சுஹாசினி அவளே அத்தனையையும் செய்தாள். அடுப்படியில் தேடி இரண்டு தட்டுகள் எடுத்து வந்து, அதில் அவள் வாங்கி வந்திருந்த உணவை பரிமாறி, மதுவின் கைகளில் திணித்தாள்.
மதுமிதா, “சாப்பிட்டேன்” என்று காண்பித்துக் கொள்ள, ஒரு வாய் சோற்றைத் தண்ணீர் குடித்து உள்ளே தள்ளினாள்.
“ராகவன் ரொம்பச் சாப்ட் நேச்சர் மது. பாசக்காரன். அவனுக்குக் கல்யாணமானா, பொண்டாட்டியை ரொம்ப நல்லா பார்த்துப்பான்னு தான் நாங்க எல்லோருமே நினைச்சோம். அட்லீஸ்ட், நான் அப்படித்தான் நினைச்சேன் மது” சுஹாசினி சொல்ல, மதுமிதா அவளையே சலனமின்றிப் பார்த்திருந்தாள்.
“ஆனா, அவனும் எல்லா ஆண்களையும் போலதான் இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. பொதுவா ஆண்களுக்குத் தன் குடும்பம் தான் ஆல்வேஸ் முதல் ப்ரையாரிட்டின்னு தெரியும். அம்மா, அப்பா, தங்கச்சி, தோம்பி.. கடைசியாதான் கட்டினவ வருவா. அது அவங்க டிசைன். நாம ஒன்னும் பண்ண முடியாது. வெளில சக்சஸ்ஃபுல்லா இருக்க ஆண்கள் கூட வீட்ல சொதப்புறவங்களா தான் இருப்பாங்க. “என்னைத் தவிர வேற யாராலும் இந்த மனுஷன் கூடக் குப்பைக் கொட்ட முடியாதுன்னு”, தான் பொண்டாட்டி புலம்புவா. எங்க வீட்லயும் இதே கதைதான் மது. அவர் கோவா, நான் தமிழ்நாடு. விக்ரம் கொங்கனியில் கத்த, பதிலுக்கு நான் தமிழ்ல கத்தன்னு சிறப்பா போகும்.” சுஹாசினி சிரிக்க, இதுவே வேறொரு நேரமாக இருந்திருந்தால் மதுமிதாவும் கூடச் சிரித்திருப்பாள் தான். சுஹாசினி சொன்னதைக் கற்பனை செய்து பார்க்கவே சுவாரசியமாகத்தான் இருந்தது.
“எவ்வளவு பெரிய சண்டைக்கும், நான் அவரை விட்டு பிரிந்து போகனும்னு யோசிச்சது இல்ல மது.”
“நீங்க என்ன சொல்ல வர்றீங்க?” மதுமிதா அழுத்தமாகக் கேட்க,
“ராகவனுக்கு, ராகவி மேல பாசம் அதிகம்தான். ஆனாலும்…”
“அவர் என்னை ஒன்னுமே சொல்லலைங்க சுஹாசினி. நாங்க சண்டை எல்லாம் போடல. நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? எதைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க? எதுக்கு அவரைக் குறை சொல்ற மாதிரி பேசுறீங்க? எனக்குப் புரியல” மதுமிதாவின் கேள்வியில், ஒரு நொடி அசந்து போனாள் சுஹாசினி.
“இவ ராகவிக்கு மேல இருப்பா போல. புருஷனை விட்டுத் தராத பொண்டாட்டி. ஹ்ம்ம், நல்லா வருவீங்க மா” முணுமுணுத்தாள் சுஹாசினி. மதுமிதாவிற்கும் கேட்கவே செய்தது.
“ஒன்னுமில்ல மது. நான்தான் தெரியாம பேசிட்டேன். நீ சாப்பிடு” என்றாள் சுஹாசினி. ஆனால், மதுமிதா தட்டை அப்படியே உணவோடு தரையில் வைத்தாள்.
சுஹாசினிக்கு அவளது செய்கையில் சட்டெனக் கோபம் துளிர்த்தது. அதே நேரம், அவள் ராகவனை விட்டுக் கொடுக்காமல் பேசியது சிரிப்பை கிளறியது.
“உனக்கு ஒன்னு தெரியுமா மது? ராகவனும், நானும் கல்யாணம் பண்ணிப்போம்னு நிறையப் பேர் நினைச்சாங்க. ஆனா..” என்று சிறு இடைவெளி விட்ட சுஹாசினி,
“நான் தப்பிச்சேன்” என்று முடிக்க, கண்ணில் கனலுடன் அவளைப் பார்த்தாள் மதுமிதா.
“வீட்டை க்ளீன் பண்ணிட்டு வா மது. நான் குழந்தைகளை அப்பாகிட்ட விட்டுட்டு உன்ன பார்க்க வந்தேன். நான் கிளம்பறேன்” என்று சுஹாசினி எழுந்து கொள்ள, தனக்காக இவ்வளவு மெனக்கெட்டு வந்தவளை காயப்படுத்தி விட்டோமோ என்று வருத்தப்பட்டாள் மதுமிதா.
“தாங்க்ஸ்” கட்டுப்படுத்த முடியாது சொல்லி விட்டாள்.
மெல்ல புன்னகைத்த சுஹாசினி, “இட்ஸ் ஓகே மது. சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாம சாப்பிடு. நீ பேசினதை விட, சாப்பாட்டை வேஸ்ட் பண்ணா தான், நான் ரொம்ப ஹர்ட் ஆகி ஃபீல் பண்ணுவேன். அதனால், மறக்காம சாப்பிட்டு முடி. மனசும், உடம்பும் தெம்பாகும்” புன்னகையுடன் சொன்ன சுஹாசினி, கையசைத்து விடை பெற்று, வண்டியை கிளப்பிக் கொண்டு போனாள்.
சுஹாசினி போவதையே நின்று பார்த்துக் கொண்டிருந்தவளை அலைபேசி அடித்து அழைத்தது. உதய் அழைத்துக் கொண்டிருந்தான்.
ஒரே வீட்டில் இருந்தாலும், அவன் மதுமிதாவை அலைபேசியில் அழைப்பது எல்லாம் அபூர்வம் என்பதால் யோசனையில் புருவங்கள் சுருங்க, அழைப்பை ஏற்றாள் மதுமிதா.
“ஹாய் மா, எங்க இருக்கீங்க? பிஸியா?” உதய் கேட்க,
“பிஸி எல்லாம் இல்ல ண்ணா. சொல்லுங்க” என்றாள் அவள்.
“என்னோட ப்ரெண்ட் வைஃப் உங்க நம்பர் கேட்டாங்க மா. ராகவி டிரஸ், அப்புறம் என்னோட ஷர்ட்ஸ், தென் குழந்தைங்க டிரஸ் எல்லாம் பார்த்து ரொம்ப இம்ப்ரஸாகி எந்தக் கடையில் எடுத்தீங்கன்னு கேட்டாங்க. நான் எங்களுக்குத் தனியா டிசைனர் இருக்காங்கன்னு சொன்னேன்.” சிரிப்புடன் தொடர்ந்தான் அவன்,
“எல்லாம் நீங்க டிசைன் பண்ணி, தைச்சு கொடுத்ததுன்னு சொல்லவும், உங்களை விசாரிச்சு ஒரே தொல்லை. நம்பர் கொடுக்கவா மா? ஆமா, வீட்டுக்கு எப்போ வருவீங்க? உங்ககிட்ட பேசணுமே?”
கேள்வியுடன் உதய் நிறுத்த,
“டென் மினிட்ஸ் ண்ணா, வீட்ல இருப்பேன்” பட்டென்று சொன்னவள், அதே வேகத்துடன் வீட்டிற்குக் கிளம்பினாள். அவளுக்கும் உதயிடம் பேச விஷயமும், கேட்க கேள்வியும் இருந்ததே.
அடுத்த இருபதாம் நிமிடம் தன் முன் நின்ற மதுமிதாவிடம், “நம்ம.. அதாவது, எங்க புது வீடு பத்தி எதுக்குக் கேட்டீங்க மா, வீடு யாருக்கு தேவைப்படுது?” நிதானமாக அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான் உதய்.
அவனது கேள்வியில், அப்படியே ஒரு நொடி அயர்ந்து நின்று விட்டாள் மதுமிதா. அவள் எதற்காக வீட்டை பற்றி விசாரித்திருக்கிறாள் என்பதை ஊகிக்க முடிந்த பின்புமா, வீட்டை விட்டு செல்ல முடிவெடுத்தான் இவன்? என்ற கேள்வி அவள் மனதில் ஓட,
அதைப் படித்தவனாக, “நாங்க இப்பல்லம்மா. தாரா, நந்தாக்கு ஒரு வயசு இருக்கும் போது எடுத்த முடிவு இது. ஆனா, பெரியவங்க அப்போ, வாடகை வீடு, குவாட்டர்ஸ் எல்லாம் வேண்டாம். சின்னக் குழந்தைங்க, ராகவி தனியா எப்படி எல்லாத்தையும் பார்ப்பான்னு காரணம் சொல்லி, எங்களைப் போக விடல. சரின்னு சொந்த வீடு கட்டினோம். அந்நேரம் பார்த்து மித்ரன் கன்பார்ம் ஆகவும், நாங்களும் பிளானை தள்ளிப் போட்டோம். இப்பவும் நாங்க உடனே வீட்டை விட்டுப் போகல மதுமிதா. மித்ரனுக்கு ஆறு மாசம் ஆனதும் போறதாதான் பிளான். அது இப்படி முடியும்னு.. சாரி.. ராகவன் ஒரு பாசக்கார முட்டாள்..”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் கண்களில் வந்து விட்டு போன மின்னலை கவனித்துச் சத்தமாகச் சிரித்தான் உதய்.