா சிரமப்படுவ, நீ பாரின் வர்றது ஃபர்ஸ்ட் டைம் இல்லையா? சோ என்னோடவே வந்துடு” என அவளையும் அவனோட அழைத்து வந்திருந்தான். அதில் அவளின் பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

அவளை ஆனந்த கண்ணீருடன் வழியனுப்பி வைத்தார்கள். பெற்றோரையும், தங்கையையும் பிரிகையில் அவளும் அப்படியொரு அழுகை அழுதாள்.

அவள் மேற்படிப்பிற்காகக் கூட மதுரையை விட்டு எங்கும் சென்றதில்லை. பிரிவின் போதுதான் பாச ஊற்று பொங்கி பெருகுகிறது.

“மருமகள நல்லா பார்த்துக்கோ சக்தி” என்று அவளின் மாமியாரும் கணவனுக்கே அறிவுரை சொல்ல, அபி கணவனைக் கள்ளச் சிரிப்புடன் ஏறிட்டாள்.

“நல்லா பார்த்துக்கறேன்ம்மா” என்று அம்மாவிடம் அழுத்தி சொன்னான். அபியின் புறமாகத் திரும்பி, “ஏன் அபி, உன்னைய நல்லா பார்த்துக்கறேன்.. பார்க்கறேன்தானே?” ஒற்றைக் கண் சிமிட்டி கள்ளச் சிரிப்புடன் கேட்டான். அவளோ மிகச் சிவப்புடன் அவனை முறைக்க முயன்று தோற்று நின்றாள்.

அவன் சொன்னது போல அவளை மிகவும் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறான். இல்லையென்றால் அவளால் இந்தப் புதிய நாட்டில் சமாளித்திருக்க முடியாது.

அவர்களுக்குத் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது.

இங்கு வந்த சில நாள்களில் அவளது விசாவையும் மாற்றி விட்டான். இப்போது கணவனின் விசாவில் இருக்கிறாள் அவள்.

ஷார்ஜா வந்திறங்கிய முதல் ஒரு வாரம் மட்டும் அவனது நண்பனின் வீட்டில் கழித்தனர்.

அதற்குள் அதே கட்டிடத்தில் அவர்களுக்கென ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்திருந்தான் சக்திவேல்.

ஊரில் இருக்கும் அவள் வீட்டை ஒப்பிடும் போது இது மிகவும் சிறியது. கூடம், சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை என அனைத்தையும் ஒரே அறைக்குள் அடைத்தது போலிருக்கும் இந்த ஸ்டுடியோ வகை அபார்ட்மென்ட் அவளுக்கு ஆச்சரியப்படும் வகையில் பிடித்தேயிருந்தது.

“இந்த வீட்ல எந்தப் பக்கம் திரும்புனாலும் உன்னைத் தொட்டுடலாம் அபி. அந்த அட்வான்டேஜ்காகவே இந்த ஸ்டுடியோ பிளாட் புக் பண்ணேன்” என்று கை நீட்டி அவளை இழுத்து அணைக்கும் கணவனின் கரங்களில் இழைந்து நிற்கையில் அவளுக்கு எந்தவித எதிர்மறை சிந்தனைகளும் இல்லை.

திருமணத்தில் அவளுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இல்லை. ஏனென்றால் இத்தனை விரைவில் அவள் திருமணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.

வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு மட்டுமே இருந்தது. கனவுகள் மெய்ப்படும்தானே?

அது போல எதிர்பார்ப்புகள் இருந்தால்தானே எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் வரும்?

அவளின் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு இருந்தான் சக்திவேல்.

அபி அசதியில் நன்றாக உறங்கி அலைபேசி அடிக்கும் சத்தத்தில் கண் விழித்தாள்.

“தூங்குறியா அபி. சாரி எழுப்பிட்டேனா?” கரிசனத்துடன் வந்தது கணவனின் கேள்வி.

“இல்லங்க, எந்திருச்சுட்டேன்” என்று சோம்பல் முறித்துக் கண் விழித்தாள்.

“எந்திருச்சுட்டேன்னு தூங்கிட்டே சொல்றியே அபி?” சிரிப்புடன் சீண்டினான்.

“இல்லல்ல எந்திரிச்சுட்டேன்” என்றவள், வேகமாகப் போர்வையை உதறி எழுந்து கொண்டாள்.

“நீ சாப்பிட்டியா இல்லையான்னு கேட்கலாம்னு கால் பண்ணேன்”

“இதோ சாப்பிட போறேன்” என்று சொல்லிக் கொண்டே அலைபேசியில் நேரத்தை பார்த்தவளின் கண்கள் அதிர்ந்து விரிந்தன.

“ஆத்தி”

“ஆமா, மணி பனிரெண்டாகப் போகுது” சீண்டினான்.

“நீ தோசை ஊத்திப்பியா? இல்லன்னா கீழ இருக்கக் கடையில இருந்து சாண்ட்விச் ஆர்டர் போடவா?”

“ஐயோ வேணாம். நா தோசை ஊத்திக்கறேன்” என்று படபடத்தாள்.

“ம்ம், சட்டுனு குளிச்சுட்டு சாப்பிட உக்காரும் போது எனக்குக் கால் பண்ணு” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அவள் அறையை ஒதுங்க வைத்து, குளித்துச் சமையல் அறை செல்ல, மேடையில் அவளுக்காக உணவு பதார்த்தங்கள் காத்திருந்தன.

கதம்பச் சாம்பார், காலிஃபிளவர் பொரியல், வாழைக்காய் வறுவல், சோறு எல்லாம் தயாராக இருந்தது.

பெரும்பாலும் சமையல் சக்திவேல்தான். அவள் சமைத்த நாள்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

“அச்சோ நா செய்யறேன் மாமா” என்று அவள் பதறித் தடுத்தாலும், “ஓகே. நீ செய். நான் ஹெல்ப் பண்றேன்” என்று அவளோடு நின்று உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவன்தான் சமைப்பான்.

“எப்படி மாமா சமையல் கத்துக்கிட்டீங்க? அதுவும் இவ்வளவு நல்லா சமைக்கறீங்க?” என்று ஆரம்ப நாள்களில் ஆச்சரியமாகக் கேட்டிருக்கிறாள்.

“சமையல் சர்வைவலுக்காகக் கத்துக்கிட்டது அபி. நான் இங்க வரும் போது எனக்கு இருபது வயசுதான். பேச்சுலர் லைஃப் எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியாதா? அப்போ வாங்கின சம்பளத்துக்கு வெளியில சாப்பிடறது எல்லாம் யோசிச்சே பார்க்க முடியாது அபி. நாலு நாள் தொடர்ந்து வெளில சாப்பிட்டா பாக்கெட்ல பெரிய ஓட்டை விழுந்துடும். அதுக்கு மேல வயிறு, அது தாங்காது. அப்போ ரூம்ல இருக்கப் பசங்க எல்லாம் டர்ன் போட்டு சமைப்போம். அப்படித்தான் சமையல் கத்துக்கிட்டேன்” என்று அவளுக்கு விளக்கம் சொன்னான். கணவனை ஆச்சரியமும் மெச்சுதலுமாகப் பார்த்தாள் அவள்.

“இப்ப இந்தப் பாத்திரத்தை நீ தேய்ச்சு வைக்கலன்னா அடி வெளுத்துருவேன் உன்னைய” என்று அம்மா மிரட்டினால் மட்டுமே வீட்டில் வேலை செய்வாள் அவள். சமையல் எல்லாம் பனிரெண்டாம் வகுப்பு முடித்து வீட்டில் இருக்கையில் பொழுது போகவில்லை என்று கற்றுக் கொண்டாள். அவள் ஊரில் நண்டு சிண்டு எல்லாம் பொறுப்பாகச் சமைக்கும். ஆனால் அவளை அப்பா காப்பாற்றி விடுவார்.

“புள்ளய போய் என்னாத்துக்கு அடுப்புல வேக சொல்ற காமாட்சி” என்று மனைவியைக் கடிவார் குருநாதன்.

“போற வீட்ல சாத்து வாங்க போறா உங்க புள்ள” என்று நொடிப்பார் காமாட்சி.

“எம் புள்ளய தங்கமா தாங்குறவனத்தான் நா மருமகனா கொண்டு வருவேன்” என்பார் அப்பா. அப்படி ஒருவன்தான் அவருக்கு மருமகனாக அமைந்தும் விட்டான்.

அவள் காலை உணவை முடித்து, துணி துவைக்கலாம் என்று பார்க்க, சலவை எந்திரத்தில் துவைத்த துணிகள் கிடந்தன. அதையும் சக்திவேல் செய்திருந்தான். அவற்றை எடுத்துப் பால்கனியில் உலர வைத்தாள்.

அதற்கு மேல் அவளுக்குச் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் போனது. நேரத்தை நெட்டி தள்ளி கொண்டிருந்தாள்.

அம்மாவுக்கு அழைத்துப் பேசினாள்.

அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலியெழுப்ப, அவசரமாய்ச் சென்று கதவை திறந்தாள். சக்திவேல் சாய்ந்து நின்றிருந்தான்.

“என்னங்க மாமா, இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க?”

“நாளையில இருந்து நாலு நாள் லீவ். பெட்டிய எடு, ராஸ் அல்கைமா போறோம். அங்க ரிசார்ட்ல ரூம் புக் பண்ணியிருக்கேன்” என்றான்.

விளக்கின் திரியை தூண்டியது போல அவள் முகம் நொடியில் பிரகாசமானது.

அன்றிரவே கடற்கரையோர ரிசார்ட்டின் அறையில் இருந்தார்கள்.

அவர்கள் அறையின் பால்கனியில் நின்று சாந்தமான கடற்கரையையும், அதைத் தொட்டு நின்ற எல்லையில்லா வான்வெளியையும், அதில் மின்னிய நட்சத்திரங்களையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

மனைவியின் தோளில் தாடையைப் பதித்து, “ரிசார்ட் பிடிச்சிருக்கா அபி?” என்று கேட்டான்.

“ரொம்பப் பிடிச்சிருக்கு மாமா. வீட்ல தனியா..” என்று ஒரு வேகத்தில் ஆரம்பித்து, அவள் நாக்கை கடித்து நிறுத்த, “வீட்ல தனியா இருக்கறது கஷ்டமா இருக்கா?” என்று அவள் முகம் திருப்பிக் கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்த்திருக்க, அவளின் பார்வையில் இருந்த பதிலை சரியாகப் படித்தான் சக்திவேல்.

“வேலைக்குப் போறியா அபி?” என்று அவள் சொல்லாமலே அவள் எதிர்பார்ப்பை உணர்ந்து பூர்த்திச் செய்யும் நோக்கில் கேட்டான். மெல்ல தலையசைத்தாள் அவள். அவளின் எதிர்பார்ப்பை எதார்த்தம் ஆக்கிடும் முனைப்புடன் அப்போதே தீவிரமாக இறங்கினான் அவன்.

எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் எளிதாக ஒரே வாக்கியத்தில் அடைந்து விடும்தானே?

error: Content is protected !!
Scroll to Top