“எனக்குச் சம்மதம் இல்ல” என்று அழுத்தமாகச் சொன்னாள் அபிநந்தனா. வீட்டின் நடுக்கூடத்தில் இறுக்கமான உடல் மொழியுடன், பிடிவாதத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்தது போல முகத்தை நிமிர்த்தி வைத்து, கோபத்தில் மூச்சு வாங்க நின்றிருந்தாள்.
“ஏன்டி நா எம்புட்டு நல்ல விஷயம் பேசிட்டு இருக்கேன். நீ என்னண்டா அச்சாணியமா பேசிட்டு இருக்க? கொஞ்சமாவது கூறு இருக்கா உங்க பொண்ணுக்கு?” என்று தன் கோபத்தை மகளில் தொடங்கிக் கணவரிடம் முடித்தார் அபியின் தாயார் காமாட்சி.
“அபிம்மா” என்று அவளின் அப்பா குருநாதன் கண்டிப்புடன் அழைக்க, “எனக்கு இஷ்டம் இல்லன்னு நா சொல்றது உங்களுக்குப் புரியலையாப்பா? நீங்களும் அம்மா மாதிரியே பேசுறீங்கப்பா” என்று தொண்டையடைக்கப் பதில் சொன்ன மகளிடம் அவரால் கண்டிப்பு காட்ட முடியவில்லை.
கணவரையும், மகளையும் மாறி மாறிப் பார்த்த காமாட்சி, “இது ஆகுறது இல்ல, நா மாப்ள வீட்ட வர சொல்லிட்டேன். அவங்க வெள்ளிக்கிழமை இவளை பொண்ணு பார்க்க நம்ம வீட்டுக்கு வரத்தான் போறாங்க. இவ கல்யாணம் நல்லபடியா முடிவாகப் போகுது. ஆமா, சொல்லிட்டேன்” என்றார் உறுதியாக.
குருநாதன் மகளைப் பாசமாகப் பார்த்து, “அவங்க ரொம்ப நல்ல குடும்பம் அபிம்மா. பையன் தங்கமான பையன்னு யாரை கேட்டாலும் சொல்றாங்க. வெளிநாட்டு வேலை வேற..” என்று அவர் சொல்ல, “அப்போ என்னைக் கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு வெளிநாட்டுக்கு துரத்தி விடணும்னு பிளான் பண்றீங்க, அப்படித்தானேப்பா? எம் மேல பாசமே இல்ல உங்களுக்கு.” என்று கோபமாகப் படபடத்தாள்.
“ஆமா, என்னா இப்போ?” என்று கேட்ட அம்மாவை கடுமையாக முறைத்தாள்.
“பாசம் இல்ல வேஷம் இல்லைன்னுட்டு, போடி அங்குட்டு. எங்க மக நீயி நல்லா இருக்கணும்னு நாங்க யோசிச்சா..”
“நா வெளிநாடு போயிட்டா அங்க நல்லா இருக்கனா இல்லையான்னு உங்களுக்கு எப்படித் தெரியுமாம்?” என்று கையை வீசி கேட்டாள்.
அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு ஒரு நொடி திருதிருத்த காமாட்சி, “அதெல்லாம் மாப்ள தங்கமான பையனாம், விசாரிச்சாச்சு. உன்னைய நல்லா பார்த்துப்பாங்க. சும்மா தட்டி கழிக்கற மாரி பேசாம, ஒழுங்கா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லு” என்று அவளை மிரட்டினார்.
சட்டெனப் பார்வையை அப்பாவுக்குத் திருப்பினாள் அபிநந்தனா.
“அப்பா விசாரிச்சுட்டேன் தங்கப்புள்ள..” என்றவரை இடையிட்டு, “நான் இப்பத்தானேப்பா காலேஜ் முடிச்சேன். எனக்கு வேலைக்குப் போகணும்ப்பா. நா எவ்ளோ ஆசையா வேலைக்குப் போகணும்னு இருந்தேன்னு உங்களுக்குத் தெரியும் இல்லப்பா? அப்புறம் ஏன்ப்பா?” என்று முறையிட்டாள்.
“நீயி வெளிநாட்டுக்கு போய் வேலைக்குப் போ, உன்னைய யாரு வேணாம்னு சொன்னாங்க. மாப்ள அதெல்லாம் தடுக்க மாட்டார்” என்று காமாட்சி கூற, “நீ எங்கிட்ட பேசாதம்மா” என்று கத்தினாள்.
“நீங்க முடிவே பண்ணிட்டீங்களாப்பா? அதுவும் என்கிட்ட கேட்காமலேயே?” என்றாள் கோபத்தில் நடுங்கிய குரலில்.
மகள் அப்படிக் கேட்கவும் குருநாதன் திரும்பி மனைவியைப் பார்த்தார்.
“ஆமா” என்று அழுத்தமாக மகளுக்குப் பதில் சொன்னார் காமாட்சி.
“இந்தா இதுல மாப்ள வெவரம் இருக்கு, பாரு. போட்டோ உன் போனுக்கு அனுப்ப சொல்லியிருக்கேன். பார்த்துக்கோ. பிடிச்சிருக்கான்னு சொல்லு” என்றார். அபிநந்தனா முகத்தை ஒடித்துத் திருப்பிய வேகத்தில் அவளின் பதில் என்னவாக இருக்கும் என்று பெற்றவர்களுக்குத் தெரிந்து போனது.
“எதையும் யோசிக்காம பேசக் கூடாது அபிம்மா. மொத மாப்ள வெவரத்த பார்த்துட்டு அப்புறம் உன் முடிவை சொல்லு” என்றார் குருநாதன். அப்பா இப்படிக் கடுமையாகப் பேசுவது எல்லாம் அரிது என்பதால் அவரை மறுத்து பேச துணிவின்றி மெதுவாகத் தலையசைத்தாள். ஆனால் உதட்டில் சம்மதமில்லை என்ற வார்த்தையே உறைந்திருந்தது. அப்பா நீட்டிய காகித உறையை வாங்கிக் கொண்டு விறுவிறுவென்று வீட்டின் பின் பக்கம் சென்றிருந்தாள்.
மதுரையின் புறநகர் பகுதியான அரசனூர் கிராமம் அது. விவசாயத்திற்குப் பெயர் போன ஊர்.
பல தலைமுறைகளாகக் குருநாதன் குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
வீடு வயலை ஒட்டியே அமைந்திருந்தது. இம்முறை பருத்தி பயிரிட்டிருந்தார்.
அபிநந்தனா வீட்டின் பின்புறம் வந்து நிற்க, அவளின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பாய் விரித்திருந்தது. அதில் மேகத்தைக் கிள்ளி, அள்ளி தெளித்தது போல ஆங்காங்கே வெள்ளையாய் பருத்தி வெடித்திருந்தது. வீட்டின் பின்பக்க தோட்டத்தில் பப்பாளி மரங்கள் இருக்க, அதன் மேல் சாய்ந்து நின்று அவளின் தோழி சுபாஷிணியை அழைத்தாள்.
அவளோ ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை அடுக்க, “என்னைய நாளான்னைக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்களாம். நா வேணாம்னு சொன்னாலும் அம்மாப்பா கேட்கறதா இல்ல. இப்போ நீ வர்றியா இல்லையா?” என்று பெற்றோரின் மீதிருந்த கோபத்தை எல்லாம் தோழியின் மீது திருப்பினாள்.
விளைவு, அதே ஊரில் இருந்த அவளின் தோழி அடுத்த இருபதாம் நிமிடம் அவள் வீட்டில் இருந்தாள்.
“என்ன அபி உன் பிரச்சினை? என்னைக்கு இருந்தாலும் நாம கல்யாணம் பண்ணித்தானே ஆகணும்? அத இப்பவே பண்ணிக்கிட்டா என்னாங்கறேன்?”
“ஏய் மரமண்ட எனக்கு வேலைக்குப் போகணும் சுபா”
“கல்யாணத்துக்கு அப்புறம் கூட வேலைக்குப் போகலாமே?” என்று புருவம் உயர்த்தினாள்.
“எங்க துபாய்லயா? நாம இப்பதான் காலேஜ் முடிச்சுருக்கோம். இதுல கல்யாணம் முடிச்சுட்டு அங்க போனா கலெக்டர் வேலையா எனக்குத் தரப் போறாய்ங்க?”
“ம்ம், சரியான கேள்வி. உன் கவலை எனக்குப் புரியுது” என்றாள் சுபாஷிணி.
“ஆமா, உன்னைய பொண்ணு பாக்க வர்ற அந்தப் புனித ஆத்மா பத்தி ஒன்னுமே சொல்லலையே நீயி? அவரு போட்டோ பார்த்தியா பிடிச்சிருக்கா?” என்று ஆர்வத்துடன் விசாரித்தாள். அதன் பிரதிபலிப்பு கொஞ்சமும் இல்லாமல் உதட்டை பிதுக்கி, தன் கையில் இருந்த உறையை அவள் கையில் திணித்தாள் அபிநந்தனா.
அவள் முகத்தில் ஆவலின் சாயலே இல்லை. ஆனால், சுபாஷிணி ஆவலே உருவாக அந்த உறையைப் பிரித்தாள். மறுகணம் அவள் முகமே மாறி விட்டது.