ஆவல் மீற பார்க்குதே – 4 (2)

அபிக்கு ஆயிரம் சந்தேகங்களும், கேள்விகளும் இருந்தன. அதையெல்லாம் சக்தியிடம் கேட்க, அன்றிரவே அவளை அனுசுயாவிடம் அழைத்துச் சென்றான்.

“அக்கா, இன்டர்வியூல என்னக்கா கேள்வி கேட்பாங்க?” என்று அனுசுயாவிடம் ஆரம்பித்தாள் அபி.

“நா மார்கெட்டிங்ல இருக்கேன் அபி. எனக்கு ஐடில என்ன மாதிரியான கேள்வி கேட்பாங்கன்னு தெரியாதே” என்ற அனுசுயா, “இரு, கூகுள் பண்ணுவோம். அது தவிர நாமளே பேசிக் இன்டர்வியூ கொசின்ஸ்க்கு ரெடியாவோம்” என்று அவளைத் தயார்ப்படுத்தினாள்.

அவர்கள் முன் பேசுவதற்கே மிகவும் தடுமாறினாள் அபி.

“ஃப்ரீயா விடு அபி. பார்த்துக்கலாம்” என்றான் சக்தி.

“இன்டர்வியூ கொசின்ஸ் எப்படி இருக்கும்னு மட்டும் சொல்லுங்க அனு. மத்ததை அபி பார்த்துப்பா” என்றான். இணையம் மற்றும் நண்பர்களிடம் விசாரித்து, நேர்முகத் தேர்வுக்கு அவளைத் தயார்படுத்தினார்கள்.

அவளுக்கு ஆங்கிலப் புலமை நன்றாகவே இருந்தது. அரசு பள்ளியில் பயின்றிருந்தாலும், ஆங்கில வழியில் படித்திருந்தாள்‌. ஆகவே ஆங்கிலம் பேசுவதில் அவளுக்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. சில வார்த்தைகள், உச்சரிப்புகள், இலக்கணப் பிழைகள் எல்லாம் இருந்தது, போகப் போகச் சரியாகி விடும் என்று அவளைத் தேற்றினான் சக்தி.

“நீ இன்டர்வியூக்கு போற வரைக்கும் என்கிட்ட இங்கிலீஷ்ல பேசு அபி. அப்போதான் அங்க போய்ப் பேச ஈசியா இருக்கும்” என்றான். ஆனால் அவனிடம் பேசுவதற்குதான் அதிகம் தடுமாறினாள். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாலே அநியாயத்திற்குச் சிரிப்பு வந்து தொலைத்தது. ஆனாலும் சக்தி விடவில்லையே.

அவளின் கூச்சத்தைப் போக்கி அவள் தடுமாறினாலும் பேச செய்திருந்தான்.

என்னமோ ஒருவித பரபரப்பில் சுற்றிக் கொண்டிருந்தாள் அவள்.

நேர்முகத் தேர்வுக்கு முந்தைய தினம் அவளுக்கு அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவளின் தங்கை கிருத்திகாவின் உதவியோடு அவளை அழைத்திருந்தார் காமாட்சி.

“ம்மா, என்னம்மா நீயே போன் பண்ணியிருக்க? அப்பா நல்லா இருக்காரா?” என்று அவள் படபடக்க, அந்தப் பக்கம், “நீயி வேலைக்குப் போகப் போறியாமே? அம்மாகிட்ட சொல்லவே இல்ல?” என்று கோபமாகக் கேட்டார் காமாட்சி.

“வேலை கிடைச்சதும் சொல்லலாம்னு இருந்தேன்ம்மா”

“ஓ, கல்யாணமானதும் பெரிய மனுஷி ஆகிட்டியோ? உங்கத்த சொல்லலன்னா எனக்குத் தெரிஞ்சுருக்காது அபி. உனக்கு அம்மா முக்கியமில்லாம போயிட்டேன் இல்ல?”

“ம்மா, உன்கிட்ட சொல்லாம இருப்பேனாம்மா?” என்று அவளும் கோபமாகக் கேட்க, “இப்போ நீயி வேலைக்குப் போறதுக்கு என்னா அவசரம்ங்கறேன். இன்னைக்கு உங்கத்தய ஒரு விசேஷத்துல பார்த்தேன். அவுங்க என்னாண்டா பொலம்பி தள்ளுறாங்க அபி. அவங்க புள்ளைக்கு வயசாகுது, நீ என்னான்னா வேலைக்குப் போறேன்னு கெளம்பிட்ட. குழந்தை பேச்ச எடுத்தா மாப்ள கோபிச்சுக்கறாருன்னு.. என்னமோ போ. நீயி புத்திசாலித்தனமா நடந்துப்பன்னு பார்த்தா.. இப்படிக் கூறு இல்லாம இருக்கியே” என்று கத்தினார்.

“இப்போ என்னம்மா பண்ண சொல்ற என்னைய?”

“முனுக்குன்னு கோபம் வந்துருமே உனக்கு. நா என்னத்த புதுசா சொல்லப் போறேன். மாப்ளைக்கு இப்பவே 31 ஆகுது அபி. நீயி குழந்தைய தள்ளி போடாம இப்பவே பெத்துக்கோன்னு சொல்றேன். நாங்க தெம்பா இருக்கும் போதே உம் புள்ளைங்கள வளர்த்து விட்டுருவோம்ல?” என்று தெளிவாக இருந்தவளை குழப்பி விட்டார்.

மேலும் அவர் பேச பேச அவள் மண்டை தானாகவே ஆடி விட்டது.

மாலை அவள் குழம்பிய மனத்துடன் அமர்ந்திருக்க, “மதியம் இன்டர்வியூக்கு என்ன டிரஸ் போடன்னு கேட்ட இல்ல அபி. வா, புது டிரஸ் வாங்கிட்டு வருவோம்” என்று அவளை வெளியில் அழைத்துப் போனான் சக்திவேல். அம்மா பேசியதை அவனிடம் சொன்னாள்.

“பெரியவங்க அப்படித்தான் பேசுவாங்க, விடு அபி” என்றான் லகுவாக. வேலைக்குச் செல்வதால் அவனது அக்கா, தங்கை படும் சிரமங்களை எல்லாம் சொன்னான்.

“நாம எவ்வளவோ முன்னேறினாலும் சில விஷயங்கள் மாறவே மாறாது அபி. அதுக்காக நாம அப்படியே தேங்கி நிக்கக் கூடாது. மாற்றம் எப்பவும் நம்மகிட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும். சோ நீ இப்போ இன்டர்வியூல மட்டும் ஃபோகஸ் பண்ணு” என்றான்.

“அவங்களுக்கு என்ன அங்க இருந்துட்டு என்ன வேணாலும் சொல்லுவாங்க. இங்க நான் வேலைக்குப் போனதும், வீட்ல தனியா இருக்கப் போறது நீதானே? அண்ட் வேலைக்குப் போறது உனக்குக் கான்பிடன்ஸ் கொடுக்கும் அபி. நீ என்ன ஊறுகாய் போட்டு வைக்கவா டிகிரி படிச்ச?” என்று அவன் கேட்கவும் சிரித்து விட்டாள்.

மறுநாள் சக்தி விடுமுறை எடுத்து அவளை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துச் சென்றான். அபிக்குப் பதற்றத்தில் கையெல்லாம் வியர்த்துப் பிசுபிசுத்தது. வார்த்தைகள் தந்தி அடித்தன.

“இன்னைக்கே வேலை வாங்கியாகணும்னு கட்டாயம் இல்ல அபி. ரிலாக்ஸ்” என்று எவ்வளவோ சமாதானப்படுத்தி, அவளை உள்ளே அனுப்பினான்.

முதல் முறையாக வேலைக்கான நேர்காணலுக்குச் செல்கிறாள். அந்நாட்டில் பெயர் போன தனியார் வங்கி வேறு. அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்திருந்தது. விளைவு, சொதப்பி விட்டாள்.

“ம்ம், அவனோட பேட் லக் அபி. ச்சீ இந்தப் பழம் புளிக்கும். வா, நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி பெரிய இடமா பார்ப்போம் நாம. இவனுங்க கிடக்குறானுங்க” என்றான். அவளுக்குச் சிரிப்பு வந்தது.

ஆனால், அதுவே அடுத்து வந்த பனிரெண்டு நேர்முகத் தேர்வுக்கும் தொடர, அபிக்கு நம்பிக்கையே இல்லாமல் போனது. மனம் தளர்ந்து விட்டாள்.

அவள் புதிதாக எதற்கும் விண்ணப்பிக்கவில்லை‌. ஆனால், அவள் சார்பாக சக்தியே விண்ணப்பித்தான். இம்முறை அனுசுயா பரிந்துரை செய்த வங்கி ஒன்றிலிருந்து அவளுக்கு நேர்காணல் அழைப்பு வந்திருந்தது.

“நா வேலைக்குப் போகல, விடுங்க மாமா” என்று உறுதியாக மறுப்பைப் பதிவு செய்தாள் அவள்.

“அபி, நீ ஃப்ரெஷ்ஷர்‌. நீ அப்ளை பண்ணதும் வேலை கொடுக்க இதென்ன உன் மாமனார் வீட்டுக் கம்பெனியா தங்கம்? நமக்கு இருக்கற மாதிரி, வேலை கொடுக்குறவனுக்கும் ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்ல? நீ இதுக்கே சோர்ந்து படுத்தா, நாளைக்கு வேலைக்குப் போனதும் அங்க இருக்க அரசியலை எல்லாம் எப்படிச் சமாளிப்ப?” என்று கேட்டான்.

“இந்தவொரு இன்டர்வியூ மட்டும் அட்டென்ட் பண்ணு. சரியா? எனக்கென்னமோ இந்த வேலை உனக்குக் கண்டிப்பா கிடைக்கும்னு தோனுது”

“நீங்க இப்படித்தான் எல்லா இன்டர்வியூக்கும் சொல்றீங்க மாமா” என்று முறைத்து உதடு சுழித்தாள்.

“ஹாஹாஹா, அப்படியா சொன்னேன்? என் பொண்டாட்டி மேல எனக்கு அம்புட்டு நம்பிக்கை அபி” என்றான்.

“நா போகல போங்க”

“இது ஒன்னு மட்டும். ம்ம், இது ஓகே ஆகலன்னா ஒரு ப்ரேக் எடுத்துக்கலாம்” என்று அவளுக்காகச் சொன்னான். அவளின் ஆவல் ஆவியாகி இருந்தது. ஆனாலும் அவன் சொன்னதற்காக அந்த நேர்முகத் தேர்வுக்குப் போனாள். இடையில் அவள் மட்டுமே தனியாகப் போக வர பழகிருந்தாள். ஆனால் இம்முறை சக்தி விடுமுறை எடுத்து அவளோடு சென்றான்.

அவள் உள்ளே செல்ல, அவளுக்காக வெளியில் காத்திருந்தான். காலை பதினொரு மணிக்கு உள்ளே சென்றவள், மூன்று சுற்று நேர்முகத் தேர்வு முடித்து வெளியே வர நான்கு மணியாகி இருந்தது.

சக்திவேல் மனைவியின் முகத்தை ஆவலுடன் பார்த்திருந்தான். அவள் முகத்தில் இருந்து எதையும் அவனால் கண்டறிய முடியவில்லை.

அவளை நெருங்கி, “என்னாச்சு அபி?” என்று கேட்டான்.

அவள் கண்கள் கலங்கியிருக்க, அவனுக்கு மனம் கலங்கியது.

“வெளில சேட்டா டீக்கடை வச்சுருக்கார். கேபிட்டீரியா, வா சூடா ஒரு சாயா குடிப்போம்.” என்றான்.

“டீயா? நா உங்களுக்கு ட்ரீட் வைக்கறேன் மாமா” என்று அவன் தோளை உரசி கண் சிமிட்டி சொன்னாள்.

“ஏய் அபி” என்று அங்கு வைத்தே கத்தி விட்டான் சக்திவேல்.

அபி தன் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக உணர்ந்தாள். வாழ்வில் முக்கியத்துவங்கள் மாறிக் கொண்டே தானிருக்கும். அதை முடிவு செய்வது நாமாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த அளவு புரிதல் அபிக்கு இருக்கிறதா என்பது அவளுக்கே பதில் தெரியாத கேள்விதான்.

error: Content is protected !!
Scroll to Top