உதய், ராகவிக்கு அழைத்து, மதிய உணவு பற்றி விசாரிக்கவும் தான், நேரத்தையே பார்த்தார்கள் அவர்கள் மூவரும்.
இடையிடையே குழந்தைகளைக் கவனித்திருக்க, இப்போது அவர்கள் உணவருந்த வெளியில் வந்தனர்.
“ஃபிஷ் மீல்ஸ் இன் குமரகம்” சுஹாசினி சத்தமாகச் சொல்ல, சிரித்தாள் ராகவி.
சுஹாசினியை பொறுத்தவரை வாழ்வின் எல்லாத் தலையாயப் பிரச்சினைக்கும் முதல் தீர்வு உணவுதான்.
சோகம், கோபம், வருத்தம், இயலாமை, கண்ணீர், துக்கம் என அனைத்தையும் அவளுக்குப் பிடித்த உணவை கொண்டு தான், ஜீரணித்துக் கடப்பாள் அவள்.
அவரவருக்குப் பிடித்ததை அவர்கள் சொல்லி விட்டு சாய்ந்து அமர, ராகவி மட்டுமே சற்றே பதட்டமாகவே காணப்பட்டாள்.
“என்னாச்சு?” மதுமிதா கேட்க,
“ஒன்னுமில்லையே மது” என்று சிரித்துச் சமாளித்தாள் ராகவி.
ஏனோ, மதுவிற்கு அந்நேரம் கணவனைத் தேடியது. அவனைப் பார்க்க வேண்டும் போல, அவன் குரல் கேட்க வேண்டும் போல மனமெங்கும் ஒரு வித அழுத்தம் பரவ, அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
மிக முக்கியமான அறுவை சிகிச்சையில் இருப்பதாக, சில மணி நேரங்களுக்கு முன் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். அறுவை சிகிச்சை முடிய எட்டு மணி நேரமாகும். அதற்குப் பின் அழைக்கிறேன் என்று தெளிவாகத் தகவல் தெரிவித்திருந்தான் ராகவன்.
அலைபேசியை அணைத்து ஓரமாக வைத்து விட்டு, நிமிர்ந்து அமர்ந்தாள் மதுமிதா.
“என்ன ரா?” சுஹாசினி மென்குரலில் வினவ, ராகவி மித்ரனை கவனித்துக் கொண்டிருந்தாள்.
“அவருக்கு, ராகவ்.. டென்ஷனா இருக்காரா? கோபமா? உங்களால் உணர முடியுது இல்ல? அதனால தானே என்னவோ போல இருக்கீங்க?” ராகவியைப் பார்த்துத் தீர்க்கமாக மதுமிதா கேட்க,
“அச்சோ, இல்ல மது. கடை கடையாக ஏறி இறங்கின அலைச்சல் எனக்கு. வேற ஒன்னுமில்ல.” சமாளிப்பாகச் சொன்னாள் ராகவி.
அவளுக்கு அதற்கு மேல் உணவே இறங்கவில்லை. சுஹாசினி உணவை ரசித்து உண்டு கொண்டிருக்க, தட்டில் இருந்ததை ருசி அறியாமல் விழுங்கி வைத்தாள் மதுமிதா.
“மீனை முள்ளோட சேர்த்து முழுங்கிடாத மா. அப்புறம் ராகவன் கிட்ட என்னால திட்டு வாங்க முடியாது” சுஹாசினி கேலி செய்ய, சிரித்தபடி உணவை உண்டனர்.
அவர்கள் உணவை முடிக்கும் தருவாயில் அங்கு வந்தான் உதய்.
“போகலாமா ராகவி?” என்று கேட்டுக் கொண்டே அவன் வர, உணவிற்கான தொகையைச் செலுத்தி விட்டு அவனோடு நடந்தனர்.
மூவரின் கைகளில் இருந்த பைகளையும் வாங்கிக் கொண்டான் உதய்.
“ஏன்மா, டல்லா இருக்க மது?” காரின் கதவை திறந்து அமர்ந்தவள், பட்டெனத் தலை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
“நல்லாதான் இருக்கேன் ண்ணா.” என்றாள் மதுமிதா.
சிறிய தலையசைப்புடன் காரை நகர்த்தினான் அவன்.
அவளுக்கு மனம் மீண்டும் கணவனிடம் ஓடியது. அவன் சீக்கிரமாக வரவில்லை என்றால் என்ன, நாம் அவனிடம் போகலாமே என்று துடித்தது அவள் மனம்.
அவளோடு இருந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆனால், மனதில் இருந்ததைச் சொல்லத்தான் அத்தனை தயக்கமாக இருந்தது அவளுக்கு.
அப்போதுதான் கவனித்தாள், கார் வீட்டுக்குச் செல்லும் பாதையில் செல்லவில்லை என்பதை.
அடுத்தப் பத்தாம் நிமிடம், ராகவன் பணிபுரியும் அரசு மருத்துவமனையின் முன்பு காரை நிறுத்தியிருந்தான் உதய்.
ராகவி கேள்வியாகக் கணவனைப் பார்க்க, “சீ யூ மதுமிதா. உங்க ஷாப்பிங் பேக்ஸ் நாங்க எடுத்துட்டு போறோம். ஓகே? ராகவன் கூட வந்திடு” என உதய் சொல்ல,
“சரிங்கண்ணா. பை” என்றவள்,
மற்ற இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, காரில் இருந்து இறங்கி கணவன் பணி புரியும் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அவனுக்கு வேலை முடிய இன்னும் நேரம் இருந்தது. அதனால், அவனது காரை தேடி கார் நிறுத்துமிடம் நோக்கி நடந்தாள்.
அவனது காரில் சாய்ந்து நின்றபடி அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
அலைபேசியில் மூழ்கி இருந்தவளை மெலிதான விசில் சத்தம் கலைக்க, தானாக விரிந்த புன்னகையுடன் நிமிர்ந்தாள் அவள்.
அவளே டிசைன் செய்து, அவனுக்காகத் தைத்துக் கொடுத்திருந்த சட்டையில் இருந்தான்.
ஆகாய நீல வண்ணம் அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. ஒரு தேர்ந்த விளம்பர மாடலை போல நிமிர்ந்து நடந்து வந்தவனின் மேலிருந்து விழிகளை அகற்ற முடியாமல் தத்தளித்தாள் அவள்.
அவனை நிற்க வைத்துத் தைத்தது போலக் கச்சிதமாக இருந்த உடையும், நேர்த்தியாக வெட்டப்பட்டு, சீராகப் பின்னோக்கி வாரப்பட்டிருந்த தலை முடியும், அளவான மீசையும் அவனது முகத்தின் வசீகரத்தை கூட்டியிருக்க, விழிகளால் அவன் தலைக் கோதி, மீசையை இழுத்து, கன்னம் தாங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
நன்றாக இதழ் பிரித்துப் பற்கள் தெரிய புன்னகைத்து விசிலடித்தான் ராகவன்.
விசிலில் இருந்த இசையை, பாடலை கணித்தவளின் முகம் இன்னுமே மலர்ந்து, சிவந்து போனது.
“எந்த வாசல் வழி காதல் நடந்து வரும் என்று காத்துக் கிடந்தேன்” மீண்டும் மீண்டும் அதே வரிகளை விசிலடித்தபடி அவளை நெருங்கி வந்தான்.
“என்ன பார்வை அது? மனுஷனுக்குப் புல்லரிக்குது மது” அந்த ரகசிய குரலில் அவளுக்குத்தான் புல்லரித்தது.
பசும் மஞ்சள் நிற ஜார்ஜெட் சேலையில் அவன் விழிகளை நிறைத்தாள் அவள்.
ஒப்பனையற்ற தெளிவான முகம், புருவ மத்தியில் பளிச்சென்று மஞ்சள் நிற பொட்டு, வகிட்டில் குங்குமம், அத்தனைக்கும் மகுடம் வைத்தது போலப் பெரிய விழிகளில் அழகாகத் தீட்டப் பட்டிருந்த கண் மை, மையலாய் மனைவியைப் பார்த்தான் ராகவன்.
தலை முடியை மொத்தமாக அள்ளி, கிளிப்பில் அடக்கி இருந்தாள். ஒரு பக்க தோளில் அலை அலையாய் வழிந்து கொண்டிருந்தது கூந்தல்.
அப்படியே அவன் பார்வை கழுத்தில் பதிய, மின்னியது பொன் தாலி சரடு.
பெருமூச்சு விட்டுக் கொண்டான் ராகவன்.
மெல்ல அவளின் கைப் பிடித்தான். மொத்தமாய் அவனுள் அடங்கியது போலச் சிலிர்ப்பு ஓடி மறைந்தது அவளுள். அதை உணர்ந்து கொண்டவனின் புன்னகை மேலும் விரிந்தது.
“என்ன மது ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்க?” காரை திறந்தபடி அவன் கேட்க,
“உங்களைப் பார்க்கத்தான்…”
“ஓ, சாரி மா. ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியா? கால் பண்ணி இருக்கலாம் இல்ல? போர் அடிச்சதா?” மெய்யான கவலையுடன் அவன் கேட்க,
“போரா இல்லையே. கொஞ்சம் மெயில் அனுப்ப வேண்டிய வேலை இருந்தது. அதைப் பார்த்துட்டு இருந்தேன்” கேலியாகச் சொன்னாள் அவள்.
“பதிலை பாரு. இதுக்கு உங்களைப் பார்க்க வந்தேன் பெட்டரா இருந்தது.” முணுமுணுத்தான் ராகவன்.
“பதில் தெரிஞ்சுட்டே கேள்வி கேட்டா? அப்படித்தான்.” அவளும் பதிலுக்கு முணுமுணுக்க, இருவருக்குமே சிரிப்புதான் வந்தது.
“நீங்க இருங்க. நான் ட்ரைவ் பண்றேன்.” ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினாள் மதுமிதா.