பார்த்திபன் காதலி – 6 (2)

அவன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் பிரபஞ்சனுக்கு அத்துப்படி.‌‍ நண்பனிடம் இதுவரை எதையும் மறைத்ததில்லை அவன்.

ஆனால் இப்போது மனம் திறந்து எதையும் சொல்ல முடியாமல் தவித்தான். சில விஷயங்கள் அந்தரங்கமானது அல்லவா?

இதில் அவன் மட்டுமே சம்மந்தப்பட்டிருக்கவில்லையே. ‍

ஒருவேளை நண்பன் பார்கவியைத் தவறாக நினைத்து விடுவானோ என்று பயந்தான்.

பார்கவி, பிரியதர்ஷினியின் உயிர்த்தோழி.

“பிரியா ஃப்ரெண்ட் டா பார்கவி. வேணாம், அவகிட்ட இருந்து தள்ளியே இரு” என்று எத்தனை முறை அவனை நேரடியாக எச்சரித்திருக்கிறான் நண்பன். பார்த்திபன் எதுவும் செய்யவில்லை. ஆனால் எல்லாமே செய்து விட்டது போலக் குற்ற உணர்வில் தவித்தது அவன் மனம்.

“பார்கவிக்குக் கல்யாணம் பிக்ஸாகிடுச்சுன்னு அம்மா சொன்னாங்க பிரபா.” என்று பேச்சை மாற்றினான் அவன்.

“ஆமாடா. உன்னோட எங்கேஜ்மெண்ட் அன்னைக்குதான் அவளுக்கும் மேரேஜ் ஃபிக்ஸாச்சு. அன்னைக்கு அவளுக்குப் பூ வச்சு உறுதி பண்ணிட்டு போய் இருக்காங்களாம்” என்றான் பிரபஞ்சன்.

“அப்படியா? நீ அன்னைக்கே என்கிட்ட சொன்ன இல்ல மச்சா?”

“ஆமாடா. பிரியா பார்கவி வீட்டுக்கு அன்னைக்குப் போக முடியலன்னு ரொம்ப ஃபீல் பண்ணா..”

“நீங்க போய் இருக்கலாம்டா”

“ஓஹோ, பார்த்தியா பார்த்திபா உனக்குக் கல்யாணம்னதும் என்னைக் கழட்டி விடப் பார்க்குற” என்று குற்றம் சாட்டும் தொனியில் பிரபஞ்சன் சொல்ல, “நீ வேற ஏன்டா..” என்று நண்பனின் தோளில் அடித்தான்.

“பார்கவியை அன்னைக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னுதான் பிரியா சொன்னா. அப்புறம் பார்த்தா அன்னைக்கே மேரேஜ் ஃபிக்ஸாகியிருக்கு.” என்று விளக்கினான்.

“பிரியா, பிரியா.” என்று மனைவியை அழைத்து, “உன் போனை எடுத்துட்டு வா” என்று சொன்னான்.

மறுநிமிடம், “இந்தாங்க” என்று அவளது அலைபேசியைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள் பிரியதர்ஷினி. அதில் பார்கவியின் பெண் பார்க்கும் படலம், பூ முடிப்புப் புகைப்படங்களைத் தேடி எடுத்து நண்பனிடம் காண்பித்தான் பிரபஞ்சன்.

“இந்தா போட்டோ பாருடா பார்த்தி” என்று அவன் கையில் அலைபேசியைத் திணித்தான்.

பார்கவி தாமரை வண்ணப் பட்டில் இருந்தாள். காதில் கல் பதித்த குடை ஜமிக்கி, கழுத்தில் காசு மாலை, புருவ மத்தியில் வட்ட பொட்டு, கை நிறையத் தாமரை வண்ண கண்ணாடி வளையல்கள் என அளவான ஒப்பனையுடன் அத்துணை அழகாக இருந்தாள் அவள்.

அவள் இயல்பிலேயே கண்ணைத் துடைத்து பார்க்க வைக்கும் அழகுதான்.

அன்றைக்கும் கொள்ளை அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் முகத்தில் புன்னகையில்லை. அது அவன் கவனத்தில் இருந்து தப்பவில்லை.

அப்படியே அவள் புன்னகைத்த சில படங்களிலும் அது செயற்கையாகத் தெரிந்தது.

அந்தப் புகைப்படத்தில் அவள் பக்கத்தில் நின்றிருந்த மாப்பிள்ளை பார்வையாக, பார்கவிக்குப் பொருத்தமானவனாகவே தெரிந்தான்.

“பார்கவிக்கு முன்னாடியே கல்யாணத்துக்குப் பார்த்திட்டு இருந்தாங்களா என்ன?” அந்தக் கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரிந்தேயாக வேண்டும் என்ற உந்துதல். அதனால் நண்பனிடம் கேட்டு விட்டான்.

“இல்லடா பார்த்தி. அதான் ஹைலைட்டே, இந்தப் பையன்தான் அவளுக்கு வந்த ஃபர்ஸ்ட் அலையன்ஸாம்‌. அவங்களுக்குப் பார்கவியைப் பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு சொல்லி அப்பவே கல்யாண டேட் வரைக்கும் முடிவு பண்ணி, பையன் வீடு பேசிட்டு போய் இருக்காங்கன்னா பார்த்துக்கோ” என்றான் பிரபஞ்சன்.

அதைக் கேட்டதும் அவனுக்கு எல்லாமே தெளிவாக விளங்கி விட்டது. அவனை மறக்கவே அவசர அவசரமாக இந்த முடிவை எடுத்திருக்கிறாள் அவள்.

தன் காதல் தோல்வியில் இருந்து தப்பிக்கக் கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறாள் என்பது புரிய அவன் ராக்கெட் சயின்ஸ் படித்திருக்க வேண்டிய அவசியமில்லையே.

அதற்கு மேல் கையில் இருந்த இனிப்பை அவனால் முழு மனதாக உண்ண முடியும் என்று தோன்றவில்லை. அடி நாக்கில் கசப்பாய் ஓர் உணர்வு பரவிட, பாயாசத்தைக் கீழே வைத்து விட்டான்.

“பையன் என்ன பண்றானாம்?” ஓர் ஆர்வத்தில் விசாரித்து விட்டான்.

“நம்ம லைன்தான்டா பார்த்தி.” என்று மாப்பிள்ளை பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை சொல்லி, “ரெண்டு வருஷமா ஆன் சைட்ன்னு யூஎஸ்ல இருந்தானாம். இப்போ ப்ராஜெக்ட் முடிஞ்சு பிரேக்ல ஊருக்கு வந்திருக்கான் போல. சோ அப்படியே கல்யாணம் பண்ணி பார்கவியைக் கூடக் கூட்டிட்டு திரும்ப அங்கேயே கன்ட்டினியூ பண்ற பிளானாம், பிரியா சொன்னா” என்றான் பிரபஞ்சன்.

“ஓ? யூஎஸ்ல எங்க?”

“டெக்சாஸ்” என்று பிரபஞ்சன் சொன்னதும் பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து விட்டான் பார்த்திபன்.

அவனை மறக்கவே திருமணத்திற்குச் சம்மதித்து இருக்கிறாள் பார்கவி. ஆனால் அவர்கள் இருவருமே வேலைக்காக அமெரிக்கா செல்லப் போகிறார்கள். அதுவும் அமெரிக்காவின் ஒரே மாகாணத்தின் ஏதோவொரு மூலையில் வாழப் போகிறார்கள். விதி ஏன் இப்படியொரு விசித்திர விளையாட்டை அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது?!

பட்டென்று எழுந்து நின்ற நண்பனை புரியாமல் பார்த்து, “என்னாச்சு பார்த்தி?” என்று பிரபஞ்சன் கேட்க, பார்த்திபன் தொண்டையைச் செருமி கொண்டான். அவனுக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை.

நெஞ்சில் உறுத்தியதை நண்பனிடம் மனம் திறக்க முடியாமல் தடுமாறினான்.

சில காதல் கதைகளும், பிரியங்களும் எல்லாருக்கும் புரிந்து விடுவதில்லையே. அதை எல்லாருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியமுமில்லையே.

சில காதல்கள் மனத்தோடு மரணிக்கும் ரகசியங்களாகவே இருந்து விட்டு போகட்டுமே!

error: Content is protected !!
Scroll to Top