சாதகப் பட்சிகள் – 12 (3)

‘கணவனைச் சொன்னதும் கோபத்தைப் பாரேன்’ என்று சிரிப்பாகதான் வந்தது அவனுக்கு.

“எனக்கும் சரி, ராகவிக்கும்‌ சரி. எங்க விஷயத்துல யார் தலையிட்டாலும் பிடிக்காது. அதான், நீங்களே பேசி…”

“அவர்… எங்களுக்குள்ள சண்டை எல்லாம் இல்ல ண்ணா” மதுமிதா சொல்ல, உதய் உதட்டில் சிரிப்பும், கண்களில் புரிதலும் தானிருந்தது.

“சரிம்மா. நம்ம வீடு யாருக்கு வேணும்?” அவன் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்க,

“ப்ரெண்ட், ஒன்னா வொர்க் பண்ணோம். மும்பையில் இருந்து சென்னைக்குக் குடும்பத்தோட வர்றாங்க. அவங்க கேட்டாங்க. ஆனா, எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டேன் ண்ணா. இட்ஸ் ஓகே” என்றாள் மதுமிதா.

அவள் முகம் பார்த்தே அவளின் எண்ண ஓட்டத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவர்கள் வாழ்க்கையில் அவன் தலையிட விரும்பவில்லை. எதுவென்றாலும் அவர்களே பேசி தீர்க்கட்டும் என்றுதான் அவன் நினைத்தான்.

அவர்களுக்கு நடுவில், அவனோ, ராகவியோ நேரடியாக நுழைவதோ, தலையிடுவதோ சரி வராது என்ற எண்ணம்தான் அவனுக்கு.

“சரிம்மா. என்னோட ப்ரெண்ட், அவங்ககிட்ட உங்க நம்பர் கொடுக்கட்டுமா?” சிறு தயக்கத்துடன் உதய் கேட்க,

“இங்க, வீட்டுக்கு கூப்பிடுங்க ண்ணா. நானே பேசுறேன். நம்ம வீட்டு ஆளுங்களுக்கு நான் இஷ்டப்பட்டு, அது வந்து ஃப்ரீயா இருக்கும் போது செய்யறேன். மத்தபடி, என்னால வேற யாருக்கும் செய்ய முடியாது ண்ணா. இதை நீங்க சொன்னா, தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு. சோ, இந்த முறை அவங்க ஆசையா கேட்டதுக்காகச் செய்து கொடுக்கறேன். ஆனா, இதையே…”

“தொடர முடியாது.” அவள் சொல்ல வந்ததை முடித்து வைத்தான் உதய். மெலிதான முறுவல் அவள் முகத்தை நிறைத்தது.

“சாரி மதுமிதா. இப்ப நடந்தது சின்ன, மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தான். ஆனா, நடந்திருக்கக் கூடாது. ப்ச். நானும் எதிர்ப்பார்க்கல, இப்படி ஆகும்னு.. அவனுக்குத் தங்கச்சின்னு வந்துட்டா உலகமே மறந்து போய்டும்.”

உதய் பேசிக் கொண்டிருக்கும் போதே, இடையிட்டாள் மதுமிதா.

“அவரோட கோபத்துக்கு என்னவேனா காரணம் இருக்கலாம். ஆனா, நீங்க வீட்டை விட்டு போக எடுத்த முடிவு, உங்களோடது. அதுக்கு நான் காரணம் ஆக மாட்டேன். அப்படியே நீங்க என்னைக் காரணம் சொன்னாலும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ண்ணா. நான் பேசின வார்த்தைக்குதான் நான் பொறுப்பு. அதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டதுக்கு நான் பொறுப்பாக முடியாது. அதனால, மன்னிப்பை என்கிட்ட…

“எதிர்பார்க்கல மா.” மீண்டும் அவள் சொல்ல வந்ததை, சொல்லி முடித்தான் உதய்.

“சாரி மட்டுமில்ல, நீங்க வேற எதுவும் சொல்ல வேணாம். இப்படியே இருங்க. ஐ லைக் யுவர் அட்டிடியூட்.” அவன் புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராகவி அறைக்குள் வந்தாள். அவள் கையில் இருந்த ட்ரேயில் மூன்று காஃபி கோப்பைகள் இருந்தன.

மனைவியைப் பார்த்த உதய், “அப்படி இருந்தாதான் இவங்ககிட்ட நாம பிழைக்க முடியும். இல்லனா, நம்மளை முழுங்கி ஏப்பம் விட்டுடுவாங்க இவங்க.” என்று வம்பு பேச,

“வரேன் ண்ணா. பை, அண்ணி” இருவரையும் பார்த்து சொன்னவள், வாயிலை நோக்கி நடக்க,

“மது காஃபி எடுத்துக்கோ” என்றாள் ராகவி.

“வேண்டாம் அண்ணி” திரும்பி பார்க்காமல் நடந்தாள் மதுமிதா.

“முட்டாள், முட்டாள்.” உதய் மனைவியிடம் சீறுவது கேட்டது.

“நீ ஒரு முட்டாள். உன் தம்பி, உனக்கும் மேல. என்ன பண்ணி வச்சீங்க, ரெண்டு பேரும். ஊர்ல நீங்க ரெண்டு பேரும்தான் பெரிய பாசக்காரங்க. நாங்க எல்லாம் கல்லு மனசு. உங்க அலும்பு தாங்கல ராகவி. என்ன பண்ணி வச்சிருக்கத் தெரியுதா? மதுமிதா பேசினதை பத்தி, என்கிட்ட தனியா இருக்கும் போது பேசாம, ஹால்ல வச்சா அதைப் பத்தி பேசுவாங்க? நீ வீட்டை விட்டு போகலாம்னு அப்போ சொன்னதை உங்க ஆயா கேட்டு, அவங்க பேச ஆரம்பிச்சு. அந்நேரம் உன் அறிவாளி தம்பி வந்து, பாதியை கேட்டு மீதியை கேட்காம, அவனா ஏதோ முடிவு பண்ணி, இப்போ மதுமிதா தான் அழுதிட்டு நிக்கறா.

ராகவனுக்கும் அது வலிக்கும். புரியுதா? இது எல்லாம் உன்னால” உதய் பேச பேச, ராகவி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்தாள்.

அவன் பேச்சை கேட்டபடியே தங்களின் அறையை நோக்கி நடந்தாள் மதுமிதா.

எல்லாம் நேரம் வேறு என்ன சொல்ல? “ராங் டைமிங்” என்று தான் சொல்ல வேண்டும்.

மதுமிதா கேள்வி கேட்ட நேரமும் தவறு.

அதை ராகவி கேட்க நேர்ந்த நேரமும் தவறு. அதைப் பற்றி அவள் கணவனிடம் விவாதிக்க எடுத்துக் கொண்ட நேரமும் தவறாகிதான் போனது.

அவளுக்கு மதுமிதாவிடம் நேராகச் சென்று பேசவே சங்கடமாக இருந்தது. மேலும், அவளுக்குக் கடையில் வேறு வேலைகள் கழுத்தை நெரித்தது. அதனால்தான் சுஹாசினியை அனுப்பி வைத்தாள்.

சுஹாசினி சற்று முன்புதான், “கொளுத்தி போட்டு இருக்கேன் ரா. மத்த எல்லாத்தையும் மறந்து, சுஹாசினியும், நீங்களும் கல்யாணம் பண்ணிக்க இருந்தீங்களான்னு ராகவன் கூடச் சண்டைப் போட, மது கண்டிப்பா ஓடி வருவா. நாம வெயிட் பண்ணுவோம்” என்று ராகவியிடம் சொல்லி இருந்தாள்.

ஆக, அவள் மதுவின் வரவை எதிர்பார்த்தாள் தான். ஆனால், இத்தனை விரைவாக இல்லை.

“இது வரை அவனுக்காக நீ செஞ்ச எல்லாமே இதுல அடிபட்டு போச்சு ராகவி. ஒரு யூசும் ‍இல்ல. நாளைக்கே, நாம இந்த வீட்டை விட்டுப் போனா, அது ராகவனைப் பொறுத்தவரை அவன் பொண்டாட்டியால தான் போறோம். அவனுக்கு அது அழுத்தமா மனசுல பதிஞ்சு இருக்கும். என்ன பண்ணியிருக்கத் தெரியுதா, ராகவி?” கணவன் அவளிடம் இப்படிக் கடினமாகப் பேசுவது, கடுங்கோபம் வந்தால், அவள் பக்கம் தவறு இருந்தால் மட்டுமே என்பதால், தான் செய்த மடத்தனத்தை உணர்ந்து கண்கள் கலங்க நின்றாள் ராகவி.

“நாம இங்கேயே இருந்திடுவோம் உதய். அப்போ பிரச்சனை…”

“ராகவி…” அப்படி ஒரு கோபம் அவன் குரலில், அப்படியே தொய்ந்து பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் ராகவி.

“சாரி உதய்” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.

“அவங்களே பேசி சரியாகட்டும். நீ எதுவும் பண்ணாத.” உதய் சொல்ல, சம்மதமாகத் தலையசைத்தாள் ராகவி.

அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மதுமிதா.

சட்டென ஒரு முடிவிற்கு வந்தவளாகத் தன் வீட்டிற்கு மீண்டும் கிளம்பினாள் அவள்.

அவள் படியிறங்கி கீழ் தளத்தை அடையும் போது எதிரில் வந்தான் ராகவன். அவனைப் பார்க்காதது போலக் காட்டிக் கொண்டு அவள் நடக்க,

“நில்லு மது” எட்டி அவளின் கைப் பிடித்து நிறுத்தினான். கோபத்துடன் கையை உதறினாள் அவள்.

“எங்க கிளம்பிட்ட. வா, சண்டைப் போடலாம்” என்று அழைத்தவனை எரித்து விடுவது போலப் பார்த்தாள் அவள்.

மென்மையாக அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்து, வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனான் ராகவன். அவனைப் பார்த்ததும் உருகிய மனதை கடினமாக்கி கொண்டு சண்டையிட தயாராகினாள் அவள்.

error: Content is protected !!
Scroll to Top