சாதகப் பட்சிகள் – 11 (3)

சென்னையின் கரடு முரடான சாலைகளில் வழுக்கிக் கொண்டு அவர்களது கார் விரைந்து கொண்டிருக்க, “என்னாச்சு ராகவ்?”

கண் மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தவனிடம் மென்மையாக விசாரித்தாள் மதுமிதா.

“ப்ச். ஒன்னுமில்ல மது. டையர்டா இருக்கு. தூங்கணும்” என்றான் அவன்.

“ம்ம்..”

முழுதாய் ஒரு நிமிடத்திற்குப் பின், “காலையில ஆபரேஷன் நடந்திட்டு இருக்கும் போதே, சின்னப் பையன் மது. பத்தொன்பது வயசு தான். காலேஜ் படிக்கற பையன். ஓவர் பிளட் லாஸ். என்ன பண்ணியும், பிளட் ஏத்தியும் கூடக் காப்பாத்த முடியல. கண் முன்னாடியே இல்லாம போய்ட்டான்.

பொறுப்பே இல்லாத பசங்க. அப்படி என்ன பைக் ரேஸ் கேட்குது. எல்லாம் காஸ்ட்லி பைக். எப்படிக் கேட்டதும், யோசிக்காம வாங்கித் தர்றாங்க பேரன்ட்ஸ். அவங்களைச் சொல்லணும். கத்தி, கதறி இன்னைக்கு அழுது? என்னவாகிட போகுது. போனவன் திரும்பியா வரப் போறான்?” கண்ணைத் திறவாமல் சொல்லிக் கொண்டே வந்தான் அவன்.

எத்தனையோ இறப்புகளைப் பார்த்து, பழகி விட்டப் பின்பும், வலிக்கத்தான் செய்கிறது அவனுக்கு. ஒவ்வொரு முறையும் மனம் கனத்துதான் போகிறது.

“போலீஸ் வண்டியை பார்த்ததும் தப்பிக்க வேகம் கூட்டி இருக்கானுங்க. எதிர்ல கவர்மென்ட் பஸ் வர, இன்னொரு பக்கம் மழை, ஈரமான ரோடு வழுக்கி விட்டு. மப்ச். யாருக்குமே பொறுப்பில்ல. மூனு பேர் போய்ச் சேர்ந்துட்டானுங்க. மீதி இருக்கவனுங்களும் ரொம்ப க்ரிட்டிக்கல் கண்டிஷன்தான்.” புலம்பிக் கொண்டு வந்தான் அவன்.

ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்து, மறுகையால் அவன் நெற்றி வருடினாள் மதுமிதா.

“இது மாதிரி நாள்கள்ல, ஐ ஹேட் மை ஜாப் மது” வெறுப்புடன் சொன்னான்.

வீடு வந்திருக்கக் காரை நிறுத்தி, இறங்கி அவனுக்காகக் கதவை திறந்து விட்டாள் மதுமிதா.

வீட்டினுள் நுழைந்து அங்கே நிறைந்திருந்த குழந்தைகளையும், அவர்களின் சத்தத்தையும் கேட்டதும் அவன் முகம் தன்னிச்சையாக மலர்ந்து விட்டது.

சுஹாசினியின் இரண்டு குழந்தைகளும், ராகவியின் இரண்டு குழந்தைகளும் இணைந்து, ராகவியின் கைக் குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தனர்.

வேக வேகமாக அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்து குழந்தைகளுடன் இணைந்து கொண்டான் ராகவன்.

“என்னாச்சு ராகவ்?” நந்தாவிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து ராகவி கவலையுடன் கேட்க,

“எப்பவும் நடக்கறது தான் பாப்பா. காலைல ஒன்னு, மதியம் ஒன்னு. கண் முன்னாடி உயிர் போறதை பார்க்கும் போது.. “

மேலே சொல்ல முடியாமல் அவன் நிறுத்த, அவனது கையைப் பிடித்து ஆறுதலாக அழுத்திக் கொடுத்தாள் ராகவி.

எழுந்து பால்கனியில் போய் நின்று கொண்டான் ராகவன்.

அவன் கரங்களில் காஃபி கோப்பையைத் திணித்து விட்டு, மௌனமாய் அவனோடு நின்றாள் மதுமிதா.

ஆயிரம் வார்த்தைகள் கொண்டு ஆறுதல்கள் சொல்ல முடியாது போது, அருகில் இருப்பதே பெரும் ஆறுதல் தானே.

மனைவியைத் தோளோடு சேர்த்து அணைத்து, “ஐ ஆம் ஓகே மது” என்றான் ராகவன்.

குழந்தைகள் மீண்டும் அவனைச் சூழ்ந்து கொள்ள அவனது மனநிலையும்‌ கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருந்தது.

அங்கிருந்து விலகி, அறையை நோக்கி நடக்கத் தொடங்கியவளை நிறுத்தியது உதயின் குரல்.

“மது, இங்க வாம்மா” என்று அவன் அழைக்க, அடுப்படியை நோக்கி நடந்தாள் அவள்.

“ஒரு காஃபி கிடைக்குமா மா?”

“இதோ, இப்பவே போட்டுத் தரேன் ண்ணா” சொன்னபடி காஃபியை நீட்டினாள்.

அப்படியே நின்று இரவு உணவையும் தயாரிக்கத் தொடங்கினாள் மதுமிதா.

“தங்கச்சியைப் பார்த்ததும் உலகத்தையே மறந்திடுவான் இந்த ராகவ். அதான், நானும் என் தங்கச்சியைக் கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். நீ சொல்லும்மா, என்ன ஹெல்ப் வேணும் உனக்கு?” அவளைத் தங்கை என்று குறிப்பிட்டு உதய் கேட்க,

உறவு முறையாக இல்லாமல், முதல் முறையாக உளமாற உதயை அண்ணனாகப் பார்க்கத் தொடங்கினாள் மதுமிதா.

“எந்த ஹெல்ப்பும் வேணாம் ண்ணா. நான் பார்த்துக்கறேன்”

சொன்னாள் மதுமிதா.

இருவருமே சமையலைத் தான் சொன்னார்களா என்ற சந்தேகம் அவர்களுக்குமே இருக்கத்தான் செய்தது.

சுஹாசினி அவளது வீட்டிற்குக் கிளம்பி விட, குழந்தைகளைக் கவனிக்க, மனைவிக்கு உதவ, அங்கிருந்து நகர்ந்து போனான் உதய்.

ஆயா விசாலாட்சி அன்று விரைவாக வந்து விட, அவருடன் இணைந்து சமையலை முடித்தாள் மதுமிதா.

முன்பை போலத் தயங்காமல், விலகாமல் அனைவருடனும் தன்னால் முடிந்த வரை கலகலப்பாகப் பேசி, அவர்கள் பேசுவதைக் கேட்டு என முழுதாக அக்குடும்பத்துடன் ஒன்றினாள் மதுமிதா.

முன் தினம் சரியாக உறங்காததால், அன்றைக்குச் சீக்கிரமே ராகவன் தூங்கி விட, வெளியில் சென்று விட்டு வந்த சோர்வில் மதுமிதாவும் வழக்கமான நேரத்துக்கு முன்பே உறக்கத்தைத் தழுவி இருந்தாள்.

மறுநாள் மாலை காஃபி கோப்பையுடன் ஊஞ்சலில் அமர்ந்து மழையை ரசித்துக் கொண்டிருந்த மதுமிதா, அந்நேரம் நிச்சயமாய்க் கணவனை வீட்டில் எதிர்பார்க்கவில்லை.

“என்ன சீக்கிரம் வந்துட்டீங்க?” அவள் ஆச்சரியமாய் விழி விரித்துக் கேட்க, பதில் சொல்லாமல் அவள் கைகளில் இருந்த காஃபியை வாங்கி அருந்தத் தொடங்கினான் ராகவன்.

“அச்சோ, உங்களுக்குப் புதுசு போட்டு எடுத்துட்டு வரேன் ராகவ்”

“இதுவே போதும்” கண் சிமிட்டினான். புன்னகையுடன் அவன் தோள் சாய்ந்தாள் அவள்.

அவனோடு இருக்கும் பொழுதுகள் மட்டும், ஏன் இப்படி இறக்கை முளைத்தது போல அதிவேகமாகப் பறந்து செல்கிறது என எரிச்சலுடன் பல்லைக் கடித்தாள் மதுமிதா.

நேரம் இரவு பத்து என்றது கடிகாரம்.

அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு, படுக்கச் சென்று விட, அடுப்படியை ஒதுக்கி, சுத்தம் செய்து கொண்டிருந்தாள் அவள்.

மீதமான உணவை குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வைத்து விட்டு, அதன் கதவை மூடியவளின் இடுப்பை வளைத்தது வலிய கரம் ஒன்று.

அப்படியே அவன் மார்பில் சாய்ந்து ஒன்றினாள்.

“அதென்ன எப்ப பார்த்தாலும் சேலை? முந்தானையில் முடியறது இது தானா?” காதில் கிசுகிசுத்தான்.

அவன் கரங்களில் திரும்பி, அவன் முகம் பார்த்தாள்.

“சும்மா தோனுச்சு கட்டினேன். பெருசா காரணம் எதுவும் இல்ல. சேலை கட்டவும், அதைக் கேரி பண்ணவும் ஈசியா தான் இருக்கு. இன்பேக்ட் கம்போர்ட்டபிளா கூட இருக்கு ராகவ்” அவள் சொல்லிக் கொண்டே போக, அந்தச் சேலையின் வழவழப்பையும், அவளது இடையின் வழவழப்பையும் சோதித்து, ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தது அவன் கரங்கள். முடிவில் இடுப்பில் நிலைத்தது.

error: Content is protected !!
Scroll to Top