சாதகப் பட்சிகள் – 6 (1)

“இவனுக்கு என்ன ஆச்சு உதய். ஏன் இப்படிப் பண்றான்? இவன் பேசுறதை கேட்டா எனக்குப் படபடன்னு வருது” ராகவி உள்ளே போன குரலில் கணவனிடம் புலம்பினாள்.

“இவன் பெருசா வெளில காட்டிக்கிட்டது இல்லனாலும், இவனுக்கு மதுமிதாவை ரொம்பப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும் உதய். எனக்கு அப்படித்தான் ஃபீல் ஆச்சு. அப்படி நினைச்சுத்தான் இவனைக் கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ணேன். தப்பா உதய்?” அவளுக்குக் கர்ப்பக்கால ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்து கொண்டிருக்க, அனைத்திற்கும் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டாள் ராகவி.

இப்போதும் கண்கள் குளம் கட்டி நின்றது. அவளைத் தன்னோடு சேர்த்தணைத்த உதய், முகம் திருப்பி ராகவனைப் பார்த்தான்.

அவனோ வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

ராகவியின் மனம் அவளையே கேள்விக் கேட்டு குடைந்து கொண்டிருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ராகவனிடம் பேசியது அவளுக்கு நினைவில் வந்தது.

“என்ன சமைக்கறீங்க உதய்? சொல்லிட்டுச் செய்யலாம் இல்ல? என்ன சோறு, சிக்கன் குழம்பா?”

கணவன் கேட்ட வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி அவனிடம் நீட்டியபடியே கேட்டாள் ராகவி.

“ஒரு பதினைந்து நிமிஷம் வெயிட் பண்ணா தெரியப் போகுது. ஆனா, உனக்குத்தான் பொறுமையே இல்ல பட்டே” சிரித்துக் கொண்டே மனைவியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் உதய்.

“ஆ, மீசை குத்துது உதய். அதை எடுத்தாதான் என்ன போலீஸ்?” அவள் சிணுங்கிக் கொண்டே கேட்க,

“அவ்வளவு தானே? எடுத்துடுவோம் பட்டே. நீ கேட்டு நான் செய்யாம இருப்பேனா?” என்று அவன் புருவம் உயர்த்திச் சொல்ல,

“ம்ஹூம். வேணாம் வேணாம். மீசை இருக்கட்டும். அது இல்லாம, சின்னப் பையன் மாதிரி இருப்பீங்க. ஏற்கனவே போற வர்ற இடம் எல்லாம், எல்லாக் கண்ணும் உங்களைத்தான் பாக்குது” புலம்பினாள் ராகவி.

உடல் குலுங்க சிரித்தபடி, ஒற்றை விரல் கொண்டு அவள் முகம் நிமிர்த்திய உதய், “ஆனா, என் கண்ணுக்கு இந்த முகத்தைத் தவிர எதுவுமே தெரியாம மாட்டேன்னுதே பட்டே” கிறக்கமாகச் சொன்னான் அவன்.

“ம்க்கும். போங்க உதய். இப்படிச் சொல்லி, சொல்லித்தான் இப்படி ஆக்கிட்டீங்க” கண்களால் தன் ஐந்து மாத வயிறை சுட்டிக் காட்டினாள் ராகவி.

“அச்சோ. அப்புறம் பட்டே?, இதுல உன் பங்கு ஒன்னுமே….” அவனை முடிக்க விடாமல் வேகமாக அவன் வாயை பொத்தினாள் ராகவி.

கண்களால் சிரித்தான் உதய். அவளின் உள்ளங்கையில் முத்தம் வைத்தான். பட்டென்று கையை உருவிக் கொண்டாள் ராகவி.

“பத்து நிமிஷம், அதுக்குள்ள சமைச்சுடுவேன். ஓகே? அதுவரை பேசாம உட்காரு பட்டே” என்று உதய் சொல்ல, அவனைப் பார்த்து உதடு சுழித்துக் காட்டி விட்டு, எழுந்து வெளியில் போனாள் ராகவி.

அவளின் இரட்டை குழந்தைகள் அவர்களின் ஐயா சிதம்பரத்தின் முன் அமர்ந்து வெகு ஆர்வமாக ஏதோ ராஜா கதைக் கேட்டுக் கொண்டிருக்க, சிறு புன்னகையுடன் அதைப் பார்த்து விட்டு மீண்டும் அடுப்படியில் இருந்த கணவனிடம் போய் நின்றாள் ராகவி.

லெமன் சிக்கன், நெய் சோறும் செய்திருந்தான் உதய். சின்னக் கரண்டியில் கொஞ்சம் சோறு எடுத்து அதில் சிறிய கறிதுண்டை வைத்து அவளுக்கு ஊட்டி விட்டான் அவன்.

“ம்ம்ம்ம்ம்ம்” என்று ரசித்து உண்ட ராகவி,

“நல்லா இருக்கு உதய். ஆனா, நெய் சோறு வேணாம். குமட்டுது. சிக்கன் மட்டும் போதும்” என்று சொல்லி கோழிக்கறியை மட்டும் அவள் சாப்பிட ஆரம்பிக்க, புன்னகைத்தான் உதய்.

“தாரா, நந்தா வயித்துல இருக்கும் போது வாந்தியே இல்லைல பட்டே? ஆனா, இந்தக் குட்டிப் பொண்ணு உன்னை வச்சு செய்யறா..” மனைவியின் வயிற்றில் கை வைத்து உதய் சொல்ல,

“குட்டி பையன். பொண்ணு இல்ல..” சொல்லி முடிப்பதற்குள், அப்போது தான் சாப்பிட்ட உணவும் அவளுக்கு வெளியே வந்திருந்தது.

வாந்தியும், மயக்கமுமாகச் சோர்ந்து அமர்ந்தவளை எதுவும் செய்ய இயலா கவலையுடன் பார்த்தான் உதய். அவன் எடுத்து நீட்டிய புளிப்பு மிட்டாயை வாயில் அதக்கினாள் ராகவி.

“என்னடா வேணும் பட்டே? லெமன் ஜூஸ் போடவா?” கேட்டவனின் டி-ஷர்ட் காலரை பிடித்துத் தனக்கு நெருக்கமாக இழுத்த ராகவி,

“உதய்…” என்றாள்.

“ம்ம், சொல்லுடா. என்ன வேணும்” என்று அவன் மீண்டும் கேட்க,

“அதான் சொன்னேனே.. உதய்” என்று அவள் கண் அடித்துச் சொல்ல,

“என்ன?” என்று ஒரு நொடி குழம்பியவன் அவள் முகம் பார்த்து, அவள் சொன்னதைப் புரிந்து, “பட்டே” என்க,

“உதய் தான் வேணும்” கிசுகிசுப்பாக அவன் கண் பார்த்து சொல்லி, அவனை வளைத்து, அவன் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டாள் ராகவி.

“கிட்சன்ல இருக்கோம் பட்டே” விலக மனமின்றிக் கரகரத்த குரலில் சொன்னான் உதய்.

“மாமா, மாமா” என்ற குழந்தைகளின் உற்சாகக் குரல் அவர்களைப் பட்டென்று விலகி நிற்க வைத்தது.

குழந்தைகள் இருவரையும் இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டு, “ராகவி, பாப்பா” என்று அழைத்த படி அடுப்படிக்குள் வந்தான் ராகவன்.

“வாவ், வாசம் ஆளைத் தூக்குதே. என்ன ஸ்பெஷல் மாமா?” உதயிடம் கேட்டுக் கொண்டே, குழந்தைகளைச் சாப்பாட்டு மேஜையின் மேல் அமர வைத்தான் ராகவன்.

மூன்று தட்டுகளில் உணவை பரிமாறி குழந்தைகளுக்கும், ராகவனின் முன்னும் வைத்தான் உதய்.

“நீ சாப்பிட்டியா பாப்பா?” ராகவியைப் பார்த்து கேட்டான் ராகவ்.

“ம்ம். நீ சாப்பிடு ராகவ்” என்றாள் அவள்.

“இட்லி, தக்காளி சட்னி ஓகேவா ராகவி? முதல்ல லெமன் ஜுஸ் போடவா?” உதய் மீண்டும் கேட்க,

“நீ இன்னும் சாப்பிடலையா? என்ன வேணும் உனக்கு? நான் செஞ்சுத் தரேன்” கேட்டான் ராகவன்.

“என்ன வேணுமா? மதுமிதா ஒரு தக்காளி தொக்கு செய்வா, அது வேணும்” என்றாள் ராகவி.

“ஓ” என்ற ராகவன், “ரெசிபி கேட்கவா?” என்று கேட்க,

“இல்ல நாத்தனாரா வந்து செஞ்சு கொடுத்தா நல்லாருக்கும்.” என்று தீவிரமாகச் சொன்னாள் ராகவி.

“மாசமா இருக்கும் போது கேட்டா, ஆசையை நிறைவேத்தி வைக்கணும் டா ராகவ். தெரியும் தானே?” என்று உதயும் கேட்க, உதட்டில் நெளிந்த புன்னகையுடன் இருவரையும் பார்த்தான் ராகவன்

அமைதியாக எழுந்து ஹாலிற்குப் போய் விட்டு வந்தவனின் கையில் ஒரு கவர் இருக்க, அதை ராகவியின் கையில் கொடுத்து விட்டு அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தான்.

குழந்தைகளையும் சாப்பிட வைத்துக் கொண்டே அவன் சாப்பிட, கையில் இருந்ததைப் பிரித்தாள் ராகவி.

அவளுக்குப் பிடித்த இஞ்சி, எலுமிச்சை பழச்சாறும், சாக்லேட் பிரவுனியும் உள்ளே இருந்தது.

மௌனமாய் அதைப் பிரித்து உண்ண ஆரம்பித்தாள் ராகவி.

“கல்யாணத்துக்கு எனக்குச் சம்மதம்.” தட்டில் பார்வையைப் பதித்தபடி சொன்னான் ராகவன்.

சந்தோஷ மிகுதியில் இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, துள்ளி கொண்டு எழுந்தாள் ராகவி.

“பார்த்து மா…” என்ற கணவனைக் கண்டு கொள்ளாமல், குழந்தைகள் இருவரின் கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு, ஹாலிற்கு ஓடினாள் அவள்.

“அப்பா, அப்பா ராகவ் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்” கத்தினாள்.

error: Content is protected !!
Scroll to Top