அவளுக்காகத்தான் செய்திருக்கிறான். ஆனால், அவள் என்ன எதிர்பார்த்தாள் என்பதை எப்படி விளக்குவாள்.
“நான் உங்க கூடத் தனியா இருக்கணும்னு.. சாரி”
“தனியா இல்லாம? இப்ப என்ன நம்ம கூட நாலு பேரு இருக்காங்களா என்ன?” அமைதியாகக் கேட்டான்.
“ஹாங்… ” என்ன பதில் சொல்வாள்.
“அதில்ல ராகவ்..” அவள் தொடங்க, அவளைப் பேச விடாமல் அவனே பேசினான்.
“எதையும் வாயைத் தொறந்து சொல்லணும் மது. உன் முகம் பார்த்தே எல்லாத்தையும் என்னால தெரிஞ்சுக்க முடியாது. அதே போல, நான் ஒன்னு செய்யறேன்னா, ஏன் இப்படிப் பண்றீங்கன்னு கேள்வி கேட்கனும். உன் இஷ்டத்துக்கு நீயே ஒரு பதிலை தேடிக்க கூடாது. அப்படி நீ தேடிக்கற பதிலுக்கு நான் பொறுப்பாகவும் மாட்டேன்.”
அவளின் கண்களைப் பார்த்துக் கூர்மையாகச் சொல்லி விட்டு, விலகி நடந்தான் அவன்.
மதுமிதா அப்படியே படுக்கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
முன்னர்த் தனிமையை உணரும் போதெல்லாம், பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்த பாட்டியிடம் ஓடுவாள். நாலு வார்த்தை அன்பாகப் பேசி, தலைக் கோதி விட்டு, நானூறு முறை திட்டவும் செய்வார். ஆனாலும், அவரது அன்பும், கடிமான அக்கறையும், கண்டிப்பும் தனித் தானே.
அவர் இல்லாத வெறுமை அவளை அதிகம் தாக்க, இன்று கணவனைத் தேடினாள். ஆனால், அது எங்கு வந்து முடிந்திருக்கிறது.
அவளுக்குத்தான் சரியாகப் பேசத் தெரியவில்லையோ?
அதிலும், உடல் நலமின்றி இருந்த சிறுவனைப் பார்த்துத் தைரியம் சொல்லி விட்டு வந்து அதைக் குற்றமாகப் பேசி இருக்கக் கூடாதோ? மீண்டும் கேள்விகள் முளைத்துச் சஞ்சலத்தைக் கொடுத்தது.
இயந்திர கதியில் எழுந்து சென்று உடை மாற்றினாள். கீழிறங்கி போய் அவனுக்குப் பாலை சூடு செய்து எடுத்துக் கொண்டு வந்தவளை, நல்ல உறக்கத்தில் இருந்த கணவனே வரவேற்றான்.
அவனை எழுப்பி, அவனது தூக்கத்தைக் கலைக்க மனமில்லாமல், பாலை பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து விட்டு, மறுபக்கமாகச் சென்று படுக்கையை ஆக்கிரமித்து, விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தாள் மதுமிதா.
திருமணமாகி இத்தனை மாதங்களில் எத்தனையோ சண்டை போட்டிருக்கிறாள். எண்ணற்ற வாக்குவாதங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால், இப்படி ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி படுத்ததே இல்லை.
மனதில் மெலிதான விரிசல் விழுந்ததோ, நினைக்கையிலேயே அவளுக்கு நெஞ்சை அடைக்கும் உணர்வு.
மணி ஒன்று அடிக்க, தானாக நெருங்கி, கணவனைப் பின்னிருந்து அணைத்து மெல்ல கண் மூடினாள் அவள்.
அறைக் கதவு திறந்து மூடும் மெல்லிய சத்தம், அப்போதுதான் உறக்கத்தில் ஆழ்ந்தவளை கண் விழிக்கச் செய்தது.
விடி விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள். ராகவன் வெளியில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் குளித்திருப்பான் போலும், தலை முடியில் ஈரத்திற்கான தடயம் இருந்தது.
“ராகவ், என்னாச்சு?” மெல்ல அழைத்து, அவள் கேட்க,
இரண்டே எட்டில் அவள் முன் வந்து, “சாரி மது. ஒரு எமர்ஜென்சி. ஆக்சிடென்ட் கேஸ். காலேஜ் பசங்க, பைக் ரேஸ் பண்ணி இருக்கானுங்க. மழையில வண்டி ஸ்கிட்டாகி… ப்ச், ரெண்டு பேரு ஸ்பாட்அவுட். நாலு பேருக்கு நல்ல அடி போல. உயிருக்கு போராடிட்டு இருக்கானுங்களாம். எங்க அடி, என்ன ஆபரேஷன், நோ ஐடியா. அங்க போனாதான் தெரியும்.”
“தலையில, முதுகுல அடிபட்டிருக்க வாய்ப்பு அதிகம். ஆபரேஷன் முடிய எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல மது. நான் அது முடிச்சுட்டு நேரா கவர்மென்ட் ஹாஸ்பிடல் போய்டுவேன். கால் பண்றேன். ஓகே?” அவன் உடலில் இருந்த பரபரப்பு, அவன் குரலிலும் இருந்தது. அத்தனை வேகமாகச் செய்தியை சொன்னான் அவன்.
அதே வேகத்துடன் கார் சாவி, அலைபேசி, பர்ஸ் என அவனுக்குத் தேவையான அனைத்தையும் அள்ளிக் கொண்டு அறை வாயிலை நோக்கி நடந்தவன், சட்டென்று திரும்பி அவளிடம் வந்தான்.
தூக்கக் கலக்கத்துடன் அமர்ந்திருந்தவளின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு, “நேத்திக்கு நான் பண்ணது தப்புதான் மது. சாரி, பிளீஸ் ரொம்ப யோசிச்சு குழப்பிக்காம, நல்லா தூங்கி எழுந்திரு. சரியா? இன்னைக்குச் சீக்கிரம் வர பார்க்கறேன். நைட் பொறுமையா பேசலாம்” உச்சியில் அழுத்தமாய் முத்தமிட்டு, அவள் பதில் சொல்லும் முன் மறைந்திருந்தான் ராகவன்.
அவன் முத்தமிட்ட கன்னம் குறுகுறுக்க, மெலிதான புன்னகையுடன் நிமிர்ந்தவளின் பார்வை கடிகாரத்தின் மேல் படிய, அது அதிகாலை இரண்டு மணி என்றது.
மயக்கவியல் மருத்துவர்களுக்கு அவர்களின் வேலை பளுவினால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி எப்போதோ வாசித்தது, அவளுக்கு இப்போது நினைவில் வந்து மனதை அழுத்தி கலக்கமுற செய்தது.
நீண்ட நேரம் அறுவை சிகிச்சை அரங்கத்தில் நிற்பதால் ஏற்படும் நாள்பட்ட உடல் சோர்வு (Chronic fatigue), சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் காலப் போக்கில் தானாகவே வந்து விடும் பசியின்மை (loss of appetite) என்பதெல்லாம் ஒவ்வொன்றாக மனதில் வலம் வர, கலக்கத்துடன் தூக்கம் தொலைத்து அமர்ந்திருந்தாள் மதுமிதா.
கணவன் இனி வீடு வர, மணி இரவு பத்தாகி விடும். கிட்டத்தட்ட பதினெட்டு மணி நேர வேலை, ஒவ்வொரு நொடியும் அவன் விழிப்புடன் செய்ய வேண்டிய வேலை.
இதில் அவளின் கவலை வேறு அவனுக்குச் சேர்ந்திருக்கும்.
அவளுக்கு முன் தின மாலையில் இருந்து சேர்த்து வைத்திருந்த அழுகை இப்போது வெடித்துக் கொண்டு வெளிவந்தது.
இனி என்ன ஆனாலும் சரி, கணவனைத் தேவையில்லாமல் வார்த்தைகளால் வதைக்கக் கூடாது என்ற முடிவுடன் கண்களை மூடினாள் மதுமிதா.
ஆனால், அடுத்த இரண்டாம் நாள் ராகவி குடும்பம் அந்த வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்திருந்தது.
காரணம் அவள் சிறிதும் யோசிக்காமல் விட்ட வார்த்தைகள்.
மனைவியை ஒன்றுமே சொல்லாமல் ஒதுங்கிப் போன ராகவனின் பார்வையில் என்ன இருந்தது. அவளுக்குத் தெரியவில்லை.
அவள் வெகு இயல்பாகச் சொன்ன ஒன்றை, இத்தனை தீவிரமாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று அவள் எங்கனம் அறிவாள்?
சாதாரணமாகச் சொல்லப்பட்ட அவளின் வார்த்தைகளுக்கு, அவர்களாக வேறொரு அர்த்தம் கற்பித்துக் கொண்டால், அதற்கு அவளா பொறுப்பு?
ஏனோ அவளுக்கு மன்னிப்பு கேட்கவே தோன்றவில்லை.
தன்னோடு ஒட்டிப் பிறந்த இரட்டை, சகோதரியான ராகவியின் மேல் உயிரையே வைத்திருந்த ராகவனுக்கு, மனைவியின் மேல் மலையளவு கோபம் வந்திருந்தது. ஆனால், அந்தக் கோபத்தை மனைவியிடம் பேசாமல் இருந்து காண்பித்தான் அவன்.
மதுமிதா உடைந்து போனாள்.
பட்சிகள் பேசும்…