சாதகப் பட்சிகள் – 6 (3)

அவளோ அசட்டையாக வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹார்ட் பீட்ஸ், பிபி, பிரஸர்ன்னு எல்லாத்தையும் மானிடர் பண்ணனும் மது” சொன்னவன்,

“எங்க சீஃப் ஒன்னு சொல்லுவார் மது, ஒரு நோயாளியை தற்காலிகமா தூங்காமல், தூங்க வைச்சு, ஆபரேஷன் நடக்க உதவி பண்ணி, சில மணி நேரங்களில அவனை இயற்கையாவே, வலி இல்லாம, நிஜமாவே தூங்க வைக்கறதில் தான், ஒரு மயக்க மருந்து நிபுணனின் வேலை முடியும். அவனோட வெற்றியும் அந்த நிமிடம் தான் ஆரம்பிக்குதுன்னு..”

மதுமிதா எவ்வித ஆர்வமும் காட்டாமல் அமர்ந்திருக்க, பேச்சை நிறுத்திக் கொண்டான் ராகவன்.

ஆனால், மறுகணமே அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் அவள்.

“உங்களுக்கு அசிஸ்டன்ட் கிடையாதா? அவங்க பார்த்துக்க மாட்டா…” அவன் பார்த்த பார்வையில் அப்படியே வாயை மூடிக் கொண்டாள் மதுமிதா.

“ஒரு ஆபரேஷன் நடக்கணும்னா, சர்ஜன் கையில கத்தியை எடுக்கணும்னா, நோயாளி மயங்கி இருக்கணும் மது. சர்ஜனுக்கு முன்னாடி மயக்கவியல் நிபுணர் அங்க இருந்தாகனும். இல்லனா ஒரு ஆணியையும் புடுங்க முடியாது.”

அதற்கு மேல் அவனால் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. எரிச்சலுடன் பதில் கொடுத்தான் அவன்.

அதற்குள் மருத்துவமனையை அவர்கள் அடைந்திருக்க,

“காரை எடுத்துட்டு ஒரு டிரைவ் போய்ட்டு வா மது.” என்று சொன்னான் அவன்.

அதன் பின்னே, “ஒரே இடத்தில உட்கார்ந்து யோசிச்சு, அப்புறம் ஓராயிரம் கேள்வி கேட்காத தாயே” என்ற சொல்லப்படாத வார்த்தைகளும் ஒளிந்தே இருந்தன.

“வெயிட் பண்றேன். போய்ட்டு வாங்க” என்று மட்டுமே சொன்னாள் அவள்.

அன்றைக்குப் பல வருடங்கள் கழித்து, முதல் முறை போல ராகவன் அனைத்தையும் ஒரு முறைக்குப் பல முறை சரி பார்த்துச் செய்தான். மயக்க ஊசியை முதுகுத் தண்டில் செலுத்தும் போது, மெலிதாக அவன் கை நடுங்கியதை அவனால் உணர முடிந்தது.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, அடுத்துதான் செய்ய வேண்டிய வேலைகளை முடித்து விட்டு வெளியில் வந்தான் ராகவன்.

காதில் பொருத்திய காதோலிப்பானில் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்க, அமர்ந்த நிலையில் நல்ல உறக்கத்தில் இருந்த மதுமிதாவை காண்கையில் அவன் மனம் தானாகக் கனிந்தது.

அவன் உதடுகள் தானாகப் பிரிந்து புன்னகைக்க, அவளைத் தொல்லை செய்யாமல் காரை திறந்து ஏறி அமர்ந்து, மெதுவாக இயக்கினான்.

முகத்தில் அறைந்த காற்றில், மெல்ல தூக்கம் கலைந்து விழித்தாள் மதுமிதா.

அவளின் அசைவை உணர்ந்து, “காஃபி மது?” கேட்டான் ராகவன்.

“ம்ம், வீட்டுக்குப் போகலாம். உங்க கூடத் தனியா இருக்கணும் எனக்கு” தூக்கம் விலகாமல் அவள் சொல்ல,

“ஓகே. கண்ணை மூடி படு. வீடு வந்ததும் எழுப்பறேன்” என்றான்.

அப்போதுதான் கண்ணை அகல விரித்து அவனைப் பார்த்துக் கொண்டு வந்தாள் அவள்.

அடுத்தப் பத்தாம் நிமிடம் வீட்டில் இருந்தனர்.

“என்ன வீடே அமைதியாக இருக்கு?” அவன் கரம் கோர்த்து நடந்தபடி அவள் கேட்க,

“அப்பா ஃபார்மசில இருப்பாங்க. ஐயா, ஆயா, ராகவி குழந்தைங்க எல்லோரும் கடையில இருப்பாங்க. மாமா டியூட்டில இருப்பாரா இருக்கும். இன்னைக்கு எல்லோரும் பிஸி போல..” மொட்டை மாடியை நோக்கி அவன் நடக்க, அவனின் கையை வலிமையாகப் பிடித்து இழுத்தாள் அவள்.

“இந்தப் பக்க ரூம்ஸ் பார்ப்போம்..” என்று அவள் சொல்ல,

“அது ராகவி, குழந்தைங்க ரூம் மது. அவங்க இருக்கும் போது பார்க்கலாம்”

“ப்ச், இங்க ஹால்ல ஊஞ்சல் இருக்கு தானே? அங்க உட்காரலாம் ராகவ்…” அவள் சொல்லிக் கொண்டே முன்னேற,

“ஏய் மது, ஏர் கூலர் சத்தம் கேட்குது. ராகவி இருக்கா போல..” அவன் சொல்லி முடிப்பதற்குள் ஹாலின் வாயிலில் போடப்பட்டிருந்த திரைச் சீலையை விலக்கி இருந்தாள் மதுமிதா.

“மதுமிதா…” கண்டிப்புடன் ஒலித்தது ராகவனின் குரல்.

அவளோ விழிகள் விரிய கண் முன் தெரிந்த காட்சியைப் பார்த்திருந்தாள்.

“வா, மது” பலமாக அவளை இழுத்தான் ராகவன். அவளோ அங்கிருந்து நகர்வதாக இல்லை.

“ஓவியம் போல இருக்கு இல்ல ராகவ். ஒரு ஃபோட்டோ எடுத்துக்கவா?” அவள் கேட்கவும், தாடை இறுக அவளைப் பார்த்தான் ராகவன்.

அங்கே மாடி ஹாலில் இருந்த சோபாவை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்து விட்டு, பால்கனியை ஒட்டி குடும்பமாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

உதய் இன்னமும் அலுவல் உடையான காக்கியை முழுமையாகக் களையவில்லை. காக்கி பேண்ட்டும், வெள்ளை உள்பனியனுமாக அவன் வெறுந்தரையில் படுத்திருக்க, அவன் மார்பில் உதயதாரா தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவனின் மறுபக்கம் ராகவி கணவனை இடித்துக் கொண்டு படுத்திருக்க, அவளின் மேடிட்டிருந்த வயிறு உதயை தொட்டுக் கொண்டிருந்தது. உதயின் ஒரு கரம் மனைவியைச் சுற்றி படர்ந்து அவளின் வயிற்றில் மென்மையாகப் பதிந்திருந்தது.

ராகவியின் சேலை தலைப்பை போர்வையாக விரித்து, பெற்றோர் இருவருக்கும் நடுவில் ஆனால், அவர்களுக்கு எதிர்புறமாகத் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்தான் உதய்நந்தா.

ஒரு மூலையில் பழச்சாறு அருந்திய கண்ணாடி கோப்பைகளும், காஃபி கோப்பை மற்றும் சிற்றுண்டி தட்டும் இருக்க, அழகாக ஒரு மாலையைக் கழித்து விட்டு, அசதியில் உறங்குகிறார்கள் என்பது மதுமிதாவிற்குப் புரிந்தது.

அச்சிறு குடும்பத்தின் நெருக்கம், ஒரு சிறுகதைக்காகத் தேர்ந்த ஓவியன் தீட்டிய ஓவியம் போலிருந்தது. கண்ணை அவர்களிடம் இருந்து பிரிக்க இயலாமல் வெரித்துப் பார்த்தபடி நின்றாள் மதுமிதா.

மெல்ல உயர்ந்த அவளின் கைகளில் இருந்த அலைபேசியைப் பட்டென்று பறித்தான் ராகவன்.

அவளை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துக் கொண்டு போனான்.

“ஃபேரி‌ டேல், தேவதை கதைகள் எல்லாம் உண்மைனு நான் நம்பினதே இல்ல ராகவ். உங்க ராகவியைப் பார்க்கும் போது அதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்குன்னு மனசு அழுத்தமா நம்புது. ஐ வாண்ட் வாட் ஷீ ஹேஸ்.” மதுமிதா கண்களில் கனவுடன் சொல்ல,

“அவளிடம் இருப்பது எனக்கு வேண்டும்” என்ற அர்த்தத்தில் அவனுக்கு ஒலிக்க,

“யூ வில் நெவர் கெட் இட்” வில்லில் இருந்து புறப்பட்ட அம்பின் வேகத்தில் வந்து விழுந்தது ராகவனின் வார்த்தைகள். சொல்லி விட்ட பின்னே வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து பதட்டத்துடன் மதுமிதாவின் முகம் பார்த்தான் அவன்.

அதிர்ச்சி, கோபம், வருத்தம், ஏமாற்றம் என எல்லாமும் கலந்து அவனைப் பார்த்தாள் மதுமிதா.

“சாரி” என்றவனின் நெஞ்சில் ஓங்கி அடித்தாள் அவள்.

“நான் அந்த அர்த்தத்தில்…”

“நான் என்ன மீன் பண்ணேன்னு…”

இருவரும் ஒன்று போலத் தொடங்கி விட்டு, மற்றவரின் முகம் பார்த்தனர்.

“ராகவ், டேய்.” உதய் இரு முறை அழைத்துப் பார்த்து, ராகவனின் தோளைப் பிடித்து உலுக்கி அவனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தான்.

“என்ன யோசனை? என் கேள்விக்குப் பதிலே வரலையே?” உதய் கேட்க,

“பயமா இருக்கு மாமா. அவளுக்கு என் வேலை, என் வாழ்க்கை எதுவுமே புரியலை. நாளைக்கு எங்க வாழ்க்கை எப்படி ஸ்மூத்தா போகும்? இதுக்குத்தான் டாக்டர்ஸ் பெரும்பாலும் டாக்டரையே கல்யாணம் பண்ணிக்க…”

“டேய்…” அவனை அதட்டி அடக்கினான் உதய்.

“ஒரு முடிவு எடுத்துக்கு அப்புறம் இப்படிப் போட்டுக் குழப்பிக்கக் கூடாது டா ராகவ். ஒரே துறையில் இருந்தாதான் கல்யாண வாழ்க்கை சக்சஸ்ஃபுல்லா போகும்னு நினைக்கிறது என்ன சொல்ல.. தப்பு டா. வெற்றி, தோல்வி நம்ம கையிலதான் இருக்கு. அது கல்யாணம்னு இல்ல, வாழ்க்கையில் நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலயும்…”

“ப்ச், கிளாஸ் எடுக்காதீங்க மாமா” வெறுப்புடன் சொன்னான் ராகவன்.

“ஒன்னு சொல்லவா ராகவ்?” நிதானமாகக் கேட்டான் உதய்.

“சொல்லுங்க மாமா”

“அஸ் லாங் அஸ், மதுமிதான்னு ஒருத்தி இந்தப் பூமியில தன் பாதம் பதிச்சு நடக்கற வரை இந்த ராகவன் அப்படின்ற ஒருத்தன், வேற எந்தப் பொண்ணையும் காதல், கல்யாணம், குடும்பம் எதுவும் பண்ண மாட்டான்” தெளிவாக, தீர்க்கமாகச் சொன்னான் உதய்.

தொண்டை குழி ஏறி இறங்க, உதயை அதிர்ச்சியாகப் பார்த்தான் ராகவன்.

“எவ்வளவு பெட் ராகவ்?” வெகு இயல்பாகக் கேட்டான் உதய். கண்ணிமைக்காமல் சிலைப் போல அமர்ந்திருந்தான் ராகவன்.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top