கண்களை அதிர்ச்சியுடன் விரித்து, “உன்னைய விடப் பத்து வயசு பெரியவர் அபி” என்றாள்.
“ப்ச், ஒன்பது வயசுதான்” என்றாள் அபிநந்தனா.
“ம்ம், உனக்கும் அவருக்கும் ஒரு ஜெனரேஷன் கேப் இருக்கும் அபி. ஆதி காலத்து அங்கிள் மாதிரி பிஹேவ் பண்ணா என்ன செய்வ?”
“…”
“நீ இன்ஜினியரிங் படிச்சிருக்க, அவரு வெறும் பாலிடெக்னிக் தான் படிச்சிருக்கார் போல அபி. நாளைக்கு இதுவே ஈகோ கிளாஷ் வர காரணமா இருக்கப் போகுது”
“ம்ம்”
“அவங்க வீட்ல மூனு லேடிஸ் இருக்காங்க. ஒரு அக்காவும், தங்கச்சியும் போல. அதுக்கு மேல மாமியார் வேற. நீ நல்லா யோசிச்சுக்கோம்மா. இவ்ளோ வயசு வித்தியாசத்தோட, ரெண்டு நாத்தனார் இருக்கக் குடும்பத்துல.. நானா இருந்தா வேணாம்னு சொல்லிடுவேன். இதுல 11 வருஷமா சார்ஜால இருக்காருன்னு போட்டிருக்கு அபி. அப்படின்னா கல்யாணமானதும்.. ம்க்கும்..” என்று தொண்டையைச் செருமி கண்ணைச் சிமிட்டினாள்.
“என்ன ம்க்கும்? என்னன்னு சொல்லித் தொலை” என்று எரிந்து விழுந்தாள்.
“இல்ல, வெயிட் பண்ணாம குழந்தை குட்டின்னு பாஸ்ட்டா இருப்பாரோன்னு..”
“ஆத்தி” என்று அதிர்ந்து விழி விரித்தாள் அபி. தற்போது அவளின் மனம் மறுப்பு நிலையில் நிலையாக நின்றிருந்தது.
அன்று மாலையே அவள் வீட்டுக்கு அவளின் தாய் மாமா மாணிக்கம் வந்தார்.
அவளிடம் சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்திருந்தார் அவர்.
“நா கொண்டு வந்த மாப்ள அபி. மாமா மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? மாமா உன் நல்லதுக்குத் தான்டா செய்வேன்” என்றார் அவள் முகம் பார்த்து.
“இல்ல மாமா..”
“மொத நா சொல்றத கேளுங்கறேன். மாப்ள வீட்டுக்கு ஒரே பையன். உன் அளவுக்குப் பெரிய படிப்பு இல்லைன்னு நினைக்காத. சார்ஜால பெரிய கம்பெனில கரோஷன் சைட் என்ஜினீயராம் அவரு. சம்பளமே மூனு லட்சத்தை நெருக்கி வாங்குறாரு. நம்மள மாரி விவசாயக் குடும்பம்தேன். ரொம்பப் பொறுப்பான பையன், அக்கா, தங்கச்சிங்கள அவருதேன் கட்டிக் கொடுத்தார்னா பார்த்துக்கோ. இங்கன அவங்க ஊருல மூனு வருஷத்துக்கு முன்னுக்கப் பெருசா வீடும் கட்டிட்டாப்ல. அந்தக் கடன் மட்டும் கொஞ்சம் இருக்கு போல. ஆனா அதையும் ரெண்டு வருஷத்துல அடைச்சுடுவேன்னு சொல்றாப்ல. உன்னையும் கல்யாணம் முடிச்ச கையோட கூடவே கூட்டிட்டு போறேன்னு சொல்லுறார். நீ ஆசப்பட்டா கண்டிப்பா வேலைக்கு அனுப்புவார். நான் வேணும்ன்னா அவர்கிட்ட சொல்லி வைக்கறேன்” என்று அவளுக்கு விளக்கமாக எடுத்து சொல்லி, அவளின் விருப்பம் நிறைவேற்ற வாக்குறுதியும் அளித்தார்.
அப்போதும் அவள் முகம் தெளியாதது கண்டு, “நம்ம வீட்டு மாடியிலதேன் மாப்ளையோட அக்கா கொழுந்தன் குடியிருக்காங்க. உனக்குத் தெரியுமே அவங்கள. மாப்ள வீடு அவுகள பாக்க வரும் போது நம்ம வீட்டுக்குள்ள சும்மா பேச வந்தாங்க. அப்போ நம்ம வீட்டு ஹால்ல இருந்த உன் போட்டோ பார்த்திட்டு அவங்க அக்கா யாரு என்னான்னு விசாரிச்சு உங்க வீடு வரைக்கும் வந்துட்டாங்க. மாமா சொல்றது புரியுதா? உன்னைய மாப்ள வீட்ல விரும்பி கேக்கறாங்க. அதுனால நல்லா வச்சுப்பார் மாப்ள” என்று அவர் சொல்லவும், அவள் முகத்தில் சற்றே தெளிவு வந்தது. மேலும் சில நிமிடங்கள் மாப்பிள்ளையின் குடும்பம் மற்றும் அவனைக் குறித்து அவர் பேச பேச, கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் காண்பித்தாள்.
“இந்தக் காலத்துல யாரு வயசெல்லாம் பார்க்கறா? நீ மாப்ள போட்டோ பார்த்தியா? உனக்குப் பிடிச்சுருந்தா போதும். இந்தக் கல்யாணத்தை நல்லபடியா முடிக்க வேண்டியது மாமா பொறுப்புங்கறேன்” என்று அடித்துச் சொல்லி அவள் முகத்தைப் பார்த்தார்.
“இல்ல மாமா..”
“என்னா அபி, மாமா இம்புட்டு சொல்லியும் நீ இப்படிப் பேசினா நல்லாவா இருக்கு. நம்ம வீட்டு சூழ்நிலைய யோசிச்சு நல்ல முடிவா எடுக்கணும்டா. நாங்க என்னா உனக்குக் கெடுதலா செய்யப் போறோம்? நான்தேன் தங்கமான பையன்னு சர்டிபிகேட் கொடுக்கறேனே? அதுக்கு மேல என்னா வேணும் உனக்கு? உங்கம்மாப்பாவை யோசி. உனக்கு அப்புறம் உன் தங்கச்சி இருக்கா, அதெல்லாம் யோசிக்கணும் அபிம்மா” என்றார்.
மெதுவாகத் தலையசைத்து, “ம்ம், சரி மாமா” என்றாள். அவரும் மாப்பிள்ளை மற்றும் அவன் வீட்டினரின் அருமை பெருமைகளை எல்லாம் பேசி பேசியே அவள் மனத்தைக் கரைத்திருந்தார். அப்போதும் முழு மனத்துடன் சம்மதம் என்று சொல்லவில்லை அவள்.
வீட்டினரும் அவளைத் தொல்லை செய்யாமல் அவள் போக்கில் விட்டனர்.
வெள்ளிக்கிழமை மாலை சொன்னது போல மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள்.
அதுவரை அவனது புகைப்படம் கூட அவள் பார்த்திருக்கவில்லை. அவனோ இப்போது அவள் முன் கைக் கட்டி சாய்ந்து நின்றிருந்தான்.
“என்ன அபி? உங்களுக்கு ஓகேவா?” என்று நேரடியாக அவள் கண்களைப் பார்த்து கேட்டான்.
“என்ன ஓகேவா?” என எதிர்கேள்வி கேட்டாள்.
“அபிநந்தனாக்கு சக்திவேலை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமான்னு கேட்டேன்?” என்று சொல்லி அவளின் பதிலுக்காக ஆவலுடன் அவள் முகம் பார்த்து நின்றான் சக்திவேல்.