அறையின் சில்லிப்பு அவளின் மேனியை சிலிர்க்கச் செய்ய, மெல்ல புரண்டு படுத்தாள் அபிநந்தனா. அவள் திரும்பிய வேகத்தில் கடினமான எதன் மீதோ மோதியது போலிருக்க, படக்கெனக் கண் விழித்தாள்.
உதடுகள் புன்னகையில் வளைந்திருக்க, கண்களில் குறும்பு கூத்தாட, ஒருக்களித்துப் படுத்து, ஒற்றைக் கையில் தலையைத் தாங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் சக்திவேல்.
கடினமான எதன் மீதோ அல்ல கணவனின் மேல்தான் மோதியிருக்கிறோம் என்று உணர்ந்து அவள் விலகும் முன் அவளை ஒற்றைக் கரத்தால் வளைத்து அணைத்துக் கொண்டான் அவன்.
“மணி என்ன? உங்களுக்கு லேட்டாகிடுச்சா? இன்னைக்கு ஆஃபீஸ் போகலயா நீங்க?” அவன் மார்பில் இருந்து தலையை உயர்த்தி வினவினாள்.
அவளது கடைசிக் கேள்வி மட்டுமே காதில் விழுந்தது போல, “நீ இப்படிக் கேட்கும் போது ஆஃபீஸ் போக வேணாம்னுதான் தோனுது. பேசாம லீவ் சொல்லிடவா அபி?” என்று கரகரத்த குரலில் கேட்டான்.
“லீவா? ஆஃபீஸ்ல என்னன்னு சொல்லுவீங்க?” என்று காரணத்தைக் குறிப்பிட்டு கேட்டாள்.
“அவனுங்களுக்குக் காரணம் சொல்லாமலே புரியும். புதுசா கல்யாணம் ஆனவன் வேற எதுக்கு லீவ் எடுப்பான்?”
“ஆ..” என்று அதிர்ந்து அவள் விழி விரிக்க, “பொண்டாட்டிய கவனிக்கன்னு சொல்ல வந்தேன் அபி. அதுக்கு ஏன் இப்படி முழிக்கற?” அவனை விழுங்கிய விழிகளில் ஈரமாய் மென்மையாய் முத்தமிட்டான். அவளுக்கு, “ம்ம்” என்று பதில் சொல்லத்தான் ஆசை. நாள் முழுக்க வீட்டில் தனியாக, தனிமையில் இருப்பதற்குக் கணவனோடு இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவனுக்கு வேலை இருக்கிறதே.
“லீவ் போடவா அபி?” கண்களில் இருந்து இறங்கி கன்னத்தில் மீசை உரச முத்தமிட்டபடி கேட்டான். அவன் உதடுகள் மெல்ல அவள் உதட்டை நெருங்க, அவளுக்குப் பேச்சு மறந்த நிலை. அறையின் குளிரை மீறி இப்போது அவளுள் வெப்பம் பரவியது.
“உங்களுக்கு ஆபீஸ் இருக்குங்க சக்தி” என்று திக்கினாள். அவனைப் பெயர் சொல்லி பேசியதற்கு மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளுக்குப் பாடம் எடுத்திருப்பான். இப்போது காதல் பாடம் படிக்கும் மும்முரத்தில் மனைவியின் அழைப்பு மயக்கும் காதல் மந்திரமாகத்தான் அவன் காதில் ஒலித்தது போலும்.
“ஆஃபீஸ்க்கு இன்னும் டைம் இருக்குங்க அபி” என்று அவளைப் போலவே சொல்லி, அவளை மொத்தமாகத் தனக்குள் வாரி சுருட்டி கொண்டான். அவளும் விரும்பி மயங்கியே அவனுடன் இணைந்தாள்.
சுக அயர்ச்சியுடன் கண் மூடியவள் அப்படியே உறங்கியிருந்தாள்.
“அபி.” மென்மையாக அவளை உலுக்கி எழுப்பினான் சக்திவேல்.
“என்னங்க மாமா?” போர்வையை வாரி சுருட்டி மார்பு வரை இழுத்து மூடி, உறக்கம் சுமந்த விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
கருப்புக் காற்சட்டை, வெள்ளையில் கருப்புக் கோடுகள் போட்ட சட்டையில் கம்பீரமாக நின்றிருந்தான் அவன்.
“ஏய், அபி. பதறாத. நீ படு. நான் ஆபீஸ் போய்ட்டு உனக்குக் கால் பண்றேன். ஓகே?” என்று அவளின் வெற்றுத் தோளில் கை வைத்து கேட்டான்.
“ஆபீஸா? சாப்பிட்டு போங்க மாமா. அச்சோ நான் ஒன்னுமே செய்யலயே.” என்று நாக்கை கடித்துக் கண்ணைச் சுருக்கினாள். படுக்கையில் காலூன்றி அவள் உதட்டை ஒற்றை விரலால் வருடி, “நா சாப்பிட்டேன்” என்றான்.
அவன் சொன்ன விதத்தில் அவள் முகம் சிவக்க, “ஏய் அபி, நான் நிஜமா சாப்பிட்டுட்டேன்” என்றான் சிரிப்புடன்.
“தோசையும், சாம்பாரும் சாப்பிட்டேன். ஓகே? உனக்குத் தோசை ஊத்தி வச்சா ஆறி போய்டுமேன்னு ஊத்தி வைக்கல. நீ கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சுப் பொறுமையா சாப்பிடு. சரியா?” என்று கேட்டான்.
“என்னைய எழுப்பி இருக்கலாம் இல்ல மாமா. நான் தோசை ஊத்தி கொடுத்திருப்பேனே உங்களுக்கு? காஃபி குடிச்சுருக்க மாட்டீங்க இல்ல? பிளீஸ், காஃபி போட்டுத் தர்றேன். குடிச்சுட்டு போங்க” என்று அவன் கைப் பிடித்தாள்.
அவளின் கையோடு கைக் கோர்த்து பின்னி, “எனக்கு ரொம்ப லேட்டாகிடுச்சு அபி. நா கிளம்பறேன்” என்றான். அவளை விலக மனமின்றி மென்மையாக அவளை முத்தமிட்டு விலகி, வீட்டை பூட்டி வெளியேறினான்.
அபி பொத்தென்று படுக்கையில் விழுந்து கண் மூடினாள்.
திருமண வாழ்க்கையை நிச்சயமாக இத்தனை இனிமையானதாக அவள் கற்பனை செய்திருக்கவில்லை. அதிலும் சக்திவேலின் படிப்பு, வேலை, குடும்பம் பற்றி அவள் தோழி சொன்னதை வைத்து, அந்தத் திருமணத்துக்கு மறுப்புச் சொல்லத்தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் அவளின் பெற்றோர், தாய் மாமா என அனைவரும் பேசி பேசியே அவள் மனத்தை மாற்றியிருந்தார்கள். கூடுதலாக சக்திவேல் அவளிடம் கருத்து கேட்டு நின்றது அவள் மனத்தை நிரம்பப் பாதித்திருந்தது.
அவளின் கண் பார்த்து அவளின் ஒப்புதல் கேட்டு நின்றவனிடம் மறுப்பு தெரிவிக்க மனம் வரவில்லை அவளுக்கு. அவன் பேசிய விதம் நிரம்பப் பிடித்திருந்தது.
“அடுத்து என்ன பண்ணலாம்னு இருந்தீங்க அபி? உங்க சம்மதத்தோடதானே இந்தக் கல்யாண பேச்சு நடக்குது?” முதன்முறையாக அவள் முடிவுக்கு, அவள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும் ஒருவன், அதிலும் அவளின் வருங்காலமாகப் போகிறவன், அவனுடனான வாழ்க்கை முழுதும் இப்படித்தான் அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பான் என்றால் அவனை மணக்க மறுக்க அவள் காரணங்கள் தேட வேண்டியதாக இருந்தது.
“உங்களுக்குச் சம்மதமா அபி? இல்லன்னா சொல்லிடுங்க. எங்க வீட்ல நா பேசிக்கறேன். அப்பா உங்க வீட்டு பெரியவங்ககிட்ட பேசிடுவாங்க, பயப்படாதீங்க” என்றான் அவள் முகம் பார்த்து.
அந்தக் கணம் அவள் மனத்தில் திருமணம் குறித்து இருந்த பயங்கள் எல்லாம் பின்னுக்குச் சென்றிருந்தன. மெல்ல அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள். அதுவே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. சக்திவேல் சாஷ்டாங்கமாக அவள் புறம் சாய்ந்திருந்தான்.
உடனடியாக அவனது விடுமுறை நீட்டிக்கப்பட்டு, இருபதே நாளில் அபிநந்தனாவை தன் சரி பாதியாகக் கரம் பிடித்திருந்தான் சக்திவேல்.