“இங்காரு அபி, நீ வேலைக்குப் போக ஆசைப்படுறதுலாம் சரித்தேன். ஆனா இப்பவே வேலைக்குப் போவேன்னு குதிக்கக் கூடாது புரிஞ்சுதா? மாப்ளகிட்ட மல்லுக்கு நிக்காத, என்னா? அங்கன போய் ஒரு நாலஞ்சு மாசம் ஆனதும் அந்த ஊரெல்லாம் பழகனதும் மெல்ல வேலைக்குப் போறதை பத்தி யோசி. சரியா?”
அவர்களின் கல்யாணம் முடிவானதும் காமாட்சி மகளுக்குச் சொன்ன ஆயிரம் அறிவுரைகளில் அதுதான் முதலாவதாக இருந்தது. அபியும் சரியென்று மண்டையாட்டி விட்டாள். அவளின் தோழி சுபாஷிணியின் கருத்து கூட அதுவாகவே இருந்தது.
“இங்காரு அபி. உன் மாப்ள, உன்னைய விடப் பத்து வயசு பெரியவரு. இம்புட்டு வருஷமா ஏன் கல்யாணம் பண்ணாம இருந்தாருண்டு தெரியல. இப்போ கல்யாணம் முடிஞ்சதும் நீ வேலைக்குப் போறேன்ண்டு நின்னீன்னா மனுசன் என்னா சொல்லுவாருண்டு தெரியல. அதுனால அங்கன போய்ட்டு நிலைமை என்னாண்டு பார்த்துட்டு வேலைக்குப் போறத பத்தி பேச்செடு. ம்ம்? அவரு வேற வெறும் பாலிடெக்னிக், நீனு என்ஜினியர். பொசுக்குன்னு உனக்குப் பெரிய வேலை கிடைச்சுட்டுன்னு வைய்யி, அவரு போகாதன்னு சொன்னா என்னா செய்யுவ? எதையும் பிளான் பண்ணி பண்ணணும் அபி” என்றிருந்தாள் சுபாஷிணி. அதெல்லாம் அவள் மனத்திற்குள் அழுத்தமாக அமர்ந்திருந்த காரணத்தினால் அவனிடம் வேலைக்குப் போவது பற்றிய பேச்சையே அவள் எடுக்கவில்லை. ஆனால் ஆசை நிரம்ப இருந்தது.
அதை அவனாகவே புரிந்து கொண்டு கேட்கவும், கண்களில் ஆவல் மின்ன வேகமாக, சம்மதமாகத் தலையசைத்தாள் அபி.
“உனக்கு வேலைக்குப் போக இன்ட்ரெஸ்ட் இருந்தா முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கலாமே அபி” என்று அக்கறையுடன் கேட்டான் சக்திவேல்.
அவள் மௌனமாக அவனையே பார்த்திருக்க, “எனக்கும் கேட்கவே தோனல பாரேன். சாரி” என்றான்.
அவள் புன்னகையுடன், “அதுக்கு ஏன் சாரி சொல்றீங்க மாமா?” என்று அவன் மேல் சாய, அவளைத் தோளோடு சேர்த்தணைத்து, “நீ இப்பத்தான் காலேஜ் முடிச்சன்னே நா மறந்துட்டேன் அபி. மேல படிக்க ஆசைப்பட்டியா? வேலைக்குப் போக நினைச்சியா? இந்தக் கேள்வியெல்லாம் உன்கிட்ட நான் கேட்ருக்கணும்தானே? என்னமோ அதெல்லாம் கேட்கவே தோனல எனக்கு. ரொம்ப வருஷமா தனியாவே இருந்துட்டேனா, அதுனால எனக்குன்னு ஒருத்தி. எனக்கே எனக்காகன்னு என்னோட வந்தா போதும்னு இருந்ததா, அந்நேரம் உன் போட்டோ பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. நான் ஏதாவது கேட்டு நீ ஏதாவது ஏடாகூடமா பதில் சொல்லிடுவியோன்னு பயந்தே கேட்காம இருந்திருப்பேனோ?” என்று அவன் கேட்க, “அது எனக்கு எப்படித் தெரியும் மாமா?” என்று சிரித்தாள் அவள்.
“சரி, இப்போ சொல்லு.”
“என்ன சொல்ல மாமா?”
“உன் ஆசைய அபி”
“வேலைக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் மாமா. அவ்ளோதான்.” என்றாள்.
“அவ்ளோதானே? அந்த ஆசையை நிறைவேத்திட்டா போச்சு” என்று அழுத்தமாகச் சொல்லி, அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“இந்த ட்ரிப் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் மொத வேலையா உனக்கு வேலை தேடுறோம். ஓகே?” என்று கேட்டான். அவளின் புன்னகையே அவனுக்குப் பதிலானது.
அங்கிருந்த நான்கு நாள்களும் மிகவும் இனிமையாக அவர்களுக்குக் கழிந்தது.
சக்திவேலை தவிர வேறெந்த சிந்தனையும் அபிக்கு இல்லை. அந்த அளவுக்கு அவளைக் கொண்டாடி, காதலித்து, சிறப்பாக உணரச் செய்திருந்தான் அவன்.
நான்காம் நாள் இரவே ஷார்ஜா திரும்பி விட்டார்கள்.
வீடு வந்ததும் முதல் வேலையாக அபி குளித்து உடை மாற்றி, பயணச் சோர்வில் படுக்கையில் சரிந்திருந்தாள்.
சக்திவேல் குளித்து ஷார்ட்ஸ், பனியன் அணிந்து, முதல் வேலையாக அவர்களின் பயணப் பெட்டியை ஒதுக்கி, பிரித்து, துணிகளைச் சலவை இயந்திரத்தில் போட்டான்.
வீட்டுக்கு வரும் போதே காய்கறி, பழங்கள் வாங்கி வந்திருந்தார்கள்.
தக்காளி ரசம் வைத்து புடலங்காய் கூட்டு, முட்டை பொரியல் என எளிமையாகச் சமைத்து முடித்திருந்தான்.
அபிக்கு ஆழ்ந்த உறக்கம். ஆகவே அதிகச் சத்தம் இல்லாமல் வேலையை முடித்தவன், தன் மடிக் கணினியோடு படுக்கையில் அமர்ந்தான்.
அவனை உணர்ந்தது போல உறக்கத்தில் புரண்டு அவன் தொடையில் தலை வைத்தாள் அவள். அவன் விரல்கள் அவள் கூந்தலுக்குள் நுழைந்து கோதிக் கொடுத்தன. படுக்கையில் தலையணைகளை அடுக்கி வைத்து அதன் மேல் மடிக்கணினியை வைத்து வேலைப் பார்க்கத் தொடங்கினான் சக்தி.
அவன் வேலை முடித்து, மனைவியை அணைத்து படுக்க, “எந்திரிங்க மாமா, சமைக்கணும்” என்று முணுமுணுத்தாள் அவள்.
சக்தி சிரிப்புடன், “என்னா பொறுப்பு அபி, ம்ம்ம்” என்றான் கிண்டலாக.
“ப்ச், பசிக்குது மாமா”
“எந்திருச்சு மூஞ்சி கழுவிட்டு வா, சாப்பிடலாம்” என்றான். பட்டென்று கண்களைத் திறந்து அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“ஐயோ, நீங்க சமைச்சுட்டீங்களா மாமா? என்னைய எழுப்பி இருக்கலாம் இல்ல?”
“அதான் இப்ப எழுப்பிட்டேன் இல்ல? எந்திரி” என்று அவன் எழுந்து, அவள் கைப் பிடித்துத் தூக்கினான்.
பத்தாம் நிமிடம் இருவரும் உணவுடன் அமர்ந்திருந்தார்கள்.
“என்னைய வேலையே செய்ய விட மாட்டீங்கறீங்க மாமா” என்று அவள் குறை படிக்க, “அதான் வேலைக்குப் போகப் போறியே. அங்க போய் நல்லா வேலை செய்” என்றான் புன்சிரிப்புடன்.
“இங்க வந்த நாள்ல இருந்து எனக்கு எல்லா வேலையும் நானே செஞ்சு பழகிடுச்சு அபி. அந்தப் பழக்கத்தில் செஞ்சுடுறேன். நீ ஃப்ரீயா இரு” என்றான். என்னமோ அவளுக்குத்தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது.
“கல்யாணத்துக்குப் பிறகு இத செய்யணும், அத செய்யணும்” என்று அம்மா நீட்டிய பட்டியலில் எதையுமே அவள் செய்ய நேராதது அவளுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்த நேரத்தில், கணவனின் மேல் பிரியமும் கூடியது.
“இந்தப் பாத்திரம் தேய்க்கற வேலை மட்டும் எனக்கு ஆகவே ஆகாது. அது மட்டும் நீ செஞ்சுடு அபி” எத்தனை நேர்த்தியாகச் சமைத்தாலும் பாத்திரம் தேய்க்க சக்திக்கு பிடிக்காது. அதனால் அந்த வேலையை எப்போதும் அவளே பார்த்து விடுவாள்.
இப்போதும் சமைத்த, சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி, கழுவி போட்டு அவள் வர, அவளிடம் மடிக்கணினியை நீட்டினான் அவன்.
“என்ன மாமா?”
“நாலைஞ்சு மாடல் ரெஸ்யூம் எடுத்து வச்சேன். உனக்கு எது செட்டாகும்னு பாரு. அதுல உன்னோட டீடெயில் ஃபில் பண்ணுவோம்” என்றான். இத்தனை வேகத்தை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.