“அது எங்களோட பிரெண்ட்ஸ். எனக்கும், ராகவிக்கும் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ். அவங்க எப்பவும் இப்படித்தான். சுஹாசினி, பனிமலர் தெரியும் தானே?.” என்று அவன் சொல்ல,
“ம்ம் தெரியும். எத்தனை வருஷமா பார்க்கறேன். தெரியாமயா இருக்கும்” குரலில் சிரிப்பு வழிய சொன்னாள் மதுமிதா.
“எப்பவும் உங்க வீட்லதான் இருக்காங்க.” என்று அவள் சேர்த்துச் சொல்ல,
“ம்ம் ஆமா” என்றவன், “அவங்க சும்மா பாட்டு கேட்டுட்டு இருக்காங்க. நீ தப்பா எடுத்துக்காத, என்ன?” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பாடலின் சத்தம் அதிகரித்திருந்தது.
“பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்… உனது பெயர் தான் அதிகம் எனக்கு”
மதுமிதாவிற்குப் பொருத்தமாகவே ஒலித்தது வரிகள். பக்கத்துத் தொட்டியில் இருந்த ரோஜாவையும், ராகவனின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவனுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது.
“வானம் கையில் எட்டினால் அங்கும்
உன்னை எழுதுவேன்.. நிலவை கொண்டு வந்து தான் பெயரில் வர்ணம் தீட்டுவேன்” என்று ஆண் குரல் பாட,
“பாட்டை ஆஃப் பண்ணு சுஹா” கத்தினான் ராகவன்.
“முடியாது டா” என்று பதில் குரல் நொடியில் வந்தது. பக்கென்று சிரித்து விட்டாள் மதுமிதா.
ராகவன் முகத்திலும் அப்புன்னைகை பரவியிருந்தது.
அந்நிகழ்வுக்குப் பிறகு, அவர்களுக்குள் வார்த்தைகளில் பகிர்ந்திடாத ஒரு நேசம் வளர்ந்திருந்தது.
மதுமிதா அப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொண்டாள். அவனுக்கும் அது புரிந்தேயிருந்தது.
அவள் இரண்டாம் ஆண்டும், அவன் நான்காம் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கையில் அவளைத் தனியாகச் சந்தித்து எச்சரிக்கக் கூடச் செய்தான் ராகவன்.
“இங்க பாரு மது. காலேஜ் லைஃபை என்ஜாய் பண்ணு. படிப்பை முடி. வேலைக்குப் போ. உலகத்தைப் பாரு. அதுக்கு அப்புறம் வாழ்க்கையை முடிவு பண்ணு. சரியா?” என்று ராகவ் சொல்ல,
“நீங்க சொன்ன மாதிரி எல்லாமே செய்யத்தான் போறேன் ராகவ். ஆனா, வாழ்க்கை? அது உங்களோடதான்” என்று அழுத்தமாகச் சொன்னாள் மதுமிதா.
அன்று அவளை அயர்ந்து போய்ப் பார்த்தான் ராகவன்.
“எனக்கு உங்களைப் பிடிக்கும். உங்களுக்கும் என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்.” அவன் கண்களைப் பார்த்துத் தீர்க்கமாக அவள் சொல்ல, “அப்படியா?” என்று கேலி போல அப்பேச்சை தவிர்க்க முயன்றான் ராகவன்.
“ம்ம், நீங்க என்னை ஆர்வமா, அன்பா பார்த்தது இல்லைதான். அதாவது நான் பார்க்கும் போது..” என்று அவள் சேர்த்து சொல்ல, உதட்டை எட்டிய சிரிப்பை அப்படியே விழுங்கினான் ராகவன்.
“நீங்க பார்க்காததற்கும் சேர்த்து ராகவி பார்க்கறாங்களே ராகவ். அவங்க பார்வை என்னைப் பார்க்கும் போது மட்டும் ஏன் வேற மாதிரி இருக்கு? அன்பு, பாசம், வாஞ்சை இப்படி எல்லாம் கலந்ததா? பிகாஸ், அவங்களுக்கு நீங்க என்னை நேசிக்கறது தெரிஞ்சுருக்கு இல்லையா?” என்று அவள் தீவிரமாகக் கேட்க,
“ப்ச், அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. நீ வீட்ல சொல்றதை கேளு. ஓகே?” என்று அவன் மீண்டும் முதலில் இருந்து தொடங்க,
“வீட்ல உங்களுக்கு, நமக்குச் சம்மதம் சொல்ல வைப்பேன்” என்றாள் மதுமிதா உறுதியாக,
“ஐயோ” என்றவன், “முதல்ல படிப்பை முடி. அப்புறம் பார்ப்போம்.” என்று அந்தப் பேச்சு வார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.
ஆனால், அடுத்த நான்கே மாதத்தில் ஒரு நள்ளிரவு வந்த அலைபேசி அழைப்பு மொத்தத்தையும் மாற்றிப் போட்டு, அவர்களின் திருமணத்தை உறுதி செய்வதற்கான அடித்தளத்தைப் போட்டது.
“ராகவ், எழுந்திரு ராகவ். மதுமிதா அப்பாக்கு சீரியஸ்னு கால் வந்தது. எழுந்திரு ராகவ். வா, போய் என்னனு பார்க்கலாம். அவ தனியா இருப்பா” ராகவி அவனை நள்ளிரவில் உலுக்கி எழுப்ப, செய்தி தந்த அதிர்ச்சியில் பட்டெனக் கண் விழித்து அலைபேசியைத் தேடி கையில் எடுத்தவன் அதிர்ந்து போனான்.
மதுமிதாவிடம் இருந்து கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தது.
‘ஐயோ, மொபைல் சைலன்ட்டில் இருந்திருக்கு. மாத்த மறந்துட்டு இருக்கேன்.’ என்று தன்னையே நொந்து கொண்டு ராகவி மற்றும் அவன் அப்பா சிதம்பரத்துடன் மருத்துவமனைக்கு ஓடினான் ராகவன்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் முன் இருந்த இருக்கையில் சோர்ந்து போய்க் கண்ணீரும், தூக்கமும் சுமந்த விழிகளுடன் அநாதரவாக அமர்ந்திருந்த மதுமிதாவை கண்ட கணம் அவனுக்கு அவளது தலைக் கோதி ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது.
அவளின் மடியில் தங்கை வெண்பா படுத்திருக்க, மறுபக்கம் அமர்ந்திருந்த பாட்டிக்கு மெலிதான குரலில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் மதுமிதா.
ராகவி ஓடிப் போய் அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.
ராகவனும், அவனது தந்தையும் மதுமிதாவின் பக்கத்தில் சென்று நிற்க,
“ஹார்ட் அட்டாக் மாமா” என்றாள் சிதம்பரத்தை பார்த்து. அழுது ஓய்ந்து தொண்டை அடைத்திருந்தது அவளுக்கு.
“மைனர் அட்டாக்னு தான் சொன்னாங்க. ஆனா, எங்களை யாரையும் உள்ள போக விடல மாமா” என்று அவள் உடைந்த குரலில் சொல்ல,
“நான் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்று மருத்துவரை காண விரைந்தான் ராகவன்.
அவனிடமும் அதையேதான் சொன்னார்கள் மருத்துவர்கள். மறுநாள் மதிய பொழுதில் கண் விழித்து நன்றாகப் பேசவும் செய்தார் ஶ்ரீதரன். மதுமிதாவின் அப்பா.
“என்னாச்சு மது?” என்று அவன் கேட்க,
“அம்மா வந்திருந்தாங்க நேத்து மேட்ச் பார்க்க, மீடியா அதைப் பெரிய விஷயமா ஆக்கிட்டாங்க” என்றாள். பார்வையை எங்கோ பதித்து. மெல்ல அவளின் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான் ராகவன்.
ஶ்ரீதரன் முன்னாள் கிரிக்கெட் வீரர். முதலில் தமிழக அளவில் விளையாடினார். பின்னர்த் தமிழ்நாட்டிற்காக ரஞ்சிக் கோப்பை வரை விளையாடி, சில முக்கிய விக்கெட்டுகள் எடுத்து ரஞ்சிக் கோப்பையை வெல்ல அவரும் முக்கியக் காரணியாக இருந்தார். அதற்கடுத்து வந்த போட்டிகளிலும் தன் திறமையை நிரூபித்தார் அவர்.
சிறந்த பந்து வீச்சாளராக வளர்ந்து கொண்டிருந்தவருக்கு மிகப் பெரும் வாய்ப்பாக இந்திய அணியில் இடம் கிடைத்தது.
இந்தியாவின் பி டீமிற்குத் தேர்வாகினார். அப்படியே முன்னேறி ஏ டீமில் இடம் பெற்று, சில டெஸ்ட் மேட்ச், ஒன் டே இன்டர்நேஷனல், தென் ஆப்பிரிக்கா டூர் என்று அவரின் கேரியர் கிராப் உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத வகையில் தனிப்பட்ட வாழ்வில் மிகப் பெரும் அடியை வாங்கி, தோல்வியைச் சந்தித்தார் அவர்.
அதன் பின்னரும் தொடர்ந்து அணிக்காக உலக அளவில் விளையாட அவருக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வாய்ப்பு அளிக்கத்தான் செய்தது. ஆனால், அவரால்தான் விளையாட முடியவில்லை.
ஏனோ, அன்றைக்குக் கிரிக்கெட் என்ற வார்த்தையையே அறவே வெறுத்தார் அவர்.
அவரின் மனைவி, அவரையும், இரண்டே வயதான அவர்களின் பெண் குழந்தை மதுமிதாவையும் விட்டு விட்டு இன்னொரு கிரிக்கெட் வீரரை மணக்க முடிவு செய்திருந்தார்.
ஶ்ரீதரனுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. அதன் பிறகு, மைதானத்தில் யார் முகத்தையும் பார்த்து பந்து வீச முடியவில்லை அவரால். மனைவிக்கு மண விலக்கு தந்த கையோடு கிரிக்கெட் பந்தையும் தூக்கி மூலையில் போட்டார் அவர்.
வருடங்கள் தன் போக்கில் ஓடி மறைய, கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து, இதோ, இப்போதுதான் சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின், வேண்டுதல்களுக்குப் பின்னரே அதற்கு ஒத்துக் கொண்டார் அவர்.
ஆனால், அவரே எதிர்பாராத விதமாக அவரின் முன்னாள் மனைவி, தற்போதைய பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளரின் மனைவியாக அவர் ஐபிஎல் மேட்ச் பார்க்க அங்கு வர, இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்ததை எப்படியோ மோப்பம் பிடித்து, என்னவோ இன்றைக்குத்தான் நடந்தது போல அதை மிகப் பெரும் பரபரப்பு செய்தி ஆக்கியிருந்தனர் மீடியாக்கள்.
முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்ற மறுவருடமே இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் ஶ்ரீதரன். ஆனால், அவரும் வெண்பா பிறந்து, அவளுக்கு ஏழு வயதிருக்கும் போது ஒரு விபத்தில் தவறி இருந்தார்.
ஆக, இப்போது கிடைத்தது வாய்ப்பு என்று அவரின் வாழ்க்கையையே தலைப்புச் செய்தியாக்கி அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப விமர்சித்துக் கொண்டிருந்தனர் மீடியாக்கள்.
அவருக்கு இந்த வயதில் முதலில் மகள்களின் வாழ்வு குறித்த கவலைதான் முன்னே வந்து நின்றது.
செய்திகள், வீடியோக்கள், உடன் இருந்தவர்களின் கேள்விகள் என அனைத்தையும் கேட்க கேட்க, பார்க்க, பார்க்க அவரது இதயம் கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனமாகி அன்றிரவு மாரடைப்பை கொடுத்திருந்தது.
“அப்பாக்கு ஒன்னும் ஆகாது மது. பயப்படாத. அழக் கூடாது மது. நீ தான் தைரியமா இருந்து பாட்டிக்கும், வெண்பாக்கும் தைரியம் சொல்லணும். சரியா? கண்ணைத் துட.” என்று அவளின் கைப் பற்றி ராகவன் சொல்ல,
“அப்பாக்கு இன்னொரு அட்டாக் வந்தா.. நாங்க என்ன பண்ணுவோம் ராகவ்..” மிரண்டு விழித்தப்படி கேட்டாள் மதுமிதா.
“அப்படி எல்லாம் நெகட்டிவ்வா யோசிக்கக் கூடாது மது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்கிட்ட கூட நல்லா தானே பேசினார்?” என்று அவன் கேட்க,
“ம்ம். ஆனா, பயமா இருக்கு ராகவ்” என்றாள் அவள்.
“எக்ஸ்-ரே, ஈசிஜி எல்லாம் பார்த்தேன் மது. பெருசா ஒன்னுமில்ல. அப்பா சீக்கிரம் நார்மல் ஆகிடுவார். முதல்ல நீ தைரியமா இரு” சொன்னவன், மென்மையாக அவள் கைப் பற்றிய படியே நின்றிருந்தான்.
மகளுக்கு இருந்த பயம் தந்தைக்கும் இருந்திருக்கும் போல, அடுத்த இரண்டாம் நாளே, அவரைப் பார்க்க வந்த ராகவனின் ஐயா கண்ணதாசன் மற்றும் ஆயா விசாலாட்சியிடம் அது குறித்துப் பேசி இருந்தார் அவர்.
“என் பொண்ணுங்களை நினைச்சாதான் ஐயா எனக்கு ரொம்ப…” ஶ்ரீதரன் பேசி முடிக்கும் முன்பே அவரின் கைப் பிடித்து,
“மதுமிதாவை எங்க வீட்டுப் பொண்ணு போல, நாங்க பார்த்துப்போம். அவளைப் பத்தின கவலையே உங்களுக்கு வேண்டாம். முதல்ல உடம்பை தேத்துற வழியைப் பாருங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. மனசை போட்டு உலப்பிக்காதீங்க. நீங்க வீட்டுக்கு வந்ததும் இதைப் பத்தி பேசுவோம். சரியா?” என்று கண்ணதாசன் சொல்லிக் கொண்டிருக்க,
“வெண்பாவை அவங்க அம்மா வீட்டு ஆளுங்க பார்த்துப்பாங்க. ஆனா, மதுமிதாக்கு எங்க அம்மா மட்டும்தான் இருக்காங்க. அவங்களுக்கும் வயசாகிடுச்சு. நாளைக்கு அவ வாழ்க்கையை நினைச்சா தான்.. ” என்று அவர் வருத்தத்துடன் சொல்ல,
“மதுமிதா எங்கள் பொறுப்பு” என்று அழுத்தமாக அவருக்கு உறுதி அளித்தனர் ராகவ் வீட்டுப் பெரியவர்கள்.
சில நாட்களில் ஶ்ரீதரன் உடல் நலம் மீண்டு வீடு திரும்பி இருந்தார்.
ஆனால், அடுத்த இரண்டாம் மாதமே, அடுத்த எதிர்பாராத அதிர்ச்சியாக இப்போது பாட்டி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இம்முறை அவர் கேட்டதை ராகவனின் வீட்டினரால் தட்ட முடியவில்லை.
“என் கண்ணு முன்னாடி இரண்டு பேரும் மாலையும், கழுத்துமா மோதிரம் மாத்திக்கட்டும். அது போதும் எனக்கு. கல்யாணம் ரெண்டு பேர் படிப்பும் முடிஞ்சதும் நீங்க பொறுமையா, உங்க விருப்பப்படி வச்சுக்கோங்க. நான் இதையாவது பார்த்திட்டு நிம்மதியா கண்ணை மூடுறேன்” என்று அவர் மூச்சு வாங்கிக் கொண்டு பேச, ராகவனது வீட்டினராலும் அந்நேரம் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
மறுப்புத் தெரிவிப்பது அவர்களுக்கு இயலாத காரியமாக இருந்தது. அப்படி மறுப்பு தெரிவித்தால், அது மனிதாபிமானம் அற்ற செயலாக இருக்கும் என்றார் அவனது தந்தை சிதம்பரம்.
இந்தத் தாத்தா, பாட்டிக்கள் அவர்களின் மரணப் படுக்கையில், இறுதி தருணத்தில் இருந்து கொண்டு, அடுத்தவரின் வாழ்க்கையின் தொடக்கத்தை முடிவு செய்யும் விநோத செயலை மனதில் திட்டிக் கொண்டே மதுமிதாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான் ராகவன்.
அக்கணம் மகிழ்ச்சியாகவே உணர்ந்தான் அவன். மதுமிதா கூடக் கண் சிமிட்டி புன்னகைக்கவே செய்தாள்.
“பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் ராகவ்வ்வ்வ்” என்று ராகம் இழுத்தாள் மதுமிதா.
“அப்பாடா” என்று பெருமூச்சுடன் அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள் ராகவி.
“அந்தப் பாட்டி தான் லூசு மாதிரி சொல்றாங்கன்னா, நம்ம ஆச்சியும் இதுக்கு ஏன் ஒத்துக்கறாங்க. என்னால முடியாது பாப்பா” என்று ராகவியிடம் புலம்பிக் கொண்டிருந்தான் ராகவன்.
“டாக்டருக்கு ஹாஸ்பிட்டலில் வச்சு நிச்சயம். நல்லாருக்கு இல்ல?” என்று ராகவி புன்னகைக்க, ராகவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“உனக்கு அவளைப் பிடிக்கும் தானே ராகவ்? அப்புறம் என்ன? மோதிரம் மாத்திக்கோ”
“கல்யாணம் நிச்சயம் பண்ற வயசா இது?” எரிச்சலுடன் கேட்டான் ராகவன்.
“நாளைக்கே அவ மனசு மாறினா..” அவன் சொல்ல ஆரம்பிக்க,
“இன்னைக்கு உன் மனசுல அவ தானே அழுத்தமா பதிந்து இருக்கா? அது தான் முக்கியம் ராகவ். நாளைக்குப் பத்தி நாளைக்குப் பார்ப்போம். அப்படியே அவ விலக விரும்பினா, நீ நிச்சயமா அவ கழுத்தை நெரிக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். சோ, இப்போ யோசிக்காம போ ராகவ். பெஸ்ட் விஷஸ்” என்று ராகவி சொல்லவும், அதற்கு மேல் மறுத்து பேச முடியாமல் தான் பெரியவர்கள் சொன்னதைச் செய்தான் அவன்.
மறுவருடமே மதுமிதா படிப்பை முடித்து மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஶ்ரீதரன் மாரடைப்பினால் தூக்கத்திலேயே மரணித்திருந்தார்.
அதற்குப் பிறகு வந்த சில வருடங்கள் மின்னலாக ஓடி மறைய, ராகவன் தான் திருமணத்திற்குப் பிடி கொடுக்கவே இல்லை.
வெண்பாவின் திருமணம் கூட முடிந்திருந்தது.
ராகவி, சுஹாசினி, பனிமலர் என்று அனைவரும் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என்று வாழ்வில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்க, ராகவன் மட்டுமே மேற்படிப்பு, வேலை என்று அவன் கவனத்தை அதில் மட்டுமே பதித்திருந்தான்.
அவர்களின் திருமணத்திற்காக மதுமிதா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.
ராகவனின் வீட்டுப் பெரியவர்கள் மற்றும் உதய், ராகவி தலையிட்டு அவனைத் திருமணத்திற்குச் சம்மதிக்கச் செய்தனர்.
மதுமிதாவிற்குச் சொந்தம் எனப் பாட்டியும், தங்கை வெண்பாவும் மட்டுமே இருக்க, திருமண வேலைகள் அனைத்தையும் தாங்களே முன்வந்து ஏற்பாடுகளைக் கவனித்தனர் ராகவன் வீட்டினர்.
திருமணத்துக்கு ஐந்து நாட்களே இருக்கும் போது, உதய், ராகவியிடம் வந்த ராகவன்,ஔ”இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமா அக்கா?” என்று ராகவியைப் பார்த்துக் கேட்க,
“என்னடா சொல்றா ராகவ்?” உதய் அதிர்ச்சியுடன் கேட்க, ராகவி தன் ஐந்து மாத வயிறை தூக்கிக் கொண்டு ராகவனின் முன் வந்தவள்,
“என்ன பிரச்சினை உனக்கு?” கத்தினாள்.
“எங்களுக்குள்ள செட் ஆகும்னு தோணல பாப்பா. இந்தக் கல்யாணம் வேணாம்…” அவன் சொல்லி முடிக்கும் முன்பே, அவனைக் கை நீட்டித் தடுத்தவள்,
“நீ அவளை அளவுக்கு அதிகமா நேசிக்கறன்னு எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். உலகத்துல யார்கிட்ட வேணா நீ பொய் சொல்லி ஏமாத்தலாம் ராகவ். ஆனா, என்கிட்ட இல்ல. உண்மையான காரணம் என்னனு சொல்லு…” வெகு நிதானமாகக் கேட்டாள் ராகவி.
சில கேள்விகளுக்குப் பதில் சொல்வது இயலாத காரியம் என்று மௌனமாக நின்றான் ராகவன்.
பட்சிகள் பேசும்…