நானும் எனது தனிமையும், அவ்வப்போது பேசிக் கொள்வோம். அப்படித் தானே மது? தனிமையில் இனிமையா?”
எதிர்பாரா நேரத்தில் வந்த கேள்வியில், அதில் இருந்த உண்மையில், உள்ளுக்குள் சிறிதே திடுக்கிட்டு, பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு திரும்பி வாயிலைப் பார்த்தாள் மதுமிதா.
அங்கே சுஹாசினி புன்னகையுடன் நின்றிருந்தாள்.
“வாங்க.” என்றாள் மதுமிதா.
பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து மடிக் கணினியில் வெவ்வேறு உடை மாதிரிகளை வரைந்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளுக்கு மறுபக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுஹாசினி.
“நேத்து காலைல ஊருக்கு வர்றேன்னு இன்போர்ம் பண்ணதான் ராகவனுக்கு மெசேஜ் பண்ணேன். ராகவிக்குச் சஸ்பென்ஸா இருக்கணும்னு நினைச்சு தான், அவகிட்ட இதைப் பத்தி நான் பேசவேயில்ல. ரெண்டு குழந்தைகளைக் கையில பிடிச்சுட்டு, கூடவே லக்கேஜ் இழுத்துட்டு, எப்படி வீட்டுக்குப் போகப் போறோம்னு பயந்துட்டேதான் வந்து இறங்கினேன் மது. ஆனா, வெளில வந்து பார்த்தா, நீயும், ராகவனும் நிக்கறீங்க. தெய்வத்தை நேர்ல பார்த்தது மாதிரி, அப்பாடானு இருந்தது. தாங்க்ஸ் ஃபார் கமிங் மது”
சுஹாசினி பேசுவதை, முகத்தில் இருந்த புன்னகை வாடாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் மதுமிதா.
“கல்யாணத்துக்குப் பின்னாடியும் ராகவன் மாறாம இருக்கறது ஆச்சரியமா இருக்கு. அவனை, அதே போல இருக்க விடுறதுக்குத் தேங்க்ஸ் மது” சுஹாசினி தொடர்ந்து சொல்ல, மதுமிதாவிற்கு இப்போது கணவனின் மனம் புரிந்தது.
தோழியை விட, அவளது குழந்தைகளுக்காகத்தான் கணவன் யோசித்திருக்கிறான் என்பது அவளுக்கு இப்போதுதான் உறைத்தது.
“நேத்து பலத்த அடியா?” சுஹாசினி சிரித்துக் கொண்டே கேட்க,
“எதுக்கு? யாருக்கு?” கேள்வியைப் புரிந்து கொள்ள முடியாது முழித்தாள் மதுமிதா.
“வேற யாருக்கு உன் ராகவுக்குத் தான். அடி வெளுத்துட்ட தானே?”
“இல்ல. ஏன் அடிக்கணும்?” மதுமிதாவின் குழப்பம் அவள் கண்களில் தெரிய,
“நானா இருந்தா அடி பின்னி இருப்பேன். எனக்குத் தெரியும் மது. நேத்து அவன் உன்கிட்ட எதுவும் சொல்லாம தான் என்னைப் பிக் அப் பண்ண கூட்டிட்டு வந்தான்னு. நீ முகம் திருப்பினது கூட, அதனாலதான் நான் தப்பாவே எடுத்துக்கல. இந்த ஆண்கள் எப்பவும் இப்படித்தான். நேத்து என்ன சொல்லி உன்னைக் கூட்டிட்டு வந்தான்? அதைச் சொல்லு முதல்ல…” சுஹாசினி கேட்க,
“வெளில போறதா ” தயக்கத்துடன் மதுமிதா இழுக்க,
“நினைச்சேன். இவங்களுக்கு இதே வேலதான். எங்க வீட்ல எல்லாம் இருக்காரே. பெரிய சொதப்பல் மன்னன். ஒரு டைம் என்ன பண்ணாரு தெரியுமா மது? இந்த வாரம், வீக்கெண்ட் ட்ரிப் போறோம் ரெடியா இருன்னு சொன்னார். ஆசை, ஆசையா கிளம்பி, குழந்தைகளையும் அள்ளிப் போட்டு போனா, பாதி ஆபீஸ் அங்கதான் இருக்கு. அவங்கங்க குடும்பத்தோட. அட பாவிகளான்னு இருந்தது. என்னதான் குழந்தைங்க அந்த அவுட்டிங்க என்ஜாய் பண்ணாலும் கூட, நம்ம மனசு இவங்களோட தனியா இருக்கணும்னு இல்ல தவிக்குது. அதுல கிடைக்கிற சந்தோசம்.. வேற எதுல வருது சொல்லு? ஆனா, அது இவங்களுக்குப் புரிஞ்சா தானே? ப்ளடி மூளை இல்லா தடியன்ஸ்.”
சுஹாசினியின் பேச்சில் மதுமிதாவின் முகம் பளிச்சென்று மலர, சத்தமாகச் சிரித்தாள் சுஹாசினி.
“உன்னோட சேலை ரொம்ப அழகா இருக்கு மது. நீ ராகவிக்கு டிசைன் பண்ணி கொடுத்திருக்கக் கவுன் கூட அவ்ளோ அழகா இருக்கு. தாய்ப்பால் கொடுக்க அவ்வளவு ஈஸியா, அதே நேரம் டிரஸ் பார்க்க ட்ரெண்ட்டியா, ரொம்ப நல்லா இருக்கு. அந்த மைசூர் பட்டை மாடர்ன் டிரஸ் போட வச்ச பெருமை உன்னையே சேரும்” சுஹாசினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்திருந்தாள் ராகவி.
“ரா, உன் பெருமையைத் தான் பேசிட்டு இருந்தேன் வா, வா” அவளை முறைத்துக் கொண்டே சென்று மதுமிதாவின் பக்கத்தில் அமர்ந்தாள் ராகவி.
“ஷாப்பிங் போகலாமா ரா? சென்னையை ரொம்ப மிஸ் பண்றேன். நீயும், எங்க கூட வாயேன் மது? உனக்கு வேலை எதுவும் இருக்கா? ஃப்ரீ தானே?” இருவரையும் பார்த்து சுஹாசினி கேட்க,
“போகலாமே. குட்டீஸ் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது இங்க இருக்க மாதிரி பார்த்துக்கலாம். நீயும் வா, மது” ராகவி சொல்ல, சரியென்று சம்மதித்துத் தலையசைத்தாள் மதுமிதா.
“ஓகே, நான் போய்க் குட்டி பையனுக்குத் தேவையானதை எடுத்து வச்சுட்டு வரேன். நீயும் உன் பசங்களுக்கு என்ன வேணும்னு பார்த்து எடுத்து வை. வா” சுஹாசினி கையைப் பிடித்து இழுத்தபடி எழுந்தாள் ராகவி.
“ஓகே. ஒரு நிமிஷம் ரா. நான் கேப் புக் பண்றேன்” சுஹாசினி சொல்ல,
“கேப் வேண்டாம் சுஹா. உதய், ஏதோ பென் ட்ரைவ் எடுக்க, கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வரேன்னு சொன்னார். அவரை ட்ராப் பண்ண சொல்லலாம். பண்ணுவார்”
“நீ இன்னுமா ரா, இதைச் சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருக்க? பென் ட்ரைவ் எடுக்க வந்தார், ஃபைல் எடுக்க வந்தார்னு..” சொல்லி விட்டு, வாயை பொத்திக் கொண்டு சுஹாசினி சிரிக்க, அவளைக் கண்ணைச் சுருக்கி முறைத்தாள் ராகவி.
மதுமிதா சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.
“சரி, சரி. நீ சொன்னதை நம்பிட்டேன். வா ரெடியாவோம்” தோழியின் கைப் பற்றி இழுத்துக் கொண்டு போனாள் சுஹாசினி.
முக்கால் மணி நேரம் கழித்துச் சென்னையின் பிரபலமான ஷாப்பிங் மாலில் இருந்தார்கள் அவர்கள்.
“ஹவ் எக் கிரேட் டைம். என்ஜாய்” என்று விட்டு, தன் வேலையைப் பார்க்கப் போனான் உதய்.
ராகவியின் குழந்தைகள் மூவருக்கும், மாமனார் மற்றும் ராகவனின் ஐயா, ஆயாவிற்கும் எதையெதையோ தேடி தேடி வாங்கிக் கொண்டிருந்தாள் மதுமிதா.
சுஹாசினி கேட்டதற்காக, அவளுக்குத் தைத்துக் கொடுக்கவெனக் காட்டன், சாட்டின் என இரு வகையான துணிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டாள்.
அதன் பின் அவள் விழிகள் தேடியது அனைத்தும் கணவனுக்குத் தான். முடிவில் அவளுக்கென்று எதுவுமே வாங்கி இருக்கவில்லை அவள்.
அழகான, எளிமையான ஜார்ஜெட் சேலையில், கைக் குழந்தை மித்ரனை தோளில் சுமந்து கொண்டு, ஷாப்பிங் மாலை சுற்றியவளை, அவள் மலர்ந்து புன்னகைத்திருந்த நொடி புகைப்படமாக எடுத்து ராகவனுக்கு அனுப்பி இருந்தாள் ராகவி. ஆனால், அவன் பார்க்கவே இல்லை.
கடை கடையாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை.