இரண்டாம் ஆண்டு விடுமுறை ஆரம்பித்திருக்க அலர்விழி கடலூருக்கு சென்றிருந்தாள். இம்முறை மாதவனோடு வசந்தியும் வந்திருக்க வீடு களை கட்டியது.
தேர்வு முடித்து, மாதவன், வசந்தியோடு வந்து நின்ற பெண்ணைக் கண்ட பெற்றவர்கள் துடித்துப் போனது உண்மை.
“ஏன் பாப்பா அங்க சாப்பாடு பிடிக்கலியா? நீ வேணும்னா பெரியப்பா வீட்டுல தங்கிக்கறியா? நான் அண்ணாட்ட பேசவா?” மகளைக் கண்ட அப்பா மனம் பதைபதைத்தது.
அரண்டு போனவள், “இல்ல பா, எக்சாமுக்கு கொஞ்சம் ஸ்ரெயின் பண்ணினதால ஒழுங்கா தூக்கம் இல்ல… அது தான். ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் ப்பா,” என்று மழுப்பினாள்.
மனம் இடறியது. எத்தனை பாடுபட்டுப் பெற்றவர்கள் அவளை இந்த நிலையில் கொண்டு வந்திருக்க, காதல் என்ற பெயரில் உடலை எப்படிக் கெடுத்து வைத்திருக்கிறாள். இவளை இப்படிக் கண்டபின் தானே அவனும் பக்குவம் இல்லாத வயதில் இவை எல்லாம் வேண்டாம் என்று விட்டான்.
“படிப்பு முக்கியம் தான் பாப்பா. உனக்கு இருக்க அறிவுக்கு நீ சும்மா போய் எழுதினாலே நல்ல மார்க் எடுப்ப. அதனால படிச்சு தான் இப்படி ஆகிட்டேன்னு என் கிட்டயும் கதை சொல்லாத. உன் மனசுல ஏதோ குழப்பம், சோகம் அது தான் இப்படி ஆகிட்ட. எதுனாலும் உடம்ப பாத்துக்கோ பாப்பா. எல்லாம் சரி ஆகும் ஒரு நாள். அன்னைக்கு அந்த வாழ்க்கைய அனுபவிக்க தெம்பு வேணும். புரியுதா?” தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டே சகுந்தலா பாட்டி கூறினார்.
அமைதியாக கேட்டுக் கொண்டாள்.
“இனி இப்படி ஆகாது பாட்டி. குழப்பம் ஏதும் இல்ல பாட்டி.” பாட்டிக்கு மட்டுமல்ல தனக்கும் சேர்த்தே கூறிக் கொண்டாள். அது தான் கரித்தூள் போட்டு அனைத்தையும் விளக்கோ விளக்கென்று ஒருவன் விளக்கி விட்டு விட்டானே… இனி குழம்ப என்ன உள்ளது?
ஏற்கனவே ‘மனோ’ மயக்கத்தில் சுற்றியவள், அன்றைய தினத்திற்குப் பின் அவன் மேல் பித்தம் இன்னும் கூடிப் போக, ‘மனோ’ பைத்தியம் பிடிக்காத குறை ஒன்று தான்!
இரு தினங்கள் சூரியன் வந்ததோ சந்திரன் வந்ததோ அவள் கருத்தில் பதியாது அழுது கரையத் தான் செய்தாள். மனதை அழுத்திய வலி குறையவும் எந்த வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தியதோ அதே வார்த்தைகள் அவளுக்கு மருந்தாக மாறியது. அன்று உணர முடியாத அவன் உணர்வு அத்தனையும் உணர முடிந்தது.
‘உனக்கு மட்டும் இல்ல. எனக்கும் தான். புரியுதா?’ என்று காதல் கூற ஆரம்பித்தவன் எப்பொழுது… ஏன் வேண்டாம் என்று முடித்தான்? தன் நிலை கண்ட பின்னோ? இருக்கலாம் என்றது அறிவு! ஆக அவனுக்கும் காதல் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இருவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு திரை போட்டிருப்பது புரிந்தது.
அது எப்படி இதயத்தில் வீற்றிருக்கும் காதலை, சில காலம் தலையை வெளிக் காட்டாதே என்று கூறினால் அது கேட்டுக் கொள்ளுமா? அணை போட்டால் அது உள்ளே அடங்கி விடுமாமா? எப்படி என்று அதையும் சொல்லிக் குடுங்களேன் மனோ.
மனோவின் மனதில் அவள் இருப்பது தெரிந்தபின், அவன் தெளிவான சிந்தனை அவளை இன்னும் ஈர்த்தபின், என்றானாலும் அவன் தனக்கு மட்டுமே என்று மனம் 100% நம்பிய பின், ‘ஒண்ணு அவன் செத்துப் போயிருக்கணும்… இல்ல நீ செத்துப் போயிருக்கணும். ரெண்டு பேரும் நல்லாத் தானே இருக்கீங்க… எதுக்கு ஒப்பாரி? போடி, போய் வேலையப் பாரு! ஒழுங்காப் படி!’ அவளுக்கே அவள் பாடம் புகட்டிக் கொண்டாள்.
காதல் வந்தால், கடமை மறந்து கனவில் மிதந்து மரத்தைத் தான் சுற்ற வேண்டும் என்றில்லை. அவரவர் கடமைகளை சரிவரச் செய்து கொண்டே காதலிக்கலாம் என்று மனோவிற்கு கற்றுக் கொடுக்க தீர்மானித்துக் கொண்டாள். விளைவு? எப்பொழுதும் போல் தேர்வை அசத்தலாகச் செய்திருந்தாள்.
மனம் சமன்படவும் மனோவைக் காண சென்றாள். கணினியை பிரித்துப் போட்டு மேய்ந்து கொண்டிருந்தவன் தோளைத் தட்ட… அவனும் யார் என்று திரும்பவும் அவன் முன் வந்து நின்று கொண்டாள்.
யாருமில்லாமல் போகவே மீண்டும் முகத்தைத் திருப்ப… “ஹாய்” என்று நிற்பவளைப் பார்த்தவன் இதழ் விரிந்தது. இரண்டு தினங்களுக்குப் பின் அன்று தான் அவன் முகம் பிரகாசித்தது.
“விழி..?” களைத்த கண்கள் மின்னின.
“ம்ம்… மூணு வாரத்தில எக்ஸாம்! பாடத்துல ஒரு டவுட். சொல்லித் தர முடியமா?” எதுவுமே நடவாதது போல் பார்த்து நின்றாள்.
இனி அவன் முன் வரமாட்டாள் என்று நினைத்தான். தைரியம்,கோபம், திமிர், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஏக்கம், தன்னம்பிக்கை, ஈர்ப்பு, காதல் எனப் பல உணர்வுகளை அவள் கண்களில் பார்த்திருக்கிறான். அந்த நிமிடம் அவள் நின்ற தோரணையும் அவள் முகம் காட்டிய பாவமும் புதிது.
புருவங்கள் இரண்டும் ஏறி இறங்க… “எனக்காக ஒரு டென் மினிட்ஸ்” என்று முழுதாய் அவன் மூன்று மணி நேரத்தை விழுங்கிய பின் அவனை விட்டாள்.
அன்று தொடங்கியது அவர்கள் பெயர் தெரியாத அந்த புது உறவு! தேர்வு முடியும் வரை அவ்வப்பொழுது அவன் தான் அவள் ட்யூஷன் மாஸ்டர்! படிப்பைத் தவிர்த்து இன்று வரை ஒரு வார்த்தை அதிகம் பேசவில்லை என்பது சின்ன இடறல் தான் அவளுக்கு! நட்பு அளவிற்கு கூட வாய் நீளவில்லை!
இருவரும் பிரிந்து போகவில்லை. பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகும் சூழலில்லை என்ற நிம்மதியில் இன்று குடும்பத்தோடும், ஆஸ்திரேலியா கிளம்பவிருக்கும் அண்ணனோடும் நேரத்தை இன்பமாகக் கழித்தாள்.
சென்னைக்கு வந்து மாதங்களானாலும் மனோ என்பவன் என்ன ஆனான் என்ற எந்தத் தகவலும் இல்லாமலே சென்றது. காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் செல்ல ஒரு நாள் நுங்கம்பாக்கத்தில், சாலையின் இருபுறமும் மரங்கள் நிறைந்த பகுதியில் தற்செயலாக எபி அலர்விழியைப் பார்க்க நேர்ந்தது.
மரத்தடியில் பேருந்திற்காக காத்திருந்தவள் வந்து-சென்று கொண்டிருக்கும் வாகனங்களைக் கடனே என்று பார்த்து நிற்க, எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மெட்டாலிக் க்ரே டொயோடா கேம்ரி மீது கண்கள் நிலைத்தன. அதிக அரவமில்லாத சாலையில் வழுக்கிக் கொண்டிருந்த வாகனம் பத்து மீட்டர் தொலைவில் நின்றுவிட, அதை ஆசை தீரப் பார்த்து முடிக்கும் முன் அவள் பேருந்தும் வந்துவிட, அதிக கூட்டமில்லாத பேருந்தில் வாகாய் நின்று கொண்டு கண்களைக் கவர்ந்த வாகனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூகிளில் மூழ்கிப் போனாள்.
சற்றும் எதிர்பார நேரத்தில், “மிஸ் மீ?” என்ற கிசுகிசுப்பான சத்தம் காதருகில் கேட்கவும் பெண் மூச்சுவிடவும் மறந்தாள். சட்டென்று ஒரு நடுக்கம், உடல் முழுவதும் சில்லிட்ட உணர்வு. அத்தனை உணர்வுக்கும் இடையே ஒரு இதம்!
நின்ற நிலையில் பெண் அசையாமல் நின்றிருக்க, அவள் காதருகில் மூச்சுவாங்க “பிடிச்சிருக்கா?” என்ற மயக்கும் ஒலி கேட்கவும், மாதங்கள் பின் மீண்டும் இதயம் ஓட்ட பந்தயத்திற்குத் தயாரானது.
திரும்பிப் பார்க்க அவசியமில்லை. ‘மனோ…’ இதழ் விரிய, கண் மூடி நின்று அந்த நிமிடத்தை உள்வாங்கிக் கொண்டாள். இதயத்தைக் கிழித்த அந்த சத்தம், நாசியைத் தொட்ட மிதமான நறுமணம், அகலமாய்த் திறந்திருந்த அவள் வெற்று முதுகில் பட்டும் படாமலும் அவள் பின் நின்றிருந்தவன் சட்டையின் வருடல்… காதருகே அவளை உஷ்ணமாக்கிக் கொண்டிருந்த அவன் மூச்சுக் காற்று… அனைத்தும் ஏதோ ஏகாந்த நிலைக்கு அவளை இழுத்துச் சென்றது.
“கேட்டேனே விழி… பிடிச்சிருக்கா?” அவள் கைப்பேசியில் தெரிந்த வாகனத்தில் அவன் பார்வை பதிந்திருக்க, கண் திறவாமலே அவளின் “ம்ம்… ரொம்ப,” என்ற பதில் கண்டிப்பாக அவன் கேட்ட கேள்விக்கானது இல்லை என்பது அவனுக்குத் தெரியாமலில்லை.
“அப்போ வா…” என்று படிக்கட்டின் பக்கம் செல்லவும்,
“மனோ…” என்றாள் முதல் முறையாக.
நின்றுவிட்டான். திரும்பவில்லை. அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்காத அழைப்பிது. ஒருவரையும் முதல் பெயர் கொண்டு அழைக்க விட்டதில்லை. இன்று பிடித்தது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய அழைப்பு.
“அடுத்த ஸ்டாப்,” நடத்துனரிடம் இரண்டு பயணச் சீட்டிற்கான பணத்தைக் கொடுத்து, அவள் புறம் திரும்பினான்.
கருப்பு மையினிடையே வீற்றிருந்த நீள நயனங்கள்… இமைகளை மிதமாய் அலங்கரித்த பீச் நிறம், காதோர ஸ்ப்ரிங் முடி… குடை ஜிமிக்கி… கூர் நாசியின் ஒருபக்கத்தில் புதிதாய் முளைத்திருந்த சின்ன வளையம்… ரவிக்கையை ஒத்த பீச் நிறத்து உதட்டுச் சாயம்… ரவிக்கையில் ஏதோ ஒரு ஓரம் ஒட்டியிருந்த பிஸ்தா நிறத்தில் புடவை என்று பெண் அவன் திடத்தை உடைத்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நிறுத்தம் வந்திருக்க, “வா விழி” என்று அவன் இறங்க, அவளும் இறங்கியிருந்தாள்.
“எப்பிடி இருக்க விழி?”
“பார்த்து சொல்லுங்க…” அழகாய் சிரித்தாள்.
கருப்புக் கண்ணாடியை கழட்டியவன் “எப்பவும் போல ரொம்ப அழகா இருக்க,” என்றான் ரசனையாய்… கண் சிமிட்ட மறந்து.
“நீங்க எப்டி இந்த பஸ்ல?”
“போன ஸ்டாப்ல உன்ன பார்த்தேன். கிட்ட வரதுக்குள்ள பஸ்ல ஏறிட்ட, நானா பஸ்ஸான்னு ஒரு கை பார்த்துட்டேன்…”