“ராகவ்…” மெல்ல அழைத்தாள் மதுமிதா.
“நேரமாச்சு, வரேன்” சரட்டென்று காரைக் கிளப்பிக் கொண்டு போனான் ராகவன்.
இரண்டு நாட்களாக இதே கண்ணாமூச்சி ஆட்டம்தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவள் பேச முயல்வதும், அவன் விலகிப் போவதும் என ஒரு வித்தியாசமான விளையாட்டு.
அவளுக்கு முதலில் தவறாகப் பேசி விட்டோமா என்று பதட்டமாக இருந்தது, பின்னர்ப் பயமாகக் கூட இருந்தது. ஆனால், தான் அப்படி ஒன்றும் தவறாகக் கேட்டு விடவில்லை என்று உணர்ந்ததும், கணவனின் முகம் திருப்பலைப் பார்த்துக் கோபம்தான் வந்தது.
அதிலும், ராகவி குடும்பம் வீட்டை விட்டுக் கிளம்பப் போகிறார்கள் என்று விசாலாட்சி அறிவித்ததும், அவளைக் கண்கள் சிவக்க, ஆத்திரத்துடன் ஒரு பார்வை பார்த்தான் ராகவன். அவ்வளவுதான்.
அதன் பின் அவளிடம் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்த்தான்.
அவன் கோபப்பட்டு, கத்தி, அவளைக் கேள்வி கேட்டு, எதையாவது சொல்லி திட்டினால் கூடப் பரவாயில்லை என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
இந்த மௌனம் தாங்கிக் கொள்ள இயலாததாக இருந்தது.
அவர்களுக்கு நடுவில் பேரிரைச்சலுடன் ஒலித்துக் கொண்டிருந்த மௌனத்தை எதைக் கொண்டும் நிறுத்த முடியாமல், அவனை, அவன் போக்கில் விடத்தான் அவளும் நினைத்தாள். அவளால் முடியவில்லையே.
ராகவி எப்போதும் ஏதாவது வேலையில் மூழ்கி இருந்தாள். மூன்று குழந்தைகள், கூடவே கடை மற்றும் அவளுக்கேயான வீட்டு வேலை எனத் திணறி கொண்டிருந்தவளை எப்படி அணுகி பேசுவது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தாள் மதுமிதா.
உதய், வீட்டிலேயே இல்லை. மாமனார் மருந்தகம், ஐயா, ஆயா கடை என அனைவருமே அவரவர் வேலையைப் பார்க்க சென்றிருந்தனர்.
அவளுக்குத் தான் மட்டும் தனித்து விடப்பட்டது போன்றதொரு உணர்வு மனதை ஆக்கிரமிக்க, எந்த வேலையிலும் முழுதாகக் கவனம் செலுத்த முடியவில்லை அவளால்.
“நான் என்ன தவறாகப் பேசினேன்?” அவளுக்கு விளங்கவே இல்லை.
எவ்வளவு நேரம்தான் தனிமையுடன் பேசுவது?
எத்தனை முறைதான் புகைப்படத்தில் இருந்த ராகவனிடம் கேள்விகள் கேட்பது?
அவனது நிழலிடம் மட்டுமே அவளால் அனைத்து உணர்ச்சிகளையும் கொட்ட முடிந்தது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்து கோபப்பட்டாள், கெஞ்சினாள், கொஞ்சினாள், அழுதாள் அப்படியே அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டே சரிந்து அமர்ந்தாள்.
மனம் புலம்பி அழ ஒரு ஜீவனைத் தேடியது. சாய்ந்து கொள்ளத் தோள்கள் கேட்டது. கண்ணீர் துடைக்கும் விரல்களுக்கு ஏங்கியது. தலைக் கோதும் கரம் வேண்டியது.
அவளுக்கு யாரிடமாவது தன் மனதில் இருப்பதைச் சொல்லி, புலம்ப வேண்டும் போலிருந்தது.
மனதில் இருந்த பாரம் விலகினால் தான் தெளிவாகச் சிந்திக்க முடியும் என்று தோன்றியது. யாரேனும் இரு பக்க நியாயமும் எடுத்துச் சொன்னால் தேவலாம் என்றிருந்தது. தன் பக்கத் தவறை அவளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.
ஆனால், அப்படிக் கேட்பதற்கும், பேசுவதற்கும் தான் அவளுக்குக்கென்று இவ்வுலகில் யாருமில்லையே.
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள இருப்பதே ஒரே தங்கை. வெண்பா. அவளும் வெளிநாட்டில் வாழ்கிறாள். அவளிடம் பொதுவாகவே தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசியதில்லை மதுமிதா.
முன்னர் மும்பையில் வேலை பார்த்ததால், அவளுக்குப் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி, நெருக்கமான தோழிகளும் கிடையாது.
மனம் விட்டு பேச கூட யாருமில்லா நிலை. தன்னிரக்கம் அவளைக் கொன்று தின்றது.
இதுவே அவளின் பாட்டி சிவகாமி இருந்திருந்தால், “வாயை அடக்கி பேசணும் மது மா. பேசிட்டு அப்புறம் யோசிக்கக் கூடாது. நீயெல்லாம் அந்த வீட்டு மருமகளா போனதே பெரிய விஷயம்.” என்று அவருக்குத் தோன்றியதை எல்லாம் சொல்லி அவளை அர்ச்சித்து இருப்பார்.
ஆனால், அதற்குப் பின் ஆறுதலும் கிடைத்திருக்கும். மடி சாய்த்து, தலைக் கோதி, “யோசிச்சு பேசணும் மது மா. எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க டா” என்று அறிவுரையும் கிடைத்திருக்கும்.
அவர் என்ன செய்தாலும், குட்டினாலும், திட்டினாலும் தனக்கென்று ஒருவர் இருக்கிறார் என்ற மனத்திடம் அவளுக்கு மிஞ்சி இருக்கும்.
இன்று, இப்படித் தனிமையில் கலங்கித் தவித்திருக்கத் தேவை இருந்திருக்காது.
அதற்கு மேல், அந்த வீடே அந்நியமாய்த் தோன்ற, அமைதியாய் கிளம்பி அவளது பிறந்த வீட்டிற்குச் சென்று விட்டாள் அவள்.
புகுந்த வீட்டில் அத்தனை பேருக்கு நடுவில் இருந்த தனிமையைக் காட்டிலும், ஆட்களே இல்லாது, முழுத் தனிமையில் இருந்த அவளது வீடு அப்படி ஒன்றும் கொடுமையானதாய் இருக்கவில்லை.
அப்பா, பாட்டி, தங்கை வெண்பாவின் நினைவுகள் மனதை நிறைக்க அவர்களே உடன் இருப்பது போன்றதொரு மாய உணர்வு, சிறு நிம்மதியை அவளுக்குத் தந்தது.
அதுவும் கூடச் சிறிது நேரத்திற்குத் தான், மனம் மீண்டும் கணவனிடமே போய் நின்றது.
அவனை அழைத்துப் பேசுவது என்ற முடிவுடன், அலைபேசியை எடுத்து பார்த்தாள். ஏற்கனவே அவனிடம் இருந்து வந்திருந்த குறுஞ்செய்தி அவளின் முகத்தில் அறைந்தது.
வழக்கம் போல அறுவை சிகிச்சை அரங்கத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு வந்திருந்தது.
அலைபேசியை அணைத்துச் சோஃபாவில் எரிந்தாள். அவளால் தற்போது செய்ய முடிந்தது அது மட்டும் தானே. அப்படியே சரிந்து படுத்து உறங்கத் தொடங்கினாள்.
சற்று நேரத்தில் எல்லாம் அழைப்பு மணியோசை அவளின் தூக்கத்தையும் கலைத்து விட, எழுந்து போய்ப் பார்த்தாள், வெளியில் சுஹாசினி நின்றிருந்தாள்.
“ஹாய் மது, உன்னைத் தேடி அங்க போனேன். பார்த்தா நீ இல்ல. ஆளைக் காணோம்னு ராகவியைக் கேட்டா, நீ இங்க இருப்பன்னு சொன்னா. வீடு க்ளீன் பண்ண வந்தியா?” கண்களால் வீட்டை ஆராய்ந்தபடி சுஹாசினி கேட்க,
“ஹ்ம்ம். ஆமா” என்றாள் மதுமிதா.
வழக்கமாக இரு வாரங்களுக்கு ஒருமுறை வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டுப் போவாள்தான், அதையே இப்போதும் ராகவி சொல்லி இருக்க, மதுமிதாவிற்குச் சிரிப்புத்தான் வந்தது.
“சொல்லுங்க சுஹாசினி”
மதுமிதாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் எழுந்து, அடுப்படியை தேடிப் போனாள் சுஹாசினி.
“ஒன்னுமே சமைக்கலை மது? காலையில என்ன சாப்பிட்ட? மதியம்?” சுஹாசினி கேட்க, மதுமிதா எதிரில் இருந்த சுவரை வெறித்தாள்.
“எனக்கு ஒரு விஷயம் எப்பவுமே புரியாது மது. நீங்க எல்லாம், ஏன் இப்படி இருக்கீங்க? சாப்பாட்டுக்கு இவ்வளவு அவமரியாதை?? ஏன் சாப்பாட்டை அவமதிக்கறீங்க? என்னமோ, சாப்பாடு தான் உங்களைக் கொடுமை பண்ண மாதிரி, கோபம், சோகம், ஆத்திரம் மொத்தத்தையும் அது மேலதான் காட்டுறது. நல்லா யோசிச்சு பாருங்க. பதிலுக்குச் சாப்பாடு உங்ககிட்ட முகம் திருப்பிட்டு போனா என்ன ஆகும்னு. கண்ணை இருட்டி, காது அடைச்சு, தலை சுத்தி, மயக்கம் வந்து, உசுரு போகும். வா, வந்து சாப்பிடு”
அந்நேரம் மதுமிதா இருந்த மனநிலையில் உணவு என்ன, தண்ணீர் கூட உள்ளிறங்காது என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனாலும், சுஹாசினியின் வரவும், வார்த்தைகளும் ஏதோ ஒரு விதத்தில் இதம் தர, எழுந்து சென்று கையைக் கழுவி வந்து அவளோடு அமர்ந்தாள்.