சாதகப் பட்சிகள் – 10 (2)

அவள் முகத்தையே கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“யூ ஓகே மது? எதையும் மனசுல போட்டு குழப்பிக்கறியா? என்கிட்ட எதையும் மறைக்கறியா? என்ன பிரச்சினை மது? ஏன் ஒரு மாதிரி இருக்க? நீ சொன்னா தானே எனக்குத் தெரியும். ஹ்ம்ம்” மெல்ல அவள் கரம் பற்றிப் படுக்கையில் அமர வைத்தான்.

அவளின் பற்றியிருந்த கரத்தை விடாமல், அவளின் உள்ளங்கையில் கோலம் வரைந்து கொண்டிருந்தான் அவன்.

“இன்னைக்குக் காலைல என்ன கேட்டேன் நான்?” கோபமாகத்தான் கேட்க நினைத்தாள். ஆனால், கெஞ்சலாகதான் ஒலித்தது குரல்.

“என்ன கேட்ட மது?” உள்ளங்கை ரேகைகளை விரல் நுனியால் வருடியபடி கேட்டான் அவன். பட்டென்று அவன் கையை உதறி விட்டு எழுந்தாள் அவள்.

“சீக்கிரம் வர முடியுமா? வெளில போகலாமானு கேட்டேன் தானே? என்ன சொன்னீங்க நீங்க? ரெண்டு ஆபரேஷன் இருக்கு. முடியாதுன்னு. ஆனா…” கோபத்தில் குரல் உயர்ந்திருந்ததை அவள் உணரவேயில்லை.

அவளைப் புருவம் சுருக்கி பார்த்தவன், “அதான் சீக்கிரம் வந்துட்டேன், இல்ல மது. வெளில கூடப் போனோமே” என்று அவன் குழப்பத்துடன் சொல்ல,

அவளுக்கு அப்படியே கத்த வேண்டும் போலிருந்தது.

“வந்தீங்க. இல்லைனு சொல்லலை. ஆனா, எனக்காகவா வந்தீங்க? வந்து என்ன பண்ணீங்க ராகவ்? எங்க போனோம்?” படபடவென்று அவள் பொரிய, அவன் முகம் மாறவே இல்லை.

“உனக்காகதான் வந்தேன் மது” நிதானமாகப் பதில் சொன்னான் ராகவன்.

அவளுக்கு நிதானம் பறந்திருந்தது.

“என்ன, என்ன, என்ன சொன்னீங்க? எனக்காக வந்தீங்களா? கிழிச்சீங்க. உங்க ப்ரெண்ட்ஸ்காக வந்தீங்க. உங்க ப்ரெண்ட் சுஹாசினியை போய் ஏர்போர்ட்டில் இருந்து பிக் அப் பண்ண வந்தீங்க. உங்க ப்ரெண்ட் குழந்தையைப் போய்ப் பார்க்க வந்தீங்க, இதில் நான் எங்க வந்தேன்.?”

“என்கிட்ட ஒரு வார்த்தை முன்னாடியே சொன்னீங்களா இதைப் பத்தி? ஏர்போர்ட் போற வழியிலதான் சொல்றீங்க? நான் சரினு சொல்லி உங்க கூடவே வர்றதை தவிர, வேற என்ன ஆப்ஷன் இருக்கு எனக்கு?”

“சுஹாசினியை வீட்ல விட்டதுக்கு அப்புறமாவது, நீ எங்கயாவது போக ஆசைப்படுறீயான்னு, என்கிட்ட கேட்பீங்கனு எதிர்பார்த்தது என் தப்பு தான். எங்க போகலாம்னு நீங்க கேட்காதப்பவே நான் சுதாரிச்சு இருக்கணும். அமைதியா, உங்களை வால் பிடிச்சுட்டு வந்தேன் இல்ல. அதுவும் என் தப்புதான். உங்களை ஏன் குறை சொல்லணும். நீங்க என்ன தப்பு பண்ணீங்க?” மூச்சு வாங்க அவள் பேச, ஒரே கேள்வியில் அவளின் வாயை அடைத்தான் அவன்.

“அப்போ, நான் உனக்கு முக்கியமில்லையா மது? என்னைச் சார்ந்தவங்க உனக்கு ஒன்னுமே இல்லையா?”

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், இரு முறை வாயை திறந்து திறந்து மூட மட்டுமே முடிந்தது அவளால்.

“வெளிநாட்டில இருந்து ஒத்தையா சின்னக் குழந்தையை வச்சுட்டு தனியா டிராவல் பண்ணி வந்திருக்கா சுஹா. அவளைக் கூப்பிட போனதையா தப்பு சொல்ற மது? அவங்க வீட்ல அவளைக் கூப்பிட போக யாரும் இல்லைனு உனக்குத் தெரியும் தானே? அப்புறமும் எப்படி உன்னால இப்படிப் பேச முடியுது?”

‘ஏன் அவ என்ன சின்னக் குழந்தையா, அவங்க வீட்டுக்கு அவளுக்கு வழி தெரியாதா?’ நினைக்கத்தான் செய்தாள். ஆனால், சத்தமாகக் கேட்கவில்லை.

“என் ப்ரெண்ட் பையன், அவனுக்கு ஹார்ட் பிராப்ளம் மது. சின்னக் குழந்தை மது. தைரியம் சொல்ல தானே போனோம். நம்மகிட்ட பேசினதும் அவன் முகம் எப்படி மாறி போச்சு பார்த்த தானே? ஆபரேஷன் பத்தின அவனோட பயம் எல்லாம் காணாம போய், நாம கிளம்பும் போது எவ்வளவு தெளிவா பேசினான். நீ கூட அவ்ளோ பேசினியே மது. உனக்கு அவனைப் பிடிச்சதுன்னு நினைச்சேன். அவனுக்காகக் கவலைப்படுறன்னு நினைச்சேன். ஆனா, அவனைப் பார்க்க போனதையா…” சொல்லி முடிக்காமல் தோளை குலுக்கினான் அவன்.

அதைக் கேட்டதற்காக அவளுக்குத்தான் குற்ற உணர்ச்சியாகிப் போனது.

அந்தக் குழந்தைக்காக அவள் கவலைப்பட்டாள் தான். ஏன், பயப்படக் கூடச் செய்தாள். “எப்படி, இவ்வளவு சின்னப் பையனுக்கு மயக்கம் கொடுப்பீங்க ராகவ்?” என்று கவலையுடன் கணவனிடமே விசாரிக்கவும் செய்தாளே.

ஆனால், அவளின் ஒற்றைக் கேள்வியில் அத்தனையும் ஒன்றுமில்லாமல் போய் விட்டதே. ஏதோ அவள் தான் மனிதாபிமானமே இல்லாதவள் போல அல்லவா ஆகி விட்டது.

“நான் உன்னைக் குறை சொல்லலை மது” அவளின் மனதை படித்தவனாக அவன் சொல்ல,

“நானும், உங்க ப்ரெண்ட்ஸை பார்க்க போனதை தப்புன்னு சொல்லலை ராகவ். நான் கேட்க வந்ததை, நீங்கதான் சரியா புரிஞ்சுக்கலை” ஆதங்கத்துடன் சொன்னாள் அவள்.

“என்ன சரியா புரிஞ்சுக்கலை மது? இதே சுஹாசினி இடத்தில வெண்பா இருந்திருந்தா என்ன பண்ணி இருப்ப? அப்பவும் இப்படித்தான் என் கூடச் சண்டை போடுவியா? அந்தக் குட்டி பையன், வேண்டாம். விடு” வெறுப்புடன் காற்றில் கையை உதறிய படி, எழுந்து குளியல் அறையை நோக்கி சென்றான் அவன்.

அவனுக்கு முன்னே ஓடி, வழியை மறித்துக் கொண்டு நின்றாள் அவள்.

“சாரி. என் கோபம்.. இல்ல.. என்னோட ஆதங்கம். நீங்க எனக்காக உங்க ஆபரேஷனை முரளி அண்ணாக்கு மாத்தி விடலைன்னு தான். அதைத் தான் சரியா கேட்காமா, வந்து…”

தன் பக்கம்தான் தவறு போலத் திக்கி, தடுமாறினாள் அவள்.

அவளைக் கண் இமைக்காது பார்த்துக் கொண்டே, எட்டிப் படுக்கையில் இருந்த அவனது அலைபேசியை எடுத்து அவள் முன் நீட்டினான் ராகவன்.

“முரளிக்கு என்ன மெசேஜ் அனுப்பி இருக்கேன்னு ஓபன் பண்ணி, சத்தமாகப் படி” இறுக்கத்துடன் சொன்னான்.

அவன் சொன்னதைச் செய்தாள் மதுமிதா.

“இன்னைக்கு நீ ஃப்ரீயா மச்சான்? ஈவ்னிங் என்னோட ரெண்டு ஆபரேஷனை நீ பார்க்க முடியுமா?”

“உன் கால்ல விழுறேன் டா மச்சான். பிளீஸ். உன்னால முடியலைன்னா, வேற யாருக்காவது மாத்தி விடுடா நல்லவனே.”

“முடியாது.” ஒற்றை வார்த்தையில் வந்திருந்தது டாக்டர் முரளியின் பதில்.

“என் பொண்டாட்டியை வெளில கூட்டிட்டு போகனும்டா. பிளீஸ்டா.”

“ஹாஸ்பிட்டலுக்குக் கால் பண்ணி, வர முடியலைன்னு இன்பார்ம் பண்ணு. அவங்க பார்த்துப்பாங்க.” கறாராக வந்தது முரளியின் பதில்.

“டேய், இன்னைக்கு ஈவ்னிங் ஆபரேஷன் டா. இப்போ போய் எப்படி முடியாது சொல்றது?”

“ஓகே. யோசிக்கறேன். பதிலுக்கு, எனக்கு என்ன வாங்கித் தருவ?” பேரம் பேசி இருந்தான் முரளி.

“நேர்ல பார்க்கும் போது நாலு அறை தரேன் டா. என்ன வேணும் சொல்லித் தொலை. ரெண்டாயிரம் தான் பட்ஜெட்.”

“அட பிச்சைக்காரா…”

முரளியின் பதில் அவளுக்கு மெல்லிய புன்னகையை வரவழைத்தது. ஆனால், ராகவன் அப்படியேதான் நின்றிருந்தான்.

“நானே பார்த்துக்கறேன். போடா. என்கிட்ட இதே போல வருவ இல்ல. அப்ப அழ விடுறேன் உன்னை” கோபத்துடன் முடித்திருந்தான் ராகவன்.

“தேஜா ஹாஸ்பிடல் உனக்குப் பதிலா நான் போறேன். அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிடு. அந்தக் கொலிசிஸ்டெக்டமி (Cholecystectomy – கால்பிளாடர் ரிமூவல் சர்ஜரி) நம்ம ஜூனியர் ஆர்த்தியை பார்க்க சொல்லி இருக்கேன். அதையும் அவங்களுக்குச் சொல்லிடு. இத்தனையும் தங்கச்சி மதுக்காகத் தான் செய்யறேன். உனக்காக இல்லடா.” அவன் கேட்டு, மூன்று மணி நேரங்கள் கழித்துப் பதில் அனுப்பி இருந்தார் முரளி.

error: Content is protected !!
Scroll to Top