சாதகப் பட்சிகள் – 12 (4)

மாடிப் படியில் கால் வைத்ததும் பட்டென்று அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான் அவன்.

“ஒழுங்கா இறக்கி விடுங்க. இப்பதான் நான் உங்க கண்ணுக்கு தெரியறேனா? இறக்கி விடுங்க, சொல்றேன் இல்ல?” உட்சபட்ச கோபத்துடன் கத்தினாள்.

அவளின் ஒரு கரம் பிடிமானத்திற்காக அவன் கழுத்தை சுற்றியிருக்க, மறுகரத்தால் அவன் மார்பில் அடித்தாள் அவள்.

அவனோ சிரிக்கவே செய்தான். அச்சிரிப்பு அவளது கோபத்தைச் சீண்டிதான் விட்டது.

“ரெண்டு நாளா என்கிட்ட பேசாம தானே இருந்தீங்க? எப்படி இருந்தது தெரியுமா? இனி நான் உங்ககிட்ட பேசுறதாவே இல்ல. அப்போதான் என் நிலைமை உங்களுக்கும் புரியும்” பல்லைக் கடித்தபடி அவள் சொல்ல,

“இப்ப என்ன பண்ணிட்டு இருக்கியாம் போதை?” அவள் கண்களைப் பார்த்து, சிரிப்புடன் அவன் கேட்க, அவளையும் அறியாமல் இதழ்கள் பிரிய, சட்டென அதை உணர்ந்து, உதடு கடித்து, முகத்தைக் கடினமாக்கினாள் அவள்.

அவளைக் கீழிறக்கி, நகர விடாமல், தன்னோடு சேர்த்து அணைத்தபடி, அறையின் கதவை திறந்தான் அவன்.

அறைக்குள் நுழைந்ததும் விலகப் போனவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான்.

அவள் எத்தனை முரண்டியும் அவனிடம் இருந்து விலக முடியாமல், அப்படியே அவனது அணைப்பில் நின்றாள்.

நெஞ்சை அழுத்தி கொண்டிருந்த கோபத்தை இழுத்துப் பிடிப்பது கடினமாகத்தான் அவளுக்கிருந்தது.

இதுதான் அவளது பலவீனம். அவன்தான் அவளது பலவீனம். அவனுக்கும் அது தெரிந்திருப்பதுதான் அவளுக்கு எதிராக எப்போதும் வேலை செய்கிறது.

“சாரி மது” என்றான் மெல்ல, அவள் இப்போது அவன் விட்ட, மௌனத்தைக் கையில் எடுத்தாள்.

“நான் வேணும்னு பண்ணல மது. என்னால.. ராகவி, அவளுக்கு ஒன்னுன்னா.. என்னையும் மீறி ரியாக்ட் பண்ணிடுறேன். இதுவரை அப்படியே இருந்து பழகி….”

அவளது முறைப்பில் பேச்சை நிறுத்தி, கண்களைச் சுருக்கி பாவமாகப் பார்த்தான்.

“அப்போ நாங்க எல்லாம் யாராம்?” என்றது அவள் பார்வை. அதைப் படித்தவனாக,

“இனி இப்படிப் பண்ண மாட்டேன் மது. பிளீஸ் மா. இந்த ஒரு முறை மன்னிச்சிடு”

கையை நீட்டி அவனது காற்சட்டை பையில் இருந்த அவனது அலைபேசியை வெளியில் எடுத்தாள் மதுமிதா.

சுஹாசினி, ராகவி இருவரும் அவளைப் பற்றி நினைத்தது ஒரு விதத்தில் சரிதான். அவளுக்குக் கணவனின் மேல் அதீத காதலுண்டு தான். ஆனால், சந்தேகப்பட்டுச் சண்டையிடும் அளவிற்கு எல்லாம் அவள் செல்வது கிடையாது.

அவனது முகநூல் பக்கத்தைத் திறந்து அதில் கணவனும், சுஹாசினியும் இணைந்து நிற்கும் புகைப்படத்தைத் தேடி எடுத்துப் பார்த்தாள்.

“ம்ஹூம். நல்லாவே இல்ல” என்று உதடு பிதுக்கியவள்,

தாங்கள் இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை எடுத்து பெரிதாக்கி பார்த்து,

“லவ்லி” எனச் சொல்ல, ராகவன் சத்தமாகச் சிரித்து அவளை வெறுப்பேற்ற, அவனை நிமிர்ந்து ஒரு முறை முறைத்து விட்டு, அவனது முகநூல் கணக்கையே இல்லாமல் ஆக்கினாள் அவள்.

அதற்கும் அவனின் எதிர்வினை சிரிப்பாகதான் இருந்தது.

“சரி, இப்ப கேளுங்க” என்றாள் கைகளைக் கட்டிக் கொண்டு,

“என்ன கேட்க?” அவன் குழம்ப,

“அதான். மன்னிப்பு..” என்றாள் தீர்க்கமாக,

அவன் சிரிப்பை அடக்கி,

“சாரி மது. சண்டையை, ஆர்கியூமெண்டை தவிர்க்கத்தான் பேசாம இருந்தேன்” என்று சொல்ல,

“அப்போ எந்தப் பிரச்னையா இருந்தாலும் உடனே பேசி தீர்க்கணும், இந்த அட்வைஸ் எல்லாம் உங்க தங்கை ராகவிக்கு மட்டும் தானா?” அவள் அழுத்தமாகக் கேட்க, விழித்தான் அவன்.

“ஒரு நாள் நீங்க அவங்ககிட்ட சொல்றதை கேட்டேன்” விளக்கினாள்.

“எஸ், அப்படிச் சொல்லியிருக்கேன் தான் மது. ஆனா, உன்னை என்னோட வார்த்தையால நான் காயப்படுத்த விரும்பல. ஏதாவது ஹர்ட்டிங்கா சொல்லிடுவேனோனு பயமா இருந்தது. அதான் கோபம் தணியற வரை பேசாம… “

“அப்போ, என் கோபம் தணியற வரை நானும் உங்க கூடப் பேசாம இருக்கட்டுமா ராகவ்? நான் பேசினாலே உங்களுக்குப் புரியல. இதுல பேசாம இருந்தா? சுத்தம், விளங்கிடும்” கோபத்தை விட, ஒரு வித சலிப்புதான் அவள் குரலில்.

“அப்படியில்ல மது, இன்னைக்குக் கூடப் பேசணும்னு நினைச்சேன். ஆனா, வேலை…” அவன் தொடங்க, அவனைப் பேச விடாமல் தடுத்தாள் அவள்.

“வேலை, வேலை, வேலை. யாருக்கு இல்லை ராகவ்? அவங்கவங்க பார்க்கிற வேலை அவங்களுக்குக் கஷ்டமானது தான். நீங்க மட்டும் பொதுச் சேவை பண்ணல இங்க.

பத்து மணி நேரத்துல என்கிட்ட பேச உங்களுக்குப் பத்து நிமிஷம் எப்படிக் கிடைக்காம போகும்? வீட்டுக்கு வந்தும் பேசல. நான் பேசியும் சரியா பேசல. நான் முக்கியம் இல்ல உங்களுக்கு. அவ்ளோதான்” அவள் சொல்ல, கணமும் தாமதிக்காமல் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் அவன்.

“அப்படி இல்ல மது. ப்ச், தப்புதான். உன்கிட்ட எப்பவும் சறுக்கறேன் நான். ஏன்னு எனக்கும் தெரியல.” உண்மையான வருத்தத்துடன் அவன் சொல்ல, அவளுக்கும் வருத்தமாகத் தானிருந்தது.

“என்னாச்சு?” மெல்ல கேட்டாள்.

“வேணாம் விடு மது. எங்களுக்கு தினம் ஒரு டென்ஷன்தான். ம்ம்” பெருமூச்சு விட்டபடி சொன்னான் ராகவன்.

“சாரி மது. இனி என்ன கோபம்னாலும் சண்டை கூடப் போடுறேன். ஆனா, பேசாம இருக்க மாட்டேன். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிட்டியா?” அணைப்பை இறுக்கியபடி, அவளின் காதோரம் கேட்க, அவளுக்குத் தனிமையை உணர்ந்த கணங்களை நினைத்து அழுகை முட்டி கொண்டு வந்தது.

“இனி மேல் இப்படிப் பண்ணீங்க, போடானு விட்டுட்டு எங்கயாவது போய்டுவேன்” அழுகையை அடக்கியதில் குரல் உடைய சொன்னாள் அவள்.

“சாரி சாரி மது. பிளீஸ். அழாத மது” முகத்தைக் கையில் ஏந்தி, கண்ணில் அவளுக்கான வருத்தத்துடன் அவன் கேட்க, முகத்தைத் திருப்பினாள் மதுமிதா.

“உன் கையைக் காலா பிடிச்சி…”

“ஏன்? என் காலுக்கு என்ன? அது நல்லாதான் இருக்கு. காலையே பிடிச்சி கேளுங்க” உதடு கடித்துச் சிரிப்பை அடக்கியபடி தீவிரமாகச் சொன்னாள் அவள்.

பட்டென்று குனிந்து அவளின் காலை பிடித்திருந்தான்.

“அச்சோ, வேணாம் ராகவ்…” அவள் அதிர்ந்து மறுக்க, அவனோ ஒரு முடிவுடன், அவள் காலில் இருந்துதான் தொடங்கினான்.

மன்னிப்பையும், முத்தத்தையும்!!!

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top